Monday, December 24, 2018

பிராந்தி


புறநகர் பகுதியையும் தாண்டியிருந்த ஊரில் வசித்துக்கொண்டிருந்தான் அவன்.  சிறுபிள்ளையும் இல்லாத இளைஞனும் இல்லாத பதிமூன்று வயது.  நகரத்தின் வாசனை பரவத்தொடங்கியிருந்த கிராமம் என்று சொல்லலாம்.  குளிர் காலமாதலால் வேலைக்குச் சென்றவர்கள் சீக்கிரமே வீட்டிற்குள் அடைந்துவிட்டிருந்த முன்னிரவு நேரம்.  தந்தை, தாய் மற்றும் அவன் மூன்றே பேர்.  அவனுடைய தாய் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தாள். 

எதிர்வரிசையில் இரண்டு வீடுகள் தள்ளியிருந்த விளக்குக் கம்பத்தின்கீழ் சுருண்டு விழுந்திருந்தார் அந்த மனிதர்.  அதைப் பார்த்ததும் அவன் மனதில் பயம் பிடித்துக்கொண்டது.  அந்த விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் அவர் யாரென்று அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  இருந்தாலும் அவருடைய தோற்றம் மற்றும் வயதைக் கொண்டால் கிட்டத்தட்ட அவனுடைய தந்தையின் உருவத்தையொத்தியிருந்தது அவனை கவலைப்படவைத்தது.

ஒரே குழந்தையாக பெரும்பாலும் தாயின் கவனிப்பில்,  நண்பர்களும் அதிகம் இல்லாமல் குறைந்த சுற்றத்துடனே தனியாக வளர்ந்ததாலோ என்னவோ, ஏற்கெனவே பயந்த சுபாவம் கொண்டிருந்தான்.  அரையிருட்டில் தந்தையைப்போலவே ஒரு உருவம் தெருவிளக்கின் அடியில் விழுந்திருந்தது அவனுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.  அன்று பார்த்து வீட்டிலும் யாரும் இல்லை.  யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு அருகில் சென்று பார்க்கலாமா என்று மனதில் எண்ணம் தோன்றியது.  ஆனால் யாரைக் கூப்பிடுவது? அப்படியே யாராவது வந்தாலும் அருகில் சென்றபின் ஒருவேளை அது தன் தந்தையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது? அந்த அவமானத்தை எப்படி எதிர்கொள்வது?  சலனமற்று விழுந்திருந்த அந்த மனிதர் ஒருவேளை இறந்தே போயிருந்தால் நிலைமை இன்னும் விபரீதமாக அல்லவா போய்விடும்?  மிகுந்த குழப்பத்துடன் அருகில் சென்று பார்க்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வரமுடியாமல் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று அந்த மனிதரையே தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

