இப்போதெல்லாம்
காலையில் சீக்கிரமாகவே
எழுந்திருக்கப் பழகிவிட்டிருந்தான்
மாதவன். வாசற்கதவுக்கு
வெளியில் மாட்டியிருக்கும்
பையில் பால் பாக்கெட் போடும்
சத்தம் கேட்டவுடனேயே முதலில்
அதை வெளியில் எடுத்து சானிடைஸர்
ஸ்ப்ரே செய்து பின்னர் கிச்சன்
சிங்க்கில் ஒரு முறை குழாய்த்
தண்ணீரில் நன்கு கழுவிவிட்டபின்தான்
பாலை ப்ரிட்ஜுக்குள் வைப்பான்.
இத்தனை சுத்தமாக
வீட்டில் வேறு யாருக்கும்
செய்ய அக்கறை இல்லை.
அப்பாவுக்கு
வயதாகிவிட்டது. சொன்னால்
கேட்கமாட்டார். நானெல்லாம்
கறந்த பாலை அப்படியே
குடிச்சவண்டா...என்னையெல்லாம்
கொரோனா ஒண்ணும் பண்ணாது என்று
அதட்டிவிடுவார். அவர்
அந்தக் காலத்து மனுஷன்.
அவரை வேண்டுமானால்
கொரோனோ பார்த்து பயப்படலாம்.
அதற்காக
மற்றவர்களை விட்டுவிடுமா
என்ன? சொன்னால்
அவருக்குப் புரியாது.
அம்மா
அப்பாவுக்கு பயப்பட மாட்டாள்.
ஆனால் இந்த
விஷயத்தில் மருமகள் மாமனாரின்
செயலை விரும்பாததால் அவளும்
விரும்பாவிட்டால் மருமகளோடு
ஒத்துப்போகிறமாதிரி ஆகிவிடும்
என்பதால் ஒன்றும் சொல்லாமல்
விலகியிருந்தாள்.
மனைவி
யாருடைய பேச்சையும் கேட்கமாட்டாள்.
அதெப்படி அவர்
சொல்லலாம். வீட்டில
வயசானவங்க குழந்தைங்க எல்லாம்
இருக்கும்போது சேஃப்டி ஃபாலோ
பண்ணித்தான் ஆகனும்...ஆனா
எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.
இத பாருங்க...
வீட்டுக்கு
உள்ளே வர சாமான் எல்லாமே
சுத்தமா சானிடைஸ் பண்றது
உங்க பொறுப்பு...நாளைக்கு
யாருக்காவது ஏதாச்சும் வந்தா
உங்களைத்தான் சொல்லுவேன்...ஜாக்கிரதை...என்று
மிரட்டிவிட்டிருந்தாள்.
மிரட்டினாலும்
பரவாயில்லை...அட்லீஸ்ட்
தன் பக்கம் இருக்கிறாளே என்று
நினைத்துக்கொண்டிருந்தான்
மாதவன். ஆனால்
ஒரு நாள் தற்செயலாக அவள்
பக்கத்து ஃப்ளாட் ரஞ்சனியிடம்
பேசிக்கொண்டிருந்ததை
கேட்டுவிட்டான்.
