உன்னோடு வாழ்தல் அரிது
அடியேய், காலைல கொஞ்சம் சீக்கிரம் எந்திரிச்சிடு. குழந்தைங்க அம்மாவோட தூங்கிட்டு இருக்கட்டும். நீயும் நானும் காலைல சீக்கிரம் ஒரு தரிசனம் முடிச்சிட்டு வந்துடலாம். ஆட்டோல பத்து நிமிஷம் தான் ஆகுமாம். இப்பவே சொல்லிடறேன், எழுந்து குளிச்சிட்டு சரியா ஏழு மணிக்கெல்லாம் ரெடியா இரு.. என்று என் மனைவிக்குக் கட்டளையிட்டேன். இந்த மாதிரி வெளியூர் பயணங்களின்போதுதான் கட்டளையெல்லாம் இட முடியும். அதைக் கேட்பார்களா என்பது வேறு விஷயம்.
பதில் சாதாரணமாகவா வரும்? சும்மா விரட்டாதீங்க. சதா ஆபீஸ்லயும் வேலை..வீட்டிலேயும் வேலை… ஒரு ரிலாக்சேஷனுக்குதானே வரோம்? இங்கயும் நைநைன்னு சீக்கிரம் ரெடியாகுன்னு விரட்டாதீங்க…. ஏழு மணி சொல்லிட்டீங்கல்ல...அதுக்கு மேல ஆச்சுன்னா கேளுங்க...என்று சற்று சூடாகவே வந்தது.
அதற்கு மேல் பேச நான் என்ன மடையனா? புயல் காற்றில் வளைந்து கொடுத்து உயிர் வாழும் நாணல் போல் அடங்கிக் கொண்டேன்.
காலையும் வந்தது. ஏழு மணியும் ஆயிற்று. டிரெஸ்ஸிங் டேபிளை எட்டிப் பார்த்தேன். இதோ ரெண்டு நிமிஷம். நைட்டி மாத்திட்டு தலை பின்னிட்டு வந்துட வேண்டியதுதான். இங்க மசமசன்னு நிக்காம நீங்க ஆட்டோ சொல்லிடுங்க.. என்று அன்பாக கட்டளையிட்டாள் மனைவி. ஹோட்டல் வாசலிலேயே நான்கைந்து ஆட்டோக்கள் எப்போதும் காத்திருப்பதால் எதற்கும் அவள் வெளியில் வந்தவுடன் ஆட்டோ பேசலாம் என்று ரிசப்ஷனில் உட்கார்ந்தேன். எதிர்பார்த்தபடி ஏழரைக்கெல்லாம் தயாராக வந்தாள். நேராக கோவிலுக்குச் சென்றோம். நல்லபடியாக தரிசனமும் முடிந்தது. சந்தோஷமாக வெளியில் வந்தோம்.
கோபுரத்தின் வாசல் வீதியில் கடைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் திறக்கத் தொடங்கியிருந்தார்கள். படக்கடை, வளையல் கடை என்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கடைசியாக பித்தளை பாத்திரக் கடையில் நுழைந்தோம். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு சற்று வேறு மாதிரி இருக்கவே என் மனைவிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஏங்க, இந்த விளக்கு நல்லா இருக்கில்ல.. ஒரு மூணு ஜோடி வாங்கிடலாங்க என்றாள். கடைக்காரனிடம் விலை கேட்டால் ஜோடி இருநூறு ரூபாய் என்றான். என்னிடம் பர்ஸில் இருந்ததோ மொத்தமே இருநூற்று இருபது ரூபாய்தான். திரும்ப ஹோட்டலுக்குப் போகவே அறுபது ரூபாய் வேண்டும். எனவே தற்சமயம் விளக்கு வாங்க முடியாது என்பது புரிபட்டது.
ஏம்மா, குழந்தைங்க முழிச்சுண்டு உன்னைக் கேட்க ஆரம்பிச்சிருப்பாங்க… நாம இப்போ போய் சாயந்திரம் திரும்ப வரலாம்… அப்போ இன்னும்கூட நிறைய கடைங்க திறந்திருக்கும்… எல்லாம் பார்த்து திருப்தியா வாங்கலாம்… என்று சமாளிக்க முயற்சிக்கும்போதே புத்திசாலியாயிற்றே, பளிச்சென்று புரிந்துகொண்டுவிட்டாள் என் மனைவி.
