விதி வலியது
நினைவுகள் என்றுமே பலமானவை. மனிதனின் மனோநிலையை ஒரு கணத்தில் மாற்றிடும் சக்தி கொண்டவை. அப்படித்தான் போகி பண்டிகை விடியற்காலையில் என்னை எழுப்பிவிட்ட தப்பட்டை ஒலி என் நினைவுகளை பழைய காலத்திற்கு அழைத்துச் சென்றது.
எங்கள் சம்பிரதாயத்தில் இந்த குப்பைகளை எரிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் அக்கம்பக்கத்தோருடைய கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளும் சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறோம். பழைய காகிதங்கள், துணிகள் போன்றவற்றை ஒரு இடத்தில் குவித்து தீமூட்டி எரித்து அந்த விடியற்காலை குளிரில் அதைச் சுற்றி சுட்ட மண்ணால் செய்த வளையத்தில் மாவினால் செய்யப்பட்ட துணிபோன்ற சவ்வினால் மூடப்பட்ட தப்பட்டையை (டமாரம்?) குச்சி கொண்டு டமடம என்று காதைக் கிழிக்கும் அளவுக்கு அடித்துக்கொண்டே அந்த தீயைச் சுற்றி ஆட்டம் போடுவதை பார்க்கவே குதூகலமாக இருக்கும்.
அது காற்று மாசு என்ற சொற்களை அறியாத காலம். பிற்காலத்தில் காகித குப்பைகளோடு நீண்ட நேரம் எரிவதற்காக வாகனச் சக்கரங்களின் உபயோகமற்ற ரப்பர் டயர்களை எரிக்கத் தொடங்கினர். தற்போது பிளாஸ்டிக் குப்பைகளையும் சேர்த்து எரிக்கின்றனர். விளைவு பயங்கரமாக இருக்கிறது. பத்தடி தூரத்தில் இருப்பது தெரியாத அளவுக்கு புகைமண்டலம் சூழ்வதோடு, இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே முகத்திலும் ஆடைகளிலும் ஒரு கரும்படலம் படியும் அளவுக்கு காற்று மாசடைந்து விடுகிறது. ஒரு வாரம் முன்னமிருந்தே செய்திகள் மற்றும் காணொலி மூலம் தீவிர எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதால் சற்றே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
ஆக, டமடம ஒலியினால் எழுப்பபட்டு அதற்குமேல் தூங்க விருப்பம் இல்லாமல் போகி கொளுத்தும் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவலால் உந்தப்பட்டு வெளியில் சென்றேன். எங்கெங்கு காணினும் புகைப்படலம். எனது புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தால் நாற்சந்தியில் நின்றுகொண்டு நான்கு திக்குகளிலும் வீதிகளில் அங்கங்கே எரியும் குப்பைக் குவியல்களை படமெடுக்கத் தொடங்கினேன்.
ரகு, ரகு என்று யாரோ சன்னமான குரலில் என்னை அழைப்பது போலிருந்தது. யாரது இந்த வேளையில் என்னை அடையாளம் கண்டு அழைப்பது என்ற யோசனையுடன் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினால், அருகில் எரிந்துகொண்டிருந்த குப்பைக் குவியலின் மேல் சிறிது சுள்ளிக்குச்சிகளை அடுக்கிக் கொண்டிருந்த சாவித்திரிதான் என்னை அழைத்தாள் என்பது தெரிந்தது. தற்போது ஐம்பதுக்கு மேல் வயதாகியிருந்தாலும், அவள் குரலில் ஒரு பத்து வயது சிறுமியின் குதூகலம் தெரிந்தது.
“இப்படித்தான் நாங்க ஆந்திரால இருக்கும்போது போகி நெருப்புலேயே பாத்திரத்திலே தண்ணி காய்ச்சி அதுலதான் குளிப்போம். அப்பறம்தான் பொங்கல் எல்லாம்..” என்று சிரித்தவாறே தன் அனுவங்களின் நினைவில் பயணிக்கத் தொடங்கினாள்.
நாங்க….ஆந்திரால… என்று அவள் சொன்ன சொற்கள் என் நினைவலையை வேகமாகவும் ஆழமாகவும் கிளறிவிட்டது. என் கண்ணில் நீர் துளிர்த்தது. நினைவுக்குதிரையின் வேகம் கேட்க வேண்டுமா? அந்த க்ஷணத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பாய்ந்து சென்று நின்றது.
