ரகசியத் தூதுவன்
ரகசியத் தூதுவன்
அடர்ந்த காட்டினூடே பயணிப்பது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. தளர்ந்திருந்த அக்னித்யோத்தனன் ஒரு கையில் கைத்தடியைப் பிடித்திருந்தான். மற்றொரு கையில் அவனது பிரயாணத்தின் நோக்கம்- இளவரசி ருக்மணி யாதவகுல மன்னன் கிருஷ்ண வாசுதேவனுக்கு வரைந்திருந்த மடல் - இறுக்கமாக முடிந்து பற்றிக்கொள்ளப்பட்டிருந்தது.
அக்னித்யோத்தனன் நடைப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தது. இதற்குமேல் நடக்க முடியாது என்று ஆயாசத்தில் கீழே சாய்ந்தான். குந்தினாபுரத்தில் உள்ள அத்தனை மக்களில் வயதான பிராமணன் அவனைத் தேர்ந்தெடுத்திருந்தாள் இளவரசி ருக்மணி. அனுபவஸ்தன் அல்லவா? யாரும் அவ்வளவாக பயணித்திராத பாதைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாக யார் கண்ணிலும் - முக்கியமாக ஒற்றர்கள் கண்ணில் - படாமல் காட்டில் மரங்கள் மற்றும் அடர்ந்த இலை தழைகளை தனக்கு மறைப்பாகக் கொண்டு பயணித்தது அவனுக்கு ஆபத்தானதாகவும், அதிகநேரம் எடுப்பதாகவும் இருந்தது. அவனால் தூங்க முடியவில்லை. பசி அதிகமாகியது. குறித்த காலக்கெடுவுக்குள் துவாரகைக்குச் சென்றுவிட முடியுமா என்ற கவலை மேலோங்கியது. பேசாமல் மற்றவர்கள் போல் சுலபமானதும் கடற்கரை ஓரமாகவும் உள்ள பாதையில் போயிருக்கலாமோ? என்ற தோன்றினாலும், அதைவிட மூடத்தனம் எதுவும் இருக்கமுடியாது என்பதையும் எண்ணி சமாதானமடைந்தான்.
சம்போ மகாதேவா! என்னைக் காப்பாற்று! ருக்மணி அவளது விருப்பத்தை அடைய உதவு! என்று மனமார உருகி வேண்டிக்கொண்டு நகர முற்பட்டான் அக்னித்யோத்தனன். அடர்ந்த புதர்கள் அவனது பாதையை மேலும் கடினமாக்கின. ஒரு சிறிய காட்டுப்பன்றிகூட அவனை இரையாக்கிக்கொள்ள முடியும் நிலை. இத்தனை நாள் தவமிருந்து செய்த விரதங்களும் பூஜைகளும் வீணா என்று மருகினான். இன்னொருவரின் வாழ்க்கைக்காக தான் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு கடவுள் துணை வர மாட்டாரா என்று அரற்றினான்.
களைப்பினால் தலை கிறுகிறுக்க, கையில் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு எழுந்திருக்க முயன்றான். பற்றியது கொடியென்று நினைத்திருந்த அவன், அது மிகவும் மிருதுவாக இருப்பதை உணர்ந்து என்னவென்று பார்க்கும்போதுதான் தெரிந்தது, அது மிருகங்களைப் பிடிக்கும் வலையின் இழையென்று! மேற்கொண்டு அவன் சுதாரிக்குமுன் மொத்த வலையும் அவன் மீது விழுந்து சூழ்ந்ததைக் கண்டான். சற்று பயந்தாலும், கானகத்தில் மனிதர் வசிக்கும் இடத்தருகே வந்துவிட்டதை எண்ணியும், ஒரு வேளை தன்னைப் பிடிக்கும் வேடர்கள் தனக்கு உதவும் வாய்ப்பு இருப்பதையும் எண்ணி நம்பிக்கை கொண்டான்.
தலைமேல் விழுந்த வலையைச் சற்று ஒதுக்கி, நண்பா, நான் துவாரகைக்கு சீக்கிரம் செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்வாயா? என்று கேட்டான்.
யாரது? வாயை மூடிக்கொள்கிறாயா பிராமணனனே! உயிர்பிழைக்க முடியாத இந்த அடர்ந்த காட்டின் வழியே செல்ல உனக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா? இங்கிருந்து வெளியில் செல்வதையே மறந்துவிடு! பிராணிகள் உன்னைத் தின்னாவிடிலும் பசியே உன்னைக் கொன்றுவிடும்! என்று வேடன் அக்கித்யோத்தனனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு கால் கொலுசின் ஒலி கேட்டது. அவன் மீண்டும் வேடனைப் பார்த்தான். அவனது அருகில் உள்ள அடர்த்தியான புதரிலிருந்து வெளிப்பட்டாள் வேடனின் மனைவி.