என்ன? காசு கொண்டு வரலையா? உங்களுக்கெல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாதே? பொண்டாட்டியைக் கூட்டிண்டு ஒரு கோயில் குளம் போனா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் எடுத்துண்டுதான் வரணும். சரியா ஆட்டோவுக்கு மட்டுமா எடுத்துண்டு வருவாங்க? திரும்பி சாயந்திரம் வருவோம்ன்னு என்ன நிச்சயம்? அப்படியே வந்தாலும் இந்த விளக்கு விக்காம இருக்கும் என்ன காரண்டி? நாம சொல்றதை வெச்சுண்டு கடைக்காரன் யாராவது கேட்டா குடுக்காமயா வெச்சுண்டு இருப்பான்? எத்தனை வசயானா என்ன? கொஞ்சங்கூட விவரமே பத்தாது இந்த ஆம்பளைங்களுக்கெல்லாம்… என்று மெரினாவில் சோளம் சுடும்போது கக்கும் நெருப்புப்பொறி போல சடசடபடபடவெனப் பொறிந்து தள்ளி முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி சற்று விலகியே உட்கார்ந்து கொண்டாள்.
அதற்குப்பிறகு அன்று என் கதி சொல்லியா தெரிய வேண்டும்? அதற்கேற்றாற்போல் நாங்களும் அன்று மாலை வேறு வழியாகச் செல்ல நேர்ந்தது. அதே மாதிரி விளக்கு இன்னமும் எங்கள் கண்களில் படவில்லை. சமயம் கிடைக்கும்போதெல்லாம் இன்னமும் அதை ஞாபகப்படுத்தத் தவறுவதில்லை என் மனைவி. நானே இப்போதெல்லாம் தனியாகச் சென்றால்கூட கோவில்களுக்குப் போகும்போதெல்லாம் அங்குள்ள பித்தளைக் கடைகளை ஒரு எட்டு எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
****
பின்னொருதரம் இப்படித்தான் வெளியில் கிளம்பும்போது ஏங்க கையில் காசு வெச்சிருக்கீங்கல்ல? என்றாள்.
தெரியாத்தனமாக எவ்வளவு வேண்டியிருக்கும் என்று கேட்டுவிட்டேன்.
எவ்வளவுன்னா? எனக்கு எப்படித் தெரியும்? என்ன கிடைக்கிறதோ, எதைப் பார்க்கிறேனோ, அவ்வளவு தேவைப்படும்.
அதுதான் சொல்றேன், ஏதாவது ஒரு ரஃப் ஐடியா குடு, ஆயிரம் போதுமா? இரண்டாயிரம் வேணுமா?
அது எனக்கெப்படிங்க தெரியும்? நீங்க தயாராத்தான் வரணும்.
நான் தயாரா வரேம்மா… ஆனா ஒரு அமவுண்ட் சொல்லு… எங்கிட்ட இல்லன்னா ஏ டி எம்ல எடுத்திண்டு வரேன்.
இதுக்கோசரம் என்னைக் குறை சொல்லிண்டு ஏ டி எம்மெல்லாம் போகவேணாம். எவ்வளவு இருக்கோ கொண்டு வாங்க.. நான் அதுக்கேத்தாப்போல் பாத்துக்கறேன்.
எனக்கு விளக்கு ஞாபகம் வந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று பர்ஸை எடுத்து எண்ணினேன். நாலாயிரத்து முன்னூற்று சொச்சம் இருந்தது. நாலாயிரம் பக்கம் இருக்கு. போதுமில்ல? என்று கேட்டேன்.
அவ்வளவெல்லாம் எதுக்கு பர்ஸ்ல வெச்சுக்கிறீங்க? யாராவது பிக்பாக்கெட் அடிச்சா மொத்தமா போகறதுக்கா? எனக்கு மிஞ்சிமிஞ்சிப்போனா ஐநூறுக்குள்ள தான் ஆகும். எதுக்கும் ஆயிரமா கொண்டு வாங்க போதும்.
