மெல்ரோஸ்
மெல்ரோஸ் எனும் மலை முகடு
இரு போர்வீரர்களின் கதை
(ஆங்கில மூலம் - டாக்டர் யஷ்வந்த் தோரட்)
“சற்று லைட்டர் தர முடியுமா?” கையில் சிகரெட்டுடன் எதிரில் அமர்ந்து கேட்ட ஜப்பானியரைப் பார்த்தேன். கிட்டத்தட்ட என் வயதிருக்கும். லைட்டரை எடுத்துக் கொடுத்தேன். சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அது 1980-ம் வருடத்திய இலையுதிர் காலம். நாங்கள் பெர்ன்-லிருந்து ஜெனிவா செல்லும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தோம்.
“இந்தியன்?” என வினவினார். ஆம் என்று பதிலளித்தேன். நாங்கள் பேசத் தொடங்கினோம். அவர் ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி. வெளியில் பணி முடித்துவிட்டு தன் நிறுவனத்தின் தலைமையகமும் தனது தற்போதைய வசிப்பிடமுமான ஜெனிவாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். நான் ஜெனிவாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஜெனிவாவில் என்ன பார்க்கலாம், எங்கு உண்ணலாம் என்ற உபயோகமான தகவல்களைப் பகிர்ந்தார். சற்று நேரம் ஆபத்தின்றி பகிரக்கூடிய விஷயங்களைப் பேசித் தீர்த்த பின்னர் இருவரும் மெளனமானோம். நான் உள்ளே வைத்திருந்த புத்தகத்தை எடுத்து என் வாசிப்பைத் தொடர்ந்தேன். அது ஃபீல்டு மார்ஷல் வில்லியம் ஸ்லிம் எழுதிய இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நிகழ்ந்ததை விவரிக்கும் தோல்வியின் விளிம்பில் வெற்றி என்ற புத்தகம். அவர் தினசரி செய்தித்தாளை விரித்தார். நேரம் கடந்தது.
சிறிது நேரம் கடந்த பின், நான் வைத்திருந்த புத்தகத்தைக் கண்ணோட்டமிட்டிருந்த அவர், “நீங்கள் ராணுவ வரலாறு துறையில் பேராசிரியரா?” எனக் கேட்டார். இல்லை என்று பதிலளித்த நான், என் தந்தை பர்மா போரில் பங்கேற்றிருந்ததால் எனக்கும் அதில் இயல்பாகவே ஒரு நாட்டம் உண்டு என்றேன். தன் தந்தையும் பர்மா போரில் பங்கேற்றவர் என்று அவர் தெரிவித்தார். நான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தின் சாராம்சத்தை விளக்கத் தொடங்கினேன்.
***
1941ம் வருடம் ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்து உலகப்போரில் பிரிட்டனுடனான மிக நீண்ட தரைப்போருக்கான தொடக்கத்தை பதிவு செய்தது. ஜப்பானின் இந்த ஆக்கிரமிப்புக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சீனாவின் சாங் கய் ஷேக்கின் சீன தேசியப் படைக்கான பர்மா ரோடு மூலமான தரைவழி சப்ளை தடங்களை துண்டிப்பதன் மூலம் சீனாவைக் கைப்பற்ற வழி கோலலாம். இரண்டு, பர்மா தன் கைக்குள் இருந்தால் இந்தியாவிற்குள் நுழைவது எளிதாகி விடும். இந்தியாவில் பிரிட்டனுக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்ட கல்கத்தாவிற்கு அருகில் ஜப்பானியப் படை இருப்பது அவசியம் என்று ஜப்பான் கருதியது.
