Monday, March 18, 2019

ரெண்டு இட்லி, ஒரு சில்க் காட்டன்


"ரெண்டு இட்லி, ஒரு சில்க் காட்டன்"

சரியாகத்தான் காதில் வாங்கினோமா என்ற சந்தேகத்துடன் "என்ன சார்?” என்றார் சர்வர்.

"சரியாத்தாம்ப்பா சொன்னேன். நீங்கதானே கல்லாப்பெட்டி பக்கத்துல அத்தனை புடவையைத் தொங்கப் போட்டிருக்கீங்க? அதுலேயிருந்து அந்த பச்சை கலர் மெரூன் பார்டர் சில்க் காட்டனையும் சேத்து பில் போடுங்க" என்றேன்.

"சார் இங்க டிபன் சாப்பாடு மாத்திரம்தான் பில் போடுவோம். ஜவுளிக்கெல்லாம் நீங்க கவுன்ட்டரிலே தனியாத்தான் குடுக்கணும்.”

"அப்படீன்னா அதை ஏன் இங்க கொணர்நது வெச்சிருக்கீங்க?”

"சார்...ஓட்டல் முதலாளி ஜவுளி வியாபாரமும் செய்யறார்ங்கறதனாலே வந்து சாப்பிடறவங்களுக்கு அதுவும் தெரியணும்னு இப்படிப் பண்ணியிருக்காங்க. அதுக்கோசறம் ரெண்டையும் ஒண்ணா கலக்கக்கூடாதில்லீங்களா?”

"அப்படியா.. அப்ப சரி...நான் அப்புறமா சம்சாரத்தோடயே வந்து வாங்கிக்கறேன். இப்ப ரெண்டு இட்லியும் சாப்பிட்ட பெறகு ஒரு மினி காபியும் மாத்திரம் கொடுங்க" என்று சொல்லிவிட்டு நினைவுகளில் மூழ்கினேன்.

***

தொண்ணூறைத் தாண்டிய என் மாமனாருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை. இரண்டு மூன்று நாட்களாக சரிவர சாப்பிடவில்லை. மிக பலவீனமாகி படுக்கையிலிருந்து எழுந்து உட்காரக்கூட சக்தியில்லாமல் போயிருந்தார். வீட்டில் வயதான மனைவியும் சமீபத்தில் ரிடையர் ஆகியிருந்த அவரது மகனும்தான் இருந்தார்கள். மருமகள் ஏதோ விஷயமாக அவசரமாக வெளியூர் சென்றிருந்தாள்.

எப்பொழுதும் இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை அம்மாவோடு இரவு செல்போனில் பேசுவது என் மனைவிக்கு வழக்கம். அவ்வாறு நேற்று பேசும்போதுதான் விஷயம் தெரிந்தது. மறுநாள் எப்படியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போவதாக அண்ணன் சொல்லியிருந்தாலும் என் மனைவிக்கு இருப்பு கொள்ளவில்லை. இப்பவே டிக்கட் கிடைக்குமா பாருங்க என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அதில் ஒரு பிரச்சினை. என் மனைவி இப்போதுதான் ஒரு மாதமாக முதுகுத் தண்டு வளைவிற்காக தீவிர சிகிச்சை எடுத்து முடித்திருக்கிறாள். எனவே நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியாது. தத்கலில்கூட டிக்கட் கிடைக்கவில்லை. எனவே மறுநாள் காலை டாக்சி வைத்துக்கொண்டு புறப்பட்டோம். நான் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன். அவள் பின் சீட்டில் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் நேராகவோ சரிந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ மாற்றி மாற்றி சமாளித்துக்கொண்டு வந்தாள்.

