கவனத்தை ஈர்க்க இம்மாதிரி புதிரான தலைப்புகள் கொடுப்பது பழக்கமாகிவிட்டது. நாங்கள் பொறுத்துக்கொண்டது போல நீங்களும் பொறுத்துக் கொள்ளுங்கள். போகப்போக (படிக்கப்படிக்க) விளங்கும்.
எங்களது (என் மனைவி மற்றும் நான்) நீண்ட நாள் விருப்பங்களில் ஒன்று எப்படியாவது இமயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்ரிநாராயணரை ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என்பதுதான். சம்சார சாகரம் தவிர்க்க முடியாதது வேறு வழியில்லை. உத்தியோக சாகரம் சற்று சிறியதாக இருப்பதால் ஒருவர் பின் ஒருவராக அதைக் கடந்து கரையேறிய பிறகு மற்ற கடமைகள் பொறுப்புகள் எல்லாவற்றையும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு புறப்படத் தயாரானோம்.
சென்னையிலிருந்து தில்லிக்கு விமானம் மூலமாகவும் அங்கிருந்து ஹரித்வாருக்கு இரயில் மூலமாகவும் அங்கிருந்து பத்ரிநாத் கார் மூலமாகவும் செல்ல ஏற்பாடாயிருந்தது.
என்னதான் நாம் இறைவன் மேல் பாரத்தை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முயன்றாலும் விதி ஏதாவது ஒரு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்குமல்லவா? அது ஆபரேஷன் சிந்தூர் வடிவில் வந்தது. முன்பதிவு செய்திருந்த பலபேர் எல்லைப் பதட்டம் அன்று இல்லாதிருந்தாலும் அவரவர் இல்லத்தார் கொடுத்த அல்லல் தாங்காமல் தத்தம் பயணங்களை ரத்து செய்துவிட்டனர். யாத்திரை நடத்துபவரான என் சகோதரனும் நாங்கள் இருவருமாக மொத்தம் மூன்றுபேர் மட்டுமே, அதிலும் சென்னையிலிருந்து விமானம் மூலம் நாங்கள் இருவர் மட்டுமே என்று அமைந்துவிட்டது.
வழக்கமாக இரண்டு மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் வந்தடையும் நேரமும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காக நேரம் குறிப்பிடாமல் முன்னரே வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தோம்.
விமான நிலையத்தின் வெளியிலிருந்து பார்த்தால் நம்ம ஊரும் அழகுதான்!
வீட்டிலிருந்து விமான நிலையம் ஒரு மணி நேரம், அங்கு காத்திருப்பு இரண்டு மணி நேரம், பின்னர் வான்வழிப் பயணம் இரண்டு மணிநேரம், அங்கிருந்து டாக்ஸி ஒன்றரை மணி நேரம், ஆனந்தவிஹார் இரயில் நிலையத்தில் காத்திருப்பு இரண்டு மணி நேரம் பின்னர் வந்தே பாரத் மூலம் ஹரித்வார் மேலும் நான்கு மணி நேரம் என கிட்டத்தட்ட ஒரு நாளைக்குள் நாற்பது மணி நேரம் பயணித்தது போன்ற ஒரு உணர்வுடன் ஹரித்வார் காஞ்சி மடத்து பயணியர் விடுதிக்குச் சென்றடைந்தோம்,
உண்மையில் இந்த விடுதிக்குத்தான் ஆனந்த விஹார் என்று பெயரிட்டிருக்க வேண்டும். காரணம், புழக்கடையில் கரை புரளும் கங்கை நதி! கும்பகோணத்தில் பிறந்து கழுத்து வரை காவேரி பிரவாகத்தில் நின்று அனுபவித்தவனுக்கு இதைவிட ஆனந்தம் வேறு என்ன வேண்டும்!
இரண்டாம் நாள். எங்களைத்தவிர பிரயாணிகள் அனைவரும் வராமல் போனதால் எங்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு நளமகாராஜா கர்ண பரமாத்மா வராமல் போனதுதான். கங்கைக்கரைத் தோட்டத்தின் எதிரில் கட்டின பெண்டாட்டியின் கிழட்டுக் கண்ணனாக அருகினில் இருந்தே நின்று நிதானமாகக் குளித்து முடித்து ஈர ஆடைகளை கங்கையானாலும் கசக்கிப் பிழிந்து அறைக்கு வெளியில் உள்ள கொடியில் உலரத்தப் போட்டுவிட்டு உள்ளூர் யாத்திரைக்குப் புறப்பட்டோம். அருகில் இருந்த தமிழ்நாட்டுக்காரர் நடத்தும் ஸ்ரீ அன்னபூரணி உணவுக்கடையில் நம்மூர் இட்டிலி தோசை அதே சுவையில் கிடைக்க அங்கே காலைப்பட்டினியை உடைத்துக்கொண்ட பின், என் சகோதரன் எங்களை ஒரு ஆட்டோ ஓட்டுனரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு தன் மற்ற பிரயாண ஆயத்தங்களை கவனிக்கச் சென்றுவிட்டான்.
சென்னை வெய்யில் 35 டிகிரியே புழுக்கத்தால் 40 போலத் தோன்றும், இங்கு 40 டிகிரி எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் அப்படியே சுத்தமாக அதே உஷ்ணத்தில் நம்மீது இறங்குகிறது. கோவில்களில் தரையில் அங்கங்கு தண்ணீர் தெளித்த சாக்கு விரிப்பு இருந்தாலும் வெறும் தரையில் நடக்கும்போது கால் பொசுங்கத்தான் செய்கிறது.