சென்ற சில வருடங்களாகவே தந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.  என்னதான் தனியார் கம்பெனியில் ஷிப்ட் வேலை பார்த்தாலும், ஒரு நேரம் காலம் என்றில்லாமல் சில மாதங்களாகவே கண்ட நேரத்திற்கும் வருவதும் போவதுமாக இருந்தார் அவன் தந்தை.  வருமானம் கூட முழுவதுமாக வீட்டிற்குத் தராத நிலையிலும், வரும்போதும் போகும்போதும் ஆட்டோவில் செல்வதை புதிய வழக்கமாகக் கொண்டிருந்தார்.  ஆட்டோவில் வந்து இறங்குவார்.  காபி குடித்துவிட்டு குளித்துவிட்டு சூடாக சமையல் செய்யச்சொல்லி சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கிவிட்டு உடனே வெளியில் செல்வது புதிய வழக்கமாக இருந்தது.  வீட்டில் இருப்பு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தான்.  அதுவும் தினமும் என்றில்லாமல் சில நாட்கள் வராமலும் இருக்கத் தொடங்கியிருந்தார்.  ஆட்டோக்காரன் அவரை இறக்கிவிட்டு உடனே திரும்பாமல் யார் கண்ணிலும் படாமல் சற்றுத் தொலைவில் நின்றிருப்பான்.  அவர் புறப்படும் நேரம் சட்டென்று வந்து ஏற்றிக்கொண்டு பறந்துவிடுவான். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திடீரென்று வீட்டிற்கு சற்று தாராளமாக பணம் கொடுக்கத் தொடங்கியிருந்தார் .  தாயார் ஏன் எப்படி என்று கேள்வி கேட்டால் பதில் இருக்காது.  அல்லது கோபமாக ஏதாவது கத்துவார்.  அதனால் அவருடன் பேசுவதற்கே பயமாக இருந்தது.  இந்த மர்மமான நடத்தைக்கு அவர் விளக்கமே கொடுக்காதது அவனது பயத்தை மேலும் அதிகப்படுத்தியது.  கடந்த மூன்று நாட்களாக அவர் வீட்டிற்கும் வரவில்லை.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது உருவத்தையொத்த ஒருவர் சுயநினைவின்றி தெருவிளக்கின்கீழ் விழுந்துகிடந்தது அவன் வயிற்றைப் புரட்டியது.  தந்தையிடம் அவ்வப்போது ஒருவித வாடை வருவது அவன் உணர்ந்திருக்கிறான்.  ஏதோ தவறான வழியில் செல்கிறாரோ என்ற சந்தேகமும் அவனுக்கு உண்டு.  ஆனால் அவனுக்கோ அவனது தாயாருக்கோ தந்தையிடம் தைரியமாக கேட்கவோ சண்டையிடவோ திராணியில்லாமல் இருந்தார்கள்.

இன்று விழுந்துகிடக்கும் மனிதர் தன் தந்தையாகவே இருக்கநேரும் பட்சத்தில் எப்படியாவது மற்றவர் பார்க்கும்முன் தண்ணீர் தெளித்து தெளிவித்து வீட்டிற்குள் அழைந்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று அவன் மனம் மிகவும் விரும்பினாலும் அவர் அருகில் செல்லக்கூட தைரியம் வராமல் தவித்தான்.   இப்படி அவ்வப்போது பயந்து சாவதைவிட தானோ அவரோ ஒரேயடியாகச் செத்துவிட்டல்கூட பரவாயில்லை என்று தோன்றியது. 

கடிகாரத்தைப் பார்த்தான்.  மணி ஒன்பதரையைத் தாண்டியிருந்தது.  ஊர் முற்றிலுமாக அடங்கியிருந்தது.  நல்லவேளையாக அவன் அவரைப் பார்த்தபிறகு வேறு யாரும் அவ்வழியாகச் சென்றதாகத் தெரியவில்லை.  ஒருவாறு மனதை திடமாக்கிக்கொண்டு டார்ச் விளக்கைத் தேடி ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக்கொண்டு அவரை எப்படியாவது எழுப்பிவிடலாம் என்ற திட்டத்துடன் வாசலில் இறங்கினான்.  சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தெருவிளக்கை நோக்கித் திரும்பினால், அங்கு அவரைக் காணவில்லை.  அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  தைரியம் வரவழைத்துக்கொண்டு சற்று அந்தப்பக்கமும் இந்தப்பக்குமுமாக சென்று பார்த்தான்.  யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை.

ஒரு வேளை தான் காண்பது பிரமையா என்ற கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.  ஒரு வேளை தான் முன்பு கண்டது பிரமையா என்றும் குழம்பினான்.  நான்கைந்து முறை தெருவில் சென்று பார்த்த நினைவு வந்ததால் தான் முன்னர் கண்டது பிரமையல்ல என்னும் தெளிவுக்கு வந்தான்.  விழுந்து கிடந்தவர் யாரோ, தன்னால் நினைவு திரும்பி எழுந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.  அவர் யாரோ எவரோ, எப்படியோ அது தன் தந்தை இல்லை என்ற நினைப்பு அவனுக்கு நிம்மதியைத் தந்தது.

