Thursday, December 26, 2024

 ஒரு யாத்திரை. இரண்டு பேருந்துகள். நான்கு நாட்கள். எட்டு ஸ்தலங்கள். பதினாறும் அருளும் தெய்வங்கள்.

முப்பத்திரண்டு வயதில் சேவித்திருக்க வேண்டியது. அறுபத்தி நான்கிலாவது / நான்கிலும் முடிந்த திருப்தி. இறைவன் அருளால் அதுவாய் அமைந்த கணக்கு. என்னவென்று பார்ப்போமா?

அமிர்தம் திவ்யதேசம் குழுவினரின் பூரி யாத்திரையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,  ஏற்கெனவே இவர்களுடன் பயணம் செய்து திவ்யதேசங்களை சேவித்த இனிய அனுபவம் இருந்ததால் மிக்க மகிழ்ச்சியுடனே ஆயத்தமானோம்.

21.12.24 அதிகாலை 6 மணிக்கு விமானம் மூலம் ஒரு குழு புவனேஷ்வர் புறப்பட்டோம். இன்னொரு குழுவினர் இரயில் மூலம் சென்றிருந்தனர். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. மேகங்களுக்கு மேலே சென்றபின்தான் சூர்யோதயத்தைக் கண்டோம். இயற்கையின் விந்தையாக, நிலத்தில் மழை பெய்யும் அதே நேரத்தில் மேகக் கூட்டத்திற்கு மேல் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி சூடாகும் அளவுக்கு வெய்யில்!

  

அரைமணி நேரம் முன்னதாகவே புவனேஷ்வர் சென்றடைந்தாலும் ஹைதராபாத்திலிருந்து சிலர் வரவேண்டியிருந்ததால் விமானநிலைய பார்க்கிங்கிலேயே காலைச்சிற்றுண்டியாக சுடச்சுட அமிர்தமான கேசரி, பொங்கல். அவர்களும் வந்தபின்னர் பூரி நோக்கிப் பயணம்.

வழியெங்கும் விட்டுவிட்டு மழை. ஸ்ரீ ஜெகன்னாதர் ஆலயத்திற்கு சுமார் அரை கிலோமீட்டர் முன்னதாக அமைக்கப்பட்டிருக்கும் பல்லப் (Ballabh) அல்லது ஸ்ரீசேது என்ற பார்க்கிங் இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆறு முதல் எட்டு பேர் வரை பயணிக்கக்கூடிய இலவச மின்ஊர்திகளில் அடிதடியாக இடம்பிடித்து ஆலய வளாகம் வரை பயணம். இலவசக் காப்பகத்தில் இருபது ரூபாய் தேநீருக்காக மட்டும் கேட்டுப் பெற்றுக்கொண்ட பாதுகா-காவலர்களிடம் காலணிகளும் கைபேசிகளும் தனித்தனியாக ஒரே பையில் அடைத்து ஒப்படைத்துவிட்டு ஆனந்த(மாக)மழையில் நனைந்துகொண்டே ஆலயப் பிரவேசம்.

உள்ளே செல்வதற்கு முன்பே பலத்த எச்சரிக்கைகள் கொடுத்திருந்தனர். சீக்கிரம் அழைத்துச் செல்வதாக பண்டாக்கள் ஆசை காட்டுவர் - மயங்கி ஏமாற வேண்டாம்; ஒரு வாசல் வழியாகச் சென்று அதே வாசல் வழியாக திரும்பி வரவேண்டும்; கூடியவரை தனியாகச் சென்றுவிடாமல் குழுவினர் கண்களில் படும்படியாக இருத்தல் நல்லது; கோவிலுக்கள் பண்டாக்கள் (பூசாரிகள்) குச்சியை வைத்து பக்தர்கள் தலையில் தட்டி பணம் கேட்பார்கள் - அவர்களுடைய கைகளுக்கு எட்டாத தூரத்தில் இருக்க வேண்டும்; குறிப்பாக ஜகன்னாதரை வழிபட்ட பின்பு பின்புறத்தில் உ்ள்ள நரசிம்மர் சந்நிதிக்குள் செல்லும்போது பண்டாக்கள் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்; பிரசாதம் விற்கும் இடத்திலும் 100 ரூபாய்க்கு வாங்கினால் போதும் மேலும் மேலும் தலையில் கட்ட முயற்சிப்பார்கள் ஆனால் வாங்கத் தேவையில்லை என்று அடுக்கடுக்காக தகவல்கள். ஆனால் உள்ளே போனபின்புதான் தெரிந்தது. நெரிக்கும் கூட்டத்தில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவதே பெரும்பாடு என்று. மேற்கூறியவற்றில் எது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் - அது நம் கையில் இல்லை என்பது.