அங்குள்ள கோவில்கள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன. மிகப் பிரசித்தியான புராதன கோவில்கள் தவிர மற்ற கோவில்களிலெல்லாம் நவக்கிரகங்கள் உட்பட தெய்வத்தின் சிலைகள் பளிங்குக்கல்லால் செய்யப்பட்ட பெரிய உருவங்களாக உள்ளன. மேலும் அவர்கள் பட்டுத்துணி போன்ற அழகான அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவமும் தருகிறார்கள். அனைவரும் ஒரே சாரியாக அடிதடியில்லாமல் நகர்கிறார்கள். போட்டோ விடியோ எடுக்க அனுமதியும் தருகிறார்கள், சில கோவில்களில் அதற்கான கட்டணத்துடன்!
நாங்கள் முதலில் சென்ற 'பவன் தாம்' கோவிலிலிருந்த பல மூர்த்திகளில் ஒன்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். அருகிவ் இன்னொரு கோவிலில் கண்ட மூர்த்திகளின் அழகிய வடிவையும் காண்பித்திருக்கிறேன்.
அங்குள்ள பல கோவில்கள் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் ஒரு இடத்தில் நுழைந்தால் பல படிகள் ஏறி இறங்கி திரும்பி குனிந்து வளைந்து தாண்டி செல்லும்படி செயற்கையான பாதைகள் அமைத்து அங்கங்கு விக்கிரகங்கள் நிர்மாணித்து ஒரு கோவிலில் குறைந்தது இருபது முப்பது நிமிடம் ஆகும்படி செய்துவிடுகிறார்கள். குறிப்பாக வைஷ்ணோதேவி கோவிலில் நான்கைந்து நிலைகள் சுற்றோ சுற்று என சுற்றவிடுகிறார்கள்.
வெளியில் தகிக்கும் வெய்யிலுக்கு இது பரவாயில்லை என்றே தோன்றுகிறது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் உபயத்தில் குளிர்ந்த தண்ணீர் தடையின்றிக் கிடைக்கிறது. அதைத்தவிர கோவில் விட்டு வெளியே வந்தால் அந்த ஊர் ஸ்பெஷல் 'நிம்பு பானி'யும் 'ஜல் ஜீரா'வும் பெரிய பெரிய பானைகளில் நம்ம ஊர் ஐஸ்மோர் போல தாராளமாகக் கிடைக்கிறது, எத்தனை குடித்தாலும் அடுத்த பத்து நிமிடத்தில் தாகமும் எடுக்கிறது!
மதியம் 12:30க்கு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பலிமார் மடத்தில் தீர்த்தப்பிரசாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்வ பத்ததியில் எளிமையான, அருமையான உணவு (பரமாத்மா கோபித்துக்கொள்ள வேண்டாம்) உட்கொண்ட பிறகு சற்று ஓய்வெடுத்துக்கொண்டபின், அங்கிருந்து மீண்டும் மலைமேல்கோவிலான சண்டிதேவி கோவிலுக்குப் புறப்பட்டோம்.
நான்கு கிலோமீட்டர் படிவழிப்பாதை ஏற குறைந்தது ஒன்றரை-இரண்டு மணிநேரம் ஆகும். சுலபமாக ஏற ரோப்வே என்றழைக்கப்படும் கயறூர்தி (வின்ச்) அமைத்திருக்கிறார்கள். ஏறி இறங்க 240 ரூபாய் கட்டணம். மலைகளின் மேலே ரம்யமான காட்சிகள். மேலே போய்ச் சேர்ந்தாலோ கூட்டமான கூட்டம். ஆனாலும் முன்னரே சொன்னதுபோல அனைவரும் ஏதோவித கட்டுப்பாட்டுடன் தள்ளுமுள்ளு இல்லாமல் மெதுவாகவும் வயதானவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் வழிவிட்டும் அமைதியாக தரிசனம் செய்கிறார்கள். இதேபோல் மானஸாதேவிக்கென்று இன்னொரு மலைக்கோவிலும் இருக்கிறது. அதை நாங்கள் வெகுகாலம் முந்தைய ஒரு பயணத்திலேயே பார்த்துவிட்டிருந்ததால் இப்போது இருந்த வெய்யிலிலும் களைப்பிலும் மீண்டும் செல்வதற்கான முனைப்பு வரவில்லை,
அங்கிருந்து விடுதிக்குத் திரும்பும்முன் சக்தி பீடங்களுள் ஒன்றான மாயா தேவி ஆலயத்துக்கும் செல்ல எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம். சக்தி பீடங்களுள் ஒன்றாக இருந்தும் ஏனோ தெரியவில்லை, மாயா தேவியின் ஆலயம் ஆளரவமே இல்லாமல் இருந்தது.
நாங்கள் மலைகள் ஏறி இறங்கினாலும் ஆட்டோ ஓட்டுனர் எங்களை மலையேற விடவில்லை. தீவிர சிவபக்தரான அவர், மீண்டும் எப்போது இப்பகுதிக்கு வரப்போகிறீர்கள், விடுதிக்குச் செல்லும் வழியில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறேன், வாருங்கள் என அன்புக் கட்டளையிட்டு விடுதிக்குச் செல்லும் முன் மேலும் மூன்று 'போலே பாபா (சிவன்)' கோவில்களுக்கு அழைத்துச் சென்றார். கோவில்களின் விவரம் இப்போது நினைவில் இல்லை. எடுத்த படங்களுடன் ஒப்பிட்டுப் பின்னர் பூர்த்தி செய்கிறேன்.
