இறைவி
அடர்ந்த காடு. பெரிய பெரிய மரங்கள். சுற்றிலும் அடர்த்தியான புதர்கள். நடுப்பகலிலும் வெளிச்சம் உள்ளே நுழையாத அளவுக்கு படர்ந்த இலைகள், தழைகள், கொடிகள்.
ஒரு மரத்தின் கீழே ஒரு சிறிய சலனம். சூரியனின் கிரணங்கள் ஆங்காங்கே வரிகளாக மட்டும் விண்ணில் இருந்து இலைகளின் இடைவெளி ஊடே பிரகாசமாக இறங்குகின்றன. மெள்ள சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நகர்கிறது ஒரு கருப்பு உருவம். அந்த உருவத்தையே கண்காணிக்கின்றன மரத்தின் மேல் கிளையிலிருக்கும் சிறுத்தையின் தீப்பிழம்பாய் ஜொலிக்கும் இரண்டு கண்கள்.
சரியான நேரம் பார்த்து சட்டென்று தன் இரையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்கிறது சிறுத்தை. சற்றும் எதிர்பாராத குரங்கு சுதாரித்துக்கொண்டு தப்ப முயற்சிக்கும் முன் நொடிப்பொழுதில் குரங்கின் கழுத்தைக் கவ்வுகிறது சிறுத்தை. பலம் வாய்ந்த தாக்குதலை இதற்கு மேற்கொண்டு சமாளிக்க முடியாத குரங்கு மெல்ல உயிரை விடுகிறது. குரங்கு இறந்ததை உறுதி செய்துகொண்ட சிறுத்தை இறந்த அந்தக் குரங்கின் உடலை சிறிது சிறிதாக இழுத்துக்கொண்டு தன் இடத்திற்குக் கொண்டு செல்ல முற்படுகிறது.
அந்த நேரத்தில் ஒரு மெல்லிய சத்தம் சிறுத்தையின் கவனத்தை ஈர்க்கிறது. குரங்கை தொப்பென்று கீழே கிடத்திவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி நகர்கிறது சிறுத்தை. அங்கே சிறிய குரங்குக் குட்டி ஒன்று மெதுவாக மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து பயத்துடன் எட்டிப் பார்க்கிறது. சிறுத்தை குட்டியையும் இறந்துகிடக்கும் தாய்க்குரங்கையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறது. தாய்ப்பாசம் மேலோங்கி சிறுத்தையின் இதயத்தைப் பிழிகின்றது. இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சின் தாயைக் கொன்றதை அதன் இதயம் ஏற்கவில்லை. அந்தக் குட்டியை பாசத்துடன் கவ்விக்கொண்டு தன் குகைக்குச் செல்கின்றது. அதற்கு தன் பால் ஊட்டி தன் குட்டிபோல் அதனுடன் விளையாடி வளர்க்கின்றது.
ஒன்றை ஒன்று கொன்று உயிர்வாழும் காட்டு விலங்குகளிடையும் தாய்மை உணர்ச்சி மட்டும் இனம் பாராமல் இரையின் குட்டி தாயை இழந்ததைப் பொறுக்காமல் குற்ற உணர்ச்சி மேலிட இரையாக்கிய குரங்கைத் தின்னாமல் அதன் குட்டியை தன் குழந்தையாக பாவிக்கும் அந்தத் தாய்மை உணர்வை என்னென்று சொல்வது - இறைவிதான்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home