இன்றைய இரவு தந்த தன்நம்பிக்கையில் நாளையோ, மறுநாளோ அல்லது என்றைக்கு வருவாரோ அன்றைக்கு நிச்சயமாக தந்தையிடம் தங்கள் உள்ளக்கிடக்கையை உணர்த்தியேயாகவேண்டும் என்று உறுதி கொண்டு கதவைத் தாழிட்டுக் கொண்டு நிம்மதியாக உறங்கச் சென்றான்.


Thursday, December 20, 2018

மலை ரயிலில் ஒரு கதை


எனக்கு ரயில் பிரயாணம் சிறு வயது முதலே மிகவும் பிடிக்கும்.  யாருக்குத்தான் பிடிக்காது என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.  என்றாலும், எனக்குப் பிடித்த அளவு மற்றவர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே.  நான்கு வயதில் கண்ணில் கரி விழுந்தாலும் பரவாயில்லை, ஜன்னலை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் உட்கார்ந்துகொண்டு கண்கள் கரித்துண்டுகள் விழுந்து கோவைப்பழமாய் சிவந்து வீங்கி வலித்தபடியே பிரயாணித்த நாட்கள் போய் இன்று சப்தமே கேட்காமல் ஏ.சி. பெட்டியில் அலுங்காமல் சென்று வந்தாலும் ரயில் பிரயாணம் இன்னும் அலுக்கவில்லை.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் இல்லாவிடிலும் குறைந்த பட்சம் என் வையகம் பெறவேண்டாமா? என்னால் இயன்ற அளவு என் மனைவி மற்றும் குழந்தைகளையும் அவ்வப்போது நீண்ட தூர பிரயாணங்களுக்கு ரயிலில் அழைத்துச்சென்றும் வந்திருக்கிறேன்.

இப்படித்தான் என் பேத்திக்கும் ரயில் – அதுவும் அந்தக்கால கூ… ஜிக்ஜிக் ரயில் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊட்டிக்கு ஒரு விசிட் ஏற்பாடு செய்திருந்தோம்.  அந்த மலை ரயிலில் ஏறும் கூட்டத்தில் முண்டியடித்து நசுங்கிய அனுபவம் ஏற்கெனவே இருந்ததால் முன்கூட்டியே மலை ரயில் ரிசர்வேஷன் கிடைத்தபின்பே நீலகிரி எக்ஸ்பிரசில் டிக்கெட் பதிவு செய்தோம்.

அந்த நாளும் வந்தது.  மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்ப்புடனும் நீலகிரி எக்ஸ்ப்ரஸில் ஏறி படுத்துக் கொண்டோம்.  அதிகாலை கோயமுத்தூரில்தான் எழுந்தோம். கோயமுத்தூரைத் தாண்டி மேட்டுப்பாளையம் போவதற்கு ரயிலில் ஊட்டி செல்வோர் தவிர வேறு யாரும் இல்லை.  மேட்டுப்பாளையத்தில் இறங்கி சுடச்சுட இட்டிலியும் டீயும் முடித்து மலை ரயில் வந்ததும் சிறிது நேரம் அதன் என்ஜின் மற்றும் பெட்டிகளை அழகு பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு எங்கள் பெட்டியில் ஏறி உட்கார்நது கொண்டோம்.  எங்களைத்தவிர இன்னும் இரண்டு குடும்பத்தினரும் ஒரு வயதான மனிதரும் அவரவர் இடத்தில் அமர்நது கொண்டோம். 

