சமீபத்தில் தியானம் பற்றிய ஒரு பிரவசனம் (சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்து சொல்லப்பட்ட விளக்க உரை) கேட்கப் பெற்றேன். அவர் யார், எந்த சுலோகம் என்பதெல்லாம் என் சிற்றறிவில் நிற்கவில்லை. ஆனால் அவர் சொன்ன விளக்கத்தின் சாராம்சம் ஓரளவு என் மூளையில் பதிந்தது. அது ஏன் என்பதும் மேலும் படித்தால் விளங்கும்.
அவர் தியானத்தின் சிறப்பைப் பற்றி உரையாற்றினார். குறிப்பாக காயத்ரி மந்திரத்தின் மேன்மையை மிகவும் அழகாக சிருங்கேரி மஹாஸ்வாமிகள் ஒரு பக்கருக்கு உபதேசித்தது போன்ற உதாரணங்களுடன் விளக்கினார். ஸவிதா எனப்படும் ஆன்ம ஒளி எவ்வாறு அனைத்து ஆன்மாக்களின் உள்ளிருந்து இயங்குகிறது என்பதையும், தியானம் என்பதே நமது எண்ணங்களை உள்ளிருக்கும் ஆன்மாவை நோக்கி பயணிப்பது என்பதையும் வடமொழி சுலோகங்கள் உதவியுடன் விஸ்தாரமாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைத்தார்.தியானம் என்பதை எவ்வாறு அணுக வேண்டும்? நமது எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி இறைவனை நினைத்து அதைவிட சிறந்தது வேறு எதுவுமே இல்லை என்று போற்றப்படும் காயத்ரி மந்திரத்தை பெரியவர்கள் சொன்னபடி தினமும் மூன்று வேளையும் தியானிக்க வேண்டும். ஏனெனில் நமது எண்ணங்களை பலவித ஆசைகள் வேண்டாத நினைவுகள் என அசுத்தங்கள் எப்பொழுதும் சேர்ந்துகொண்டு கலக்கிக்கொண்டு தான் இருக்கும். எந்த தீர்க்க சிந்தனையையும் உருப்படியாக செய்யவிடாமல் ஒரு திரை போல மறைத்தபடி மே இருக்கும்.நீர்நிலையில் பாசி படர்ந்த மேற்பரப்பை மெதுவாக விலக்கி தெளிந்த நீரை அள்ளுவது போல இந்த எண்ணத்தில் படியும் மாசை அகற்ற தியானம் உதவி செய்யும். எவ்வளவு நேரம் ஆழ்ந்து கவனம் சிதறாமல் தியானிக்கிறோமோ அந்த அளவுக்கு நமது எண்ணங்களின் தேவையற்ற காட்சிகள் நீங்கி சிந்தனைகளும் தெளிவு பெறும். ஆன்ம ஞானம் வலுப்பெறும். மனம் பக்குவம் அடையும்.அதிலும் காயத்ரி மந்திரம் தியானிப்பதற்கு முன் மூன்று முறை அர்க்யம் கொடுக்க வேண்டும். அந்த அர்க்யத்தை மிகவும் சிரத்தையுடன் கொடுத்துவிட்டு உடனே மந்திர உச்சாடனையில் ஆழ்ந்துவிட வேண்டும். எவ்வளவு நேரம் செய்கிறோமோ அந்த அளவு ஆன்ம பலம் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. ஆக, காலையில் எழும்போது முந்தைய இரவின்போது வந்த எண்ணங்களின் கறைகள் நீங்க காலையில் ஒரு முறை சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். அதன் பின் நாம் செய்யும் செயல்களின் தாக்கமாக எண்ணங்களில் மீண்டும் கறை படியும். அதை நீக்க மதியம் ஒரு முறையும், அதே போன்று மதியும் முதல் மாலை வேளை வரை சேரும் எண்ணக்கறைகள் நீங்க மாலை மீண்டும் ஒரு முறையும் ஆகமொத்தம் தினமும் மூன்று முறை சிரத்தையுடன் தீவிரமாக தவறாமல் சந்தியா வந்தனம் செய்பவர்களின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு அவர் விளக்கிய போது எனக்கு என் சொந்த அனுபவமே நினைவுக்கு வந்தது.