Thursday, October 24, 2024

ஸ்ரீ விநாயகர் துதி

 

ஒன்றைத் தொடங்குமுன் வழிபடுவோம் உனையேதான்

நன்றென நடத்திவைப்பாய் நன்மைகளை முன்நிறுத்தி

நம்பிக்கை உண்டெமக்கு  நன்நாட்கள் இனி சிறக்க

தும்பிக்கையான் உனைத்துதித்தே தோப்பிட்டோமையா


இருவினையின் இடர்நீக்கும் இமயவதி மைந்தா

வருங்கால வாழ்வை வளமிக  ஆக்கிவைப்பாய்

மெச்சிநின் துதிபாட மலைமேலே வீற்றிருக்கும்

உச்சிப் பிள்ளையாரே உகந்தே அருள்வாய் நீ.


முக்கண்ணன் மகனே முழுமுதற் கடவுளே 

எக்கணமும் பற்றினோமுன் பனிமலர்ப் பாதங்களே

அஞ்ஞான இருளகற்றி மெய்ஞ்ஞான ஒளியருள்வாய் 

அரசடி அமர்ந்துலகை ஆட்சிசெய்யும் கணநாதா


நான்மறை ஞானத்தை ஞாலததுக் களித்தவனே

கூன்பிறை நான்கில் காணக் கொடுத்தவனே

தேங்காய்பழம்  மோதகமும் மகிழ்வுடன் ஏற்றெமை

பாங்காய் ரட்சிப்பாய் பாவமெல்லாம் கரைந்திடவே.


ஐங்கரத்தோனே ஆறுமுகன் அண்ணனே

ஐம்புலன் அடக்கி அருளானந்தம் பெற்றிடவே

ஓங்காரம் ஒலிக்க உனையே துதிக்கின்றோம்

சங்கரன் மகனே சங்கடம் தீர்த்தருள்வாய்


9.7.2021

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home