Wednesday, October 23, 2024

கரைந்த கற்கண்டு

 

"கரைந்த கற்கண்டு"
(மீ. விசுவநாதன் )

சின்ன விதைக்குள் பெரியமரம் - உயிர்
சேர்த்து வைத்தான் தெய்வமகன்
தன்னை வியக்கும் மனிதனிவன் - இறைத்
தன்மை அறியா பொய்க்கலவன்

தன்தோள் தட்டும் கைகளையே - மனம்
தாவிச் சென்று அணைக்கிறது
முன்னே சொல்லும் புகழுரைகள் - புற
முதுகில் கேலி செய்கிறது

மயங்கச் செய்யும் வார்த்தையெலாம் - மதி
வழுக்கி வீழும் வாசல்கள்
இயங்கும் வேக உலகமிதில் - இது
எளிதில் புரியாப் பாடங்கள்

வானில் தோன்றும் வண்ணமென - நம்
வாழ்வும் வந்து போவதென
தேனில் குழைத்த தமிழாலே - பல
சித்தர் சொன்ன கவியுண்டு

நீண்டு பரந்த பரவெளியில் - அட
நீயும் நானும் சிறுபுள்ளி
பூண்ட மனித வேடமிதை - உடன்
புரிந்து கொண்டால் மனம்வெள்ளி .

நூலில் கோத்த மணிகள்நாம் - அந்
நூலின் பலத்தை அறியோம்நாம்
பாலில் கலந்த கற்கண்டாய் - அப்
பரமன் நம்முள் கரைந்துள்ளான்.


===


இதன் தாக்கத்தில் விளைந்த என் கவிதை:

வானில் தோன்றும் வண்ணங்கள் - அவை
வியப்பாய் தோன்றக் காரணமே
விழையும் போதினில் தோன்றாமல் - நம்
விழி எதிர்பாராமல் காணுதலே.

விதைக்குள் மரம் விந்தைதான் - ஆயின்
வான்மழை இதனையும் விஞ்சிடுமே
வற்றிய குளமும் நிரம்பிவிடின் - உயிர்
வகைகையாய் உள்ளே உயிர்த்திடுமே.

உடற்பிணி வாட்டம் போக்கிட - சுவை
உணவே மருந்தென்றனர் ஆன்றோர்
உயிர் காக்கும் பயிரனைத்தும் - நமக்கு
உவகையுடன் அளிப்பது இயற்கையன்றோ

நேற்று இன்று நாளையென – காலம்
நூறு யுகங்கள் தொடர்ந்தாலும்
நூலில் கோர்த்த மணிகள் நாம் - அதை
நூற்றவரை எண்ணி வியக்கின்றோம்.

நீண்டு பரந்த பரவெளியில் - நித்தம்
நீந்தும் பிறவிப் பெருங்கடலில்
நீங்கா இன்பம் வேண்டுமெனில் - தூய
நேயம் நெஞ்சினில் நிறைத்திடுவோம்.

பாரினில் இயற்கையின் படைப்பெல்லாம் - அப்
பரமனின் கருணையை கைக்கொண்டு
பல்லுயிர் பேணுவதைக் காண்கையில் - வாழ்க்கை
பாலில் கலந்த கற்கண்டே!


Dec 24, 2023

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home