ஒரு மின்னல் இடைவெளி ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் புறப்பட்டு இங்கு ஹரித்வாரில் நடைபெறும் கங்கா ஆரத்தி காணச் சென்றோம். எங்களுக்கு இது அதிகமான கூட்டமாகத் தோன்றினாலும் வழக்கமாக ஆரத்திக்குக் கூடும் அளவில் இது பத்தில் ஒரு பங்குகூட இல்லை என்று என் சகோதரன் கூறியது வியப்பாக இருந்தது,
அன்னபூரணி தயவில் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். காலை 6.30க்கு புறப்பட வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டு கண்ணயர்ந்தோம்.
மூன்றாம் நாள் காலை வழக்கம்போல் ஐந்தரைக்கு முன்பாக எழுந்து விடுதிப்பொறுப்பாளரிடமிருந்து சாவியை வாங்கி கம்பிக்கதவைத் திறந்து குளிர்ந்த கங்கை நீரில் கழுத்தளவு ஆழத்தில் நின்று குளித்து உடைமாற்றி சந்தியாவந்தனம் செய்தபின்பு நீ...ண்ட தூர கார் பயணத்துக்கு தயாராக நின்றோம். இந்த கங்கை நீர் குளிரெல்லாம் ஒரு குளிரே இல்லை என்பது எங்களுக்கு அப்போது தெரியாது.
விடுதிக்கு எதிரிலேயே இருந்த ஸ்ரீராமர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம். பயாஸி என்ற ஊரில் அவர்கள் பாணியில் காலைச் சிற்றுண்டி உட்கொண்டோம். அன்போடும் புன்னகையோடும் கடைக்காரர் தயாரித்த ஒரே ஒரு பராத்தாதான் - எவ்வளவு நேரம் தாங்குகிறது! உப்பிட்டவரையே உள்ளவும் நினைக்கும் நாம் உருளை பராத்தா இட்டவரையும் நினைப்பதில் தப்பில்லையே!

சிற்றுண்டி முடித்துப் புறப்பட்டாயிற்று. இனி வாழ்க்கை எப்படியோ, பாதை ஏறுமுகம்தான். மலைகளும் மரங்களும் வளைவுகளும் வற்றாநதிகளும் கண்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருந்தன. சென்ற பிப்ரவரி மாதம் பிரயாக் யாத்திரை பற்றி எழுதியிருந்தேன். அந்த யாத்திரையின் பலன்தானோ தெரியவில்லை, இந்தப் பிரயாணத்திலும் அநேக சங்கமங்கள்.
முதலில் நாங்கள் கண்டது திவ்யதேசங்களில் ஒன்றான தேவப்பிரயாக் - பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிக்கும் இடம். மேலிருக்கும் சாலையின் ஓரத்திலிருந்த கிடைத்த காட்சி. கீழே இறங்கி தரிசனம் செய்து மீண்டும் மேலே ஏறி தொடர்வதற்கான நேரமும் தெம்பும் இல்லாததால் ஸ்ரீ ரகுநாத்ஜி பகவானை இங்கிருந்தே பிரார்த்தித்துக்கொண்டு புறப்பட்டோம். இரு நதிகளின் வெவ்வேறு நிறத்தையும் சங்கமத்தின் அழகையும் பாருங்கள். இந்த இரு நதிகளும் சங்கமித்த பின்பு ஒன்றாக, கங்கையாக பிரவாகமெடுக்கிறது. சங்கமத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் - வாழ்க்கையில் இணைவது முக்கியமல்ல, எண்ணத்திலும் செயலிலும் ஒன்றாக ஆவது முக்கியம்.
அடுத்து நாங்கள் கண்டது ருத்ரப்பிரயாக். மந்தாகினி நதியும் அலகநந்தாவும் சங்கமிக்கும் இடம். மனதைக் கவரும் வசீகரமான காட்சி.
வழியெங்கும் மலைப்பகுதிகளுக்கான அழகான மரங்கள். ஆங்காங்கு நீல மலர்கள் பூத்துச் சொறியும் அற்புதமான காட்சி. இரசிக்கும் மனதிருந்தால் ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியேதான். காலைப் பராத்தாவின் கனம் சிறிதளவே குறைந்திருந்ததால் மதிய உணவு எதுவும் உட்கொள்ளாமல் வழியில் வெறும் ஒரு டம்ளர் லஸ்ஸி மாத்திரம் அருந்தினோம்.

உயரம் செல்லச்செல்ல, வெய்யில் உறைத்தாலும் வெப்பம் இறங்கிக்கொண்டே வந்ததை உணர முடிந்தது. ஸ்வெட்டர் என்றால் என்ன என்பதே மறந்துபோயிருந்த எனக்கு ஞாபகமாக ஹரித்வாரில் ஒன்று வாங்கிக்கொண்டோம். அதையே சென்னையில் வாங்கியிருந்தால் விலை மூன்று மடங்காக இருந்திருக்கும். சுமார் நான்கு மணி அளவில் பிப்பல்கோட்டி என்று ஊருக்குச் சென்றடைந்தோம். அங்கு ஒரு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரை விட்டு இறங்கும்போது நம்மூர் மார்கழிக்குளிர் போல இருந்தது. சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் அருகிலிருந்த உணவுவிடுதியில் மீண்டும் வடக்கத்தி உணவு உட்கொண்டு உறங்கச் சென்றோம்.