1942ம் வருடம் தாய்லாந்து வழியாக பர்மாவுக்குள் நுழைந்த ஜப்பானியப் படைகள் விரைவில் ரங்கூனையும் பின்னர் பர்மா ரோடு எனும் சப்ளை பாதையையும் முதலிலேயே கைப்பற்றி சீனப் படைக்கென்று இருந்த ஒரே வழியைத் துண்டித்தது. பின்னர் சிறிது சிறிதாக முன்னேறி மேற்கத்தியரின் ஒன்றிணைந்த படையினரை இந்தியாவுக்குள் திரும்பிப்போக வைத்தது. நிலைமை மிக தீவிரமாக இருந்தது. பிரிட்டன் உலகப்போரில் கழுத்தளவு இறங்கி அதன் படைகள் எல்லாம் ஐரோப்பாவில் அதிக அளவில் உட்படுத்தப்பட்டிருந்ததால் அவர்களால் பர்மாவை மீண்டும் கைப்பற்றுவதற்குரிய படைகளையோ கட்டமைப்புகளையோ தயார் செய்ய இயலவில்லை. எனினும் 1943ம் வருடத்திற்குள் அவர்கள் தங்கள் நிலைமையை சீர்செய்துகொண்டனர்.
ராணுவத் தலைமை முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டது. வாவெல்லிடமிருந்த தலைமைப் பொறுப்பு மவுண்ட்பேட்டனுக்கு மாற்றப்பட்டது. செயல் திட்டங்களுக்கான பொறுப்பு ஜெனரல் வில்லியம் ஸ்லிம் என்னும் சிறந்த அதிகாரிக்கு அளிக்கப்பட்டது. அவர் தன் படைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சியும் உத்வேகமும் அளித்து பிரிட்டன், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வீரர்கள் அடங்கிய புகழ்பெற்ற 14ம் படையை உருவாக்கினார். எதிரிகள் மெல்ல பலம் பெறுவதை அறிந்துகொண்ட ஜப்பான், துணிவுடன் ஒரே நேரத்தில் இரட்டைத் தாக்குதல் மூலம் போரை முடிக்க எண்ணி, ஒரு பக்கம் இந்தியாவிற்குள் நுழையவும் மறுபக்கம் பர்மாவின் அடர்ந்த காடுகள் கொண்ட அரக்கன் மலைத்தொடரில் இருந்துகொண்டு பிரிட்டன் படைக்ளை தாக்கவும் முனைந்தது.
ராணுவ வரலாற்றில் இடம் பிடித்துள்ள இந்த முக்கியமான போர் சம்பவங்களில். ராணுவ வீரரான என் தந்தையும் ஒரு பணி ஆற்றினார். நாகா மலைகளிலிருந்து ஜப்பானியரை வெளியேற்றும் பணியில் கோஹிமாவிலும், பின்னர் இம்ஃபாலிலும், கடைசியாக அரக்கன் மலைத்தொடரின் அடர்ந்த காடுகளிலும் அவர் பணியாற்றினார்.
