சரணம் கிருஷ்ணா!
சடையன் தலத்துதித்த த்வைத தவவழிக்கு
இடையனே தலையனாம் இருளகற்றி ஒளியேற்றி
கடையரும் கடைத்தேற கருணையோடு கால்கடுக்க
கடைகோல்தாங்கி நின்றானவன் கமலபாதமே சரணம்
புத்ரனாம் வாயு தேவனுக்கு பக்திப் பழமான அனுமன்
சத்ருவாம் கௌரவர்க்கு பாண்டு மகன் பலபீமன்
மத்வராய் அவதரித்தார் பாஜகக்ஷேத்திரத்தில்
பக்தர் துயர் தீர்த்து பரமனடி சேரும் வழிகாட்டவே.
விளையும் பயிர் முளையிலேயே பிரகாசிக்க
களைநிறைந்த உருவுடன் கலைமகளின் அருளுடன்
அளவிலா ஆற்றலுடன் அறிஞரை வாதில் வென்று
தளையுடைத்து நிறுவினார் த்வைத சாம்ராஜ்ஜியத்தை.
அன்னை ருக்மணியின் கோரிக்கை ஏற்று
தன்னைப்போல் பதுமை செய்வித்து பரிசளித்தான்
புன்னை மர நாயகன் துவாபர யுகத்தில்
பின்னை பிரளயத்தில் அது காணாமல் போனதுவே.
மரக்கலம் தடுமாறி நடுக்கடலில் தத்தளிக்க
இரக்கத்துடன் கரைசேர்த்து கருணை புரிந்தவர்
தரமிக்க காணிக்கைகள் அளித்தும் ஏற்காமல்
கரம் நீட்டி கேட்டதுவோ மண்கட்டி மாதவனை
கிருஷ்ணனை கையேந்தி கடிநடையில் ஊரடைந்து
திருஷ்டியில் நிலைத்திருக்க ஆலயமும் அமைத்து
இஷ்ட தெய்வத்திற்கு இடையறா தொண்டாற்ற
அஷ்டமடம் நிறுவிய ஆசார்யர் தாள்சரணம்
June 28, 2023
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home