இட்டிலி
சும்மா இருந்தவனை காலையிலேயே உசுப்பேற்றி
சுகமான இருக்கையிலிருந்து சுறுசுறுப்பாய் எழுப்பி
சூடாக பதில்கவிதை எழுது வைத்திருக்கிறீர்
சுவைத்துச் சொல்வீர் வெந்திருக்கிறதாவென்று!
இத்தனை நாட்கள் இறையைப் போற்றி
இயற்றிய பாக்களுக்கு இல்லா எதிர்வினை*
இன்றும் என்றும் நம்பசி தீர்க்கும்
இட்டிலிக் கவிதைக்கு வந்ததில் வியப்புண்டோ?
வெந்ததும் தட்டிலிருந்து ஆவியுடனே வெளிவந்து
வாடியே காத்திருக்கும் வீட்டு மனிதர்க்கு
வயிற்றுத் தீயை சூட்டாலேயே தணிக்கும்
விந்தை வான்மழை வெள்ளைமன இட்டிலியன்றோ?
கத்தியின்றி இரத்தமின்றி பசியுத்தம் போக்கிடும்
சத்தனைத்தும் ஊட்டியுடலை சக்தியோடு காத்திடும்
சுத்தமான ஆவியில் தீங்கின்றி வெந்திடும்
மெத்தனமாக இயங்காமல் துடிப்புடனே வைத்திடும்
ஆயிரம் உண்டிங்கு சாதி இட்டிலிக்கு
ஆசையாய் துணைசேர போட்டா போட்டி
ஆகையாலே தந்திட்டார் உலக விருது
ஆகச்சிறந்த சிறந்த காலை உணவு
இட்ட நொடி இலையில் இல்லாது போவதாலோ
இட்டார் இல்லினை இதயத்தில் வார்ப்பதாலோ
இடுவதும் இல்வாழ்வும் இயற்கையின் இயல்போ
இட்டிலியின் பெயர்க்காரணம் இமயமொத்த இரகசியமே
பாங்காய் பாயியற்றும் புலவரும் பாமரரும்
பாராளும் மன்னரும் பரதேசியும் விரும்பிடும்
பாரபட்சம் பாராது பசிதீர்க்கும் சுவையிட்டிலி
பரமனுக்கு இணையென்றால் பழுதுண்டோ எம்கூற்றில்?
March 31, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home