விச்ராந்தி
ஒரு அழகிய சிறிய இரயில் நிலையம். கடலும் மலைகளும் கலந்த இயற்கைச் சூழலில் அமைந்த அமைதியான கிராமம். இன்னும் அரை மணி நேரத்தில் பழைய கால நீராவி என்ஜின் பொருத்திய இரயில் வரப்போகும் சமயம். இரயில் பயணிகளின் நடைமேடை முடியும் இடத்தில் குறுக்கே ஒரு சிறிய சாலை. இரயில் நிலையத்தில் யாரும் இல்லை.
இரயில் பாதைக்கும் சாலைக்கும் சேர்த்து ஒரே அடைக்கும் 'கேட்'தான். ஒரு நாளைக்கு மொத்தமே ஒருவழியில் நான்கு என மொத்தம் எட்டு இரயில் வண்டிகள்தான். இரயில் பாதையை இரயில் கடந்து செல்லாதபடி குறுக்கே கேட்கொண்டு அடைக்து கேள்விப்பட்டதுண்டா? இங்கே பார்க்கலாம். இரயில் வந்து செல்லும் ஐந்து நிமிடங்கள் போக மற்ற நேரத்தில் சாலையைத் திறந்தும் இரயில் பாதையை மூடியும் இருக்கும் அந்த தானியங்கி இரும்பு கேட்டுகள் இரயில் வந்து நின்று புறப்படும் வரை இரயில் பாதையைத் திறந்து சாலையை மூடும்படி அமைக்கப்பட்ட பழைய கால அமைப்பு.
முதியவர் ஒருவர் மெதுவாக நடந்தபடி வந்து இரயில் வருவதற்கு எதிர் பக்கம் இருக்கும் நடைமேடையில் உள்ள இருப்பிடத்தில் அமர்கிறார். அதுதான் நான் கவனித்த முதல் நடமாட்டம். நேரம் செல்லச்செல்ல மெதுவாக ஒருவர் இருவர் என சிறிது சிறிதாக மக்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது. அனுமதிச் சீட்டு எதிர்பக்கம் இருந்ததாலோ என்னவோ, நான் கவனித்தவரை அனைவரும் அந்தப் பக்கத்திலிருந்து இரயில் பாதையை மூடியிருக்கும் கேட்டுக்கு அருகாக சாலையைக் கடந்து இந்தப்பக்கம் வந்து நிற்கின்றனர்.
ஒரு முதியவர் தனது நாயுடனோ அல்லது நாய்க்காகவோ நடைமேடை வழியாக மெதுவாக நடந்து இரயில் நிலையத்தை கடந்து செல்கிறார். போகும் வழியில் அந்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு ஓரிடத்தில் நிற்பதைக் கண்டபிறகுதான் தெரிந்தது ஏற்கெனவே நின்றிருக்கும் பயணிகளில் ஒரு பெண்மணி தனது இரண்டு நாய்களுடன் வந்திருப்பது. அவர்களுக்குள்ளும் அவைகளுக்குள்ளும் பரஸ்பரம் பரிச்சயம் இருந்தது நன்றாகவே வெளிப்பட்டது. அவர் தனது நாயுடன் கடந்து சென்ற பிறகும், இரயில் நிலையத்திற்கு வருபவர்கள் அனைவருமே இந்தப் பெண்மணியின் நாய்களைக் கொஞ்சிவிட்டுத்தான் உள்ளே வந்தனர்.
நேரத்தைப் பார்த்தேன். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன வண்டி வருவதற்கு. ஆனால் கேட் சாலைக்காக திறந்தேதான் இருந்தது. வாகனங்கள் சாலையில் கடந்தபடிதான் இருந்தன.
எதிர்பக்கம் முதலில் வந்து அமர்ந்திருந்த முதியவரை தற்போது காணவில்லை. என் பார்வையிலிருந்து எப்படி எப்போது மறைந்தார் என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக அதே இடத்துக்கு சற்றே வயது குறைந்த இன்னொரு முதியவர் ஒரு சிறிய நாய்க்குட்டியுடன் வந்து அமர்ந்தார். குட்டியானதால் இந்த நாய்க்கு துள்ளல் சற்று அதிகமாகவே இருந்தது. அவ்வப்போது அதை தடவிக்கொடுத்து தூக்கி அருகில் அமர்த்திக்கொண்டிருந்தார்.