என் தந்தையின் அணி ஒரு பங்காக பணியாற்றிய அகில இந்திய படைப்பிரிவின் தலைமை அலுவலகமாக இருந்த மெளக்டோ என்னும் இடத்தில் 1943ம் வருடம் கனத்த பருவமழைக்கு இடையே ஒருங்கிணைந்த படைகளின் சுப்ரீம் தளபதியின் விமானம் தரை இறங்கியது. மவுண்ட்பேட்டன், அவரது படைத் தலைவர் (எனது தந்தை பயின்ற ராயல் ராணுவக் கல்லூரியில் துணை படை தளபதியாக இருந்த) லெப்டினன்ட் ஜெனரல் ப்ரெளனிங் உடன் வந்திருந்தார். என் தந்தையும் திம்மையா, சென் ஆகிய மற்ற இரண்டு இந்திய தளபதிகளும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களுடைய படை அனுபவம் பற்றி சிறிது சிறிதாக விசாரிப்பில் தொடங்கிய இந்த சந்திப்பு, பிற தளபதிகளுடன் கூடிய பெரும் சந்திப்பாக நீண்ட நேர விவாதங்களுடனும் ஆலோசனைகளுடனும் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மவுண்ட்பேட்டன், இந்திய படைப்பிரிவின் தளபதியான ரெக்கி ஹட்டனைப் பார்த்து, ரெக்கி, ஆவது ஆகட்டும். உங்கள் இந்தியப் படைப்பிரிவைக் கொண்டு இந்த வேலையை முடிப்போம். ஆனால், இது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்று எச்சரித்தார். பின்னர் மூன்று இந்திய தளபதிகளையும் நோக்கி, ஜென்டில்மென், ஜப்பான் பர்மாவின் மேல்பக்கத்திலிருந்து வெளியேறப் பார்க்கிறது. அவர்கள் வெளியேறுவதை தடுத்து நிறுத்தும் பணி உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அக்யப்மீது கவனம் செலுத்தி, கடல் வழியாக மைபான் சென்று காங்காவைக் கைப்பற்றி, ஜப்பானியப் படைகளுக்குள் ஊடுருவி அவர்கள் வெளியேறும் திட்டத்தை தவிடுபொடியாக்க வேண்டும். புரிகிறதா?” என்றார். அவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.
***
ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த என் ஜப்பானிய நண்பர், உங்கள் தந்தை ஆல் இந்தியா படைப்பிரிவில் பணியாற்றினார் என்றா கூறினீர்கள்? என்று வினவ, ஆம் என்று பதிலளித்தேன். ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பின் எங்கள் பேச்சு தொடர்ந்தது. உங்கள் தந்தை ஒரு ஜூனியர் அதிகாரியாக இருந்தாரா? எனக் கேட்டார். இல்லை. பட்டாலியன் கமாண்டராக இருந்தார் என்றேன். எந்தப் பிரிவு? எனக் கேட்டார். பஞ்சாப் ரெஜிமென்ட் என்றேன். ரயிலின் ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தின் விளையாட்டா அல்லது என் கற்பனையா தெரியவில்லை, அவர் முகம் சட்டென்று இருண்டு அவர் விரைவில் உடல்நல பாதிப்புக்குள்ளாகப் போகிறார் என்பது போல் தோன்றியது. நீங்கள் நலமாகத் தானே உள்ளீர்கள்? என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டிய அவர் மேலே தொடரும்படி சைகை செய்தார். நான் தொடர்ந்தேன்.
***
சாதகமில்லாத பிரதேசத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு மைபான் போய் சேர்ந்தனர் இந்தியப் படையினர். அங்கு எதிர்ப்பு எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து காங்காவிற்கு புறப்பட்டனர், அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் இதுவரை கண்டிராத சண்டையில் அகப்பட்டுக் கொள்ளப்போவதையோ, இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப் போகும் அந்தப் போர் மூவாயிரம் உயிர்களைப் பலி கொள்ளப்போவதையோ அறியாமல்.
