பரிசு
அன்று அவளது பிறந்த நாள். காலையில் எழுந்திருக்கும்போது மனம் குதூகலித்திருந்தாலும் நேரம் செல்லச் செல்ல மனநிலை மாறியது. காரணம் வேலைப்பளு. மற்றொரு காரணம் அவளது கணவன் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காமலேயே விடியற்காலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டான். இப்படி மனைவியின் பிறந்த நாளைக்கூடவா மறப்பார்கள்? என்று எண்ணும்போதே சலிப்பு தட்டியது.
அவனுக்கு அவனது ஃபாக்டரியிலேயே காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் கிடைத்துவிடும். அந்த மட்டில் அவன் புண்ணியவான். வயிற்றைப் பற்றிய கவலை இல்லாமல் ஓடிவிடுவான். மாலையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவனுக்கு பாதிப்பு பெரிதாக இருக்காது. அவளுக்குத்தான் ஓய்வு என்பதே கிடையாது.
அது வேலைநாளாக அமைந்திருந்தது. குடும்பத்தில் ஒரு விசேஷத்திற்காக உறவினர்கள் வேறு அவள் வீட்டில் வந்து தங்கியிருந்தனர். ஏற்கெனவே தனக்கும், பள்ளி செல்லும் தன் குழந்தைகளுக்கும் சேர்த்து ஒருநாள்போல தினமும் சமைக்க வேண்டியிருப்பதில் சற்றே சலிப்படைந்திருந்த அவளுக்கு விருந்தினர்களின் வரவு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் அச்சத்தையே தந்தது.
தன் மனக் கஷ்டத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பம்பரமாக இயங்கினாள். சீக்கிரம் ஆக வேண்டும் என்றால் டிபன் எதுவும் கிடையாது. சாதம் தான். பெரிய குக்கரில் சாதம் வடித்து எலுமிச்சை பிழிந்து காலைச் சிற்றுண்டி லெமன் ரைஸும், மதியத்திற்கு ரசம் சாதம் மற்றும் ஏதாவது ஒரு காய் மட்டும் செய்தால் போதும். குழந்தைகளும் குறைசொல்லாமல் சாப்பிடப் பழகியிருந்தனர். இரவு அவசரம் எதுவும் இல்லாததனால் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம்.
விருந்தினர்களை ஏனோதானோ என்று நடத்த முடியுமா? அத்தி பூத்தாற்போல் என்றைக்கோ ஒருமுறை வரும் அவர்களுக்கு என்று தனியாக இட்டிலி, சேவை போன்று ஏதாவது சிற்றுண்டியும் விவரமாக சமையலும் செய்து முடித்துவிட்டுத்தான் அவசரம் அவசரமாக வேலைக்குக் கிளம்பவேண்டியிருந்தது. இன்று அது போதாதென்று வந்த விசேஷத்திற்காக மாலையில் ஷாப்பிங் செய்யவேண்டும் என்றுவேறு கேட்டுக்கொண்டிருந்தனர். எல்லாம் சேர்ந்து மனதில் பாரமாக அழுத்திக்கொண்டிருந்தது. வந்த வேலை முடிந்து அவர்கள் நல்லபடியாக ஊருக்குக் கிளம்பும் வரை அவளுக்கு திக் திக் என்றுதான் இருக்கும்.
எண்ண ஓட்டத்திற்கேற்றாற் போல் செய்ய வேண்டிய வேலைகளை வரிசைப்படுத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில் ஏண்டிம்மா, நாளைக்கு மத்தியானம் கல்யாணம் முடிஞ்சு அப்படியே ஊருக்கு ரயில் ஏறிடறோம்…நீ ஆபீஸிலிருந்து வர்ற வரைக்கும் இருக்க முடியாது. நீ கொஞ்சம் தோசைக்கு மாத்திரம் அரைச்சுடறியா? பொறப்படறத்துக்கு செத்த முன்னாடி நாங்களே நாலு தோசை வார்த்துண்டுடறோம்.. என்று இன்னொரு வேண்டுகோளையும் வைக்க, சற்று தலை சுற்றுகிறாற்போல தோன்றினாலும் அமைதியாய் உள்வாங்கிக்கொண்டு சரியென்று தலை அசைத்தாள். ஆபீஸிலிருந்து வந்த உடனே அரைக்கத் தோதாய் அரிசியை ஊறப்போட்டுவிட்டு, உளுந்தை வந்து ஊறவைத்துக்கொள்ளலாம் என்று கணக்கிட்டு மற்ற வேலைகளை கச்சிதமாக முடித்துக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
மாலை வீட்டிற்கு வரும்போதே உறவினர்கள் தயாராக இருந்தனர். இந்தாடிம்மா… மொதல்ல காபி குடி.. என்று உபச்சாரம் வேறு. கூடவே இன்னொரு ஒத்தாசையும் செய்திருந்தனர். அரை மணி முன்னரே உளுந்தையும் ஊறப்போட்டிருந்தனர். அரைமணியில அரைச்சுட்டேன்னா நிம்மதியா கடைக்குப்போய் நேரமானாலும் பரவாயில்லைன்னு நிதானமா பாத்து வாங்கிண்டு வரலாம்… என்ன சொல்றே? என்று அவர்கள் திட்டத்தையும் தெரிவித்தனர்.