அடுத்த ஸ்டேஷன் வரை வேகமாகச் சென்ற ரயில், மலைப்பாதை ஏற்றம் காணத் தொடங்கியதும் முக்கி தள்ளியபடியே ஏறத்தொடங்கியது.  அந்த ஆட்டம் என் பேத்திக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.  ரயிலின் ஆட்டத்திற்கேற்ப ஆடியபடியே தன் கையில் வைத்திருந்த இரு சிறு பொம்மைகளையும் ஆட்டுவித்துக்கொண்டிருந்தாள் அவள்.  ஒரு முறை ரயில் பலமாக குலுங்கியதில் பொம்மைகள் அடுத்த பக்கம் இருந்த பெஞ்ச்சில் விழுந்து விட்டது.  அங்கு அமர்ந்திருந்தவர்கள் குனிந்து தேடி அந்த பொம்மைகளை எடுத்துக் கொடுத்தவுடன் மீண்டும் விளையாடத் தொடங்கினாள் என் பேத்தி.
நான் (வழக்கம்போல்) ஜன்னல் ஓரம் அமர்ந்தகொண்டு அங்கு காணப்பட்ட அபரிமிதமான இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.  பாதை நெடுகிலும் பாக்கு மரங்கள்.  வீட்டு மதில்களில் மயில்கள் –  நம் ஊரில் குருவிகளைப் பார்ப்பதே அரிதாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இங்கே மயில்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன!  கொடுத்து வைத்தவர்கள் இவர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று ரயிலின் வேகம் சட்டெனக் குறைந்தது.  யானைகளின் பிளிறல் கேட்டது.  ஆம்.  ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிறிய யானைக் கூட்டம் ஒன்று ரயில் வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று தன் கூட்டத்திற்கு எச்சரிக்கை கொடுத்தபடியே பின்வாங்கியதைக் கண்டோம்.  நல்ல வேளை, யாருக்கும் எதுவும் நேரவில்லை.

இந்தக் களேபரத்தில் என் பேத்தி மீண்டும் தன் பொம்மைகளை அடுத்த பக்கம் தவறவிட்டிருந்தாள்.  அந்தப் பக்கம் இருந்தவர்கள் சிறிது நேரம் தேடிவிட்டு பொம்மைகள் அகப்படவில்லை என்று சொல்லிவிட்டனர்.  நாங்கள் சென்று தேடியும் எங்களுக்கும் கிடைக்கவில்லை.  சற்றே வருத்தத்துடன் விளையாடுவதை விட்டுவிட்டு எங்களுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் என் பேத்தி.
கல்லார் ஸ்டேஷனில்  ரயில் நின்றது.  அனைவரும் இறங்கி தத்தம் விருப்பப்படி டீயோ காபியோ வடையோ வாங்கி ருசித்தபடியே மீண்டும் வண்டியில் ஏறிக்கொள்ளும் நேரம் ஒரு சிறிய சலசலப்பு.  ஸ்டேஷன்  கட்டிடத்தின் அருகில் தோட்டத்தில் காய்த்திருந்த பம்ளிமாசுப் பழங்களை ரயிலில் பயணித்த இளைஞர்கள் சிலர் ரயில் கிளம்பும் நேரம் பார்த்து விரைவாக மரம் ஏறிப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து ஓடும் ரயிலில் ஏறிக்கொண்டு வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்தப் பழங்களை விரல் நுனியில் வைத்து சுழற்றிக்கொண்டே தம் பிரதாபங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இதுபோல் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏதாவது ஒரு நிகழ்வு இருந்ததால் மெதுவாகச் சென்றாலும் நேரம் போவதே தெரியவில்லை.  வழிநெடுகிலும் அற்புதமான இயற்கைக் காட்சிகள்.  நீலகிரி என்ற  சொல்லுக்கு ஏற்ப பல்வேறு நீலச் சாயங்களில் அடுக்கடுக்காய் மலைத் தொடர்கள்.  மலையைக் குடைந்து குகை வழியாக அடர்ந்த வெண்புகையைக் கக்கியபடியே வளைந்து செல்லும் ரயில்.  அத்தனை ஜன்னல்களிலும் நீட்டிய கைகளில் கேமராக்கள்.  மிகவும் மகிழ்ச்சியுடன் ஊட்டி நோக்கி மெதுவாக விரைந்துகொண்டிருந்தோம்.  குன்னூரில் என்ஜின் மாற்றும் வைபவத்தையும் குளிர் கலந்த வெய்யிலினூடே உற்சாகத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

எங்கள் அருகில் அமர்ந்திருந்து முதியவர் அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்தார்.  அவருடன் என் மனைவி பேச்சு கொடுத்தாள். 

“தனியா வரீங்களே, உங்க ஊர் ஊட்டியா?”

“இல்லம்மா…நானும் உங்களைப்போல ரயில்ல போகனும்னுதான் வந்திருக்கேன்.”