இதைத்தானடி முதல்லேயே கேட்டேன்? என்று உரக்கக் கத்த வாயைத்திறந்து பிறகு பின் விளைவுகளை யோசித்து மெளனமாகக் கிளம்பினேன். விளக்கு ஞாபகம் மீண்டும் வரவே, மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு.
****
அன்று அவளுடைய தங்கை தன் குழந்தையோடு வந்திருந்தாள். ஏங்க ஸ்ம்ருதிக்கு (குழந்தையின் பெயர்) வாழைக்கான்னா ரொம்பப் பிடிக்குமாம். கடைக்குப்போய் ரெண்டு வாழைக்காய் வாங்கிண்டு வந்துடுங்களேன்.. அவளுக்குப் பொரியல் பண்ணிப்போடறேன்.. என்றாள்.
கொஞ்சம் நல்ல பெயராவது சம்பாதித்துக்கொள்ளலாமே என்ற எண்ணத்தில் மறுப்பேதும் சொல்லாமல் மொபெட்டை எடுத்துக் கொண்டு மார்க்கெட் சென்று இருப்பதிலேயே பார்ப்பதற்கு பச்சைப் பசேலென்று செழுமையாய் இருக்கின்ற காய்களாய்ப் பார்த்து இரண்டுக்கு மூன்றாகவே வாங்கிக்கொண்டு சென்றேன்.
ஆண்களுக்கு இயற்கையின் விதி நம்பர் 1 – நமக்கு நேரம் சரியில்லையென்றால் நாம் எது செய்தாலும் தப்பாய்த்தான் முடியும். விதி நம்பர் 2 - பெரும்பாலம் நமக்கு நேரம் சரியில்லாமல்தான் இருக்கும்.
ஆசையாக பாராட்டுதல்கள் பெறுவது உறுதியென்று நம்பி பையைவிட்டு வாழைக்காய்களை வெளியே எடுத்ததுதான் தாமதம். என்னங்க இது? இத்தாம்பெரிய முத்தல் காய் கொணர்ந்திருக்கீங்க? வேற காயே கிடைக்கலியா உங்களுக்கு? சின்னக் குழந்தைக்கு கச்சல் காய்தான் உடம்புக்கு நல்லது. நான்தான் குழந்தைக்குன்னு சொல்லிதான் அனுப்பிச்சேன்? இப்படியா பெரிய காய் வாங்குவீங்க? அதுவும் மூணு வெச்சுண்டு நான் என்ன பண்றது? என்று புலம்பித் தீர்த்தாள்.
வேறு வழி? மறுபடியும் சுத்தோ சுத்தென்று சுற்றி வாழை இலை விற்கும் பாட்டியிடம் கச்சல் காய் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது என்று பாடம் கற்றுக்கொண்டு ஒரு வழியாய் தேடிப்பிடித்து வாங்கிக் கொடுத்து நல்ல பெயர் சம்பாதிக்காவிட்டாலும் காலையில் சம்பாதித்த கெட்ட பெயரை தற்காலிகமாக நீக்கிக்கொண்டேன். ஆனால் அது விதிக்குப் பிடிக்கவில்லை போலும்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் அவளது உறவினர் சிலர் வந்திருந்தனர். வழக்கம்போல், ஏங்க..மார்க்கெட் போய் ஏதாவது நல்ல காயா வாங்கிண்டு வாங்க என்று உத்தரவிட்டாள் என் மனைவி. இப்போதுதான் வாழைக்காய் வாங்குவதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டோமே என்ற மமதையில் மார்க்கெட் சென்று அதே கச்சல்காரியைத் தேடினேன். அவளும் இருந்தாள். என்னைப் பார்த்ததும் அமேசான் லோகோ போன்ற புன்னகையுடன், ஒரே சீப்புதான் இருக்கு சாமி.. அப்புறம் கிடைக்காது… நீ வாங்கிட்டா நானும் ஊருக்குக் கிளம்பிடுவேன்… ரெண்டு நாளைக்கு வரமாட்டேன் என்று சொல்லியபடி கைவிரலை விடச் சற்று பெரிய காய்களைக் கொண்ட ஒரு சீப்பை நீட்டினாள். எண்ணினேன். ஒரு டஜன் காய்களுக்கும் மேலாக இருக்கவே அப்படியே வாங்கிக்கொண்டு பெருமையுடன் கம்பீரமாக அந்த சீப்பை மனைவியிடம் நீட்டினேன்.