ஜானகியம்மா என்றாலே எங்களுக்கு வேடிக்கைதான். புதிதாக வீடுகட்டிக்கொண்டு வந்திருந்த எங்களுக்கு அந்தக் காலத்தில் ஒரே ஒரு எதிர்வீடு, ஒரே ஒரு பக்கத்து வீடு, ஓரே ஒரு (சற்று தூரத்தில்) பின் வீடு. மற்றபடி சுற்றிலும் வெட்டவெளிதான். எதிர்வீட்டு ஜானகியம்மாவுக்கு ஐந்து குழந்தைகள். கணவர் ஆவடியில் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை. நான்கு மகன்கள், ஒரு மகள். நான்காவதாகப் பிறந்தவள்தான் சாவித்திரி. சாவித்திரியின் மூத்த சகோதரர்கள் இருவரும் மகா புத்திசாலிகள். ஒருவன் அப்போதே ஜபல்பூரில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் உத்தியோகத்தில் இருந்தான். இரண்டாமவன் காலேஜில் பிஸிக்ஸ் படித்துக்கொண்டிருந்தான். சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் பிறந்த மூன்றாம் அண்ணன் நடராஜன் என்னைவிட ஒரு வயது, ஒரு வகுப்பு மூத்தவன். எனவே நானும் அவனும் சுலபமாக நண்பர்களானோம். நடராஜனுக்குப் பின் சற்று உடனே பிறந்தவள் சாவித்திரி. எனவே நான், என் தங்கை இருவரும் இவ்விருவருடனும் தோழமையோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.
ஜானகியம்மாவுக்கு குழந்தைகள் என்றால் பிரியம். அவர்களது வீடு பெரிய வீடு. அதற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் எல்லாம் ஓடி விளையாடுவதை மிகவும் ஆனந்தத்தோடு ரசிப்பார்கள். அடிக்கடி தின்பண்டங்கள், பாயசம், வெல்லம் கலந்த துருவிய தேங்காய் என்று ஏதாவது எங்களுக்கெல்லாம் தின்னக் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக்கு வந்து என் பாட்டியுடனும் அம்மாவுடனும் சிரித்தபடி கதைகள் பேசி சந்தோஷமாகவே இருந்தார்கள்.
யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. சற்று அதிக இடைவெளிக்குப் பிறகு ஐந்தாம் முறை மீண்டும் உண்டாகி தாய் வீட்டுக்குச் சென்ற ஜானகியம்மா, குழந்தை கண்ணனோடு வீடு திரும்பும்போது மிகவும் மாறுபட்ட பெண்ணாக காட்சியளித்தார். நடையிலும் பேச்சிலும் விநோத மாற்றங்கள். தூய தமிழிலேயே பேசினார். அன்பான கணவனை வெறுத்தது மட்டுமின்றி, அவரை திட்டுவதும் சமயத்தில் அடிப்பது கூட சகஜமான நிகழ்வாயிற்று. “இவன் என் கணவனல்ல – கள்வன். என் கணவர் எவ்வளவு நல்லவர்? இவன் கணவன் வேடத்தில் உலவும் கயவன்” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். எவ்வளவு இனிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசி வந்த பெண்மணி, திடீரென்று இம்மாதிரி பேசுவதும் அதுவும் மணிக்கணக்கில் வாய்க்கு வந்ததெல்லாம் தூய தமிழில் உளறுவதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. விசாரித்ததில் பெண்களுக்கு மகப்பேறு சமயத்தில் எப்போதாவது அபூர்வமாக ஏற்படும் நரம்புக் கோளாறு இவர்களை தாக்கியிருக்கிறது என்பது தெரிந்தது.
இதில் என்ன ஆயிற்று என்றால், கடைசியாகப் பிறந்த கண்ணன் மீது அபரிமிதமான அன்பு ஏற்பட்டு, வீட்டில் இருந்த மற்றவர்களை எப்பொழுதும் திட்டுவதும் கண்டிப்பதுமான போக்கு தொடங்கியது. இதற்கிடையில் இரண்டாவது மகன் தனது படிப்பை மிக நல்ல முறையில் முடித்திருந்ததால் அவனுக்கு பம்பாயில் பாபா அணுசக்தி கூடத்தில் மிக நல்ல வேலை கிடைத்து அவனும் சென்றுவிட்டான். எனவே ஜானகியம்மாளின் தாக்குதலுக்கு கணவரும், நடராஜனும் சாவித்திரியும் இரையாகினர். மிகச் சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொண்டு அவர்களை அடிக்கடி துன்புறுத்தத் தொடங்கினார் ஜானகியம்மா. அவரது கணவரை துணி உலர்த்தும் கழி கொண்டு நடு மண்டையில் தாக்குவதை நாங்களே கண்டிருக்கிறோம். (இதில் அவர் தலை வழுக்கை வேறு.) அவரும் எவ்வளவோ பொறுமையுடன் அவர்களை சமாளித்து வந்தாலும் அவர்கள் வீடு நரகமானதென்னவோ உண்மை.
