Thursday, October 24, 2024

பாவம்

 

மாலை வங்கிப்பணியில் இருந்து திரும்பி வந்த வந்தனா களைப்புடன் கட்டிலில் விழுந்தாள். இந்த கொரோனா என்னிக்குத்தான் ஒழியுமோ தெரியலை….மத்தவங்க எல்லாம் லீவுல இருக்காங்க இல்ல வொர்க் ஃப்ரம் ஹோம்-ன்னு இருக்காங்க. நாங்க மாத்திரம் 50 பர்சண்ட், 30 பர்சண்ட் ரூல் இருந்தாலும் அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாம வாரத்தில நாலு நாள் பேங்க்குக்கும் ரெண்டு நாள் வீட்ல டெலி-மார்க்கெட்டிங்கும் பண்ணனுமாம். அவங்கவங்க இன்சூரன்ஸ், கவர்மென்ட் ஆபீஸ் வேலைல ஜாலியா இருக்காங்க..நாங்க மட்டும் இப்படி அவஸ்தைப்படறோம்...என்று சலித்துக்கொண்டே கண்ணை மூடி களைப்பில் தூங்கி விட்டாள்.


மகேஷுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அவன் தனியார் கம்பெனியில் மார்கெடிங் பிரிவில் இருக்கிறான். காலை ஒரு மணி நேரம், மாலை அரை மணிநேரம் போனில் பேசுவதோடு சரி. மற்றபடி அவனுக்கு ஒரு தொந்தரவும் கிடையாது. வீட்டில் பொழுது போக அவ்வப்போது டிவி அல்லது இண்டர்நெட்டில் ஏதாவது செய்தி அல்லது திரைப்படம் பார்த்து நேரத்தை சமாளித்துக் கொண்டிருந்தான். அவர்களின் ஒரே மகன் இப்போதுதான் இரண்டாம் வகுப்பு. ஆன்லைன் வகுப்பு நேரம் போக மீதி நேரம் கம்ப்யூட்டர் கேம்களிலும் பக்கத்தில் இருக்கும் சிறுவர்-சிறுமிகளோடு அரட்டையிலும் கழிப்பதற்கே அவனுக்குப் போதவில்லை. எனவே பெற்றோர்களுக்கு அவனால் தொந்தரவு இல்லாமல் இருந்தது.


மகன் வீட்டில் இல்லாததால் வந்தனா தூங்கட்டும் என்று லேப்டாப்பை எடுத்துக்கொண்டு காதில் ஹாலுக்கு வந்து ஹெட்ஃபோனையும் காதில் மாட்டிக்கொண்டு அவனுக்கு பிடிக்கும் என்று தோன்றிய ஒரு படத்தில் கவனம் செலுத்தினான் மகேஷ்.


கணவனை சமீபத்தில் இழந்து பன்னிரண்டு வயது மகனுடன் வாழும் ஒரு பெண், சூழ்நிலை மாற்றம் வேண்டி வேலையில் இடமாற்றம் கேட்டுக்கொண்டு நகரில் இருந்து சிறிய ஊருக்கு வருகிறாள். இந்த மாற்றம் அவளுக்கு நிம்மதியைத் தந்தாலும் அந்தச் சிறுவனுக்கு பிடிக்கவில்லை. நண்பர்கள் தாமதமாகவே அமையப் பெற்றார்கள். அப்படியே அமைந்தாலும் ஒரு நாள் விளையாடுவதற்காக என்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த கோட்டைக்கு சென்று அங்கு அவனை தனியாக விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிடுகிறார்கள். அச்சத்தில் உறைந்த சிறுவன் எப்படியோ வீடு வந்து சேர்கிறான். அன்றிலிருந்து அந்த நண்பர்களை வெறுக்கிறான். அவர்கள் அவனை தேடியும் கிடைக்காததல்தான் அவனை விட்டுவிட்டு திரும்பியதாக என்னதான் சமாதானம் சொன்னாலும் அவன் நம்ப மறுத்து அவர்களை விட்டு விலகியே இருக்கிறான்.


மறுநாள் காலை தாயுடன் வாக்குவாதத்தில் வேறு ஈடுபடுகிறான். தாயும் கோபத்தில், நீ வேண்டுமானால் உன் நகரில் இருக்கும் உன் மாமா வீட்டுக்குப் போ என்று அவனை திட்டிவிடுகிறாள். தாயிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறான் சிறுவன். இலக்கில்லாமல் நடந்து கடற்கரையை அடைகிறான். அங்கு மீன் பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு மீனவருடன் பேச்சுக் கொடுத்து நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவரோடு படகில் ஏறி கடலுக்குச் செல்கிறான். நாள் முழுவதும் அவரோடு படகிலும் ஒரு தீவிலும் நேரத்தைக் கடத்திவிட்டு மாலை வீடு திரும்பும்போது தாய் வாசலிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறான். குற்ற உணர்வு மேலிட ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொள்கிறான்.