நான்காம் நாள் அதிகாலை மூன்று மணிக்குப் புறப்பட்டோம். குளிர் என்றால் என்ன என்பதை முதலில் உணர்த்திய தருணம் அது. அறையிலிருந்து வெளியே வந்து இரண்டு மாடி படிகள் இறங்கி காரில் உட்கார்வதற்குள் கைகால்கள் வெடவெடத்தன. காரில் அமர்ந்து கதவுகளை மூடிய பின் தான் குளிர் குறைந்தது.
மேலே செல்லும் பாதை முழுவதும் கரணம் தப்பினால் மரணம் காட்டும் மலைப்பாதை. அங்கங்கே பழுதுபார்க்கும் பணிகள் நடந்துகொண்டே இருந்தன. இத்தனை குளிரிலும் எப்படித்தான் பணியாற்றுகிறார்களோ! சுத்தமான நீல வானம். இறைவனைக் காணச் செல்வோர்க்கு இயற்கையும் இறைவனின் அங்கம்தான் என்று உணர்த்தும் காட்சிகள். பனி மூடிய சிகரங்களை முதன்முதலில் பார்க்கும்போது ஏற்படும் பரவச உணர்வு சொல்லி முடியாதது. ஊசி இலை மரங்களைத் தவிர வேறு அதிகமாக இல்லை.
ஒரு வழியாக ஏழு மணி அளவில் எங்களுக்காக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த பெஜாவர் மடத்துக்கு (அனந்த மடம் என்று அழைக்கிறார்கள்) சென்றடைந்தோம். வாசலில் காலணியைக் கழற்றிவிட்டு காலைத் தரையில் வைத்தால் அதிர்ச்சி - கால் உறைந்துபோகும் அளவுக்குக் குளிர்! பின்னர்தான் கவனித்தேன். அங்கு துப்புரவுப் பணியாளர் முதல் கோவில் அர்ச்சகர் வரை அனைவரும் எப்பொழுதும் ஸ்வெட்டர் ஸாக்ஸுடன்தான் பணியாற்றுகிறார்கள். வெப்பமானி காட்டிய உஷ்ணம் (உஷ்ணமா? உளறுகிறேன. குளிர் என்பதே சரி) 4 டிகிரி செல்சியஸ்! நள்ளிரவில் பூஜ்யத்துக்குக் கீழே சென்றிருக்கும் குளிரை உணராமல் செய்தது மூடியிருந்த கதவுகளும் போர்த்தியிருந்த கம்பளிகளும்தான்!
விடிந்தபின் அறையின் ஜன்னலூடே தெரிந்த அற்புதக் காட்சியில் மயங்கி அரை மணி நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிறகு வந்த 'காரியத்தை' நிறைவேற்றக் கிளம்பினோம். இப்பகுதிகளில் காலை நான்கு மணியளவிலேயே மெதுவாக வெளிச்சம் வந்துவிடுகிறது, மாலை ஏழு மணிக்கு மேலும் நீடிக்கிறது.
பித்ரு கார்யம் செய்வதற்கு த்ரிவேணி சங்கமம் பிரசித்தி பெற்றிருந்தாலும், வைணவர்களுக்கு, அதிலும் மத்வ மதத்தினர்க்கு இங்குள்ள பிரம்ம கபாலத்தில் பித்ரு கார்யம் செய்வது தலையாய கடமையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீ பிரம்மா இங்கு வசிப்பதாகக் கருத்படுவதால் இங்கு பித்ரு கார்யம் செய்தால் அந்தந்த பித்ருக்களுக்கு இனி ஜனனம் இல்லாமல் இறைவனடி சேரும் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பத்ரிநாத் விஜயம் செய்து பிரம்ம கபாலத்தில் பித்ரு கார்யம் செய்து பிண்டங்களை அலகநந்தாவில் கரைப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
இதை மனதில் பிரதானமாக வைத்து மால் தரிசனத்தை மாலைக்கு ஒத்தி வைத்து முதலில் பித்ரு கார்யம் செய்வதற்காக இங்குள்ள தப்த குண்டத்தில் நீராடினோம்.
