Friday, May 19, 2023

வீடுபேறு

 இவ்வீட்டின் அனுபவமே அவ்வீட்டை தேட வைப்பதுவும்தான் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற வழக்கின் பொருளோ என்ற கருத்தில் விளைந்த கற்பனை:


தந்தை வீட்டிலிருந்து தாய்வீடு புகுந்து

கருவீட்டில் உருவாகி ஒரு வீட்டில் பிறந்து

குருவீட்டில் கற்று வாழ்வீடு பெற்று

மறுவீட்டுப் பெண்மணந்து தன்வீடு துவக்கி


வித்தில் பிறந்து வித்தை பிறப்பிக்கும்

விந்தையான சுழல் வித்தையில் சிக்கி

பந்தம் பாசம் உறவு நட்பு

உடைமை பதவி புகழ் பழி


விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம்

பசி பட்டினி விருந்து மருந்து

வலிமை வியாதி இளமை முதுமை

அத்தனையும் அனுபவிக்கும் ஆசை


இன்ப வாழ்வில் வினையை ஈட்டி

துன்ப வலியில் பாடம் பயின்று

அதுவும் போதும் இதுவும் போதும்

எதுவுமில்லா சமநிலை எங்கே தேடி


வலையில் சிக்கி சலித்து உதறி

வீட்டுச் சிறையிலிருந்து 

வெளியேற நோக்கி

கோயில் குளம் ஞானம்  நாடி

பெருவீடு பெறவிழையும் பேராசை மனிதா


ஒரு பிறவி வினை வெறும் சட்டுவம்

பானை நிரம்ப உனக்கில்லை பக்குவம்

பெருவீடு காண்பது எளிதல்ல மகனே

நீ நீயில்லை என்றறியும்போது பெறும்


ஏதுமில்லா நிலைதான் பேரின்பம்

பற்றற்றவனைப் பற்ற பற்றே வழியென

பட்டபின்தான் தெளியும் ஞானமே

(பெரு)வீட்டுக்கு (பிறவி)வீடு வாசற்படி!

===

வீடு ( ஆக்கம்; அரங்க.இரகுநாதன் )

வினைச்சேற்றில் விந்தணுவாய் விடுதலை நீச்சல் ;
பெண்முட்டைச் சேர்க்கையெனும் விபத்து ;
மேவும் கருவீட்டில் பத்துமாத இருள்வாசம் ;
தாயெனும் ஒருவீட்டில் ஒண்டுக் குடித்தனம் ;
வேளை வந்தவுடன் வெளியேற்றம் −− வீட்டுக் குரியவள்
கதறக் கதற; சம்சாரப் பெருவீட்டில் அகப்பட்டதை
அறிவுக்கும் அலறல் ; கூப்பாடு ;
விலங்குபோல இரைதேடி இன்னலுற்று தொழுவம் கூடு
வளை எனறு இருட்டிற்கு அடையும் பட்டியடைப்பு; உறவுகள்
திணிக்கும் கடுஞ்சிறை;
தன்மதியால் வெல்வதாகப் பறைசாற்றி
விதிவழியே வக்கணையாய் வாழ்கின்ற வில்லங்கஉறையுள் கடைசியில் வாழ்க்கைப் பெருங்குட்டையுள் அப்பிக்கொண்ட வினைச் சேற்றைக் கழுவிவிடும் மறைவிடமே பிணவீடு ; ஆம் கலலறை ; மீண்டும் மீண்டும் ஒண்டுக் குடித்தனம் ,
குட்டை நீச்சல் , சேற்றுக் குளியல் ;
எந்த வீட்டிலும் இச்சை வாஸம் இல்லை ; இதனாலேயே
விடுபட துடிக்கும் அடிமன வேட்கை ;
ஆன்ம விழைவு , ஏக்கம் ;
இதை உணராதவன் வெறும் மனிதன் ;
புரிந்து விண்டுரைப்பவன் ஞானி , ஆன்றோன் ;
விழுந்துவிட்ட குட்டையின் சேறகற்றி , தன்னையும்
தூய்மையாக்கிக் கற்பூரமாய் வெளியில் கலப்பவன் முக்தன் பிறப்பிலாப் பெருவாழ்வாம் கூரையிலாப்
பெருவெளிக்கு அவன் வைத்த பெயரும் வீடே !

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home