கொட்டும் மழையிலும் குளிரைப் பொருட்படுத்தாமல் அலையலையாக மக்கள் உள்ளே மேலும் மேலும் நெரிசலை அதிகப்படுத்திக் கொண்டுதான் இருந்தனர். தூரத்திலிருந்து ஜகன்னாதரையும் பலராமரையும் நடுவில் நின்றிருந்த சுபத்திரையையும் காண்பதே பெரும்பாடாக இருந்தது. இருப்பினும் நம் குழுவினர் எப்படியோ ஒரு நல்ல பண்டாவை கைக்குள் போட்டுக்கொண்டு அத்தனை பேருக்கும் நல்லபடியாக அருகிலிருந்து தரிசனம் செய்து வைத்ததோடு சுடச்சுட ராஜ்போக் எனப்படும் சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதத்தையும் மால்புவா என்னும் இனிப்புப் பலகாரத்தையும் அனைவருக்கும் ஒரு கவளமாவது கிடைக்கும்படி வரவழைத்துக் கொடுத்தனர். ஊதற்காற்றுடன் சில்லென்ற மழைச்சாரல் ஊசிபோலக் குத்தும் அந்த 'நெருக்கடி'யான நேரத்தில் இந்த பிரசாதம் அமிர்தமாகவே இருந்தது. அவர்களுக்கு நம் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எள்கூட கீழே விழாத இத்தகைய நெருக்கடியில் அழுத்தமாகப் பிசையப்பட்டு பக்தர்களின் பலத்த கோஷத்தில் செவிகள் பொறிந்து ஒரு வழியாக விடுதலையாகும்போது ஏற்படும் உள்ளப் பூரிப்புக்காகத்தான் பூரிக்கு அந்தப் பெயர் வந்ததோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

வழிவழியாகப் பரப்பப்பட்டு வரும் ஐதீகங்களுக்குப் புறம்பாக, ஆலயத்தின் கொடி காற்று வீசும் திசையிலேயே பறப்பதையும், கொடிக்குக் கீழ் உள்ள சக்கரம் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டுமே நம்மைப் பார்ப்பதுபோல் உள்ளதையும் கண்டோம்.

ஞாபகமாக அதே வாசல் வழியாக வெளிவந்து பாதுகா-காவலர்களிடம் ஏற்கெனவே தேநீருக்காக (மட்டும்) பணம் கொடுத்ததை நினைவு படுத்தி அவரவர் காலணி-கைபேசிப் பையை வாங்கிக்கொண்டு கைபேசி கிடைத்தவுடன் நினைவுகளை பதிய வைப்பதற்காக சற்று தூரம் திரும்பிப்போய் படங்கள் எடுத்துக்கொண்டு இந்த முறை கட்டண ஆட்டோவில் பேருந்து பார்க்கிங் செய்திருந்த இடத்துக்குச் சென்றோம்.

    



மகளிர் மட்டும் கிடைத்த மறைவான இடத்தில் நனைந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு பழையபடி ஈரமில்லாதவர்களாக மாறினர். மூன்று மணி அளவில் மதிய உணவுக்குப் பின்னர் அங்கிருந்து பிரசித்தி பெற்ற கோனார்க் சூரியன் கோவிலுக்குப் புறப்பட்டோம். அந்த குளிர் நேரத்தில் மிகவும் தேவைப்பட்ட உணவாக வழங்கப்பட்ட கொதிக்கக்கொதிக்க சூடான சாம்பார் சாதம், வாழைக்காய் பொடிக்கறி, தயிர்சாதம் மற்றும் தக்காளித்தொக்கு நிஜமாகவே அமிர்தமாகத்தான் இருந்தது.

