காணும் பொங்கல்
காணும் பொங்கல் ... காணாமல் போகும் உறவுகள்...
பழையன கழிந்து புதியன புகுந்தாச்சு
போகியும் போயாச்சு பொங்கலும் வெச்சாச்சு
ஆதவனைக் கும்பிட்டு அனைவரும் உண்ணலாச்சு
காணும் பொங்கலன்று காலாரக் கிளம்பினால்
களித்திட்ட காலங்களின் பழைய நினைவுகள்
கனவுபோல் மனத்திரையில் கண்முன்னே விரிகிறது
காணாமல்போன உறவுகளை எண்ணி உள்மனது வலிக்கிறது
அறுபது ஆண்டுகள்முன் ஆற்றோரம் வீடிருந்தது
ஆனைகட்டி போரடிக்காவிட்டாலும் ஆசைமக்கள் நிறைந்திருந்தனர்
குறைவான வருவாயிலும் கூடியே குடியிருந்தோம்
கல்யாணம் காட்சிகளை கலந்தே கொண்டாடினோம்.
முப்பது வருஷம்முன் முரண்படத் தொடங்கினோம்
முந்தும் வாழ்க்கை ஓட்டத்தில் முதியோரை விலகினோம்
தான் உண்டு தன்குடும்பம் எனத் தனியே வாழப் பழகினோம்
நாமிருவர் தனியிருக்க நமக்கிருவர் போதுமென்றோம்.
தற்கால வாழ்க்கையோ பொருள்சார்ந்து தவிக்கிறது
அளவான குடும்பத்தின் அளவு மேலும் சுருங்குகிறது
தனிவாழ் தம்பதிக்கு தலைக்கொரு உத்தியோகம்
வாகனம் இரண்டிருந்தாலும் வாரிசோ ஒன்றேதான்!
தாய்தந்தை தத்தம் பணிக்குச் சென்றபின்னர்
தனியே விடப்படும் குழந்தை தாதியிடமே கற்கிறது
காலத்தின் கோலம் இவ்வாறே மாறுமாயின்
காப்பாற்ற யார் எனும் கவலையே திரள்கிறது.
அண்ணன் தம்பி அக்கா தங்கை எனும்
அன்பான உறவுகள் அத்தனையும் அருகிப்போனால்
அடுத்து வரும் தலைமுறையினருக்கு
ஆறுதலுக்கும் உறவுகள் இல்லாமல் போகுமே!
பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா,
மைத்துதன், ஓர்ப்படி, மச்சினி, மாமன்-மாமி
இன்னும் பல உறவுகள் பட்டியல் நீளலாம்
யாரென்று தெரிய அகராதியில்தான் தேடவேண்டும்.
குடும்பத்தைச் சுருக்குவது குறுகிய காலத்தில்
வளத்தைத் தந்தாலும் வாழ்வை அழித்துவிடும்
தூரத்தில் இருக்கும் ஆபத்தை அறிய
தொலைநோக்குப் பார்வை தீவிரமாய் தேவை.
காணும் பொங்கலன்று கூட்டுக் குடும்பமாய்
குதூகலித்துக் களித்த நினைவுகள் மறந்து
காணாமல் போன உறவுகள் எவையென்று
கவலைப்படும் நாள் தொலைவில் இல்லை.
ஜன.18, 2021
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home