Thursday, December 22, 2016

தண்டபாணி

சென்ற மாதம் விடுமுறை நாட்களில் ஒரு மாறுதலுக்காக குளிர் காலத்தில் கொடைக்கானல் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக குடும்பத்தோடு சென்றிருந்தோம்.  மாலையும் இரவும் மிகவும் குளிராக இருந்தாலும்,  பகல் வேளையில் இதமான வெய்யிலோடு சேர்ந்து பொறுத்து அனுபவிக்கக்கூடிய அளவில்தான் குளிர் இருந்ததால் இரண்டு நாட்களும் நன்றாக சுற்றிப்பார்த்தோம்.

திரும்பும் வழியில் பழநி தண்டாயுதபாணியைத் தரிசித்துவிட்டு வரலாம் என்று எண்ணி காரை பழநிக்கு செலுத்தினோம்.  அன்று ஒரு விசேஷ நாளாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருக்குமே என்ற கவலை இருந்தது.  அதற்கேற்ப மலையடியை நெருங்கும்போதே இரண்டு கைடுகள் வழிமறித்தனர்.  

சார்  இன்னிக்குத் திருவிழா ஆகையால் மேலே கூட்டம் நெட்டித்தள்ளுது. நான் செளகரியமாக கூட்டிக்கொண்டு போய் ஒரு மணி நேரத்தில் திரும்பக் கொணர்ந்து விடுகிறேன்.  நூறு ரூபாய்தான்.  யோசிக்காதீர்கள் என்றனர். 

நாங்கள் மதிய உணவே இன்னும் முடிக்காதிருந்ததனால் மிகவும் பசியோடு இருந்தோம்.  பசியா பக்தியா என்று நாணயத்தை மனதில் மூன்று முறை சுண்டியும் பசியின் பக்கமே விழுந்ததால்  முருகனை நிறைந்த வயிற்றோடு நிம்மதியாக தரிசிக்கலாம் என்று முடிவு செய்து முதலில் சாப்பிட்டுவிடலாம் என்று அவர்களைத் தவிர்த்துவிட்டு ஹோட்டலுக்குச் சென்றோம். அங்கும் ஏகப்பட்ட கூட்டம்.  அரை மணிக்கு மேல் ஆகும் என்றார்கள்.  எங்களுக்கோ சென்னைக்கு இரயில் வேறு இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிடிக்க வேண்டும்.  என்ன செய்வதென்று தெரியாமல் வெற்று வயிற்றுடன் சென்றால் வேலாயுதன் சீக்கிரம் தரிசனம் தருவானோ என்ற நப்பாசையில் வேறு யார் மூலமாவது முயற்சிக்கலாம் என்று விசாரித்தோம்.

மலைமேல் செல்வதற்கான மின்னூர்தி (விஞ்ச்)  நிலையத்திற்குள் ஆள் நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம்.  பத்து பதினைந்து வரிசைகளுக்கு  மேலாக மக்கள் அமர்ந்திருந்தனர்.  பலர் நின்றுகொண்டும் இருந்தனர்.  நிலையத்திற்கு வெளியிலும் வரிசை நீண்டிருந்தது. 

நிலையத்திற்கு எதிரில் அர்ச்சனை சாமான்கள் விற்கும் பெட்டிக்கடைக்கு முதலாளிபோல் அமர்ந்திருக்கும் ஆசாமிதான் இப்படி ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பதை கவனித்தோம். அவருடைய ஆட்கள் நான்கைந்து பேர் வாகனங்களில் வருவோரை நிறுத்தி வியாபாரம் செய்வதில் மும்முரமாக இருந்தனர்.  அவர்களில் ஒருவரிடம் கேட்டோம்.