தப்த குண்டம் என்று அழைக்கப்படும் வெந்நீர் ஊற்றுகள் இயற்கையின் அதிசயம். பூமியின் மேல் தகட்டிற்குக் கீழே உள்ள அதிவெப்ப உருகிய பாறைகளால் சூடாக்கப்பட்ட கந்தகத்தன்மை வாய்ந்த நீர் பூமித் தகடுகளின் உராய்வுப் பாதைகளின் மற்றும் விரிசல்களின் ஊடே கசிந்து ஆங்காங்கே சிறிய நீரூற்றுகள் போல வெளிப்படுறது. வெளியே உறையும் குளிர் நிலவும் பிரதேசத்தில் இந்நீரின் வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் அளவில் நிற்கிறது. பத்ரிநாத் கோவில் அருகில் அமைந்துள்ள ஊற்றுகளின் வாயிலில் அடியில் தொட்டிகள் போல பாறை வெட்டப்பட்டு குளிக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. தனித்தனியாக நான்கைந்து தொட்டிகள் உள்ளன, பிரத்யேகமாக மகளிர்க்கு என்று ஒன்றும் உள்ளது. முதலில் இறங்கும்போது கொதிப்பதுபோல் தோன்றினாலும் உள்ளே ஒரு நிமிடம் நின்றபின் வெப்பம் இதமாகத் தோன்றுகிறது. நான் இறங்கிய தொட்டி கழுத்தளவு ஆழம் கொண்டதாக இருந்தது. ஒன்றரை அடி ஆழத்தில் ஒரே ஒரு படி. அதன்பின் குதித்துத்தான் இறங்க வேண்டும். தைரியம் இல்லாதவர்கள் மற்றும் மிகக் குறைந்த உயரம் கொண்டவர்கள் விளிம்பில் அமர்ந்துகொண்டு நாழிநாழியாக ஆழ முகந்து வெந்நீரை மொண்டுமொண்டு தலையில் ஊற்றிக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது படத்தில் வெந்நீர் ஊற்றின் வாயிலைக் காணலாம்.



குளித்து வெளியேறினால் அடுத்த அதிசயம் - இதுவரை நடுக்கிய குளிர் மாயம்! அதன் பின்னர் பித்ரு கார்யம் முடிந்து விடுதிக்குச் செல்லும் வரை இந்த 66 வயதிலும் வெற்றுடம்புடனேயே இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கை கற்றுத்தரும் அடுத்த பாடம் - எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ள வழி உண்டு! இப்போது புரிகிறதா தலைப்பின் தாத்பர்யம்?
இந்த இயற்கை வெந்நீரில் குளிப்பது பற்றி இருவிதமான கருத்துகள் உள்ளன. ஒரு சாரார் இது மருத்துவப் பலன்கள் நிறைந்தது அதனால் உடலுக்கு நல்லது என்கிறார்கள். மறுசாரார் இது கந்தகத்தன்மை கொண்டதால் அதிகநேரமோ அடிக்கடியோ குளிப்பது உடலுக்கு நல்லதல்ல - தலைசுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என்கிறார்கள். நமது நோக்கம் குளிப்பதற்கு அடுத்த விஷயங்கள்தான் என்பதால் சீக்கிரமே (மூன்று முறை தலை முழுகும் நேரம்) குளித்து எழுந்து வந்துவிட்டோம்.
பிரம்ம கபாலத்தில் அலகநந்தா நதிப் படிகளில் அமர்ந்து பித்ரு கார்யங்களை முடித்துக் கொண்டு, பிண்டங்களை கையில் எடுத்துக்கொண்டு பிரம்மாவுக்கு காண்பித்துவிட்டு மீண்டும் அமர்ந்த இடத்துக்கு வந்து கிரியைகளை முடித்துக் கொண்டு பிண்டங்களை படிகளில் இறங்கி மேலிருந்து வீசாமல் பவ்யமாக கணுக்கால் அளவாவது இறங்கி மெதுவாகக் கரைக்கும்போதுதான் தெரிந்தது ஒரு நிமிடத்திலேயே கால் உறைந்து விடும் அளவுக்குக் குளிர் தண்ணீர் என்பது. அத்தனை பனியும் உருகி நேராக வரும் நீரல்லவா? மிகச் சுத்தமான நீர் என்பது மட்டுமல்ல. நாம் soft water, hard water என்று சொல்கிறோமல்லவா? உலகத்திலேயே softest நீர் இங்குதான் கிடைக்கும் என்று சொல்லலாம். பஞ்ச பாத்திரத்தில் நீர் மொண்டு உத்தரிணியிலிருந்து உள்ளங்கையில் ஊற்றிக்கொண்டு ஆசமனம் செய்ய அருந்துகையில் இவ்வளவு ருசியான தூய நீரை இதுவரை நாம் உட்கொண்டதே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
இன்னொரு விஷயமும் கவனித்தேன். சங்கல்பம் செய்யும் போது அவர்கள் நம்மை விட ஒரு மாதம் தாண்டி இருக்கிறார்கள். அதாவது நமக்கு இப்போது வசந்த ருது வைசாக மாதம் நடக்கும்போது அவர்கள் கிரீஷ்ம ருது ஜேஷ்ட மாதத்தில் இருக்கிறார்கள். இது ஏன் எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
திரும்பி வரும் வழியில் நர-நாராயண பர்வதங்களுக்கிடையில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்ரிநாராயணர் ஆலயத்தை மீண்டும் ஒருமுறை வெளியிலிருந்து வணங்கிவிட்டு, ஸ்ரீ நாராயணர் இங்கு குடிகொள்ள இடத்தை விட்டுத்தந்த ஸ்ரீ ஆதி கேதாரேஷ்வர் ஆலயத்தையும் வணங்கிவிட்டு, மெதுவாக நடந்தபடி விடுதி நோக்கிச் சொன்றோம். நான் வேலையாக இருந்தபோது ஓய்வெடுத்துக்கொண்டிருந்த என் மனைவி இப்போது ஷாப்பிங்கில் மும்மரமாக இறங்க நான் சற்று ஓய்வெடுத்துக் கொண்டேன். ஆட்டுக்கு வாலையும் ஆம்படையாளுக்கு ஆசையையும் அளந்து வைத்தவன் புத்திசாலி!