சூரியன் கோவிலைச் சென்றடையும் போது அஸ்தமன நேரம் ஆகியிருந்தது. அங்கும் லேசாக மழைச் சாரல். தூரத்திலிருந்து சாதாரணமாகத் தோன்றினாலும் அருகில் செல்லச் செல்ல கோவிலின் பிரம்மாண்டம் மெதுவாக மனதை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இருள் கவ்வும் வேளையில் படங்கள் தெளிவாக வராது என்பதால் விருப்பத்தை மீறி மிகவும் குறைவாகவே எடுத்தேன். காலை வெய்யில் வெளிச்சத்தில் கருப்பாகத் தெரியும் தேர் போன்ற கட்டிடம் ஐரோப்பிய மாலுமிகளால் கருப்பு பகோடா என்றழைக்கப்பட்டதாம்.


கோவில் என்றாலும் வழிபாடு இல்லாத தொல்லியல் இடம் என்பதால் அனைத்து மக்களும் நடமாடும் இந்த இடம் ஒரு சுற்றுலா தலம் மட்டுமே. மாலையிருள் சூழ்ந்து மழையும் காற்றும் சேர்ந்து குளிர் அதிகமாக ஆக அந்த நேரத்திற்கு அங்கு மட்பாண்டத்தில் கிடைத்த சூடான இஞ்சி டீ உடலுக்கும் நாக்குக்கும் இதமாகவே இருந்தது. கருப்போ வெளுப்போ சிகப்போ பகோடாவும் கிடைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

அங்கிருந்து மீண்டும் புவனேஷ்வர் புறநகர்ப்பகுதியில் ஒரு விடுதியை அடைந்தோம். சுடச்சுட உப்புமா இரவு உணவு. கதகதப்பான அறையில் தங்க வசதி. அதற்கு என்ன கோபமோ தெரியவில்லை, மூன்று மாடி வரை சரியாக இயங்கிய லிப்டுடன் நான்காவது மாடிக்கு மாத்திரம் போராட்டம். ஒரு வழியாக கண்ணயரலாம் என்று கடிகாரத்தைப் பார்த்தால் அடுத்தநாள் ஆகியிருந்தது.

இந்தப் பயணத்தில் என்னவோ தெரியவில்லை, அத்தனை நாட்களும் அந்தந்த நாள் முடிந்த பின்பே படுக்கையில் விழுந்தோம் - கடைசிநாள் இரயில் உட்பட!
அசதி அசத்திவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நான்கு மணிக்கு அலாரம் வைத்துக்கொண்டு தூங்கச் சென்றோம்.

22.12.24 அதிகாலை நாலரைக்குப் புறப்பட வேண்டியது. ஏதோ காரணத்தால் அப்படி இப்படி தாமதமாகி ஐந்தரையும் ஆகிவிட்டது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேனேஜர் கங்காதர் தாஸுக்கு எங்கோ வைணவ சம்மந்தம் இருந்திருக்கிறது. இன்றைய மார்கழி மாத ஏழாம் நாளுக்கு ஏற்றாற்போல் கீசுகீசு என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். விசாரித்ததில் பின்னர்தான் தெரிந்தது அனைவரிடமும் அறைச்சாவியைத் (keys) திருப்பித்தந்து விட ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தாராம்! ஒரு வழியாகப் புறப்பட்டால் சாலையை அடைந்தவுடன் மீண்டும் ஒருமணி நிறுத்தம். கேட்டால் யாருக்கும் ஒதுக்கப்படாத குறிப்பிட்ட அறைச் சாவியை அது இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடித்தேடி எங்கெங்கோ அலைந்திருப்பது தெரிய வந்தது. இவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் அறையிலேயே இன்னும் இரண்டு மணி நேரம் தூங்கியாவது இருக்கலாம் என்ற எண்ணம் பெரும்பாலான பயணிகளுக்கு இருந்திருக்கும். ஒரு வழியாக அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து ஆறே முக்கால் அளவில் புறப்பட்டோம்.