அவசரமாக சமையல் உள்ளே என்னை இழுத்துச் சென்றாள் என் மனைவி. ஐயோ, ஐயோ..கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு? போன வாரம் தானே வாழைக்காய் வாங்கி வம்பிலே மாட்டினீங்க? இப்ப திரும்பி இத்தனை பேர் வந்திருக்கும்போது இப்படி கச்சல் காய் வாங்கினா என்ன அர்த்தம்? இதில தோலியே பாதிக்கு மேல் போயிடும்னு தெரியாதா? போய் திருப்பிக் குடுத்துட்டு வேற முத்தின காயா நாலு வாங்கிண்டு வாங்க என்று அந்தச் சீப்பாலேயே என் தலையைக் குட்டினாள். என்ன இருந்தாலும் சாமர்த்தியமாக விருந்தினர் முன் சொல்லாமல் தனியாக உள்ளே கூட்டிச் சென்று திட்டிய என் மனைவியின் பெருந்தன்மையை மெச்சிக்கொண்டாலும், கச்சல் காய்களைத் திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலையை கலவரத்துடன் விளக்கினேன். கருமம் கருமம், இனிமே மார்கெட் போறதுக்குக்கூட நீங்க லாயக்கில்லே...என்ன பண்றது என் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே அதே காய்களால் தன் தலையிலும் குட்டிக்கொண்டாள்.
நீ கவலைப் படாதே தாயே… இந்தக் கச்சல் காய் எவ்வளவு நாளான்னாலும் சரி, நீ எப்படி சமைச்சாலும் சரி, நானே சாப்பிடறேன் என்று இதுதான் சமயமென்று அவள் தலையில் சற்று பலமாய் கை வைத்து சத்தியம் செய்துவிட்டு, இதோ பத்தே நிமிஷத்தில் நல்ல காய் வாங்கி வருகிறேன் பார் என்று சபதமிட்டு அதில் வெற்றியும் பெற்றேன்.
இந்த வெற்றியின் இறுமாப்பு கொஞ்சம் கொஞ்சமாய் கச்சல் காய்களால் கரைவதை விதி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது வேறு விஷயம்.
****
ஸ்மார்ட் போன், இயர் போன் (காதில் மாட்டிக்கொள்ளும் கருவி) போன்றவை ழக்கத்தில் வராதிருந்த காலம். ஆபீஸிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் மறுபடியும் மொபைல் போனில் கால் ஒலித்துக்கொண்டிருந்தது. வண்டியை ஓரம் கட்டி பாக்கெட்டிலிருந்து போனை எடுத்துப் பார்த்தால் மனைவியிடமிருந்துதான் கால்கள் வந்திருந்தன. என்ன அவசரமோ என்று தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவளுடைய எண்ணுக்கு டயல் செய்தால் ரிங் ஒலித்துக்கொண்டே இருந்தது. இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பலனில்லை.
சரி, மிகவும் அவசரம் என்றால் மீண்டும் போன் செய்வாள் என்ற கணிப்பில் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து இரண்டு நிமிடம்கூட சென்றிருக்கமாட்டேன். மறுபடியும் கால். நானோ மிக அதிகமான டிராபிக் மத்தியில் வண்டியை எங்கும் நிறுத்தக்கூட முடியாத நிலையில் இருந்தேன். பத்து மீட்டர் தொலைவில் வலதுபுறம் திரும்புவதற்கான வரிசையில் இஞ்ச் இஞ்ச்சாக வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஹெல்மெட்டுக்குள் போனை நுழைத்து காதுக்கருகில் வைத்து பேசலாமா என்று யோசித்தால் டிராபிக் போலீஸ் வேறு என்னையே பார்த்துக்கொண்டிருப்பதாக எனக்கு ஒரு கலக்கம். ஐந்தாறு முறை ரிங் ஒலித்துவிட்டு நின்று விட்டது.