மடத்தில் மீண்டும் எளிய ஆனால் அற்புதமான மதிய உணவுக்குப் பின்னர் கட்டாயமாக பார்த்தேயாகவேண்டிய இடங்களாக பத்ரியாத்திரை சென்ற உறவினர்கள் பரிந்துரைத்த இடங்களான மாணா கிராமம், வியாஸ குகை (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே என்பது பிற்பாடுதான் தெரிந்தது) மற்றும் சரஸ்வதி நதி முதலில் பூமிக்கு வெளியில் புலப்படும் இடம் ஆகியவற்றை நோக்கிச் சென்றோம்.
இது சற்று கடினமான பிரயாணம். தூரம் குறைவு (சுமார் இரண்டு கிலோ மீட்டர்) என்றாலும் சற்றே செங்குத்து உயரமான பாதை என்பதால் ஏறுவது கடினம். திடமாக இருப்பவர்கள் நடந்தே சென்று வரலாம். நேரம் இருப்பவர்கள் சற்று மெதுவாக நடந்து சென்று வரலாம். நேரக் கட்டுப்பாடு இருப்பவர்களும் அவ்வளவு திடமாக இல்லாதவர்களும் அங்கு நேபாளிகள் பிட்டு என்று அழைக்கப்படும் கூடை போன்ற நாற்காலி (அல்லது நாற்காலி போன்ற கூடை) யில் அமர்திக்கொண்டு செல்வதை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
சிறிது காலம் முன்னர் வரை இந்தியாவின் கடைசி தேநீர்க்கடை என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தை தற்போது என்ன காரணத்தினாலோ இந்தியாவின் முதல் தேநீர்க்கடை என்று மாற்றி அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வாழ்க்கையின் அடுத்த பாடம் - முதலா முடிவா என்பது போகும் திசையைப் பொறுத்தது!
இங்கிருந்து சற்று மேலே வியாஸர் குகை இருக்கிறது. இங்குதான் வேதவ்யாஸர் தவமிருந்து வேதங்களையும் பதினெட்டு புராணங்களையும் இயற்றியது மட்டுமல்லாமல் அவர் சொல்லச்சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்றும் நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட இப்பகுதியில் பாரத நாட்டின் உயரமான இடத்திலிருந்து (மாணா கிராமத்திலிருந்து) கீழ்நோக்கி எடுக்கப்பட்ட படம் இதோ:
இந்த இடத்துக்கு மேலே தென்படும் வாகனப்பாதை (தேநீர்க்கடை படம் பார்க்கவும்) பொதுமக்களுக்கானது அல்ல. அது நம் இந்திய ராணுவத்தின் உபயோகத்திற்கென்று அமைக்கப்பட் பிரத்யேக பாதை. நாம் இங்கு நிம்மதியாக நமது விருப்பப்படி வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் நமது ராணுவத்தின் பாதுகாப்பினால்தான் என்பதை அனைவரும் குறைந்தது இந்த மாதிரி பிரயாணங்களிலாவது உணர வேண்டும்.
இங்கிருந்து மெதுவாக இறங்கி வரும் வழியில் சற்றே விலகும் பாதை வழியாக கீழே இறங்கினால் கண்ணில் முதலில் தென்படுவது ஸ்ரீ சரஸ்வதி தேவியின் அழகான கோவில். இந்தக் கோவில் அடைவதற்கான பாதை இரண்டு பக்க மலைகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு பெரிய பாறைதான். அக்காலத்தில் பாண்டவர்கள் அனைவரும் இடைவெளியைத் 'அசால்ட்டாகத்' தாண்டிய போது திரௌபதி தாண்ட முடியாமல் தவித்ததால் பீமன் இந்தப்பைாறையை இரண்டு மலைகளுக்கு இடையே பொருத்தி அதன் மேல் அவள் நடந்து வர வழி செய்தான் என்பது ஐதீகம். அதனாலேயே இது பீமன் பாறை என்று அழைக்கப்படுகிறது,
இந்தப் பாறையைக் கடந்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் இடதுபுறம் மலையில் உள்ள துவாரம் வழியாக சரஸ்வதி நதி ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பரித்துக்கொண்டு ஆனந்தமாக வெள்ளை வெள்ளமாகத் துள்ளிக்கொண்டு வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். சரஸ்வதியின் யுகக்கணக்கிலான வேகமான வீச்சில் பாறைகள் கரைந்து கரைந்து விநோதமான வடிவங்களை உருவாக்கியிருப்பதும் மற்ற இடங்களில் காணக் கிடைக்காத காட்சியாகும்.
சரஸ்வதியை வணங்கிவிட்டு திரும்பும் வழியில் சரஸ்வதி அலகநந்தாவுடன் சங்கமிக்கும் இடமான கேசவப்பிரயாக் காட்சியளிக்கிறது,
அனந்த மடத்துக்குத் திரும்பும் வழியில் காணும் காட்சிகள் மலைகளின் பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. உதாரணத்துக்கு ஒன்று கீழே தந்திருக்கிறேன். அடிவாரத்தில் தெரியும் கோவிலின் அளவுடன் ஒப்பீடு செய்துகொள்ளலாம்.
மலையை விட மனிதனின் ஆசை பிரம்மாண்டம் என்பதை நிரூபிக்க இந்த உயரத்திலும் கடை கண்ணிகள். இவ்வளவு உயரம் வந்துவிட்டீர்கள், இனி விலையை மட்டும் குறைக்காதீர்கள் என்று சொன்ன விலையிலேயே கறாராக நிற்கும் வியாபாரிகள். இயற்கையின் பாடம் நான்கு - இயற்கையைவிட மனித மனம் விசித்திரமானது.