எண்பது வயதான என் தாயாரை தனியாக விட்டுவிட்டுச் செல்கிறோமே என்ற கவலை எனக்கு. என் தாயோ, "நீ ஒன்றும் கவலைப்படாதே. இப்போ அவங்களைப் போய்ப் பாக்கறதுதான் முக்கியம். அவங்க மருமக வர்ற வரைக்கும் பக்கத்திலே இருந்து அப்பாவுக்கு என்ன பண்ணனுமோ பாத்துண்டு வா. நான் இங்க நல்லாத்தானே இருக்கேன். ரெண்டு நாள் தனியா இருக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்ல… நீ தைரியமா போய்ட்டுவா… உன் உடம்பையும் பார்த்துக்கோ..” என்று என் மனைவிக்கு தைரியமூட்டி அனுப்பிவைத்தாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஊர்போய்ச் சேர்ந்ததும் நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். நாங்கள் அங்கு வரும்வரை காலையிலிருந்துஅவருடன் இருந்த என் மைத்துனனை இரவு அவன் மீண்டும் அவருடன் படுக்கவேண்டி ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பினோம். மாமனார் மிகவும் தளர்ந்துதான் போயிருந்தார். ஆனாலும் மகளைப் பார்த்தவுடனேயே ஒரு மகிழ்ச்சி. என் மனைவிக்கும் தந்தையைப் பார்த்து அருகில் அமர்ந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதில் ஒரு திருப்தி. காலையிருந்து தந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்த தாயை அருகில் உள்ள பெஞ்ச்சில் படுக்கச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியமால் தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர்.

***

என் மானமாருக்கும் மாமியாருக்கும் சர்க்கரை நோய் உண்டு. கடந்த பல வருடங்களாகவே அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கடந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் சென்றதில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குள் முரண்பாடுகள் உண்டு. அவரால் குளிர் தாங்க முடியாது. ஆனால் மாமியாருக்ககோ வெப்பம் தாங்காது. அவருக்கு ஏசி ஒத்துக்கொள்ளாது. இவரால் ஏசி இல்லாமல் இருக்கமுடியாது. இருந்தாலும் கணவருக்காக தியாகம் செய்து கோடையின் வெப்பத்திலும் மின்விசிறியின் சூடான காற்றைத் தாங்கிக்கொண்டு அவருடனேயே அருகில் இருந்து அவரது ஒவ்வொரு தேவையையும் பார்த்துப்பார்த்து பூர்த்தி செய்துகொண்டு இருந்தார். மாமியாருக்கு க்ஷேத்ராடனம் செய்ய ஆசை. அவரால் ஊர் சுற்ற முடியவில்லை. அதனால் தன் ஆசைகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டார் மாமியார்.

ஆஸ்பத்திரியில் கூட, "அம்மாவைப் பாரு. நீ எதுக்கு இங்க வந்து சிரமப்படணும், வீட்டிலேயே இருந்துக்கோயேன்னு சொன்னாகூட கேக்காம எப்பவும் எம்பக்கத்திலேயேதான் இருக்கனும்ன்னு சொல்லி ஒக்காந்துண்டே இருக்கா…" என்று என்று என் மகளிடம் புகார் செய்தார் அப்பா.

"எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. இவருக்குத்தான் நான் இல்லாட்டி எதுவுமே சரிப்படாது.. எந்தெந்த மருந்து சாப்பாடு எப்பப்ப தரணும்.. என்ன கலர் சட்டை போடணும்… எல்லாம் என்னைக் கேட்டுத்தான் செய்யறார். நான் அங்கே வீட்டில இருந்தா எப்படி சரிப்படும்?” என்று தன் சிரமத்தை மறைத்து கணவனுக்காகவே தன் வாழ்வை மாற்றிக்கொண்ட தாயார் அவருடைய புகாரை தள்ளுபடி செய்கிறார்.