கடற்கரை ஓரமாக செல்லப்போகும் பயணத்தில் சூரியோதயக் காட்சி அற்புகமாக இருக்கும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு பிரத்தியேகமாக ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்த எனக்கு, மழை விட்டும் அகலாது திரண்டிருந்த மேகக் கூட்டங்கள் அந்தக் கடற்க்ரையிலிருந்தே அள்ளி எடுத்து என் எண்ணத்தில் மண்ணைப் போட்டன. இயற்கையை கோபித்துக் கொள்ளவா முடியும்?

எட்டரையளவில் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கி, ஒதுங்கியபின் அந்த இயற்கைச் சூழலிலேயே பாக்குத் தட்டில் சிற்றுண்டி. மீண்டும் நீ...ண்ட பயணம். சில்கா ஏரியைச் சுற்றி வளைத்த இயற்கை எழில் நிறைந்த சாலை. அழகான குளங்கள். குளக்கரை கோவில்கள், குளியல்கள். மொழி மாறுகிறதேயன்றி மக்கள் கலாச்சாரம் பாரதம் எங்கும் ஒன்றாகப் பரவிக் கிடப்பதை காண முடிகிறது. இதன் நடுவில் செக்போஸ்ட் ரோதனயால் மேலும் ஒருமணி நேரம் தாமதம்.

மிகக்குறுகிய சாலைகள் வழியே பெரிய பேருந்துகள் சற்று சிரமத்துடனேயே வளைந்து நெளிந்து ஊர்ந்து சென்று ஸ்ரீகூர்மம் சென்றடைந்தோம். பாற்கடலைக் கடையும்போது மந்தார மலை கடலில் மூழ்காமலிருக்க கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் சென்று மலையைத் தாங்கி தேவர்கள் அமிர்தம் பெற உதவிய திருமாலுக்கு சற்றே வித்தியாசமான, புராதனமான கோவில்.

மனதை மயக்கும் சுவேத புஷ்கரணி என்னும் அழகிய குளம்.

      

கடைவீதியில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் இதே போன்ற சாலைகள் வழியாக அரசவல்லி சூரியனார் கோவிலுக்குப் பயணம். இந்த சூரியனார் கோவிலும் அந்தி சாய்ந்த பின்னரே சென்றடைந்தோம். உத்தராயண தக்ஷிணாயன தொடக்க நாட்களில் ஆதவனின் கிரணங்கள் சூரியநாராயணின் மேல் விழும்படி கட்டப்பட்ட இந்த பழமையான பஞ்சரத வகைக் கோவில் பாரத நாட்டின் புராதன சூரியனார் கோவில்களில் ஒன்றாகும். இங்கும் கைபேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதுவுமில்லாமல் கைபேசி பேருந்தில் கோவிலுக்கு மிகத் தொலைவில் இருந்ததால் மீண்டும் எடுத்துச் சென்று வெளியிலிருந்து படம் எடுக்கும் வாய்ப்பும் இல்லாது போயிற்று. எனவே இந்தக் கோவில் நினைவில் மட்டுமே பதிந்துகொள்ள வேண்டியதாயிற்று.

உணவு இன்னும் தயாராகாத நேரத்தில் சாலையில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் செவிக்கு அருமையான உணவு படைத்தார் பிரவீண் அவர்கள். இசைச் சேவைக்குப் பின் உணவு சேவையும் சேவையாகவே சாதிக்கப் பெற்றபின் சாலையோரம் காத்திருந்த நேரத்தில் காற்று மாசு அதிகமில்லாத காரணத்தால் தெளிவாகத் தெரிந்த திருவாதிரை நட்சத்திரத்தை படம் எடுக்க முடிந்தது.

  

இரவு உணவுக்குப் பின் சிம்மாசலத்திற்குப் பயணம். நள்ளிரவுக்குப் பின் விடுதிக்குச் சென்றடைந்தோம்.