விடுதிக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் திருமால் தரிசனத்திற்காக கோவிலுக்கு விரைந்தோம். அடிக்கடி விஜயம் செய்யும் என் சகோதரன் தயவில் ஆறு மணி மங்கள ஆரத்தி ஒரு முறையும். விஷ்ணு சஹஸ்ரநாம படனத்தில் இருபது நிமிடங்கள் முழுவதுமாக பகவான் எதிரில் அமர்ந்து பாராயணம் செய்யும் பாக்கியமும் முதல் யாத்திரையிலேயே எங்களுக்குக் கிடைத்தது எங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியமே. எங்களை இந்த யாத்திரைக்கு அழைத்துச் சென்ற என் சகோதரன் பிரபாகரன் என்கிற பிரபுவுக்கும் இந்தப் புண்ணியத்தில் பெரிய பங்கு உண்டு. கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி கிடையாதாகையால் வெளியில் வந்த பிறகு மாலை மயங்குகின்ற நேரத்தில் விளக்குகளுடன் கண்ட காட்சி இதோ:


ஜன்ம சாபல்யம் அடைந்த திருப்தியுடன் மனமில்லாமல் வெளியே வந்தோம். நினைத்தது நினைத்தபடி நடந்த நிம்மதியுடன் வேறு வேலை எதுவும் இல்லாத விச்ராந்த மனநிலையில் மனம் கோவிலிலும் கண்கள் வழியில் கண்ட கடைகளிலும் இலயித்துக்கொண்டேயிருக்க கால்கள் தம்பாட்டுக்கு விடுதி நோக்கி நடந்தன. விடுதி அடைந்து சற்று நேரம் ஓய்வுக்குப்பின் சுடச்சுட ரவா கிச்சடி பறிமாறப்பட்டது. பசியுடன் உண்டுவிட்டு உறங்கச் சென்றோம்.
ஐந்தாம் நாள் அதிகாலை எழுந்து அறையிலேயே ஹீட்டரில் வெந்நீர் போட்டுக் குளித்து முடித்து ஐந்து மணிக்கெல்லாம் திரும்பும் பயணத்திற்குத் தயாரானோம். குளிர்மானி (மாற்றிவிட்டேன் கவனியுங்கள்) மூன்று டிகிரி காட்டியது. வெளியில் வந்தால் நேற்று முழுவதும் கண்ணுக்குத் தென்படாமல் மேகத்தின் பின் மறைந்திருந்த நீலகண்ட சிகரம் அழகாகக் காட்சியளித்தது.
இதுவும் இறைவன் அருளே என்று எண்ணிக்கொண்டே காரில் ஏறி புறப்பட்டதுதான் தெரியும். விடிந்தும் விடியாக காலைப் பொழுதில் காட்சிகள் தெரிந்தும் தெரியாமலும் இருக்க சிறிது நேரம் கண்களை மூடி, தெரிந்த ஸ்லோகங்களை மனதினில் சொல்லிக்கொண்டே பயணித்தோம். சிறிது வெளிச்சம் வந்த பின் கண்ணில் பட்ட காட்சிகள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் அற்புத இயற்கை ஓவியங்கள்.
சிறிது நேரப் பயணத்திற்குப் பின் ஜோஷிமட் அருகே உள்ள விஷ்ணுப்பிரயாக் கண்டோம். அலகநந்தாவும் தௌலிகங்காவும் சங்கமிக்கும் புண்ணியஸ்தலம் இது.
சுமார் இரண்டரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு நேற்று புறப்பட்ட அதே பிபல்கோட்டி விடுதிக்குச் சென்றடைந்தோம். அங்கு காலைச் சிற்றுண்டி முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் நந்தப்பிரயாக் என்னும் அழகிய இடத்தை அடைந்தோம். இது அலகநந்தாவும் நந்தாகினியும் சங்கமிக்கும் இடம்.
அலகநந்தா பிண்டார் நதியுடம் சங்கமிக்கும் கர்ணப்பிரயாக் என்றும் புனித பூமியையும் வழியில் கடந்தோம். ஆனால் பாம்பு போல் வளைந்து நெளிந்த சாலையில் வண்டியை விட்டு இறங்கி படம் எடுக்கும் வாய்ப்பு அமையவில்லை.
முன்பு கண்ட அதே நீல மலர் மரம் வெய்யில் சாய்மானத்திலும் மலையின் பின்புலத்திலும் வேறுவித அழகிய தோற்றம் கொள்வதைக் காணலாம். இதை நேரில் காண்பவர்களுக்குத்தான் நமக்கு இயற்கை தந்த கண்ணுக்கும் காமிராவின் செயற்கைக் கண்ணுக்குமான வித்தியாசம் புரியும். இயற்கையின் பாடம் ஐந்து - இயற்கையை வெல்ல முடியாது.
வெறும் இயற்கையை மட்டுமா நம்பி இவர்கள் இருக்கிறார்கள் என்று மனதில் எழுந்த கேள்விக்கு விடையும் உடனேயே கிடைத்தது. அடுக்குப்படி வேளாண்மை.