மலையடிவாரத்தில் சொன்ன ஆள்போலவே இவரும் நூறு ரூபாய்தான் கேட்டார்.  ஆனால் சற்று விவரமாக எத்தனை பேர் இருக்கிறீர்களோ ஆளுக்கு நூறு ரூபாய் கொடுங்கள் சார் என்றார்.  இத்தனை கூட்டத்தைப் பார்க்கையில் அவர் சொன்னது சந்தேகத்திற்கிடமாக இருக்கவே, சரியாகச் சொல்லுங்கள், எவ்வளவு கேட்கிறீர்கள் என்றோம்.

அவர் கணக்கைச் சொன்னார்.  மலை ஏறாமலே தலையைச் சுற்றியது. குழந்தைக்கு வேண்டாம், பெரியவங்க மூணுபேர் இருக்கீங்களா, மொத்தம் 2400 ரூபாய் குடுத்திருங்க சார்.  இதோ இப்படி நில்லுங்க..நான் போய் உள்ளே சொல்லி ஏற்பாடு பண்ணிட்டு வந்திடுறேன்.  உங்களை கூட்டிண்டு போய் ஒரு மணி நேரத்திலே திரும்பி இங்கேயே வந்து சேர்ப்பது என் பொறுப்பு.  திரும்பி வந்தப்புறம் பணம் கொடுத்தா போதும் என்றார். 
நூறு ரூபாய் எங்கே, 2400 ரூபாய் எங்கே?  என்ன சார் இது இப்படிக் கேட்கிறீர்கள் என்றோம்.

நான் ஒண்ணும் ஜாஸ்தி கேக்கலையே சார்நீங்களே கணக்கு பண்ணுங்கமேல போக திரும்பி இறங்கி வர விஞ்ச்சுக்கு நூறு நூறு ரூபாய் அப்புறம் ஐநூறு ரூபாய் தரிசனத்திலே உங்களை கூட்டிண்டு போகப்போறேன் அவ்வளவுதான்மத்தபடி அர்ச்சனை, அபிஷேகம், தட்டுல போடறது எல்லாம் உங்க செலவுஉங்களை செளகரியமய் தரிசனம் பண்ணி வைக்க நாங்கள் வெறும் நூறு ரூபாய்தான் வாங்கறோம் பாருங்கஇதை நம்பித்தான் எங்க பொழைப்பே இருக்கு என்றார்.  எங்களுக்கு வேண்டிய நூறு ரூபாயும் சேர்த்து ஆளுக்கு 800 ரூபாய்தான் ஆகிறது.  இதுக்கு ஒரு பைசா கம்மி பண்ண முடியாது சார் என்றார்.

விஞ்ச் டிக்கட் ஸ்பெஷல் தரிசன டிக்கட் எல்லாம் நாங்க வாங்கனுமா நீங்களே வாங்கித்தருவீங்களா என்று கேட்டேன்.  அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, சார் டிக்கட் எல்லாம் வாங்கி கியூவிலே நின்னு வரச் சொல்றீங்களா? இப்போதைய கூட்டத்திலே ஆறு மணி நேரம் ஆகும் சார்.  நீங்க வேற வண்டி பிடிக்கனும்னு சொல்றீங்க.  நாங்க டிக்கட் எல்லாம் எடுக்க மாட்டோம். அந்தந்தக் காசு அவங்களுக்கும் மத்த அதிகாரிகளுக்கும் கொடுப்போம் சார்.  நீங்க பயப்படாதீங்க உங்களை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, கேக்க மாட்டாங்க. எல்லாம் நாங்க பாத்துக்கறோம். கியாரண்டியா ஒரு மணி நேரத்திலே கீழே வந்தபின்னே நான் கேட்ட பணத்தை எங்கிட்ட குடுத்துடுங்க அவ்வளவுதான் என்றார்.