எனக்கும்
இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை
ரஞ்சனி...ஓரேயடியா
கறந்த பால் குடிக்காட்டியும்
வெளில போறப்ப மாஸ்க் போட்டுண்டு
சரியான டிஸ்டன்ஸ் கீப் பண்ணா
போறாதா என்ன? வந்தவுடனே
கைகாலை நல்லா கழுவிண்டா
போச்சு. அவ்வளவு
தானே? இந்த
பேஸிக்கை சரியா செய்றதை
விட்டுட்டு எல்லாத்தையும்
பாத்து பயப்பட்டுண்டு அதை
இப்படி க்ளீன் பண்ணு,
இதை இத்தன தடவை
துடை..ன்னு
என்னோட பிராணனை வாங்கிண்டு
இருந்தா நான் மாத்திரம் இளிச்ச
வாயா என்ன? அதான்
என்னென்ன பண்ணணுமா எல்லாத்தையும்
நீங்களே பண்ணிக்கோங்கோன்னு
அவர் கிட்டயே பொறுப்பை
தள்ளிட்டேன். மனசில
தைரியம் வேணும்...அது
இல்லாம எல்லாத்துக்கும்
பயப்பட்டுண்டு எல்லார் மேலயும்
சந்தேகப்பட்டுண்டு இருந்தா
அவங்களோட காலம் தள்றது ரொம்ப
கஷ்டம் ரஞ்சனி…
அடிப்பாவி...நீ
வேல செய்யாம இருக்கத்தான்
என் கிட்ட தள்ளிட்டியா … என்ற
மனதில் பொருமினாலும் வேறு
வழி இல்லாததால் அவனே தன்
சக்திக்கும் நேரத்திற்கும்
ஏற்றவாறு சமாளித்துக்
கொண்டிருந்தான்.
ஒரு
வழியாக காப்பி குடித்தபின்
பாத்ரூம் போய்விட்டு வந்து,
பேப்பர்
படிக்கலாம் என்று டைனிங்
டேபிளுக்கு வந்தவனுக்கு
அதிர்ச்சி. அவனது
அப்பா வழக்கத்தைவிட சீக்கிரம்
எழுந்து வந்து உட்கார்ந்திருந்தார்.
அவர் கையில்
துண்டு ரிப்பன்காளாக அன்றைய
பேப்பர். என்னப்பா
இது? பேப்பரை
ஏன் படிக்காமலே கிழிச்சீங்க?
என்று கேட்டான்.
நான் என்னடா
பண்ணறது? யாரோ
பேப்பர் மேல தண்ணி கொட்டி
ஈரமாக்கியிருக்காங்க...கையில
எடுத்தவுடனே அக்கக்கா
கிழியுது….என்றார்.
அவனுக்கு
அப்போதுதான் உரைத்தது.
பேப்பர் மேல்
சானிடைஸர் ஸ்ப்ரே செய்யும்
போது அந்த பாட்டில் சரியாக
வேலை செய்யவில்லை.
குண்டூசி வைத்து
சற்று குடைந்து மீண்டும்
அடிக்கும்போது மொத்தமாக
கொட்டித்தீர்த்தது.
காய வேண்டும்
என்று அவன்தான் பேப்பரை டைனிங்
டேபிள் மீது பரப்பிவிட்டிருந்தான்.
காய்வதற்குள்
அப்பா எடுத்து பிரித்து
மேய்ந்துவிட்டிருந்தார்.
அது தண்ணி
இல்லப்பா….சானிடைஸர்
என்ற சொல்ல வாயெடுத்தான்..ஆனால்
அவர் அவனை, ஏண்டா,
பேப்பருக்கெல்லாமா
சானிடைஸர் பூசுவாங்க?
நியூஸ் எல்லாம்
சுத்தாமாயிடுமா? என்ற
ஏளனம் செய்வார் என்று ஊகித்து
மெளனமாக அமர்ந்தான்.
அவனுக்கு
எரிச்சலாக வந்தது.
வீட்டில்
இருந்தால் நிச்சயம் பொறுமை
இழந்து தானே ஒரு கலகத்தை
கிளப்பிவிடுவோம் என்று பயந்து
ஒரு நடை வெளியில் போய்
காய்கறியாவது வாங்கி வரலாம்
என்று கிளம்பினான். ஒரு
குல்லாவும் மாஸ்க்கும் அணிந்து
இடையில் இருந்த கண்ணுக்கு
ஒரு கூலிங் கிளாஸையும்
நிரப்பிக்கொண்டு போனான்.
கண் வழியாகக்
கூட கிருமி உள்ளே புகுந்துவிடுகிறதாமே?
பூசணி,
பறங்கி,
சேனை போன்ற
ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்ட
காய்களை ஜாக்கிரதையாக
தவிர்த்தான். யாராவது
எடுத்துப் பார்த்து மீண்டும்
வைத்திருக்கலாம் அல்லவா?
