ஆளில்லா வீடு
கண்டிருக்கிறேன் பலநாள் நான் செல்லும் பாதையில்
களையிழந்து வாடும் அப்பெரிய இல்லத்தை
காணும் பொழுதெல்லாம் ஓர்கணம் நின்றுணர்வேன்
கவிந்த சோகத்துடன் வாழ ஆளில்லா வெறுமையை.
பேயுலாவும் இல்லங்களைப் பற்றிநான் கேட்டதுண்டு
பெரும் விசனத்தோடலையும் ஆவிகளும் அதிலுண்டு.
எனினும் அவ்வினத்தில் இவ்வில்லம் சேராதென்பேன்
தனிமைதான் வாட்டுவதன்றி பேய் பிசாசு உள்ளில்லை.
ஆளுயரக் கதவுகள் பலகணிகள் இருப்பினும்
ஆணியில் தொங்கும் அழுக்குத் தொப்பி போல்
வாழும் உயிரின்றி ஜடமாய் இருப்பதை
தலையில்லா உடல் போல் இல்லம் உணராதே.
மகிழ்வுடன் தம்பதியர் வலம்வந்த வீடு
மழலையின் குரலமுதம் தினமொலித்த வீடு
இருப்போரை இதயத்தில் ஏந்தும் வீடு
இருப்போர் இல்லாவிடின் உயிரிழந்த காடு
போகும் பாதையில் இன்றும் காண்கிறேன்
பொறுமையாய் ஒருகணம் திரும்பியும் பார்க்கிறேன்
கதவுகள் சரிந்து கூரை இடிந்திட
கனத்த இதயத்துடன் அவ்வில்லம் நிற்பதை.
புறத்தே சற்றழகாய் புதுப்பித்து திருத்தி
புல்வெளியும் பூச்செடியும் சீராக்கி சமன்படுத்தி
வண்ணப் பூச்சளித்து நறுமலர்களும் நிறைத்திட்டு
வாழ மாந்தரும் வந்திட்டால் வீடே பொலிவுறாதோ?
நான்மட்டும் கடனடைந்து வளவாழ்வு பெற்றிடின்
என் முதற் பணியாய் இவ்வீட்டைக் கைக்கொண்டு
அந்நாள் போல் அழகுற ஆள்கொண்டு சீரமைத்து
நன்மக்கள் நால்வருக்கு நலம்வாழ நல்கிடுவேன்.
June 6, 2024
In response to this poem shared on Whatsapp:
| |||
|
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home