***

இரண்டு நாள் கழித்து ஊருக்கு வந்த மருமகள் நேராக ஆஸ்பத்திரிக்கு வந்து, "அப்பா நான் வந்துட்டேன். என்னோட ரசம் சாப்பிட்டீங்கன்னாலே ரெண்டே நாள்ல உங்களுக்குச் சரியாயிடும் ..” என்று உற்சாகமூட்டினாள். "உன்னோட சாம்பார் கூட எனக்குப் பிடிக்கும்மா… " என்று தன் விருப்பத்தையும் சேர்த்துக்கொண்டார் பெரியவர்.

இடையில் அனைவரும் டிபன் சாப்பிட வெளியில் சென்றிருந்தபோது நான் மட்டும் அருகிலிருந்தேன். வாட்ஸப் விடியோவில் என் பேத்தியை அவருக்குக் காட்டினேன். அவளின் விசாரிப்பிலேயே நெகிழ்ந்திருந்தார் என் மாமனார். "சின்னக்குஞ்சூ….எப்படியிருக்கேடீ கண்ணூ…" என்று ஒரே கொஞ்சல். ஆறே வயதான அவளும் சளைக்காமல், "தாத்தா... நீங்க ஒடம்பு சரியானவுடனே இங்கே எங்க வீட்டுக்கு வந்திடுங்க…. நான் வேளாவேளைக்கு உங்களுக்கு சரியா மருந்தெல்லாம் குடுத்துப் பாத்துக்கறேன்…" என்று சொல்ல மேலும் நெகிழ்ந்தார்.

***

அறுபது வருடங்களுக்கு மேலான தாம்பத்திய வாழ்க்கையின் கடைசிக் கட்டங்களில் தன் கஷ்டங்களைப் பின்னுக்குத் தள்ளி துணையைச் சற்றும் பிரியாமல் பிள்ளையைப் போல் பார்த்துக்கொள்ளும் மனைவியா?

தன் உடல்நிலை சரியில்லாதபோதும் தந்தையை உடனே பார்க்கவேண்டும் என்று சிரமம் பார்க்காமல் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் மகளா?

வயதானாலும் தனியாக இருக்கவேண்டிய கட்டாயத்தைப் பொருட்படுத்தாமல் மருமகளுக்கு தைரியமூட்டி அனுப்பி வைக்கும் மாமியாரா?

புகுந்த வீடென்றாலும் மாமனாரைத் தந்தையைப் போலவே பாவித்து அவர் நலத்தில் அக்கறை கொண்ட மருமகளா?

உறவுகள் புரிபடா வயதிலும் பாசத்தால் பிணைக்கும் கொள்ளுப்பேத்தியா?

பெண் எந்த வடிவில் இருந்தாலும் இறைவிதான்.






Saturday, March 2, 2019

தெரியாத விடை

அவருக்கு கண் இருட்டிக்கொண்டு வந்தது.  வீட்டில் யாரும் இல்லை.  குழந்தை அச்சுதனும் அவரும் மட்டும்தான்.  தாய் யசோதா பத்து நிமிடம் முன்புதான் வெளியில் சென்றாள்.  அப்பா ஒரு அரை மணிநேரம் பாத்துக்கோங்கப்பா....  இன்னிக்கு விட்டா திரும்ப என்னிக்கு ரேஷன் கிடைக்கும்னு தெரியாது.  காலைலயே ருக்கு சொன்னா...நேத்தே நெறய லோடு வந்துருக்காம்...இன்னிக்கு இந்த நேரத்துக்குப் போனா கூட்டமும் இருக்காது...வேணுங்கறத எல்லாம் ஒரே நடைல வாங்கிண்டு வந்துடலாம்..னு.  கொழந்த தூங்கிட்டிருக்கான்  அவன் எழுந்தா நேர உங்ககிட்டதான் வருவான்.  நாலு உலர்ந்த திராட்சை இல்லாட்டி ரெண்டு பிஸ்கட் எடுத்துக் குடுஙகோ….அவன் சமத்தா சாப்பிடுவான்..  அதுக்குள்ளே வந்துடுவேன்..  என்று சொல்லிவிட்டுப் போனாள்.