கொஞ்சம் உருளை,
கத்திரி,
செளசெளா மாத்திரம்
வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.
பையை கவனமாக
ஓரத்தில் வைத்துவிட்டு
சானிடைஸர் ஸ்ப்ரே அடித்து
கைகளை சுத்தம் செய்துகொண்டு,
சுதா,
காய்கறி வாங்கி
வெச்சிருக்கேன்...ஒரு
மணி நேரம் யாரும் தொடாதீங்க...நானே
கழுவிக் குடுத்தப்புறம் கட்
பண்ணலாம்...என்று
கத்தினான். அவன்
மனைவி மெளனமாக தலையில்
அடித்துக்கொண்டாள்.
என்னிக்குத்தான்
இந்த கொரோனா கருமாந்திரம்
ஒழியுமோ? அதுவரைக்கும்
டெய்லி இவரோட கூச்சலை வேற
கேக்கணும்….என்று
பொருமினாள்.
மீனாக்குட்டி
உள் அறையிலிருந்து ஒரு லாலி
பாப் சப்பிக்கொண்டே வெளியே
வந்தாள். அதைப்
பார்த்த மாதவன் முகம் வெளிறி,
அடீயேய்,
இது எங்கேயிருந்து
வந்தது? யார்
குடுத்தா? கழுவினியா?
என்று சரமாரியாய்
கேட்டான். குழந்தை
இதை எதிர்பார்த்தவளாய்,
போப்பா...இது
நாலஞ்சு மாசமா டேபிள்ளேயேதான்
இருந்திச்சு..இதுலல்லாம்
கொரோனா வராது...அப்படியே
வந்திருந்தாலும் இப்போ
போயிருக்கும்...டேஸ்ட்கூட
நல்லாத்தான் இருக்கு...இண்ணொண்ணு
இருக்கு...ஒனக்கு
வேணுமா? என்று
பதில் கேள்வி கேட்டாள்.
மொதல்ல
வெளிய இருக்கிற தின்பண்டமெல்லாம்
தூக்கிப் போடணும்...எதையாவது
தின்னுட்டு ஒடம்புக்கு வந்தா
நான்தானே பாத்துக்கணும்?
என்று முணுமுணுத்தவாறே
உள்ளே சென்றான் மாதவன்.
சென்ற வேகத்தில்
குழந்தை தாணுவைத் தூக்கிக்
கொண்டு வெளியே ஓடி வந்தான்.
என்ன
பண்ணிட்டிருக்கீங்க வீட்டில
எல்லாரும்? இதோ
பாருங்க ...சானிடைஸர்
கையிலயும் மூஞ்சிலயும்
தடவிண்டு இருக்கான்..நல்ல
வேளை கண்ணுல படலை...முதல்ல
அவனை க்ளீன் பண்ணி
குளிப்பாட்டுங்க...என்று
கத்தினான்.
சுதா
ஓடி வந்தாள். இதுக்குத்தான்
கைக்கெட்டின இடத்திலேயெல்லாம்
சானிடைஸர் வெக்காதீங்கன்னு
அடிச்சுக்கறேன்...யாரு
கேக்கறா? சுத்தம்
வேண்டியது தான்...அதுக்கோசறம்
ஒரு அளவு வேண்டாமா? போற
போக்கில சாம்பார் ரசத்திலல்லாம்
கூட சானிடைஸர் போட்டுத்தான்
சமைக்கணும்னு சொல்லுவீங்க
போலிருக்கே...சே….என்று
ஓலமிட்டுக்கொண்டே ஒரு கையில்
குழந்தையையும் இன்னொரு கையில்
டவலையும் தூக்கிக்கொண்டு
பாத்ரூமிற்கு ஓடினாள்.
டொக்
டொக்...கதவைத்
தட்டும் சத்தம்.
"யாரு
பாரு சுதா" கத்தினான்
மாதவன்.
“நான்
தான் குழந்தையை குளிப்பாட்டிட்டிருக்கேன்னு
தெரியும்ல…” அதைவிட அதிகமாகக்
கத்தினாள் சுதா.
