Thursday, October 24, 2024

நடைப் பயிற்சி

 

ட்டுப் பாதையில் தவறியும் கால்வைக்காமல்

வட்டமடித்தால் வழங்கிடுவார் ஓட்டுநர் உரிமம்!


எட்டுப்பாதையில் தவறாமல் கால்பதித்து

எட்டி நடைபோட்டால் பெறுவோம் உடல்நலம்!


சாலை விதிகைளை மீறாமல் மதித்து கவனத்துடன்

நேர் வழியில் சென்றால் சுகமான பயணம்!


சாலை ஓரமாக காலணியணிந்து களிப்புடன்

நேராக நடைபயின்றால் சுகம் பெறுமே நம் இதயம்!


ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது

என்றே அறிவுறுத்தினார் அன்றைய ஆசுகவிஞர்


ஓடி முடிந்தபின்னும் ஓய்வுகாலத்தில் ஞாபகமாய்

ஒரு மணிநேரமாவது நட என்கிறார் ஆகிவந்த மருத்துவர்


கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக என்றார் வள்ளுவர்


நிற்கவேண்டாம் தேங்கியே ஓரிடத்தில்

நடந்தால்தான் ஆரோக்கியம் என விரட்டுகிறார் வைத்தியர்


நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக்கொள் என்றார் பெரியோர்

நடந்தால்தான் நன்மை உடலுக்கு பரித்துரைத்தார் அறிஞர்


நடத்தை நேராக இல்லாவிடின் பழிக்குமே நம் சுற்றம்

நடையே பயிலாவிடின் அதுவுமன்றோ குற்றம்!


சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

சீரான உடல்நலத்திற்கு நடையன்றோ முதற்பழக்கம்!


காலச் சக்கரமே ஓயாது இயங்கும் அவனியில்

கால்கள் நடக்காது முடங்கினால் அவதிதானே!


நடையால் நலம்பெற்று நம் வாழ்நாள் நீளுமெனில்

அசையாமல் அமர்ந்திருந்தால் அமரவாழ்வன்றோ அருகில் வரும்!


நடப்பது நடக்கட்டுமென அசட்டையாய் அமராமல்

நடையால் சீரடைந்து நலவாழ்வு நடத்திக்காட்டுவோம்!


இளங்காலைப்பொழுதில் இயற்கையோடு இனிதிணைந்து

இயல்பாய் மேற்கொள்ளும் எளிய நடைப்பயிற்சி


அனைத்து வயதினரும் அழகாய்ப் பயிலுதற்கேற்ற

அமுதத்திற்கொப்பான அருமருந்தன்றோ!


ஆக.28, 2020


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home