எனது சொந்த வேலைகளின் கட்டாயத்தினால் என்னால் சுமார் பத்து மணிக்குமேல்தான் குளித்து பூஜை செய்ய முடிகிறது என்றாலும் அதிகாலையில் அரை மணிநேரம் நடைப்பயிற்சிக்குப் பின் என் வீட்டு மொட்டை மாடியில் சிமெண்ட் தூணின் மேல் அமர்ந்து சந்தியா வந்தன மந்திரமும் மேலும் ஒருசில சுலோகங்களையும் சிறிய அளவில் யோக முத்திரைகளோடு தியானிப்பது என் வழக்கம். அவ்வாறு செய்யும்போது மூன்று முறை மற்றும் நேர வேறுபாட்டிற்காக மேலும் ஒரு முறை என நான்கு முறை மானசீகமாக நான் மிகவும் அனுபவித்த ரிஷிகேஷ் கங்கை, சபரிமலை பம்பை, கும்பகோணம் காவிரி மற்றும் என் வீட்டில் அறுபது-எழுபதுகளில் எங்கள் கிணற்றில் தாம்புக்கயிறு கொண்டு இழுத்து இறைத்த தெள்ளத்தெளிவான தேனினும் இனிய கிணற்றுத் தண்ணீரால் தினமும் அர்க்யம் இன்றளவும் தருகிறேன்.இவ்வாறு அமரும் வேளையில் இடைப்பட்ட வேளைகளில் இரண்டு அல்லது மூன்று முறை கிழக்கில் நன்கு எழுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனை ஒருசில நொடிகள் தொடர்ந்தாற்போல் கண் இமைக்காமல் பார்ப்பது என் வழக்கம். காண முடியாத அளவுக்கு பிரகாசம் பெறும்முன் காண்பது ஆபத்தில்லை, அது நல்ல பழக்கமே என்று ஒரு மருத்துவர் கூறியிருப்பதை நினைவில் கொண்டு பயமில்லாமல் அதை செய்கிறேன்.
அவ்வாறு சூரியனை நேரில் பார்க்கும்போது முதலில் அதன் பிரகாசத்தில் சுற்றிலும் இருக்கும் அனைத்து வெளியிலும் ஒருவித ஒளிச்சிதறல் பரவி சூரியனே ஒரு ஒழுங்கற்ற பந்துபோலவே காட்சியளிக்கும். ஆனாலும் கண்ணை மூடாமல் பார்வையை அகற்றாமல் சில நொடிகள் நிலைநிறுத்திப் பார்க்கும்போது சுற்றிலும் படர்ந்திருந்த சிதறல் ஒளிபடிப்படியாக மறைந்து ஒளிப்பிழம்பாக நடுவில் பிரகாசிக்கும் சூரியனும் அதைச் சுற்றி நிர்மலமான ஆழ்ந்த நீலநிற வான்வெளியும்தான் கண்ணுக்குத் தெரியும். தகதகக்கும் அந்த சூரியனின் வட்டத் தகடைச் சுற்றி அதன் வெளி விட்டத்தில் மிகமெல்லிய இளஞ்சிவப்பு ஜ்வாலை மின்னும் காட்சி அற்புதமாக இருக்கும்.
ஒரு முறை பார்த்த பின் கண்ணை அகற்றி சில நிமிடங்களுக்குப்பின் மீண்டும் சூரியனைப் பார்க்கும்போதும் இதே காட்சி இதே தொடர்ச்சியில் தென்படும்.
இந்த உதாரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் அவர் சொன்ன விளக்கத்தின் உண்மை எனக்கு புரிவதுபோல இருந்தது. ஐந்து நிமிட சொற்பொழிவில் இவ்வளவு தாக்கம் ஏற்படுமானால் நமது வேதங்களும் சாஸ்திரங்களும் எவ்வளவு பழமையானவை, அவற்றில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் பொதிந்திருக்கின்றனவோ என்ற ஆச்சரியம் என் மனதில் ஓங்கி நிற்கிறது.