மவுண்ட்பாட்டனின் கணிப்பு சரியாக இருந்தது. ஜப்பானியப் படைகள் பின்வாங்குவதற்கான வழியில் இருந்த ஒரு பகுதி மலை அம்சம் 170 – மெல்ரோஸ் மலை முகடு. நல்ல உயரத்தில் சாதகமான அம்சமாக அது அமைந்திருந்ததால் ஜப்பானியர்கள் அதை கெட்டியாக பிடித்து வைத்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஜப்பானியர்கள் படை இரு மடங்கு இருந்ததை இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தத் தகவல் தாமதமாகவே கிடைத்தது. பிரிகேடியர் ஹட்டன், ஜப்பானியர்களின் வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டுமானால் படை எண்ணிக்கை சாதகமாக இல்லாதபோதும் இந்த மெல்ரோஸ் மலை முகட்டைக் கைப்பற்றவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். போராட முடிவெடுத்தார். திம்மையா தலைமையில் ஹைதராபாதிகளின் படை முதலில் தாக்குதல் மேற்கொண்டது. எதிரிப்படைகளை சற்று புரட்ட மட்டும் முடிந்தது, ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அடுத்து சென் தலைமையில் பலுசி படைகள் தாக்குதல் மேற்கொண்டன. அவர்களாலும் சேதம் விளைவிக்க முடிந்ததேயன்றி வெற்றி கொள்ள இயலவில்லை. இந்த நிலைமையில் ரெக்கி தலையிட்டு பஞ்சாபி படையினரை ஒரு இறுதிமுயற்சி செய்ய ஆணையிட்டார். பீரங்கி மற்றும் வான்வழி ஆதரவுகளை கட்டமைத்துக்கொண்டு 1944 ஜனவரி 29 காலை 7 மணிக்கு தாக்குதல் தொடங்க முடிவெடுத்தனர். பஞ்சாபி படைகள் முன்னேறுவதற்கு வசதியாக பீரங்கிப்படைகள் முன்னோக்கி தாக்குதல் நடத்தி ஒரு புகைக் கவசத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் பதுங்குகுழியில் பாதுகாப்பாக இருந்த ஜப்பானியர்கள் புகை விலகும்போதெல்லாம் குண்டு மழை பொழிந்தனர். வானிலை மாற்றம் காரணமாக வான்வழி ஆதாயம் கிடைக்காமல் போனது. பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வந்தது. என்ன ஆனாலும் ஆபத்தை எதிர்கொண்டு முன்னேறுவது என்று முடிவெடுத்து கமாண்டர் மேலே ஏற ஆணையிட்டார். உச்சிக்கு இன்னும் நூறு மீட்டர் தொலைவே இருந்த நேரத்தில் ஜப்பானியர்கள் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இது வாழ்வா சாவா தருணம். முன்னேறி போராடுவதா அல்லது தப்பி ஓடுவதா என்று முடிவெடுக்கவேண்டிய தருணம். சுற்றிலும் இந்தியர்கள் மடிந்து விழுவதைக்கண்ட அவர் மனதில் ஆத்திரம் பிறந்தது. வெறி மூண்டது. பைத்தியம் பிடித்தவர் போல துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு கத்திக்கொண்டே படைகளுடன் கலந்து முன்னேறினார். இதைக்கண்ட படையினருக்கு உற்சாகம் பிறந்தது. புதிய வேகத்துடனும் வன்மத்துடனும் வசவுவார்த்தைகளை உரக்க பிரயோகித்தபடி துப்பாக்கிமுனை கத்தியால் எதிரி ஜப்பானியர்களை குத்தி துவம்சமாக்கத் தொடங்கினர் பஞ்சாபிப் படையினர். வெறிகொண்ட நேருக்கு நேர் கைத்தாக்குதலும் நிகழ்ந்தது. இரு பக்கக்த்தினரும் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக போரிட்டனர். இரவு முழுவதும் தாக்குதல் நீண்டது. இந்தியர்கள் முன்னேற முன்னேற ஜப்பானியப் படையினர் அணி அணியாக வந்து கொண்டே இருந்தனர். ஆணினும் பஞ்சாபிப்படை தளராமல் போரிட்டது. ஒரு வழியாக காலை புலரும்போது கடைசி குண்டு சுடப்பட்டது. அதன் பின் அசாதாரண அமைதி நிலவியது.
பல ஆண்டுகளுக்குப்பின் இந்தப்போரைப் பற்றி "அரக்கனில் நடந்த மிக மோசமான ரத்தக்களறி யுத்தம்" என்று மவுண்ட்பேட்டன் குறிப்பிட்டார். சுமார் இரண்டாயிரம் ஜப்பானியரும் எண்ணூறு இந்தியரும் இந்த ஒற்றைப் போரில் மாண்டனர். ஐம்பது அதிகாரிகளும் சிப்பாய்களும் வீரத்திற்கான விருதுகள் பெற்றனர். பட்டாலியன் கமாண்டருக்கு போரில் இம்மி பிசகாத கடமை உணர்வுக்கும் வீரத்திற்குமான உயரிய சேவை விருது வழங்கப்பட்டது. ஆனால் இவையெல்லாம் பின்னொரு நாளில் நிகழ்ந்தன.