திரும்பவேண்டிய இடத்தில் திரும்பி சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தி போனை எடுத்துப் பார்த்தால் அதேதான். மீண்டும் மனைவிதான். பயந்துகொண்டே பலமுறை அவளுக்கு டயல் செய்தாலும் அவள் எடுக்கவில்லை. கவலையுடன் வீடு வந்து சேர்ந்தால் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தாள் மனைவி.
என்னம்மா, ரெண்டு மூணு தடவை போன் பண்ணியிருக்கே?
ஆமாம். பண்ணேன். நீங்க எடுத்தா தானே?
நான் எடுக்காமயா? ஆனா நீ ஒண்ணு யோசிக்கனும். வண்டி ஓட்டிட்டிருக்கும்போது எப்படி எடுக்கறது? அதனால உடனே எங்க நிறுத்த முடியுமோ அங்க நிறுத்தி உனக்கு போன் செஞ்கா நீ கூடத்தான் எடுக்கவேயில்லை தெரியுமா?
ஏங்க. நீங்களும் நானும் ஒண்ணா? நீங்க வண்டி மாத்திரம்தான் ஓட்டிட்டிருக்கீங்க. நான் அப்படியா, வேலை பாக்குற பேங்க்ல இந்தப் பக்கம் கஸ்டமரை அட்டெண்ட் செய்யனும், அந்தப்பக்கம் கிளார்க்கோட தொல்லை, இதுல கேஷ் மிஸ்ஸாகாம வேற பார்த்துக்கணும். அதனால் போன் எப்பவும் டிராயரிலேதான் இருக்கும். இரைச்சல்ல சமயத்தில ரிங் கேக்கக்கூட கேக்காது. அதனால் நீங்கதான் ஒடனே எடுக்கணும்.. என்று அவள் பக்க வாதத்தை முன்வைத்தாள்.
டிராபிக் நடுவில் போன் பேசுவது சுலபமா, டிராயரில் இருந்து போன் எடுத்துப் பேசுவது சுலபமா என்று வாதம் செய்யத் தொடங்கினால் அது விவாதமாக மாறி பிறகு விவகாரத்தில் முடியும் என்பது என் சிற்றறிவுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததால் அதை அத்தோடு கத்தரித்து சரி, என்ன விஷயமா போன் பண்ணே சொல்லு என்றேன்.
ஒண்ணுமில்லே. டெய்லர் கடையிலிருந்து போன் வந்தது. பிளவுஸ் தைச்சு ரெடியாயிருக்காம். உங்களுக்கு வர்ற வழிதானே வாங்கிட்டு வரச் சொல்லலாம்னுதான் போன் பண்ணினேன். நாளைக்கு ஒரு ரிடையர்மெண்ட் பார்ட்டிக்கு நல்லாயிருக்கும்னு நினைச்சேன். உங்களால ஏதாவது உதவி உண்டா சொல்லுங்க.. என்றாள்.
அவ்வளவுதானே, இதோ இப்ப போய் வாங்கிண்டு வந்திடறேன்.. என்று கிளம்பிய என்னை, இதுக்கோசரம் ஒண்ணும் அவ்வளவு தூரம் திரும்பப் போகவேண்டாம் என்று நிஜமான அக்கறையுடன் தடுத்துவிட்டாள். என்னதான் சச்சரவுகள் இருந்தாலும் என் உடல்நலத்தில் கவனம் உள்ளவள் அல்லவா?
****
அன்றிரவு என் மகளுக்கு தமிழ்ப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒளவையார் பாடல் ஒன்று - ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இருநாளைக்கேலென்றால் ஏலாய், ஒருநாளும் என்நோவறியாய் இடும்பைகூர் என் வயிரே, உன்னோடு வாழ்தல் அரிது - என் கண்ணில் பட்டது. சற்றே யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கைத்துணையும் அப்படித்தான் என்று தோன்றியது. மற்ற சுகங்கள். பலன்கள், சந்தோஷங்கள் பல இருந்தும் சமயத்தில் சிறிய விஷயங்களுக்கெல்லாம் நச்சரிக்கும்போது என் உயிரே, உன்னோடு வாழ்தலும் சற்றே அரிதுதான்.