“சரி,
சரி, இதோ
நானே பாக்கறேன்" என்று
அலுத்துக்கொண்டே போய் கதவைத்
திறந்தான் மாதவன் வந்திருந்தது
பிக் பாஸ்கட் டெலிவரி பாய்.
“ஏம்ப்பா...மாஸ்க்கெல்லாம்
போடறது இல்லியா?”
“இருக்கு
சார்….இவ்வளவு
வெயிட் தூக்கிட்டு கேட்லேர்ந்து
வீட்டுக்குள்ள வர்றதுக்குள்ளே
வேர்த்து மூச்சு முட்டுது
சார்...அதனாலதான்
கழட்டியிருக்கேன்….இதோ
பாருங்க" என்று
ரஜினி ஸ்டைலில் ஒற்றை விரலை
காலருக்குள் விட்டு சுழற்றி
பின்பக்கம் போயிருந்த மாஸ்க்கை
எடுத்துக் காண்பித்தான்
டெலிவரிபாய்.
“நல்லா
பேசுங்க...கொரோனா
மூச்சுக் காத்துலேயே
பரவுதாம்...இப்படி
மாஸ்க்கும் போடாம சத்தமா வேற
பேசினா ரொம்ப சுலபமா உங்கேட்டிருந்து
எங்களுக்கு வந்துடும்
தெரிஞ்சிக்கோ" என்றான்
மாதவன்.
“ஏன்
சார், உங்ககிட்டேருந்து
எங்களுக்கு வராதா?
சொல்லப்போனா
நாங்கதான் நிறைய ரிஸ்க்
எடுக்கறோம்...எந்த
வீட்டுல கொரோனா இருக்கு எந்த
வீட்டுல இல்லைன்னு தெரியாம
எல்லார் வீட்டுக்கும் டெலிவரி
பண்ணனுன்னு எங்க தலையெழுத்து...சீக்கிரம்
செக் பண்ணிக்கோங்க சார்...இன்னும்
நாலு வீட்டுக்குப் போகணும்"
என்று புலம்பினான்
டெலிவரிபாய்.
மேலும்
பேச்சை வளர்க்க விரும்பாமல்
அவனை கட் பண்ணி அனுப்ப முனைந்தான்
மாதவன்.
“டெலிவரி
பசங்ககிட்டேல்லாம் எதுக்குங்க
வம்பு உங்களுக்கு? வாங்கி
வெச்சிண்டு அனுப்ப வேண்டியதுதானே?
சரி, அதுல
சேமியா மாத்திரம் எடுத்துக்
குடுங்க….உப்புமா
பண்ணனும் அப்பாவுக்கு...இன்னிக்கு
சாப்பிட மாட்டாராம்"
என்றபடி
குழந்தையின் தலையைத்
துவட்டிக்கொண்டே பாத்ரூமிலிருந்து
வெளியே வந்தாள் சுதா.
ஏய்
ஏய் அதை எடுக்காதே...கருமம்
பிடிச்ச டெலிவரி பாய் மாஸ்க்கும்
போடலே க்ளவுஸும் போடல...எதுல
எந்த வியாதி இருக்குமோ...கொஞ்சம்
இரு...எல்லாத்தையும்
சானிடைஸ் பண்ணித் தறேன்...அதுக்கப்புறம்
சமைக்கலாம்...என்று
கத்தியபடியே சானிடைஸர் எடுக்க
விரைந்தான் மாதவன்.
வாஷ்பேசின்
ஒரு ஓரத்தில் சானிடைஸர்
பாட்டில். இன்னொரு
ஓரத்தில் கரும்பச்சையாய்
ஒரு உருண்டை. ஏதோ
நாற்றம் எடுத்தாற்போல்
இருந்தது மாதவனுக்கு.
அருகில் சென்று
முகர்ந்து பார்த்து சரேலென்று
விலகினான். என்னதிது
கண்ணறாவி? சாணி
உருண்டை மாதிரி இருக்கு?
