கற்றல்
கண்விழித்தும் சோம்பலால் வாசல் திறக்கவில்லை.
அம்மா என்றழைத்தது தினமும் வரும் வெள்ளைப்பசு.
ஒரு நாளும் என்னைக் காணாது விலக மறுக்கும்
பசுவிடம் கற்றேன் பழகும் பாசத்தை.
காலையில் மாடியில் காக்கைக்கு உணவளித்தேன்.
தின்றுவிட்டு பறக்காமல் தலையில் தட்டியது.
கூடு கட்டுகிறேன் - அருகில் வராதே!
காக்கையிடம் கற்றேன், காவல் உணர்வை.
கடைக்குச் சென்றேன் பொருட்கள் வாங்க
எதுவும் தராமலே வாலைக் குழைத்தது நாய்.
பொறுமையுடன் காத்திருந்தால் நல்லது நடக்கும்.
நாயிடம் கற்றேன் தளராத நம்பிக்கையை.
வாட்டும் வெய்யிலில் வாடி வதங்கி
நிழலில் நின்றேன். ஆஹா! என்ன சுகம்!
நீரூற்றாத எனக்கும் கனிவுடன் நிழல்தரும்
தருவிடம் கற்றேன் தாயைப்போல் அன்பை.
தேவைப்படும்போது தாங்கிடும் சுற்றமும்
நல்லவை பகிர்ந்து நலம்விழையும் நட்பும்
நாட்கள் இனிதெனக் கடந்திடச் செய்யும்
வையத்திடம் கற்றேன் நல்லுறவின் நாட்டத்தை
வேலைக்குச் செல்லும் அவசரக் காலத்திலும்
ஓய்வுடன் களிக்கும் அடுத்த கட்டத்திலும்
விட்டுக் கொடுத்து பொறுமையுடன் பேணும்
குடும்பத்தினரிடம் கற்றேன் குறைவில்லா பாசத்தை
காணும் எதிலும் காரணம் கண்டு
கதையாய் கவிதையாய் களித்திடும் ஞானம் தன்னை
பள்ளிப்பருவத்திலிருந்து ஆர்வம் புகுத்தி பாடம்
கற்றிட வைத்தது ஆசிரியப் பெருந்தகையன்றோ!
அன்னவர்க்கு ஆயிரங்கோடி வணக்கங்கள்!
செப்.5, 2021
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home