Wednesday, October 23, 2024

வேண்டுதல்

 

அக்கினிக் குஞ்சொன்று கண்டோம்
ஆங்கோர் காட்டிடைப் பொந்தினில் வைத்தோம்
வெந்து தணிந்தது சுதந்திர தாகம்
நெஞ்சில் நிலைத்தான் மகாகவி பாரதி.

அகர முதலில் குறட்பா தொடங்கி
ஆயிரத்துக்கும் மேல் அருளுரை வழங்கி
வையகம் தெளிவுற வழிவகை வகுத்தான்
வள்ளுவப்‌பெருந்தகை வாழ்வு சிறக்கவே.

தண்டலை மயில்களாட தாமரை விளக்கம் தாங்க
செந்தமிழில் சீர்மிகு இராமகாதையை
செம்மையாய் இயற்றியே அரங்கேற்றினான்
கம்பநாடனாம் கவிச்சக்ரவர்த்தி.

அறம்செய விரும்ப அறிவுரையருளி
அரியணை அமர்ந்தாள் புலவர்கோன்
கொவ்வைக்கனிபோல் பழுத்து முதிர்ந்த
அவ்வைக்கிழவி அருந்தமிழ் வளர்த்தே.

நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை என
நிதர்சனத்தை விளம்பினான் கவியரசன்
அவனோடு பண்ணிசைத்தவரையும்
அவனுக்கு குரல்தந்தோரையும் சேர்த்தே.

புவியோர் நினைவில் நிலைத்து பொதிந்திட
பாக்கள் படைக்கும் பாவலர் சிலரே
அவர்பாவனைத்தும் கற்றுத் தெளிந்திட
ஆயிரம் பிறவியும் எமக்குப் போதாதே

இருக்கும் சில நாளில் தீந்தமிழ் கவிதைகளை
இனங்கண்டு அனைவரும் அனுபவித்து மகிழ
நல்லுளத்தோடு நால்வரோடு பகிரும்
நண்பரைத்தவிர வேறென்ன வேண்டுவேன்?

July 6, 2023

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home