தற்போது படைக்களத்தில் நிகழும் அந்தத் தருணத்தில் இந்திய கமாண்டர் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் எப்பொழுதும் படை வீரர்கள் போல மிகுந்த ஒழுக்கத்தோடு வரிசையாக நின்றிருந்தனர். இந்திய கர்னலைக் கண்டவுடன் ஜப்பானிய கமாண்டர் தன் வீரர்களை ஒழுங்குபடுத்தி சல்யூட் செய்யச் சொல்லி ஆணையிட்டு பின் ஒரு அடி முன்வந்து தன்னுடைய சமுராய் வாளை அதன் பெல்ட்டிலிருந்து விடுவித்து இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு குனிந்து வணக்கம் செலுத்தி சரணடைவதின் அடையாளமாக நீட்டினார்.
இந்திய அதிகாரிக்கு ஜப்பானியரின் கண்ணில் நீரைக் கண்டதும் ஆச்சரியம் மேலோங்கியது. ஏன் இவ்வளவு உணர்ச்சி? போரில் ஒருவர் வெற்றி இன்னொருவர் தோற்றால்தான் முடியும். இது சகஜம்தானே? எனக் குழம்பினார். ஆனால், அவருக்கு எவ்வாறு தெரியும், ஜப்பானியருக்கு இது சாதாரண தோல்வி இல்லை என்பது? பரம்பரை பரம்பரையாக கொண்டாடி மிகுந்த அர்ப்பணிப்புடனும் மரியாதையுடனும் தாங்கி வரும் சமுராய் வாளை எதிரியிடம் சரணடைந்து கொடுப்பது என்பது தன் நாட்டுக்கும் தன் மூதாதையருக்கும் வம்சாவளியினருக்கும் தான் செய்யும் மிக அவமானம் மிக்க செயல் என்பது? சமுராயின் பெருமைகளை இந்த இந்தியருக்கு எப்படி புரிய வைப்பது? இந்தக் கண்ணீர் போரில் தோற்றதற்காக அல்ல, சமுராயின் பரம்பரைக்கு களங்கம் விளைவித்ததற்காக என்று? இப்பொழுதும் வாய்ப்பு இருந்தால் சரணடைவதை விட உயிரை மாய்த்துக்கொள்வதே மேல் அல்லவா?
இவ்வளவும் புரியாவிட்டாலும் இந்திய தளபதிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. எதிரியின் உள்ளக் கிளர்ச்சி அவரது கண்ணில் வெளிப்படுவதை கவனித்தவருக்கு அவர் மனதில் ஒரு உணர்ச்சி மேலிட்டது. இந்த தருணம் சாதாரண தனிப்பட்ட தருணம் மட்டுமல்ல, மிக மேன்மையானதும் புனிதமானதும் கூட என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. ஒரு போர் வீரனின் மனநிலையை புரிந்துகொண்ட இன்னொரு போர்வீரன் என்ற நிலையில் இருந்து மரியாதையுடன் குனிந்து அந்த வாளைக் கையில் வாங்கிக் கொண்டு சொன்னார். “வீரரே, சண்டை முடிந்து உங்கள் படையுடன் சரணடைவதை நான் எதிர்ப்படை தளபதி என்ற முறையில் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் தரும் இந்த புனிதமான வாளை நான் சரணடைவதன் அடையாளமாக ஏற்காமல், ஒரு போர் வீரன் இன்னொரு போர் வீரனுக்குத் தரும் பரிசாக ஏற்கிறேன்.”