சரி மாமி.. இதோ அரைச்சிடறேன்… என்று மீண்டும் பம்பரமாய் இயங்கினாள். கிரைண்டரில் அரிசியும் உளுந்தும் அரைத்து முடித்து பாத்திரத்தில் எடுத்துவைத்து உப்பை சரியான அளவில் நன்றாகக் கலந்து மூடிவைத்துவிட்டு ஷாப்பிங் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய உடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக பருப்புத் துவையலுக்கு மிக்ஸியில் அரைத்துக்கொண்டிருக்கும்போது ஏண்டீம்மா… என்று மாமியின் குரல் மீண்டும் கேட்க, சற்றே பதட்டமாய் என்ன மாமீ என்று கேட்கத் திரும்பும் நொடியில் மிக்ஸி ஜாரின் மூடி திறந்து அரைபட்டுக்கொண்டிருக்கும் துவையல் விழுது சயைலறை சுவர் முழுவதுமாகத் தெறித்தது.
ஜாக்கிரதைடீ… என்ன அவசரம் இப்போ? என்று மாமி கேட்டுக்கொண்டே ஓடிவர, அவரை முறைத்துப் பார்த்துக்கொண்டே, நீங்கள் கூப்பிட்டதால்தான் நான் பதறி திரும்பிப் பார்த்தேன்… இப்படி ஆயிடிச்சு… என்று கோபமும் ஆத்திரமும் பொங்க, கூடவே வந்த அழுகையையையும் சேர்த்து அடக்கிக்கொண்டு, பரவாயில்லை, ஒண்ணுமில்லே விடுங்கோ… வந்து சரி பண்ணிக்கலாம்… இப்பவே லேட்டாயிடிச்சு… என்று அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சமையலைறையைவிட்டு வெளியில் வந்தாள்.
அரை நிமிடத்தில் முகம் கழுவி அழகுபடுத்திக்கொண்டு தயாரானாள். குழந்தைகளிடம், அப்பா வந்தால் காபி எடுத்துக்கச் சொல்லுங்க… நாங்க கடைக்கெல்லாம் போய்வந்த பிறகு நான் ஏதாவது பண்ணறேன்.. எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்… என்று சொல்லிவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றாள்.
ஷாப்பிங் சென்டரில் விருந்தினர்களுக்கு எதை வாங்குவது என்ற குழப்பம் அதிகரிக்க, அதிலும் தீர்வுக்கு அவளையே நாடினர். அவர்கள் செல்லவிருந்த விசேஷத்திற்கும் அவர்கள் கொடுக்கவிருந்த நபர்களுக்கும் ஏற்றாற்போல் துணிமணி மற்றும் பொருட்களை வாங்க அவர்களுக்கு யோசனை கொடுத்தாலும் மனம் சமையலறையையே சுற்றி வந்துகொண்டிருந்தது. எப்போது வீட்டுக்குப் போய், எப்போது சாப்பாடு முடிந்து, எப்போது கிச்சனை சுத்தம் செய்து முடிப்பது என்று யோசிக்கும்போதே தலை மீண்டும் சுற்றுவதுபோல் தோன்றியது. தன் பலமெல்லாம் கரைவதுபோல் உணர்ந்தாள். கால்கள் நிற்கமுடியாமல் தள்ளாடின.