அப்போதுதான் புரிந்தது, இது மகா பெரிய ஊழல் கணக்கு என்று.  அதாவது ஒரு டிக்கட்டும் வாங்க மாட்டார்களாம்.  இவர்களுக்கும் உள்ளே உள்ளவர்களுக்கும் உள்ள அன்டர்ஸ்டாண்டிங் மூலம் வரிசையில் நிற்கும் பக்தர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு (அல்லது அவர்களை முன்னுக்கு வரவிடாமல் தடுத்து) தாங்கள் கூட்டிச் செல்பவர்களை வரிசையில் முதலிடத்தில் நுழைத்துவிடுவதற்கு அவர்கள் வாங்கும் அல்லது வசூலிக்கும் பணம் இத்தனை.  இதனை நியாயப்படுத்த அந்தந்த டிக்கட்டுகளின் விலையைச் சொல்லி அதற்கு மேல் வெறும் நூறு ரூபாய் மாத்திரம் வாங்கிக்கொண்டு நமக்காக உழைத்துப் பிழைக்கிறார்களாம். இதில் தான் அவர்களது வாழ்வே இருக்கிறதாம்!  அவர்களைப் பார்த்தால் நெற்றி நிறைய விபூதி குங்குமத்தோடு  பக்திப் பழமாகத் தெரிகிறார்கள்.  மிகவும் பணிவாக பேசுகிறார்கள், பவ்யமாக நடந்துகொள்கிறார்கள்.  அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அரசுக்கோ கோவிலுக்கோ ஒரு பைசாகூட செல்லாது. எல்லாம் அவர்களது சட்டைப் பைக்குத் தான்.

அப்பா முருகா! உன் கண் எதிரிலேயே உன் காலடிக்குக் கீழேயே இத்தனை அநியாய வியாபரம் நடக்கிறதே?  காசிருந்தால்தான் காட்சியா, உன் கையில் இருக்கிற தண்டம் தண்டம்தானா என்று கேட்டு கீழிருந்தபடியே மேல்நோக்கி போய்க்கொண்டிருந்த விஞ்ச்சுகளுக்கும் சேர்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு துட்டு இருந்தால்தான் தரிசனம் என்ற நிதர்சனம் விளங்க லஞ்சம் கொடுக்கவில்லை என்ற நிம்மதியோடு ஆனால் முருகனை நேரில் காணவில்லை என்ற ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினோம். 


Monday, December 19, 2016

அவன் பித்தனா

அது மிகப் பழமையான கோவில்.  தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. நானும் என் மனைவியும் திருப்பதி சென்று திரும்பிக்கொண்டிருந்தோம். வீடு திரும்பும் வழியில் உள்ளதால் எங்கள் கார் டிரைவர் அந்தக் கோவிலுக்குச் செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்ல, எங்களுக்கும் நேரம் இருந்ததால் சரியென்று ஒப்புக் கொண்டோம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சற்றே குறுகலான சாலைகள் வழியே சிறிது நேரம் சென்று அந்தக் கோவிலை அடைந்தோம்.

கார் கதவைத் திறந்தவுடனே அவன் ஓடி வந்தான்.  அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.  மிகவும் மெலிந்த தேகம்.  பழைய கிழிந்த கந்தல் ஆடைகளையே அணிந்திருந்தான்.  ஆனால் அவன் பார்வையில் ஒரு கூர்மை தெரிந்தது.  எங்களுக்கு மிகஅருகில் வந்து யாசகம் கேட்டான்.  கோவிலுக்குச் செல்லும் அவசரம். எப்படியாவது அவன் நகர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் பர்ஸைத் திறந்து அகப்பட்ட பத்து ரூபாய்த்தாளை அவனிடம் கொடுத்தேன்.  அவன் அதை கவனித்து மகிழ்வான் என்ற என் எதிர்பார்ப்பு பொய்யானது.  ஒருவித உணர்ச்சியும் காண்பிக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு அவன் நகர்ந்தான்.