இந்தக் காட்சியை அவன் ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும்போது அவன் தோளில் கை விழுகிறது. திரும்பிப் பார்த்தால் வந்தனா அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவளும் இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


எழுந்திட்டியா நீ, நான் பாக்கவே இல்லையே, இதோ இரு...ஒரு நிமிடம்… டீ போடறேன்… நீ எழுந்திரிச்சபின் குடிக்கலாம்முன்னுதான் காத்திட்டிருந்தேன்...என்றான் மகேஷ்.


இல்லை..இல்லை...படம் நல்லா இருக்கு...நான் அஞ்சு நிமிஷம் தான் பாத்தேன்...அதிலயே தெரியுது...நீங்க கன்டினியூ பண்ணுங்க….நான் போய் டீ போட்டுக் கொண்டு வர்றேன்...என்று சொல்லியபடி சமையலறைக்குச் சென்றாள். இரண்டு நிமிடத்தில் டீயுடன் வந்து மகேஷுடன் சேர்ந்து அவளும் படத்தில் மூழ்கினாள்.


தாயிடம் மன்னிப்புக் கோரிய சிறுவன், தந்தை இல்லாதது தனக்கும்தான் கஷ்டமாக இருப்பதையும், இந்த கிராமம் அவனுக்கு ஒத்து வராததால் வெறுப்படைந்ததையும், இனி தான் நல்லபடியாக அவள் மனம் கோணாமல் நடப்பதாகவும் உறுதியளிக்கிறான். தாய் புன்னகையுடன், இந்த ஊர் உனக்குப் பிடிக்கவில்லை இல்லையா...கவலைப்படாதே….எனக்கு மீண்டும் மாற்றல் வந்திருக்கிறது...ஆனால் நம் பழைய ஊர் இல்லை...அதே சமயம் இந்த மாதிரி சிறிய ஊரும் இல்லை...அங்கு நம் வாழ்க்கை இதைவிட நன்றாகத்தான் இருக்கும்….சரியா? என்று கேட்கிறாள். சிறுவனும் புன்னகையுடன், உனக்கு சரி என்றால் எனக்கும் சரிதான்..என்று கூறி தாயை அணைத்துக் கொள்கிறான். படம் முடிகிறது.


படம் முடியவும் மகேஷுக்கு ஆபீஸிலிருந்து ஃபோன் அழைப்பு வரவே, இருவரும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டார்கள். ஒரு வழியாக வேலைகள் எல்லாம் முடிந்து இரவு உணவும் முடிந்து படுக்கும்போது இரவு ஒன்பதரையைத் தாண்டியிருந்தது.


மகனுக்கு அடுத்தபடியாக வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்த வந்தனா லேசாக அசைவதைக் கண்டான் மகேஷ். வழக்கமாக இந்நேரம் செல்ஃபோனை உபயோகித்துக் கொண்டிருப்பவள் இன்று என்ன செய்கிறாள் என்று வியந்தான். சற்று உற்று கவனித்தால் அவள் விசும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த மகேஷ், என்ன வந்தனா, அழறியா என்ன? என்ன ஆச்சு? என்று ஆதங்கத்துடனும் அக்கறையுடனும் அவளை தன் பக்கமாகப் புரட்டினான்.


அவள் கண்களில் குளமாக நீர். மகேஷ் அதைப் பார்த்துவிடக்கூடாது என்று அவசரம் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் வந்தனா. பாவம்..ங்க அந்தப் பையன் என்றாள். மகேஷுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தான். அவள் தொடர்ந்தாள். அந்த படத்தில வர்ற பையனைத்தான் சொன்னேன்….இப்படி அம்மா கிட்ட அன்பா நல்லவனா இருந்தா வளர்ந்து கல்யாணம் ஆனப்புறம் பெண்டாட்டி சரியா அமையலைன்னா ரொம்ப கஷ்டப்படுவான்...என்று மீண்டும் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.


சரியாப்போச்சு போ! அது சினிமா! கற்பனைக் கதை! அதையா நிஜமென்று நினைத்து அழுவார்கள்? என்று அவளைத் தேற்றி, அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை அசை போட்டு, வாழ்வின் யதார்த்தங்களை பரிமாறிக்கொண்டபின் ஒரு வழியாக அவளை தூங்க வைத்தான்.


மறுநாள் காலை. அவனுக்கு முன்னமே விழித்து, அவன் எழுந்து வரும்போதே மணக்கும் ஃபில்டர் காஃபியோடும் புன்னகையோடும் அவனை வரவேற்றாள். என்ன இன்னிக்கு ஒரே குஷியாயிருக்கே? என்று கேட்டான் மகேஷ். நம்ம மகனும் அந்தப் பையன் மாதிரி அம்மா மேல பாசமா இருக்கானில்லே? என்று சந்தோஷமாகக் கேட்டாள் வந்தனா.


இன்னுமா நீ அதிலேயே இருக்கே? நேத்து என்னடான்னா அப்படி அழுதுண்டிருந்தே? பையன் பாசமா இருந்தா கஷ்டம்னு சொல்லிட்டு இப்போ அதிலே பெருமைப்பட்டுண்டு சிரிக்கிறே? எனக்கு ஒண்ணும் புரியலே...போ….என்றான்.


இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. அது அப்படித்தான்...என்று கூறியபடி செல்லமாக அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.


21,5,30

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home