இதை சற்றும் எதிர்பார்த்திருக்காத ஜப்பானிய கர்னலின் கண்ணில் மின்னல் பிரகாசம் தோன்றியது. அவர் கண்களிலிருந்து வழிந்த நீர் அவருடைய நிம்மதியையும் ஆனந்தத்தையும் பிரதிபலித்தது. அங்கிருந்த அனைவரும் இந்தச் செயலை சந்தோஷத்துடன் ஆமோதித்தனர். போரிடும் வரை தான் எதிரி. பின்னர் அனைவரும் வீரர்கள் மட்டுமே. வீரர்களுக்கான கடவுள்கள் இந்த பெருமையான உணர்வைத் தோற்றுவிப்பதன்மூலம் மற்ற கடவுள்களிடமிருந்து வேறுபட்டவர்கள் தான் போலும்.
இந்திய தளபதி தனது படைவீரரைப் பார்த்து தலையசைத்தார். இதற்காகவே காத்திருந்த அந்த அதிகாரி, வெற்றி பெற்றதற்கான சமிக்ஞைகளை மும்முறை ஒளிரும் வாணம் மூலம் வானில் செலுத்தினார். தொலைவில் காட்டில் காத்திருந்த பிரிகேடியர் ஹட்டன் மூன்று முறை சிகப்பு வாணங்கள் வானத்தில் ஒளிர்வதைக் கண்டு வெற்றி பெற்றதை அறிந்து புன்னகை பூத்தார். இந்திய தளபதிகளின் மேல் அவர் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பது உறுதிப்பட்டது. இந்தியர்கள் படைகளை நடத்தி வெற்றி பெறும் தகுதி உடையவர்கள் அல்ல என்று அவரிடம் கூறியவர்களுக்கு இந்த போர் தகுந்த பதில் கொடுத்தது மட்டும் அல்லாமல் இந்தியர்களால் பாதகமான சூழலிலும் சிறப்பாக போரிட்டு வெல்லும் திறன் உள்ளது என்பதை நிரூபிக்கவும் இந்தப் போர் உதவியது அவருக்கு பெருமையாக இருந்தது. மெல்ரோஸ் நோக்கி மீண்டும் புன்னகைத்தார்.
***
சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக ஜன்னல் வழியே வெளியே நோக்கினேன். திடீரென்று விசும்பல் ஒலி கேட்டது. என் ஜப்பானிய நண்பர் உணர்ச்சி மிகுதியால் நொறுங்கிக் கொண்டிருந்தார். அவரது கண்கள் மூடியிருந்தன. உடல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்குமாக தள்ளாடிக்கொண்டிருந்தார். தன்னை மறந்த ஒரு மயக்க நிலையில் "கர்மா, கர்மா" என்ற மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்த அவர். தனது ஜப்பானிய மொழியிலும் நிறைய ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பின் ஒரு நிலைக்கு வந்த அவர், கண்களில் நீர் நிரம்பியவாறே என் கைகளைப் பற்றிக்கொண்டு உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கும் குரலில் என்னிடம் பேசத்தொடங்கினார்.
“மெல்ரோஸ் மலை முகட்டில் உங்கள் தந்தையிடம் போரிட்டு சரணடைந்தது வேறு யாருமல்ல, என் தந்தைதான்! உங்கள் தந்தை மாத்திரம் என் தந்தையின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல் போயிருந்தால் அவமானம் தாங்காமல் என் தந்தை வீடு திரும்பியவுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பார். ஆனால் எங்கள் பரம்பரை கெளரவமான வாளை தங்கள் தந்தையார் மிக்க மரியாதையுடன் ஏற்ற கண்ணியமான செயலானது எங்களுக்கு எங்கள் கெளரவத்தையும் எங்கள் தந்தையின் உயிரையும் மீட்டுத் தந்தது என்று சொன்னால் மிகையாகாது. தங்கள் தந்தையின் இந்த அசாதாரணச் செயல் உங்களையும் என்னையும் சகோதரர்களாக்கியிருக்கிறது.“
எங்கள் ரயில் ஜெனிவா ரயில் நிலையத்திற்குள் நுழைந்து நின்றது. எங்கள் எதிர்பாராத இனிய பயணமும் ஒரு முடிவுக்கு வந்தது. வண்டியை விட்டு இறங்கி ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டோம். விடைபெறுமுன் நான், அந்த வாளை உங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர், வேண்டாம். அது ஏற்கெனவே ஒரு தகுதியுடைய சமுராயின் பராமரிப்பில்தானே இருக்கிறது? என்று சொல்லி மறுத்து விட்டார்.