ஒரு முறை ஜானகியம்மாவின் கொடுமை தாளாமல் நடராஜனும் சாவித்திரியும் அருகில் உள்ள ஏரியில் தங்களை மாய்த்துக்கொள்ளவும் முனைந்தனர். நல்ல வேளை, யாரோ பார்த்து உடனே தண்ணீரில் குதித்து இவர்களை காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னொருமுறை கடைக்குட்டி கண்ணன் ஏதோ கோள்மூட்டி, அதனால் ஆத்திரமடைந்த ஜானகியம்மா நடராஜனை அப்படியே தூக்கிக்கொண்டு தன் வீட்டுக் கிணற்றில் கால்களை மட்டும் பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கவிட்டபடியே, “இனிமே கண்ணன் மேல் கை வெப்பியா?” என்று நடராஜன் உயிருக்குப் பயந்து மாட்டேன் மாட்டேன் என்று அலறும்வரை பிடித்துக்கொண்டு பின்னர் ஏடாகூடமாக வெளியே இழுத்துப் போட்டதில் அவனுடைய முதுகெலும்பு உடைந்து தண்டுவடம் பாதிக்கப் பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வந்தது.
அதற்கும் பிறகு சில மாதங்களில் மீண்டும் நடராஜனும் சாவித்திரியும் காணாமல் போயினர். இதற்கு மேல் தாங்க முடியாமல் பரிதவித்த தந்தை கடைசி மகன் கண்ணனை பம்பாய்க்கு அனுப்பிவிட்டார். காணாமல் போன நடராஜன் இன்றுவரை திரும்பவில்லை. ஒரு சில வருடங்களுக்குப் பிறகு சாவித்திரி ஆந்திராவில் ஒரு கிராமத்தில் இருப்பதாக தகவல் வரவே அவளது தந்தையார் சென்று பார்த்தார். ரயிலேறிச் சென்ற சிறுமி சாவித்திரி ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டு அங்கேயே சில நாட்கள் அநாதையாக திரிந்துகொண்டிருந்ததைக் கண்ட ஒரு முதிய ரயில்வே கடைநிலை பணியாளர் அவளுக்கு வாழ்வும், கூடவே ஒரு குழந்தையையும் கொடுத்ததாகத் தெரிந்தது. எப்படியோ அவர்களிடமிருந்து பிரித்து சாவித்திரியை மீண்டும் அழைத்துக் கொண்டு வந்தார் அவளது தந்தை.
பம்பாய்க்குச் சென்றிருந்த கண்ணனும் பாழடைந்தே திரும்பினான். அவனுக்க என்ன நேர்ந்தது என்பது யாரும் அறியா ரகசியம். வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தான்.
களையிழந்த அந்த பெரிய வீட்டில் இருந்த அவர்கள் வாழ்வு கேள்விக்குறியானது. சிறிது நாட்களில் தாயும் தந்தையும் நோய்வாய்ப்பட்டும் வயதாகியும் காலமாகி விட்டனர். மூத்த சகோதரர்கள் வந்து இந்த பிரம்மாண்டமான வீடு இனி உபயோகப்படாது என்று பெரிய பரப்புள்ள அந்த நிலத்தை அடுக்குமாடி கட்டுவோரிடம் விற்று, சாவித்திரிக்கும் கண்ணனுக்கும் அதே கட்டிடத்தில் ஆளுக்கொரு ஃப்ளாட் மற்றும் கைச் செலவிற்காக சிறிது பணமும் பெறும்படி வழிவகை செய்துவிட்டு ஒதுங்கிவிட்டனர்.
கண்ணன் எப்படியோ சில சாஸ்திரங்கள் மந்திரங்கள் கற்றுக்கொண்டு சிறிய கோவில்களில் அர்ச்சகர் வேலை தேடிக்கொண்டான்.
இதன் நடுவில் சாவித்திரியின் கணவன் இறந்ததாக தகவல் வேறு வந்தது. அவளுக்கு வேறு சம்பாத்தியம் இல்லாததால் கண்ணன் சாவித்திரியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து அவளது வீட்டை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் சாவித்திரி தனக்கு வாய்க்கப்பட்ட விதியை, தனது சம்பிரதாயமாகவே ஏற்றுக்கொண்டு "நாங்க ஆந்திராவில இப்படித்தான் பண்ணுவோம்" என்று என்னிடம் பெருமை பேசுகிறாள். இவளது விதியை நினைத்து அழத்தான் முடியும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home