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஏழெட்டு நிமிடங்கள் கடந்து எச்சரிக்கை ஒலியுடன் இரயில்பாதை கேட் திறந்து சாலையை மூடியது. இரயில் பாதைக்கு இடதுபுறம் இருந்த பழைய கால சிகப்பு வெள்ளை வர்ணம் கொண்டி கைகாட்டி (சிக்னல்) நிற்பதைக் குறிக்கும் குறுக்கே நின்ற நிலையிலிருந்து போவதற்கான அனுமதி கொடுக்கும் கீழே சாய்ந்த நிலைக்கு மாறியது. சற்று பரபரப்பு உண்டானது. அனைவரும் வேகவேகமாக உள்நோக்கி வந்தனர். இரயில்தான் வருகிறதோ என்று பார்த்தால் வந்தது என்னவோ மழை!
எதிர்பக்கம் இருந்த சாய்வு இருக்கைகளுக்கு பின்புறம் இருந்த கட்டிடத்தில் இருந்து சீருடை அணிந்த இருவர் வெளிப்பட்டு பயணிகள் வந்த வழியிலேயே இரயில் பாதையைக் கடந்து நடைமேடைக்குள் ஏறி வந்தனர். அவர்களும் அந்த நாய்களைக் கொஞ்சிவிட்டு ஒருவர் அங்கேயே நிற்க இன்னொருவர் நடைமேடையின் பின்பகுதி நோக்கிச் சென்றார். அருகில் வரும்போதுதான் அவர் ஒரு பெண்மணி என்பது தெரிந்தது.
சில வினாடிகளில் பெருத்த ஓசையுடன் புகையைக் கக்கியபடி பச்சையும் கருப்பும் கலந்த வர்ணம் கொண்ட நீராவி என்ஜின் வெளிர் மஞ்சளும் கரும்பழுப்பும் கொண்ட ஐந்து பெட்டிகளுடன் வந்து நின்றது. சீருடை அலுவலர் இரயிலின் ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னே சென்ற நபர் (நபரி?) நடத்துநரிடம் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். சரியாக இரண்டு நிமிடம் கழித்து வந்ததை விட அதிக ஜிக்குபுக்கு ஓசையுடனும் புகையுடனும் இரயில் புறப்பட்டது. நிலையத்தை இரயில் முழுவதுமாக கடக்கும் முன்பே கைகாட்டி பழைய நிலைக்குத் திரும்பியது. அடுத்த சில வினாடிகளில் சாலையை மூடியிருந்த கேட்டும் வாகனங்களுக்கு வழிவிட்டு இரயில் பாதையை மூடியது.
மழையும் தற்போது நின்றிருந்தது. நடைமேடையில் இப்போது இரயிலிலிருந்து இறங்கிய ஏழெட்டு பயணிகள் மெதுவாக சாலையை நோக்கி நடந்தனர். எதிர்ப்பக்கத்திலிருந்த முதியவர் தன்னுடைய நாய்க்குட்டியை மெதுவாக தரையில் இறக்கினார். இரயில் நின்று செல்லும்வரை தூக்கிக்கொண்டிருந்தார் என்பது புரிந்தது.
என்ன ஒரு அமைதியான கிராமம். எவ்வளவு இயல்பான அவசரமில்லாத வாழ்க்கை! இயற்கையுடனும் சக மனிதர்களுடனும் செல்லப் பிராணிகளுடனும் சந்தோஷமாக அவர்கள் வாழ்வதைப் பார்த்தால் அம்மாதிரி ஒரு இடத்திற்கு நாமும் போய்விடலாமா என்றே தோன்றுகிறது.
இத்தனையும் நடந்தது இங்கிலாந்தில் சாமர்ஸெட் பகுதியில் உள்ள ப்ளூ ஆங்கர் (Blue Anchor) என்ற சிறிய இரயில் நிலையத்தில். நான் இதை எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்புதான். அங்கு நடப்பவைகளை பொதுமக்கள் காண்பதற்காக இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது யூ-டியூப் மூலமாக எப்போதும் ஒளிபரப்பப்படுகிறது. இம்மாதிரி உலகில் பல இடங்களில் நேரலை காட்சிகள் வழங்க அனுமதித்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை நான் உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கும் வாழ்க்கை முறையை நேரடியாக கண்டு களிக்க இப்படிப்பட்ட காணொளிகளைப் பார்த்து இரசிப்பது வழக்கம்.
இன்றைய காட்சி பிடித்திருந்ததால் பார்த்ததைப் பகிர்ந்தேன். போரடித்திருந்தால் பொறுத்தருள்க.