அதற்குப்பின் நான் அவரைப் பார்க்கவில்லை.
இந்த ரயிலில் எங்கள் சந்திப்பு எல்லா சாத்தியக்கூறுகளையும் மீறும் வியப்பாக இருக்கிறது என்று என் மனைவி சொல்கிறாள். அவள் பொருளாதாரம், புள்ளி விவர இயல் படித்தவள். அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பாருங்களேன். உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. சரி. என் தந்தை இந்திய ராணுவப்படையில் இருந்தார். அவருடைய தந்தை ஜப்பான் ராணுவப் படையில் இருந்தார். அதுவும் சரி. இருவரும் ஒரே பர்மா போரில் பங்கேற்றனர். அதுவும் ஒப்புக்கொள்ளலாம். இருவரும் எதிருக்கெதிராக போரிட்டனர். சற்று வாய்ப்பு குறைவு, ஆனாலும் நம்பலாம். சண்டை முடிந்து தத்தம் ஊர் திரும்பினர். நடக்கலாம். ஆனால் வேறு வேறு இடங்களில் வளர்ந்த இவர்களுடைய மகன்கள் பல ஆண்டுகள் கழிந்து ஒரே நேரத்தில் ஒரே இடத்துக்குப் போகவேண்டி ஒரே ரயிலில் பயணிப்பதும், ஒரே பெட்டியில் அவர்களது இருக்கைகள் அமைவதும், தற்செயலாக கடந்த காலம் பற்றி பேச அமைவதும், அந்த சம்பாஷணை மூலம் இருவருடைய தந்தைகளும் ஒரே போரில் சண்டையிட்டுக்கொண்டதை அறிந்து கொள்வதும் எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? ஆனால் அதுதானே நடந்த உண்மை!
வாழ்வின் சில நிகழ்வுகள் நிச்சயமாக நடக்கவேண்டியவையாகவே அமைகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் நிகழ்ந்ததைப் பார்க்கையில் அப்படி இல்லை என்றும் தோன்றுகிறது. சில சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை பார்த்து தொடர்புபடுத்திக்கொள்வதைவிட கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்து தொடர்புபடுத்திக்கொண்டால்தான் புரியும். கடந்த காலத் தொடர்பு என்பது இருப்பதனால், வருங்காலத் தொடர்பு இருக்கும் என்றும் நம்பிக்கை தோன்றுகிறது. ஏதாவது ஒன்றில் நாம் நம்பிக்கை வைத்துத்தானே ஆகவேண்டும்? அந்த வாள் இன்னும் எங்கள் வீட்டில் அதற்குரிய பிரத்தியேக அந்தஸ்த்துடன் பெருமையாக அமர்ந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் அடர்ந்த காட்டுக்குள் மலைமுகட்டில் நடந்த கொடுமையான போரில்கூட எப்படி இரு போர்வீரர்களின் மனங்கள் பகைமையை மறந்து வீரத்தின் பெருமையையும் மனிதத்தையும் மதித்துப் போற்றும் விதமாக ஒருவரையொருவர் அணுக முடிந்தது என்பதையே நினைத்துப் பார்க்கிறது.
(very impressed by the story and translated by me in March 2021)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home