23.12.24 நிம்மதியான தூ்க்கத்திற்குப் பின் சற்று மெதுவாகவே ஆறரை-ஏழு மணிவாக்கில் எழுந்து குளித்து முடித்து விடுதியில் காலைச் சிற்றுண்டி. காத்திருக்கும் நேரத்தில் முந்தைய இரவு போலவே செவிக்கும் உணவு. பின்னர் எட்டு பேர் செல்லக்கூடிய வண்டிகளில் ஒரு வண்டிக்குப் போய்வர தலா ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் சிம்மாசலம் நரசிம்மர் மலைக் கோவிலுக்குப் பயணம்.

உக்கிர சொரூபமாக உள்ள நரசிம்மரைக் குளிர்விப்பதற்காக எப்போதும் சந்தனக் காப்பிலேயே மூடியிருக்கும் தலம். ஆண்டுக்கு ஒருமுறை ரதசப்தமி அன்று மட்டுமே காப்பை மாற்றுவதற்காக அகற்றி நிஜரூப தரிசனம் சாதிப்பாராம் ஸ்வாமி. அன்று எள்விழக்கூட இடம் இருக்காது என்கிறார்கள்.

இந்தக் கோவிலின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவ்வளவு அற்புதமான சிற்பங்கள். ஆனால்........ இஸ்லாமியப் படையெடுப்பின் கோரமுகம் ..அத்தனை அழகான சிற்பங்களும் ஒரு இடத்திலாவது பின்னமாகி உள்ளன.
கூட்டம் அலைமோதியதால் 300 ரூபாய் சிறப்பு விரைவு தரிசன கட்டண வரிசையில் சென்று அருகிலிருந்து தரிசனம் கிடைக்கப் பெற்றோம். இங்கும் கைபேசி அனுமதி கிடையாது. ஆனால் கோவில் வெளியில் வியாபார ரீதியில் அங்கேயே புகைப்படம் எடுத்து கையோடு பிரதியும் கொடுக்கும் ஆட்கள் இருந்ததால் அங்கு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம்.

  



அனைவரும் திரும்ப சற்று நேரமானாலும் நிதானமாக மதிய உணவுக்குப்பிறகு அன்னாவரம் செல்லத் தயாரானோம்.

அன்னாவரம் சத்யதேவர் (அ) சத்யநாராயணப் பெருமாள் (அ) வீர வேங்கடசத்யநாராயணப் பெருமாள் ஆலயத்துக்கு நேரத்தில் சென்று சேர்ந்தாலும் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் இங்கும் சிறப்பு தரிசனத்தில் வழிபடுவதே நல்லது என்று முடிவு செய்தோம். 200 ரூபாய் தரிசனம் ஏழரை மணிக்குத் தான் தொடங்கியது.

தேர் போன்ற அமைப்பில் இரண்டு தளங்களாக அமைந்துள்ள இக்கோவிலில், அடித்தளத்தில் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மத்திரிபாத் விபூதி வைகுண்ட நாராயண யந்த்ரம் மற்றும் அதன் மேல் விஷ்ணு பஞ்சாயுத யந்த்ரம் உள்ளன.  இவற்றின் மேல் தளத்தில்தான் சத்யதேவர் அடிப்பகுதி பிரம்மாவாகவும், நடுப்பகுதி சிவனாகவும், உச்சியில் மகாவிஷ்ணுவாகவும் காட்சியளிக்கிறார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் போலவே அழகிய மீசையுடன் காட்சி தருகிறார். அவரது இடதுபுறம் சத்யதேவியும் வலதுபுறம் லிங்க ரூபமாக பாணத்தின் முக அமைப்புடன் கூடிய கவசத்துடன் கைலாசநாதரும் திகழ்வது தனிச்சிறப்பாகும். 

    

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் இந்தக் கோவிலின் பார்க்கிங் வளாகத்துக்கு அருகிலேயே இருந்த மண்டபத்தில் இரவு உணவு.  மீண்டும் பயணம்.  