ஒரே நாத்தம்...இதை
யாரு இங்கே வெச்சா? என்று
கத்தினான். சுதா
அவனது அம்மாவைச் சுட்டிக்
காண்பித்து கண்ணை உருட்டினாள்.
அம்மா!
இது என்னது?
உன் வேலையா?
சாணியெல்லாம்
வீட்ல வெச்சிருக்கே?
என்று ஆத்திரமாய்க்
கேட்டான்.
என்னடா
இது எல்லாத்துக்கும் கத்தறே?
நாளைக்கு
வெள்ளிக்கிழமை...நல்ல
நாள்...வாசல்ல
மெழுகனும் நான்தான்
பசும்பால்காரன்கிட்ட சொல்லி
வரவழைச்சேன்...சாணி
தெளிச்சி மெழுகினா கொரோனாவாது
கிரோனாவாவது? எதுவும்
உள்ள தலை காட்டாது தெரிஞ்சிக்கோ!
என்று அம்மா
அவள் பக்க நியாயத்தை எடுத்து
வைத்தாள்.
பேஷ்
பேஷ்! பையன்
சானிடைஸர் பைத்தியம்!
அம்மா சாணிடைஸர்
வைத்தியம்! என்று
இடைச்செருகினார் அப்பா.
என்ன
என்னைப் பாத்தா பைத்தியமா
தெரியுதா உங்களுக்கெல்லாம்?
உங்க நல்லதுக்காகத்தானே
இத்தனையும் செய்யறேன்?
என்று பதிலுக்குக்
கத்தினான் மாதவன்.
சுதா
சமாதானத்துக்கு வந்தாள்.
உங்களை யாரும்
ஒண்ணும் சொல்லலை. ஆனா,
அளவுக்கு
மிஞ்சினா அமிர்தமும் விஷம்.
அதைத்
தெரிஞ்சுக்கோங்க.
கொரோனாவுக்கு
பயப்பட வேண்டியது தான்.
ஆனா உலகத்தில
கொரோனாவைத்தவிர வேற வேலை
எதுவுமே இல்லையா என்ன?
வேளா வேளைக்கு
குளிக்கணும், சாப்பிடணும்,
ஆபீஸ் வேலை
பாக்கணும், ஆன்லைன்
கிளாஸ் அட்டெண்ட
பண்ணணும்..கொரோனா..கொரோனான்னு
எப்பப்பாத்தாலும் சானிடைணுரும்
கையுமா இருந்தா மத்த வேலையெல்லாம்
எப்படி நடக்கும்? கொஞ்சம்
விட்டுக்கொடுத்துத்தான்
போகணும்...என்று
அட்வைஸ் செய்தாள்.
ஆமாண்டீ...இப்போ
கத்துவீங்க...யாருக்காவது
கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னா
பாப்போமே...அப்போ
எல்லாம் பேயறைங்சா மாதிரி
இருப்பீங்க..என்று
பதிலுக்கு கத்தினான் மாதவன்.
அதன் பிறகு
வீடே அமைதியானது. சிறிது
நேரம்.
திடீரென்று
மீனாக்குட்டியின் அழுகை
சத்தம். என்னடி
ஆச்சு? ஏன்
அழறே? என
சுதா கேட்க, அழுகை
இன்னும் தீவிரமாயிற்று.
அம்மா எனக்கு
பயம் இருக்கும்மா...எனக்கு
கொரோனா வந்திருக்கும்மா….நான்
செத்துப்போயிடுவேனாம்மா?
என்று கேட்டுக்கொண்டே
பலமாக விக்கி விக்கி அழுதாள்
மீனா. ஏண்டி
இப்படியெல்லாம் பேசறே?
என்ன ஆறதுன்னு
சரியா சொல்லு...என்னங்க…
இங்கே வாங்க இவ என்னமோ ஒளர்றா
என்னன்னு விசாரிங்க….என்று
பாதி பயத்துடன் கணவனை துணைக்கு
அழைத்தாள் சுதா.