“கையில பெட்டி படுக்கை ஏதும் இல்லையே?  எங்கே தங்கப்போறீங்க?”

“எங்கேயும் தங்கலேம்மா… இதே ரயில்ல மேட்டுப்பாளையம் திரும்பிடுவேன்.”

“என்ன, இதே ரயில்லயா?  ஏன் அவ்வளவு ஆசையா இந்த ரயில்ல போக?”

“ஆமாம்மா, ஆனா எனக்கில்ல எம் பொண்டாட்டிக்கு”

“அப்ப அவங்க எங்கே? வேற பெட்டியில இருக்காங்களா?”

“இல்லம்மா..அவங்க இப்ப ரயில்ல வர்ற நிலைமையிலும் இல்ல..”

“என்ன சொல்றீங்க பெரியவரே, எனக்கு ஒண்ணும் புரியல்லையே?”

“அதை ஏன் கேக்கறீங்க போங்க.  சின்ன வயசிலிருந்தே அவளுக்கு என்னோட இந்த ரயில்ல போகனும்னு ஆசை.  ஆனா எல்லார் ஆசையும் நடந்திருதா?  நான் பொழைப்புதான் முக்கியம்னு இதோ போகலாம் அதோ போகலாம்னு சொல்லி சொல்லியே போகாம இருந்திட்டேன்.  ஏமாத்தனும்னு இல்ல…இங்கதான இருக்கு எப்பவேணா போகலாம்னுஒரு தெனாவெட்டு.   என் வேலை வெவகாரமெல்லம் ஒரு வழியா முடியற நேரம் பாத்து அவளுக்கு ஒடம்புக்கு வந்து நிறைய அவஸ்தைப் பட்டுட்டா.  இப்ப வெறும் வீட்டோட நடமாடறதே பெரிய வேலையா இருக்கு.

அதனாலதான் அவ எங்கிட்ட அட நாந்தான் போக முடியலே, நீயாச்சும் சாவறத்துக்குள்ளே ஒரு தடவ போய் வந்துட்டு எப்படித்தான் இருக்குன்னு எங்கிட்ட சொல்லுன்னு கேட்டா.  அப்பதான் என் மனசு கஷ்டமாயிடுச்சு.  இந்தத் தடவையாவது அவ சொல்றதைக் கேக்கணும்னுதான் ஒரே ஒரு தடவ காலைல போய் சாயந்தரம் திரும்பறமாதிரி இப்ப வந்திட்டிருக்கேன்.

நீங்கள்ல்லாம் வேலையும் பாத்துண்டு இடையிலே குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்கறமாதிரி எனக்கு அந்தக் காலத்தில செய்யத் தோணல..இப்ப நேரம் இருக்கு, ஆனா அவளால முடியல.. ஏதோ அவளுக்காக இதாவது செய்யறேனேங்கிற திருப்திதான் எனக்கு” என்று சொல்லி முடித்தார்.

அதற்குப் பிறகு எங்களுக்கும் சிறிது நேரம் ஆழமான அமைதி.  சற்று நேரத்தில் (குன்னூருக்குப்பிறகு டீசல் என்ஜனின் விரைவான வேகத்தால்) ஊட்டி வந்துவிடவே அனைவரும் வண்டியைவிட்டு இறங்கினோம்.  அந்தப் பெரியவருக்கு கனமான மனத்துடன் விடைகொடுத்தாள் என் மனைவி.  

பிளாட்பாரத்தில் அனைத்து சாமான்களையும் சரிபார்த்துக்கொள்ளும் நேரத்தில் பின் பெஞ்ச்சில் அமந்திருந்தவர் எங்களிடம் வந்து “உங்கள் பேத்தியின் பொம்மைகள் சீட்டின் பின் மறைந்திருந்தன…இந்தாருங்கள்” என்று அந்த பொம்மைகளை எங்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

பெரியவர் அவர்களை ஒரு விஷமமான புன்னகையுடன் பார்த்தவாறு எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு மீண்டும் டீ சாப்பிடச் சென்றார்.