இன்றும் வழக்கம்போல நள்ளிரவுக்குப் பின் ராஜமகேந்திரவரம் (அதுதாங்க. நம்ம ராஜமுந்திரி) சென்றடைந்தோம்.  எங்கள் பேருந்து வோல்வோவிலேயே சற்று உயர்(ந்த) ரகமானதால் ரயில்பாதைக்குக் கீழே உள்ள பாதையில் போகமுடியாமல் நின்று விட்டது.  அங்கிருந்தே சாமான்களையெல்லாம் இறக்கி சிறிய வண்டிகளில் மாற்றி அவரவர் விடுதிகளுக்குச் சென்று சேர்ந்தோம்.

24.12.24 - கடைசி நாள் இன்று ஆரம்பமே அமர்க்களம். சென்றமுறை பத்ராசலத்தில் நிறைவேறாத கோதாவரிக் குளியல் இன்று வட்டியும் முதலுமாக சேர்ந்து அமைந்தது. ஆழம் அவ்வளவாக இல்லாத அகண்ட ஆற்றில் மெதுவாக ஓடும் நீரில் குளிப்பது என்பதே ஒரு ஆனந்தம். ஆசைதீர அனுபவித்துக் குளித்து கோதாவரிக் கரையிலேயே சந்தியாவந்தனமும் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பி உடைமாற்றிக்கொண்டு காலைச் சிற்றுண்டி உட்கொண்டோம்.



     



சற்று செங்குத்தான மலை ஏற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அளவான நிதானமான காலை உணவுக்குப் பின் உயரமான கோருகொண்டா நரசிம்மர் ஆலயத்திற்கும் பயணம்.

600 படிகள் தான். ஆனால் செங்குத்து உயரமான குறுகலான படிகள். 30 ஆண்டுகளுக்கு முன் சுமார் 450 அடி உயரம் 750 படிகள் கொண்ட ஸ்ரவணபெளகொளா ஏறுவதற்கு சிரமப்பட்டது நினைவுக்கு வந்தது. இது 650 அடி உயரம் 600 படிகள். அதாவது படிகளின் உயரமும் அதிகம் கால் வைக்க அகலமும் குறைவு கேட்கவா வேண்டும். நிறைய பேர் ஏறவில்லை.

கேட்பதைத் கொடுக்கும் தெய்வம் என்பதைத் தெலுங்கில் கோரு கொண்டா என்கிறார்கள். அழகான சிற்பங்கள் நிறைந்த சிறிய மலைக்கோவில். மிகச் சிறிய உருவிலான சுயம்பு நரசிம்மர் அருகில் பராசர முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் விக்கிரகம். ஸ்ரீரங்கம் பராசர பட்டர் பரம்பரையால் பூஜை வழிமுறைகள் அனுசரிக்கப்பட்டு வருகின்ற தலம். எனவே மூன்று நாட்களுக்குப் பின் நல்ல தமிழ் கேட்க முடிந்தது ஆனந்தமாக இருந்தது.

    



இயற்கை எழில் கொஞ்சும் இடம். நிறைய மூலிகைகளும் இங்கு உள்ளன. குரங்குகள் உள்ளன, ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையே. அதுவும் மிகவும் சாதுவான பிராணிகளாகத்தான் தெரிகின்றன. குறுகிய படிகளாதலால் ஏறுவது சிரமமாக இருந்தாலும் இறங்குவதற்கும் அதிக கவனம் தேவைப்படுகிறது. இங்கு காலை மட்டும்தான் தரிசனம். மலைக்கோவில் மாலை திறப்பது கிடையாது என்று அறிந்துகொண்டோம்.


