Tuesday, October 22, 2024

ஆசையே அலைபோலே


நேற்று ஒரு பழைய பாடலைக் கேட்க நேர்ந்தது. அற்புதமான பாடல். பிரபலமானதும் கூட. கவிஞர் கண்ணதாசன் எழுதி மஹாதேவன் இசையில் திருச்சி லோகநாதன் பாடிய “ஆசையே அலைபோலே..” பாடல். என்னவோ தெரியவில்லை, கேட்டதிலிருந்து அந்தப் பாடலே மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் உண்மையை கவிஞர் எவ்வளவு எளிய முறையில் புரிய வைத்திருக்கிறார் என்பதை எண்ணும்போது அவர்மீதான மதிப்பு இன்னும் இன்னும் கூடிக்கொண்டே போகிறது. இப்படி புரிய வைக்க அவர் எவ்வளவு புரிந்துகொண்டிருக்க வேண்டும், அனுபவித்திருக்க வேண்டும், உணர்ந்திருக்க வேண்டும் என்பதையும் எண்ணும்போது அந்த மதிப்பு மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது.


முதலில் சரணம் எடுத்துக்கொள்வோம்.


ஆசையே அலைபோலே...நாமெல்லாம் அதன் மேலே...ஓடம் போலே வாழ்ந்திடுவோமே… வாழ்நாளிலே….


சாதாரண வரிகளா இவை? மொத்த வாழ்க்கை தத்துவத்தையும் ஒரே வரியில் அல்லவா எடுத்துரைக்கிறார்? அத்தனை துன்பத்துக்கும், ஏன் இன்பத்துக்கும் கூட, காரணம் ஆசைதான் என்று கீதை சொல்கிறது. அந்த ஆசை எப்படிப்பட்டது?


நாம் வளரும்போது நம் கூடவே அதுவும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. குழந்தை பருவத்தில் விளையாட ஆசை. இளம் பருவத்தில் சுதந்திரமாய் சிறகடிக்க ஆசை. நடுவயதில் வாழ்க்கையில் நிலை நிறுத்திக்கொண்டு மேலும் உயர்வதில் ஆசை. சற்று முதிர்ந்தபின் குடும்பத்துக்கு தேவையானவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதில் ஆசை. வயதானபின் மக்களுக்கு மணம்செய்வித்து பேரன் பேத்திகள் பார்க்க ஆசை. அதற்குப்பின் துணையுடன் கோவில் கோபுரம் செல்ல ஆசை. இன்னும் பழுத்த பின் தனிமையில் இருக்க ஆசை. ஆக, இந்த ஆசை என்பது ஓயாத அலைகள் உள்ள ஒரு பெரிய கடல். கடல் அலைகள் போல சில ஆசைகள் சிறியவை, காலை மாத்திரம் வருடிவிட்டுச் செல்லும். சில பெரியவை,நம்மை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டுச் செல்லும். எங்காவது ஒன்றாக ஆளை விழுங்கும் சுனாமி ஆசைகளும் உண்டு.


இந்த ஆசைக்கடல் மேல் எப்படி பயணிப்பது? தரையில் நிற்காமல் ஓடத்தில் ஏறினால் நீரின் அளவு நம்மை பாதிக்காது. அதுபோல ஆசைக்கடலின் மேல் மனக்கட்டுப்பாடு என்ற ஓடத்தில் ஏறினால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம். ஆசை அலைகளின் மோதலில் சிதறும் நீர்த்திவலைகளின் குளிர்ச்சியை அனுபவிக்கலாம். அனுபவம் என்ற துடுப்பை உபயோகித்து சரியான திசையில் செல்லலாம். இம்மாதிரியாக நீரின் மேலாக இருந்துகொண்டு நீரின் இயற்கையை உணர்வது போல வாழ்நாட்களை ஓட்டிச் செல்லவேண்டும் என்கிறார் கவிஞர்.


அதுமாதிரியே பாடலின் முடிவிலும் அற்புதமாக ஒரு தத்துவத்தை எடுத்து வைக்ககிறார்.


வாழ்வில் துன்பம் வரவு….சுகம் செலவு…. இருப்பது கனவு…


சாதாரணமாக துன்பத்தை செலவோடும் இன்பத்தை வரவோடும் தான் ஒப்பிடுவோம். ஆனால் கவிஞர் ஏன் இப்படி சொல்கிறார் என்று சிந்தித்தால்தான் தெரிகிறது. வாழ்க்கையில் பெருவாரியாக நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் ஒரு துன்பமான உணர்வை உண்டாக்கிய நிகழ்வால்தான் இருந்திருக்கும். கற்றுக்கொண்ட அந்தப் பாடம் வரவு. அதுபோல மற்றவர்களுக்குப் பயனில்லாமல் நாம் மட்டும் அனுபவித்த சுகங்கள் எல்லாம் செலவு. துன்பங்களையும் இன்பங்களையும் அவரவர் கர்மங்களுக்கேற்ப அனுபவித்த பின்னர் வாழ்வில் மீதி இருப்பது நிறைவேறாத கனவுகள்தான் என்று கொள்ளலாம். அல்லது இப்படியாக நாம் வாழும் வாழ்க்கை அனைத்துமே கனவு - மாயை - என்ற ஆழ்ந்த பொருளையும் இவ்வரிகளில் சுருக்கமாக பொதித்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.


மிக எளிய, பொருள் பொதிந்த பாடல்.


(25,7,22)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home