Thursday, October 24, 2024

என்னப்பனல்லவா!

 

*என்னப்பனல்லவா*
நேற்று என் நெருங்கிய நண்பரின் தயவில் வடபழனி முருகனின் அபிஷேக அலங்கார அர்ச்சனை காணும் பாக்கியம் கிடைத்தது.
சுற்றிலும் மிதிவண்டி கூட சுதந்திரமாக ஓட்டமுடியாத நெருக்கத்தில் அமைந்துள்ள சந்தடிமிக்க நெரிசலான நகர்ப்புறத்தின் இடையில் உள்ள அமைதியான பெரிய கோவிலில் மாலை ஐந்து மணியளவில் அழைக்கப்பட்டிருந்தோம்.
விநாயகர் மற்றும் மீனாட்சி அம்மன் சந்ததிகளில் முதல் மரியாதை செலுத்திவிட்டு அவர்களின் அனுமதி பெற்றபின் முருகன் சந்நதியில் கர்ப்பக்கிரகத்திற்கு வெளியிலுள்ள மண்டபத்தில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு அபிஷேகத்தைக் காணத் தொடங்கினோம்.
ஏற்கெனவே அணிவிக்கப்பட்டிருந்த மாலைகள் மற்றும் வஸ்த்திர அலங்காரத்தை களைய வேண்டி திரை மூடப்பட்டிருந்த நேரத்தில் மனதை ஒரு நிலைப் படுத்த நினைவில் தோன்றிய பாடல்களை பாடிக்கொண்டிருந்தேன்.
முத்தைத்தருபத்தி, உள்ளம் உருகுதய்யா, கண்ட நாள் முதலாய், அறுபடை வீடு கொண்ட திருமுருகா போன்ற பாடல்களுக்குப்பின் என்னப்பனல்லவா பாடலைப் பாடி முடிக்கும்போது திரை விலக்கப்பட்டு மங்கல ஆரத்தியுடன் அபிஷேகம் தொடங்கியது.
நன்னீர், பன்னீர், பால், சந்தனம் போன்ற திரவ அபிஷேகங்கள் முடிந்து சிறிய திரை மூடலுக்குப்பின் மீண்டும் திறக்கும்போது திருநீறு அபிஷேகம்.
உடல் முழுவதும் நீறு பூசிய கோலத்தில். என்ன ஒரு காட்சி! அங்கு நான் கண்டது என்னப்பன் சடையப்பன் அல்லவா! நீறு பூசிய வேலும் சூலமாகத்தானே காட்சி தந்தது! அர்ச்சகர் தன் விரல்களால் மூலவர் முகத்தில் நீறைத்திருத்தி ஒப்பனை செய்தபின் தானே மகனை நான் கண்டேன்! ஆஹா! என்ன ஒரு தெய்வீக தரிசனம்!
அத்தோடு நின்றதா அவன் கருணை?! இம்முறை மீண்டும் சற்றே நீண்ட மூடலுக்குப்பின் திரை திறந்து சந்தனக்காப்புடன் முழு அலங்காரத்தில் ஆரத்தி வெளிச்சத்தில் புன்சிரிப்புடன் முருகன் அச்சு அசலாக அவன் தாய் மீனாட்சியை அல்லவோ கொண்டிருக்கிறான்?! அழகிய மஞ்சள் வதனமும் குறுகிய இடையும் கால்களை சற்றே ஒதுக்கி நளினமாக நிற்பதும் அங்கே அம்மையைத்தானே காணவைக்கிறான் கந்தன்!
எனக்கே ஒன்றும் புரியவில்லை. கொடியசைந்ததும் காற்று வந்ததா என்பதுபோல என்னப்பனல்லவா என் தாயுமல்லவா என்று பாடியதால் இவ்வாறு காட்சி அமைந்ததா அல்லது இப்படி காட்சி கொடுக்கப்போவதை உணர்த்தும் வகையில் அந்தப் பாடலை நினைவூட்டினானா?
நான்கு பேர்கள் வரவேண்டிய இடத்தில் ஏதோ அசௌகரியத்தால் இரண்டு பேர் வரமுடியாமல் போக அந்த இடத்தில் எங்களை அழைத்து காட்சி தந்த கந்தனுக்கே வெளிச்சம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

Aug 28, 2022

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home