மாமி கவனித்து விட்டார். என்னடிம்மா யோசனை? என்று கேட்க, மனதில் தெம்பு வரவைத்துக்கொண்டு பார்வையை மாற்றி ஒன்றுமில்லை மாமி, அவர் வந்திருப்பாரோ இல்லையோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்… என்று கூறி சமாளித்தாள். அவன் வரதுக்கு என்னடி? தெனமும் இந்நேரத்துக்கு சரியாய்த்தானே வரான்? என்று கூறிய மாமி சட்டென்று முகம் மலர்ந்தாள். ஓ, இன்னிக்கு உன் பிறந்த நாளா? அதுதான் அவனை ஸ்பெஷலா எதிர்பார்க்கிறியா? என்று எல்லார் முன்னால் உரக்கக் கேட்க, வெட்கத்தில் முகம் சிவந்து, அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி… அவர் கிச்சனைப் பார்த்தால் திட்டுவாரேன்னுதான் பயந்துக்கிட்டிருந்தேன்… என்றாள்.
அதெப்படிடீ அவன் திட்டுவான்? வீடு, வேலைன்னா அப்படி இப்படித்தானே இருக்கும்? ஒத்தாசை செய்யறத விட்டு திட்டுவானாம் திட்டு. எங்க எம்முன்னாடி திட்டச் சொல் அவனை… ஒரு கை பார்க்கிறேன்.. என்று அவளுக்கு சமாதானம் சொல்லி, சரி நேரமாறது… சீக்கிரம் போலாம் வாங்க… நாளைக்கு விடிஞ்சா சரியா இருக்கும் எல்லாருக்கும்… என்று மற்றவர்களையும் விரட்டி வீட்டுக்குக் கிளப்பினாள் மாமி.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும்போதே அவளது கணவனும் குழந்தைகளும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றனர்.. அம்மா… அப்பா உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும்ன்னு ஒருவேலை செஞ்சிருக்கார் தெரியுமா? என்று குழந்தைகள் கேட்க, அவள் வியப்பில் என்ன? என்று புருவத்தை உயர்த்தினாள். அங்கே பார்… என்று குழந்தைகள் குறும்புச் சிரிப்புடன் சமையறையைக் காண்பிக்க, சமையலறை கதவில் சிறிய பூட்டு தொங்கியதைப் பார்த்தாள். என்னங்க இது… என்று அவள் கேட்க, அவன் குழந்தைகளைப் பார்த்து கண் சிமிட்டியபடியே, காபி குடிக்க நுழையும்போதே பார்த்தேன்… இது சரிப்படாது… நாளைக்குப் பார்த்துக்கலாம் முடிவு பண்ணி எல்லாருக்கும் சேர்த்து ஒட்டல்லேயிருந்தே ஆர்டர் பண்ணிட்டேன்… இந்தாங்க எல்லாரும் சுடச்சுட சாப்பிட்டுவிட்டு தூங்கப் போங்க… மத்ததெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம்… என்று அதட்டலாய் விரட்டினான். இந்தவரைக்கும் தன் வேலைப் பளுவை குறைத்தானே என்று அவள் நிம்மதியடைந்தாள்.
உறவினரும் குழந்தைகளும் அவரவர் அறைகளுக்குச் சென்றபின், பார்சல் பொட்டலங்களையும் குப்பைகளையும் பின் கதவைத் திறந்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு கதவை மூடி, சாமி படங்களையெல்லாம் ஒரு முறை வரிசையாகப் பார்த்து கும்பிட்டுவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு தன் படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை மூடி, முதலில் உடை மாற்றி பின் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் விழுந்தாள்.
உடல் முழுவதும் வேதனையில் வலித்தது. நாளை செய்ய வேண்டிய வேலைகளை எண்ணி மனம் மீண்டும் பாரமாகத் தொடங்கியது. கண்ணில் தானாக நீர் கோர்த்தது. கணவனைப் பார்த்தாள். அவன் தூங்குகிறானா, விழித்திருக்கிறானா? தெரியவில்லை. அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவன் அவள் பக்கம் திரும்பி அவள் தோள் மேல் கை வைத்தான். அவளுக்கு எரிச்சலாக வந்தது. நாளை காலை எழுந்து ஆரம்பித்தாலெல்லாம் முடியாது… இப்பொழுதே சுத்தம் செய்தால் தான் நல்லது என்ற முடிவுக்கு வந்து அவன் கையைத் தட்டி விட்டு எழுந்திருக்க முயன்றாள்.