வேகவேகமாக கோவிலுக்குள் சென்ற எங்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.  நம் தமிழ்நாட்டுக் கோவில்களெல்லாம் மாலை நான்கு மணிக்கெல்லாம் திறந்துவிடுவார்கள்.  இந்தக் கோவிலிலோ நேரம் மாலை ஐந்தரை மணியை நெருங்கிக்கொண்டிருந்தபோதும் அப்போதுதான் கோவிலில் நீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.  உள்ளே கர்ப்பக்கிரகத்திலும் யாருமில்லை. கதவு அடைத்திருந்தது.  கேட்டதில் இன்னும் சற்றுநேரத்தில் திறந்துவிடுவார்கள் என்றார்கள்.  வேறு வழியின்றி சிறிது நேரம் வெளிப் பிரகாரத்தில் அமைந்திருந்த மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டே பொழுதை கழித்துக்கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் கதவைத் திறந்தார்கள்.  இறைவனை தரிசித்தபின் வெளிவரும்போது வெளிவாசலுக்கருகே தொன்னையில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  நான் எனக்காக ஒன்றும், நீண்ட நேரமாக வெளியில் காத்துக்கொண்டிருப்பாரே என்ற இரக்கத்தில் டிரைவருக்கு ஒன்றுமாக இரண்டு தொன்னைகளில் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

வழியில் மீண்டும் அவன் கண்ணில் தென்பட்டான். அவன் என்னையே கவனித்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.  எங்கே அவன் என் கையில் வைத்திருக்கும் பிரசாதத்தை பிடுங்கிக்கொள்வானோ என்று அஞ்சினேன்.  அவன் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்து நேராக டிரைவரிடம் சென்று ஒரு தொன்னையை நீட்டினேன்.  டிரைவர் அதை வாங்கிக்கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக எங்களை நோக்கி வருவதை கவனித்தேன்.  அவனுக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகம் என் மனதுக்குள் இருந்தாலும்  கோவிலைக் காட்டி உள்ளே பிரசாதம் தருகிறார்கள் போய் வாங்கிக்கொள் என்று கூறினேன்.

அவன் நான் சொல்வதை கவனித்ததுபோல் தெரியவில்லை. நேராக அருகில் வந்தான். என்ன செய்யப்போகிறானோ என்று திகிலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.  அவன் நேராக டிரைவரிடம் சென்று தன் பேண்ட் மற்றும் சட்டைப் பையில் கைவிட்டு அவற்றில் இருந்த பணத்தையும் சில்லறைக் காசுகளையும் மொத்தமாக அள்ளி எடுத்து டிரைவரின் கையில் திணித்தான். என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே ஆசீர்வதிப்பது போல் கையசைத்து டிரைவரிடம் தெலுங்கில் ஏதோ சொல்லிவிட்டு வந்த வேகத்தில் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

அவன் என்ன சொன்னான் என்று டிரைவரிடம் கேட்டேன்.  டிரைவர் அதற்கு ஒரு சிறிய கதையே சொன்னார். அவனுக்கு டிரைவர்கள் மேல் அலாதி மரியாதையாம்.  ஏனெனில் அவர்கள் நேரம் காலம் பார்க்காமல். உணவு ஓய்வு பற்றிக் கவலைப்படாமல் உழைப்பவர்களாம்.  அதனால்  டிரைவரின் பேரில் அக்கறை கொண்டு நான் பிரசாதம் கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து அவனுக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாம்.  அதனால் என்னை வாழ்த்தியதுடன் என்னுடைய டிரைவராகிய அவரிடம் தான் செல்லும் வழியில் காணும் பிற டிரைவர்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதற்கு அவன் சேர்த்துவைத்த பணத்தைக் கொடுங்கள் என்று கொடுத்தான் என்றும் சொன்னார்.


சரியான பித்தன் தான் போலிருக்கிறது என்று சற்றே அச்சம் குறைந்தவனாக அவன் எங்கே இருக்கிறான் என்று திரும்பிப் பார்த்தேன்.  அவ்வளவு நேரம் எங்கிருந்தாலும் கண்ணில் பட்டுக்கொண்டிருந்த அவன் அந்த விநாடி முதல் கண்ணுக்குத் தென்படவேயில்லை!  பித்தனா சித்தனா என்று என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு எங்கோ சென்று விட்டான் அவன்.