Wednesday, October 23, 2024

புதுக்குடி

 

வெள்ளத்தினால் இரண்டு நாட்கள் ஓடாமல் நின்ற இரயிலில் தத்தளித்த மக்களுக்கு உதவிய புதுக்குடி வாழ் பெருமக்களுக்கு இந்த எளிய கவிதையை அர்ப்பணிக்கிறேன்.


வசதியாய் வாழும் காலத்தில்
வாழ்க்கைப் பயணம் ஒருநாளில்
வழி சற்றே தடைபட்டாலும்
வாடும் நமக்கு ஒரு பாடம்

வளமாய்வாழ வான்மழை வேண்டினும்
அளவுக்கு மிஞ்சிய அமிழ்தம்போல்
காக்க வேண்டிய நீர்மிகுந்து
காலனாய் கனமழை வீழ்ந்ததே

ஆசையாய் ஊருக்குச் சென்றிட
ஆயிரம் மக்கள் பயணித்த
நீண்டதூர இரயில் வண்டி
நீளும் இருளில் நின்றதுவே

இதுவரை காணாத பெருவெள்ளம்
இருமருங்கும் விரைவில் சூழ்ந்திட
தண்டவாளத்தில் நின்ற இரயில்
துண்டிக்கப் பட்டதே கதியின்றி

பகலில் நிலவரம் புரிபட
பதைத்துப் போனரே பயணியரும்
பெரியோர் பசியில் வாடிட
பிள்ளைகளும் பாலின்றி தவித்தனரே

நாதியின்றி தவிக்கும் ஒவ்வொருநொடி
நேரமும் நரகமாய் மாறியதே
நல்ல வேளை மழை நின்று
வெள்ளம் வடியத் துவங்கியதே

பயணிகள் சிரமம் படும்பாடு
பைய வெளியில் பரவியதே
கூப்பிடுதூர புதுக்குடி மக்களின்
காதுகளுக்கும் இது எட்டியதே

சின்னஞ் சிறிய கிராமமிதில்
சிலரே வாழ்ந்து வந்தாலும்
சமயம் கோரும் தருணத்தில்
சரியாய் உதவிக்கு வந்தனரே

தாமே செழிப்புடன் இல்லாவிடினும்
தமக்குள் கூடி முடிவெடுத்து
அனைத்து இல்லங்களும் தாமியன்ற
அமுதம் அனைத்தும் வழங்கினரே

ஊர்கூடித் தேரிழுப்போம் என்பதுபோல்
ஊர்கூடி உதவ முடிவெடுத்தனர்
முதியோர் சிறார் தேவைக்கேற்ப
மூவேளையும் உணவளிக்க முன்வந்தனரே

ஆள் புழங்கவே இடமில்லா ஊரில்
ஆயிரம் பேருக்கு உணவு சமைக்க
ஆன்றோர் அன்று கட்டிவைத்த
ஆலயம் அருளாய் அமைந்ததுவே

வீட்டில் இருந்த பொருள்கொண்டு
விருப்பத்துடன் விருந்து தயாரித்து
பச்சிளம் குழந்தைகள் பசியாற
பாலும் கறந்து கொடுத்தனரே

பசியில் மூழ்கவிருந்த பயணியரை
பலியாகாமல் தடுத்து காத்தனரே
பரிதவிக்கும் உயிர்களை காப்பாற்றி
பாமரரும் பரமனாய் உயர்ந்தனரே

காலத்தினாற் செய்த உதவி
ஞாலத்தின் மாணப் பெரிதென்று
அறியா மக்கள் தம்செயலால்
அழியாப் புகழும் பெற்றனரே

புதுக்குடி தம்மக்கள் அருஞ்செயலால்
புதுப்பொலிவுடன் இன்று நிமிர்கிறதே
இரயிலின் ஆயிரம் பயணியரும் இவர்களை
உயிரினும் மேலாய் உவக்கின்றனரே

வாழிய நின்றன் இளகிய மனம்
வாழிய நின்றன் ஈகை குணம்
வாழிய நின்றன் அருந்தொண்டு
வாழிய புதுக்குடி பெருமக்களே


Dec 24, 2023


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home