அவன் மீண்டும் அழுத்தமாக அவள் தோள் மேல் கையை வைத்து, திரும்பி அணைத்தவாறு ஹேப்பி பர்த்டே குட்டிம்மா… என்றான். அவளுக்கு அழுகை பீறிட்டது. இப்போதுதான் ஞாபகம் வந்ததா? என்று மெதுவாகக் கேட்டாள்.
காலைல மறந்திட்டேன்னு நினைச்சியா? நானா மறப்பேன்? எல்லார் முன்னாடியும் உன்னைக் கொஞ்ச வேண்டாமேன்னுதான் அப்புறம் விஷ் பண்ணிக்கலாம்ன்னு விட்டுட்டேன் தெரியுமா? என்றான்.
நம்புவதா வேண்டாமா? சும்மா சமாதானத்துக்காக சொல்கிறானா என்ற சந்தேகத்துடன், க்கும்… சும்மா விஷ் மட்டும்தானா? இத்தனை வேலை பண்ணற உங்க குட்டிம்மாவுக்கு கிஃப்ட், பிரஸன்ட் எதுவும் இல்லையா? என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள்.
இல்லாமால் இருக்குமா? ஆனா அதை உனக்குப் பிடிச்ச இடத்திலதான் வெச்சிருக்கேன்…நீயே நாளைக்குக் காலைல பார்ப்பே பார்.. என்று பீடிகை போட்டான்.
அவள் விழிகள் விரிந்தன. நிஜம்மாவா? எங்கே? என்றாள்.
இப்பவே சொன்னா எப்படி? சஸ்பென்ஸ் போய்டுமே? நீயே காலைல பாத்துக்க… இப்ப டயர்டா இருக்கே… வா தூங்கு… நான் வேணா உன் கையை, காலை பிடிச்சி விடட்டுமா? என்று அன்புடன் கேட்ட கணவனை செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு, காலைல எழுந்து நிறைய வேலை இருக்கு, இப்பவே கிச்சனை ஒழிச்சாதான் எனக்கு நிம்மதி. நீங்க படுங்க… நான் இதோ வந்துடறேன்... என்று சொல்லி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து சமையலறைக் கதவைத் திறந்தாள்.
சுத்தம் செய்ய எவ்வளவு நேரம் ஆகுமோ என்ற பயத்துடன் விளக்கைப் போட்டவளுக்கு வியப்பான அதிர்ச்சி.. அப்பழுக்கின்றி சுத்தம் செய்யப்பட்டிருந்த கிச்சனின் சுவர்களும், மேடையின் நடுவில் பளபளப்பான நகைப்பெட்டியும் அவள் கவனத்தை ஈர்த்தன. சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே வந்து அந்த நகைப்பெட்டியைத் திறந்தாள்.. முப்பதை எட்டும் என் முத்தான முத்திற்கு… என்ற வரிகள் அடங்கிய வாழ்த்து அட்டையுடன் ஒரு அழகிய முத்து மாலை உள்ளே ஜொலித்தது.
வலி அத்தனையும் மறந்து மகிழ்ச்சியில் ததும்பிய இதயத்தோடு ஓடிவந்து கணவனை அணைத்தாள். என்ன, பிரஸன்ட் பிடிச்சிருக்கா? என்று கேட்டான் கணவன். நகையெல்லாம் நீங்க ஏற்கெனவே பிரஸன்ட் பண்ணியிருக்கீங்க… ஆனா இதுவரைக்கும் பண்ணாத பிரஸன்ட் கொடுத்திருக்கீங்களே… அது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு என்று சொல்லிக்கொண்டே ஆசையாய், பெருமையாய் கணவனின் கைகளைப் பிடித்துக்கொண்டே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது ஆனந்தக் கண்ணீர் அவன் கன்னத்தில் வழிந்தோடியது.
அவன் அவளை அன்புடன் அணைத்துக்கொண்டே, அதில் நம்ம குழந்தைகளுக்கும் ஒரு பங்கு இருக்கு, ஞாபகம் வெச்சிக்கோ… என்று அவள் பெருமிதத்திற்கு மேலும் அச்சாரமிட்டான்.