வரும் வழியில் ரிஷிகேஷ் நகரம் வழியாக வர நேர்ந்தது. அப்போது தொலைவிலிருந்து லக்ஷ்மண் ஜூலாவையும், அருகிலிருந்து ஸ்ரீ வேங்கடேச கல்யாண வைபவத்தையும் கண்டோம். எதேட்சையாக பிரதான சாலையிலேயே அங்கிருந்த பெருமாள் மற்றம் சிவன் (சந்திரமௌலீஸ்வரர்) கோவில்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து இறங்கியபோது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். இரண்டு கோவில்களும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படுபவை.

மாலை ஐந்து மணி அளவில் மீண்டும் ஹரித்வார் சங்கர மட விடுதிக்கு வந்து சேர்ந்தோம். சிறிது ஓய்வுக்குப் பின் காலாற மெதுவாக கடைவீதியில் நின்று நடந்து தேநீர் குடித்து கடைகளில் பொருள்கள் வாங்கி மீண்டும் ஒருமுறை கங்கா ஆரத்தி கூட்டத்தினிடையே கண்டு களித்து திரும்பும் வழியிலும் சிறிது பொருட்கள் வாங்கிக் கொண்டு அன்னபூரணியிடமும் பிரசாதம் பெற்றுண்டபின் விடுதி வந்து சேர்ந்தோம்.
ஆறாம் நாள் காலை ஆசை ஆசையாக இந்தப் பிரயாணத்தில் கடைசி முறையாக கங்கையில் குளித்தெழுந்தேன். இரண்டு நாட்கள் முன்பு கண்டதைவிட பிரவாகம் சற்று அதிகரித்திருந்தது. எத்தனை நதிகள். எவ்வளவு நீர்? சரியாக வழிகள் அமைத்து பயன்படுத்தினால் பாரதம் முழுவதும் வளமான பூமியாக மாறிவிடும். இன்றில்லையாயினும் என்றாவது செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மீண்டும் எட்டு மணிக்கு வந்தே பாரத் ஏறி நண்பகல் தில்லியில் இறங்கி விமான நிலையம் அடைந்து கர்நாடக உணவுவிடுதியில் ஆகாயத்துக்கு மேலயோன விலையில் உணவு உட்கொண்டு (பசியானது வெட்கம் மட்டுமல்ல விலையும் அறியாது) நான்கு மணி விமானத்தில் புறப்பட்டு ஆறரை மணிக்கெல்லாம்
சென்னை வந்தடைந்து டாக்ஸி பிடித்து வீடு வந்தடைய ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. தில்லியிலிருந்து சென்னை வரும் நேரத்தை விட மீனம்பாக்கத்திலிருந்து அம்பத்தூர் வர அதிக நேரம் பிடிக்கிறது, மாலை வேளையில்.
திரும்பி நினைத்துப் பார்க்கையில் ஆண்டவனைக் காண முடியுமோ முடியாதோ ஆண்டவன் சன்னதி நோக்கிச் செல்லும்போது ஆறு சங்கமங்கள் முடிவில் ஒரே ஆறாக பிரவாகிப்பதை முடியிலிருந்து அடிவரை காணச் செல்லும் புனிதப் பயணத்தில் நமக்குக் காணக்கிடைக்கிறது. (அலக) நந்தாவாக ஒரு ஆறு அவதரித்து ஆறு ஆறுகளுடன் சங்கமித்து முடிவில் கங்காவாக கடலில் கலக்கும் கங்கை நதியும் அதே போன்று நமது தென்தேசத்தில் காவிரி நதியும் இயற்கை நமக்குக் கொடுத்த வரங்கள். இவற்றை புனிதம் கெடாமல் போக்கு மாறாமல் காப்பது நம் கடமை. அதற்காகவே இயற்றபட்ட சம்பிரதாயங்களிலிருந்து வழுவாமல் பின்பற்றினாலே பாதி வெற்றி கிட்டும்.
இப்படியாக எங்கள் பயணமும் இந்த பயணக் கட்டுரையும் இனிதே நிறைவடைந்தன.
பொறுமையாகப் படித்ததற்கு நன்றி.
பின் குறிப்பு
1, முதல் நாள் வீட்டை விட்டுப் புறப்படும்போது டாக்ஸியில் பெட்டிகளை ஏற்றுவதற்காக வெளிச்சுவர் கதவைத் திறந்து வைத்து உள்ளே சென்று பெட்டி எடுத்து வரும் சில நொடிகளில் ஒரு பசுமாடு தென்னை மரத்தின் கீழ் முளைத்திருந்த புல்லைத் தின்ன உள்ளே நுழைந்துவிட்டது. இது எனக்கு மிக நல்ல சகுனமாகப் பட்டது. அதன்படியே யாத்திரையும் நல்லபடி நிறைவேறிற்று. டாக்ஸி ஓட்டுனர் கூறியதாவது, "அவனவன் பழம் வெல்லம் வெச்சுக் கூப்பிட்டா கூட வரமாட்டேங்குது அதுவா உங்க வீட்டுக்குள்ளேயே வந்து புல்லு தின்னா இதைவிட நல்ல சகுனம் வேற என்ன இருக்க முடியும்?". முன்னோர்கள் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது.
2. பித்ரு காரியங்கள் முடித்தவுடன் பிரம்ம கபாலத்திற்குச் செல்ல எழுந்திருக்கும்போது ஒரே ஒரு நிமிடம் மழை தூறிற்று. இதையும் நான் வேண்டிய தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதமாகவே எடுத்துக்கொண்டேன். அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.