அவருக்குக் கலக்கமாக இருந்தது.  இதுவரை இந்த மாதிரி ஆயாசமாகவோ கண்ணை இருட்டிக்கொண்டோ வந்ததில்லை.  பகவானே..யசோதா சீக்கிரம் வந்தா தேவலை என்று மனதிற்குள் மருகினார்.

அவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும்.  மனைவி அபிராமி பத்து வருடங்களுக்கு முன்பே விடைபெற்றுச் சென்றுவிட்டாள். அதுவும் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, இருக்கும்ஒரே சொத்தான  ஒற்றை அறை வீட்டையும் அவருடைய சொற்ப சேமிப்பையும் எல்லாம் வைத்தியத்திற்கே செலவழிக்கும்படியாக வாயில் பெயர் நுழையாத ஏதோ ஒரு நோயில் விழுந்து  கஷ்டப்பட்டு ஒருவழியாக யாருக்கும் பெரிதாக துக்கம் ஏற்படாத ஒரு கட்டத்தில் மறைந்தாள்.

அவர் பரம்பரையிலேயே யாருக்கும் அதிகமாக குழந்தைகள் இல்லை.  அவருக்குத் தெரிந்து அவர் பக்கமும் சரி, அபிராமி பக்கமும் சரி, எங்கோ தூரத்தில் ஓரிவருக்குத்தான் ஒன்றுக்குமேல் குழந்தைகள்.  அவரும், அபிராமியும் அவரவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள்.  அதுபோல அவருக்கும் அபிராமிக்கும் ஒரே பெண் யசோதா.  அவளும் அவருக்கு நாற்பதுக்கு மேல் ஆகும்போதுதான் பிறந்தாள்.  அபிராமியின் மறைவுக்குப் பின்னர்தான் அவள் திருமணமும் நடந்தது.

அவருடைய ராசியோ என்னவோ மாப்பிள்ளை ராகவனுக்கும் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை.  ஒரு ஜெர்மன் கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்க்கிறான்.  காலையில் கம்பெனி பஸ் ஏழு மணிக்கெல்லாம் தெருமுனையில் வந்து ஏற்றிக்கொண்டு சென்று, டாணென்று மாலை ஆறு மணிக்கு கொண்டுவந்தும் சேர்த்துவிடும்.  ஏனோ தெரியவில்லை, மனைவியை கட்டாயமாக வேலைக்குச் செல்லக்கூடாது, முழுநேரம் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டும் வரும் சம்பளத்தில் சிக்கனமாய் செலவு செய்து வீட்டை நிர்வாகம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான்.

அன்பாக நடந்து அவளை நல்லபடியாய் வைத்துக் கொண்டிருந்ததால் யசோதா தனக்கும் வேலைசெய்து சம்பாதிக்கும் ஆசை இருந்தாலும் அதை மறந்து அவன் இஷ்டப்படியே வீட்டோடு இருந்தாள். வருமானம் தாராளமாக இல்லாவிடினும் நிச்சயம் பற்றாக்குறை இல்லை.  அவளது கல்வியறிவால் ஓரளவு பணம் சேமித்து அதை சரியான முறையில் சிறுகச்சிறுக பெருக்கவும் கற்றுக்கொண்டிருந்தாள்.  குழந்தையைப் பார்த்துக்கொள்வது, அவனுக்குப் பாடம் கற்றுத்தருவது, தோட்டவேலை செய்வது, ஓய்வுநேரத்தில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றாற்போல் தையல், வடகம் போன்ற உபயோகமான வேலைகளில் ஈடுபடுவது என்று சந்தோஷமாகவே இருந்தாள் யசோதா.