     

தரிசனம் முடிந்து மலை உச்சிப் பிரகாரத்தில் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெதுவாக இறங்கி அடிவாரத்தில் உள்ள நரசிம்மரையும் தரிசித்தோம். அரைமணி நேரத்தில் உணவு தயாராகிவிடும் என்பதை அறிந்தபின் ஏறி இறங்கிய கால் களைப்பாற நிதானமாக வெளியில் நடந்தோம். அருகில் இருந்த ஒரே கடையில் நம் ஊரில் கிடைக்காத ரெடிமேட் லெமன் சோடா (உப்பு சேர்த்தது) கோலி பாட்டிலில் கிடைத்தது. கடலை மிட்டாய் வாங்கலாம் என்று எண்ணினால் அது என்ன என்பதை கடைக்காரருக்குப் புரிய வைப்பதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது. வேர்ச்செரலு அச்சு என்று சொன்னதாக ஞாபகம். தெலுங்கு தெரிந்தவர்கள் தயவு செய்து இது சரியா என்று சொல்லுங்கள்.

  


உணவு வந்த பின் கீழ்க்கோவில் வெளிப் பிரகாரத்திலேயே உணவு உட்கொண்டு பின்னர் அக்ரிபள்ளி புலிமுக நரசிம்மர் கோவிலுக்குப் புறப்பட்டோம். (சிங்க முகத்திற்கு நரசிம்மர் என்றால் புலி முகத்திற்கு ஏன் நரபுலியர் என்று அழைக்கவில்லை என்பது தெரியவில்லை). இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழி மிகமிகக் குறுகலானது. நாங்கள் சென்றதைப் போன்ற பெரிய பேருந்துகள் இதற்குமுன் அங்கு சென்றிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

         



நான்கு கொடிமரங்கள் கொண்ட இந்தக் கோவிலில் தரிசனம் மற்றும் இரவு உணவு இங்கேயே முடித்துக்கொண்டு விஜயவாடாவுக்குப் புறப்பட்டோம். எங்கள் நேரத்திற்கு இணங்க கிராண்ட ட்ரங்க் எக்ஸ்ப்ரஸும் மூன்று மணிநேரம் தாமதமாக வந்ததால் சிரமம் ஏதுமின்றி வண்டியில் ஏறி இன்றும் நள்ளிரவுக்குப் பின்னர் அவரவர் பெர்த்தில் இனிய நினைவுகளுடன் கண்ணயர்ந்தோம்.

அங்கங்கு காலதாமதம், நேரமாவதைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தாலும் அது வேறு எதுவும் செய்ய முடியாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டிய சலிப்பினால் ஏற்பட்ட எண்ணமே தவிர அவைகள் எந்தப் பிரயாணத்திலும்
ஏற்படத்தான் செய்யும் என்பதையும் அதனால் பிரயாணத்துக்கும் பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும். இத்தகைய சலிப்பைப் போக்க ஸ்ரீ முரளிதரன்-பத்மாவதி தம்பதியினர் மேற்கொண்ட வினாடி-வினா நிகழ்ச்சியும், உடல்நலக் குறிப்புகளும் சலிப்பை நீக்கி பிரயாணத்துக்கு மேலும் சுவையூட்டின என்பதும் உண்மை. அவர்களுக்கும் நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

பொதுவாகவே உணவு சுவையாகவும் எந்தவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது என்றாலும், தயார் செய்ய வசதி கிடைத்த இடங்களில் சிறப்பு உண்டிகளாக அசோகா ஹல்வா, திருக்கண்ணமுது, வடை, அப்பளம் போன்றவற்றை அன்புடன் தயாரித்து வழங்கியதை பாராட்டாவிட்டால் நான் கடமை தவறியவனாவேன்.

இந்த இனிய பிரயாண அனுபவத்தையும் தரிசன பாக்கியத்தையும் ஏற்படுத்தித்தந்த அமிர்தம் திவ்ய தேசக் குழுவினரின் அயராத பணியை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. குறிப்பாக சற்று வயதானவர்கள் மற்றும் முடியாதவர்களின் உதவிக்கு ஓடோடி வந்து தாங்கும் பண்பு எளிதில் காணக்கிடைக்காததாகும். இவர்களது பணி தொய்வின்றித் தொடர இறைவன் இவர்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் நூறு ஆண்டுகளுக்கு மேல் நீண்ட ஆயுளையும் அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். பொறுமையாக படித்ததற்கு நன்றி.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home