Monday, August 5, 2024

எட்டு நடை

 முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது எட்டு என்ற எண் வடிவத்தில் நடப்பதைப் பற்றியோ, அல்லது அவ்வாறு நடப்பதனால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றியோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல.


சிறிது நாட்களாகவே நான் வெளியில் அவ்வளவாக நடப்பதில்லை என்ற குறை என் மனைவிக்கு இருப்பதை அறிந்து கொண்டேன். வெளியில் தலை காட்டாத அளவுக்கு தவறு ஒன்றும் நான் செய்திருக்க மாட்டேன் என்று அவளுக்கும் தெரியும். உண்மைக் காரணம் என் உடல்வாகு.


சாதாரணமாகவே எனக்கு அதிகம் வியர்க்கும். ஒன்றுமே செய்யாமல் வெறுமனே வெய்யிலில் - அது அதிக சூடு இல்லாத இளங்காலையாக இருந்தாலும் கூட – ஒரு ஐந்து நிமிடம் நின்றாலே தாரைதாரையாக வேர்க்கும். இவ்வளவு நாட்களாக இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு டாக்டரிடம் போகவில்லையா என்று கேட்பீர்கள். தெரியும். கேட்காமல் இருப்பேனா? கேட்டேன். அவரோ, எனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது, என்ன செய்யலாம்? என்று என்னிடமே கேட்டார். அத்தோடு விட்டுவிட்டேன். என் பேச்சில் நம்பிக்கை இல்லை என்றால் என் நாற்பது வருட நண்பனைக் கேளுங்கள். (நட்பு நாற்பது வருடம் - அவனுக்கு 70க்கு மேல் ஆகிறது.) பள்ளி வயதிலிருந்தே எப்போது பார்த்தாலும் வியர்வையைத் துடைத்துக்கொண்டே இருந்ததாக என்னைப்பற்றி எல்லாரிடமும் சொல்லுவான். என் விஷயத்தில் நீரில்லா (நீறில்லா அல்ல) நெற்றி பாழ். நிற்க. சப்ஜெட்டுக்கு வருவோம்.


என் மனைவியின் குறையைத் கொஞ்சமேனும் தீர்க்க நான் எடுத்த நடவடிக்கை - நடை. ஒரு காசு செலவில்லை. உடம்புக்கும் நல்லது. உடனே முதல் அடி எடுத்து வைத்தேன். அதாவது எங்கு நடப்பது எவ்வளவு நேரம் நடப்பது எவ்வளவு தூரம் நடப்பது என்று திட்டம் போடத் தொடங்கினேன்.


எங்கு நடப்பது - என் வீட்டிற்கு வெளியில், எனது காம்பவுண்டுக்கு உள்ளேயே. காரணம் - யாரையும் தொந்தரவு செய்யத் தேவையில்லை. எப்போது எழுந்திருக்கிறேனோ அதற்கேற்றாற்போல் நடக்கலாம்.


எவ்வளவு நேரம் - ஆளாளுக்கு இத்தனை நேரம் நடந்தால் நல்லது என்று ஏகப்பட்ட அறிவுரைகள் வரவே, குறைந்தது அரைமணி நேரமாவது நடப்பது என முடிவு செய்தேன்.


எவ்வளவு தூரம் - அது நடையின் வேகத்தையும் நேரத்தையும் பொறுத்து தானாகவே அமையும் என்பதனால் தூரத்தை வரையறுக்கவோ கணக்கிடவோ மெனக்கெடவில்லை.


ஒரு வழியாக (அதாவது ஒரே வழியாக) நடக்க ஆரம்பித்த பின்னர்தான் நடப்பதனால் ஏற்படும் நன்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின.


எழுந்தவுடன் என்ன செய்யலாம் என்ற குழப்பமே இப்போது இல்லை. காலை வேலைகளை முடித்த கையோடு கதவைத் திறந்தால் நடைதான்.