மாதவன்
ஓடி வந்தான். அவனைப்
பார்த்ததும் அம்மாவிடம்
ஒடுங்கிக் கொண்டாள் மீனா.
சொல்லுடி...அப்பாகிட்ட
சொல்லு….என்று
சுதா தூண்ட, மீனா
அழுதுகொண்டே, அப்பா...டாக்டர்கிட்ட
போகவேணாம்ப்பா….அப்புறம்
கொரோனான்னு என்னை தனியா
கூட்டிண்டு போயிடுவாங்கப்பா...ப்ளீஸ்...நான்
இனிமே உங்களைக் கேக்காம
எதுவும் சாப்பிட மாட்டேன்ப்பா...என்று
கேவிக் கொண்டே அழுதாள்.
மாதவனுக்கு
ஒன்றும் புரியவில்லை.
மொதல்ல அழுகையை
நிறுத்திட்டு அழாம சொல்லு
உனக்கு என்ன ஆறதுன்னு...கொரோனாவா
இல்லியான்னு நான் பாக்கறேன்...என்று
சற்று ஆதரவாகப் பேசினான்.
கோலிகுண்டு
போன்ற கண்களில் இருந்து நீர்
வழிய, மீனா
விக்கிக் கொண்டே, அந்த
லாலிபாப் சாப்பிட்டேனில்ல...கொஞ்ச
நேரத்திலே தொண்டை வலிக்கறா
மாதிரி இருந்தது...நீங்கள்ளாம்
திட்டுவீங்கன்னு யார்கிட்டையும்
சொல்லாம் ஃபிரிஜ்லேந்து
தண்ணி மாத்திரம் குடிச்சேன்...இப்போ
வலி இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு..இது
கொரோனாவாப்பா? என்று
மாதவனுக்கு
அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
அடி பைத்தியமே,
இதுக்கா இப்படி
பயப்பட்டே? இது
வெறும் தொண்டை ப்ராப்ளம்தான்...ரொம்ப
பழைய மிட்டாயை எடுத்து
சாப்பிட்டிருக்கே...அதனால
இருக்கும்...தொண்டைல
பிராப்ளம் வந்தா வெந்நீர்
குடிக்கணும்.. நீ
மேதாவித்தனமா யார் கிட்டயும்
கேக்காம ஜில் தண்ணி குடிச்சா
தொண்டை இன்னும் மோசமாத்தான்
ஆகும்….ஒண்ணும்
கவலைப்படாதே...வெந்நீர்ல
உப்பு போட்டு ஒரு மணிநேரத்துக்கு
ஒரு தடவை கொப்பளிச்சிட்டே
இரு...சாயங்காலத்துக்குள்ள
சரியாப் போயிடும் பார்….என்று
அவளை அணைத்துக்கொண்டு தலையை
கோதிவிட்டபடியே சமாதானம்
செய்தான் மாதவன். அழுகை
நின்று முகத்தில் சிரிப்பு
தவழ, அப்போ
அந்த இன்னொரு மிட்டாயையும்
சாப்பிட்டுவிட்டு கார்கிள்
பண்ணட்டுமா? என்று
மீனா குறும்பாகக் கேட்க
அனைவரும் சிரித்தனர்.
குழந்தையின்
பயம் அவனுள் அபாய எச்சரிக்கை
எழுப்பியது. சுதா
சொல்வது சரிதான். அரண்டவன்
கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய்..பயப்படுறவன்
பார்வைக்கு பார்ப்பதெல்லாம்
கொரோனா...உலகத்திலிருந்து
ஒழிக்கிறார்களோ இல்லையோ..முதலில்
உள்ளத்திலிருந்து கொரோனாவை
ஒழிக்கவேண்டும் என்று உறுதி
பூண்டான் மாதவன்.
மீனாக்குட்டியைத்
தூக்கி முத்தமிட்டு,
வா குட்டி,
சாமானெல்லாம்
எடுத்து வைக்கலாம்….என்று
முதல் முறையாக சானிடைஸர்
எடுக்காமல் வேலைக்கு இறங்கினான்.