உனக்கு மட்டுமல்லாமல் எனக்கும் சேர்த்து இழிவைத் தேடித்தரப் பார்க்கிறாயே? நமக்கு ஆபத்தாக இருக்கும் பிராணிகளைக் கொல்லாமல் என்ன வேடன் நீ? என்று வேடனைக் கடிந்துகொண்ட வேடுவச்சி, பிராமணனைப் பார்த்து, நீங்கள் கவலைப்படாதீர்கள். இவருக்கு சுடலையையும் சுடுகாட்டையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்தக் கானகத்தில் வாழ்நாள் முழுவதும் உண்ண காய்கனிகள் உள்ளன. தவிர, என் வம்சத்தில் விருந்தினர் யாரையும் பட்டினியோடு அனுப்புவதில்லை நாங்கள்! என்று கூறி அக்னித்யோத்தனை வலையிலிருந்து விடுவித்தாள் வேடுவச்சி. அவளது நடை உடை பாவனைகளை கவனித்த அக்னித்யோத்தனன் வசியத்தால் ஈர்க்ப்பட்டவன் போல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவர்கள் மூவரும் சற்றுத் தொலைவில் இருந்த அந்த வேடனுடைய குடிலை அடைந்தனர். வேடுவச்சி தீ பற்ற வைத்து உணவு தயாரிப்பில் இறங்கினாள். என்ன வேலையாக இந்த வழியாக வந்தீர் பிராமணரே? என்று வினவினாள். அக்கித்யோத்தனனுக்கு அவளிடம் எதையும் மறைக்கத் தோன்றவில்லை. எனினும் எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது என்பதையும் உணர்ந்தவனாக, ஒரு உயர்குலப் பெண் அவளது நாதனை தேர்ந்தெடுத்தும், அவரை மணக்கவிடாமல் அவளது குடும்பத்தினர் வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். நான் அந்தப் பெண்ணிடமிருந்து அவளது காதலனுக்குக் கடிதம் மூலம் செய்தி எடுத்துக்கொண்டு செல்கின்றேன் என்று பெயர் சொல்லாமல் அவனது பயணத்தின் அவசரமும் முக்கியத்துவமும் புரியும்படியாக விஷயத்தை மாத்திரம் பகிர்ந்தான்.
வேடனும் வேடுவச்சியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே ஒரு விஷமமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். வேடன், வேடுவச்சியைக் காட்டி, இவள் என்னைத் தேர்ந்தெடுத்தபோது மொத்த உலகமும், ஏன் நான் உட்பட, இவளின் விருப்பத்தை மாற்றவே முயற்சித்தோம். நடக்கவில்லையே! என்றான். வேடுவச்சி, இவர் சொல்வதை எடுத்துக்கொள்ளவேண்டாம். சும்மா உங்களை சோதிக்கவே கேலி செய்கிறார். ஆமாம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இது மிகவும் பெரிய இடத்து சமாச்சாரம் போலத் தெரிகிறதே! இதில் உங்களுக்கு ஆபத்து இல்லையா? என்று கேட்டாள்.
தர்மத்தின்படி செயல்படுவது எப்படி ஆபத்தாகும் மகளே! நான் வாழ்நாள் முழுவதும் வேதங்களைப் படிப்பவன். அவர்களோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான வேலையில் இறங்கியிருக்கிறார்கள். பெண்மையை அவமானப்படுத்தும் காரியத்திற்கு தெய்வமே ஒப்பாது என்று அறிந்த நான், அந்த நாட்டை தெய்வத்தின் சாபத்தில் இருந்து காப்பாற்றத்தானே முயற்சிக்க வேண்டும்? அதனால் தான் ஆபத்து என்று தெரிந்தும் இந்த வேலையை எடுத்துக்கொண்டுள்ளேன். கடவுள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அக்னித்யோத்தனன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் தயாரித்த மணமான தினைக் கஞ்சியை நீட்டினாள். எளிமையாக இருந்தாலும் அற்புத சுவையோடு இருந்தது அவள் தந்த தினைக் கஞ்சி. அவ்வளவு சுவையான கஞ்சியை அவன் இதுவரை சாப்பிட்டதேயில்லை. சுவை மட்டுமல்ல, ஒரு வாரத்துக்கு வேண்டிய பலமும் புத்துணர்வும் ஊட்டக்கூடியதாகவும் இருந்தது.
அக்னித்யோத்தனன் உண்டபின் சற்று தெம்பு அடைந்திருந்ததை கவனித்த வேடுவச்சி, இனிமேலும் காலம் தாழ்த்த முடியாது பிராமணரே, நீங்கள் வந்த வேலை நல்லபடி முடியவேண்டுமானால் சீக்கிரமாகக் கிளம்புங்கள்! என்று முடுக்கிவிட்டாள்.
கைத்தடியையும், கடித மடலையும் எடுத்துக்கொண்ட அக்னித்யோத்தனன், இனம்புரியாத வசியத்தில் ஆட்பட்டவனைப்போல் கானகத்தின் அடர்த்திக்கோ, முட்புதர்களுக்கோ, மிருகங்களுக்கோ சற்றும் கவலைப்படாமல், தன்னுடைய காரியம் வெற்றியாக முடியவேண்டும் என்று காத்திருக்கும் ருக்மணியின் நினைப்பை மட்டும் மனதில் கொண்டு வேகமாக முன்னேறினான். பொழுது விடியாத அதிகாலையில் அலைகளின் சப்தம் அவனது காதுகளில் விழுந்தது. ஆஹா! கடற்கரை வந்துவிட்டால் துவாரகை இன்னும் சற்று தூரம்தான் என்ற உத்வேகத்துடன் நடையை வேகமாக எட்டிப் போட்டான் அக்னித்யோத்தனன்.
கைலாய மலையில் பனிச்சிகரத்தின் மேல் அமர்ந்திருந்த மகாதேவர், என்னது? ஒரே இரவில் இவ்வளவு தூரம் கடந்துவிட்டானா அக்னித்யோத்தனன்? அவனுக்கு அப்படி என்ன உணவு கொடுத்தாய் பார்வதி? என்று குறும்பாக விசாரித்தார். பார்வதி புன்னகைத்தாள்.
(Translation of a beautiful story that appeared in Times of India today: https://www.pressreader.com/india/the-times-of-india-mumbai-edition/20200502/282007559552977)
May 2, 2020
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home