வீட்டைச் சுற்றி மட்டுமே நடை என்பதால் செருப்பு போட்டுக்கொள்ளத் தேவையில்லை. செருப்பும் தேயாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.


மீண்டும், வீட்டைச் சுற்றி அதுவும் காம்பவுண்டுக்குள்ளேயே நடை என்பதால் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடியபடியே பேர் பாடியோடு நடக்கலாம். வியர்வைத் தொல்லை இல்லை. (மைக்கேல் மதன காமராஜன் படப் பாணியில்) ஒரே கல்லில் மூன்று மாங்காய்!


எவ்வளவு நேரம் என்பதற்கு தோராயமாக நாற்பது நிமிடங்கள் என்று கணக்கு வைத்துக்கொண்டேன். இது மினிமம் ரெகொயர்மென்ட்டை பூர்த்தி செய்கிறது. நான்கு மாங்காய்!


நாற்பது நிமிடங்களுக்கு ஏற்றாற்போல் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம், கேசவா நாமா, நாராயண ஸ்தோத்ரம் ஆகியவைகளை பாராயணம் செய்து கொண்டே நடப்பது என்று வழக்கமாயிற்று. நாமஸ்மரணத்தின் புண்ணியம், ஞாபக சக்திக்கு பயிற்சி என ஐந்து, ஆறாவது மாங்காய்கள்.


எங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றுவது என்பது எங்களுக்கு ஒரு பெரிய சமாச்சாரம். காரணம் எதிர்வீட்டில் வசிக்கும் ஒரு நபர். தொட்டி நிரம்பி தண்ணீர் கொட்டுவதை ஓரிரு நிமிடங்களுக்குள் நிறுத்தாவிட்டால் உடனே என் மனைவிக்கு போன் செய்துவிடுவார். அவளுடைய நம்பர் எப்படி அவருக்குக் கிடைத்தது என்பது என் மனைவிக்கே தெரியவில்லை. சென்ற வாரம் அவள் பெங்களூர் சென்று அந்தக் குளிரில் காலையில் அசந்து போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை ஏழு மணிக்கெல்லாம் போன் செய்து அவளை எழுப்பி, அதற்குப்பின் இங்கே ஒரே ரகளை. இப்போதெல்லாம் நடக்க ஆரம்பிக்கும் முன் மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் ஏற மோட்டாரை ஆன் செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். அரை மணி நேரத்துக்குள்ளாக தொட்டி நிரம்பி தண்ணீர் முதல் சொட்டு வழிய ஆரம்பிக்கும்போதே உள்ளே சென்று மோட்டாரை நிறுத்தி விடுகிறேன். இந்த ஏழாவது மாங்காய் முக்கியமான பெரிய மாங்காய் என்பது எங்கள் வீட்டில் ஒரு வாரம் இருந்தீர்களானால் தெரிந்து கொள்வீ்ர்கள்.


மோட்டார் நிறுத்தினால் மட்டும் போதாது. மேற்கொண்டு தண்ணீர் வழியாமல் இருக்க வேண்டுமானால் உடனே சிறிதளவாவது (சுமார் இரண்டு பக்கெட் அளவு) எங்காவது பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் அவரிடமிருந்து எரிச்சல் போன் வந்துவிடும். எனவே, எப்படியும் வேலைக்காரி பாத்திரம் தேய்க்க பிடிக்க வேண்டிய பாத்திரத்தில் பிடித்துவிட்டால் அந்த வேலையும் முடிந்த மாதிரி என்று அதையும் செய்துவிடுகிறேன். இது எட்டாவது மாங்காய்!


ஆக எட்டு விஷயங்களுக்கு உபயோகமாவதால்தான் இதை நான் எட்டு நடை என்று அழைக்கிறேன்.


நான் சொல்வது எல்லாம் உண்மைதானா என்று அறிய ஆவல் இருந்தால் காலையில் ஒரு எட்டு எட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home