அபிராமிக்குப் பின் சொந்த வீடும் போய், சேமிப்பும் கரைந்து. மிக்குறைந்த அளவே  பென்ஷனும் வந்தபடியால் அவருக்கு வேறு வழியில்லாமல் யசோதாவுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை.  யாருக்கம் தொந்தரவில்லாமல் கூடியமட்டும் தன் சொந்தத் தேவைகளை குறைத்துக்கொண்டு வரும் பென்ஷனை ராகவனுக்குத் தெரியும்படியாக அப்படியே யசோதாவிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒத்தாசையாக வீட்டுவேலைகள் செய்துகொண்டு காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தார்.  பொழுது முழுவதும் வெராண்டாவில் இருக்கை.  இரவு ஹாலில் படுக்கை.  சலனமில்லாத வாழ்க்கை.  அவருடைய உலகமெல்லாம் யசோதாவும் அச்சுதனும் தான்.

அச்சுதனுக்கு நான்கு வயதாகிறது.  பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளியில் சேர்த்திருந்தார்கள்.  காலை எட்டரை மணிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் மாலை மூன்றரைக்குப்போய் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவது அவருடைய வேலை.  கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு காய்ச்சல் இருந்ததால் பள்ளிக்குச் செல்லவில்லை.  காலையிலும் ஜுரம் இருந்ததால் சிரப் மருந்து கொடுத்திருந்தாள் யசோதா.

சொல்லிவைத்தாற்போல் அவள் சென்று கால் மணி நேரத்தில் அச்சுதன் விழித்தெழுந்தான்.  சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வெராண்டாவில் உட்கார்ந்துகொண்டிருந்த தாத்தாவிடம் வந்தான்.  அம்மா எங்கே தாத்தா என்று கேட்டான்.  அடடா...எழுந்திட்டியா குட்டி….எங்கிட்ட வா…..  அம்மா ரேஷன் கடைக்குப் போயிருக்கா… இப்ப வந்துடுவா…  உனக்கு என்ன வேணும், என்ன பிடிக்கும்னு சொல்லு…  தாத்தா எடுத்துத் தர்றேன்…  திராட்சையா, பிஸ்கட்டா?  என்று கேட்டுக்கொண்டே அன்புடன் அவனை மடியில் வைத்துக் கொள்ளத் தூக்கினார்.  மீண்டும் கண்ணை இருட்டிற்று.

சற்றே பயந்தார்.  அச்சுதன் கையை உயர்திக்கொண்டு தன்னைத் தூக்கிக்கொள்ளும்படியாக சைகை செய்தான்.  எனக்கு திராட்சை வேணும் எடுத்துக்குடு தாத்தா என்று சொன்னான்.

அவனைத் தூக்காமல் அவன் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, வா.. அம்மா உம்மாச்சி பக்கத்துலதான் திராட்சை வெச்சிருப்பா… நான் எடுத்துத் தர்றேன் .. என்று கூறியபடியே எழுந்து அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

உனக்கு திராட்சைன்னா ரொம்ப பிடிக்குமா கொழந்தே?

ஆமாம்..தாத்தா… அதுதான் பிஸ்கட்டவிட தித்திப்பா இருக்கு…. உனக்கு என்ன பிடிக்கும் தாத்தா?

எனக்கு ஒன்னத்தான் ரொம்பப் பிடிக்கும்.

அப்படின்னா என்னை தின்னுடுவியா?

சேச்சே, பிடிச்சது வேற….பிடிச்சவா வேற….உனக்கு என்னைப் பிடிக்குதா?

ஓ, ரொம்பப் பிடிக்கும்..  நீ என்ன கேட்டாலும் தருவேன்…

அப்படியா என் செல்லம்…. இதோ இந்த திராட்சை அத்தனையும் கேட்டா தந்திடுவியா?

அத்தனையுமா?  என்று ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, ஓ தந்திடுவேனே….அம்மாதான் அலமாரிலே பாட்டில்லே இன்னும் நிறைய வெச்சிருக்காளே….

அடி சக்கை…..அத தெரிஞ்சுதான் அத்தனையையும் தரேங்கறியா?

இல்ல தாத்தா….நீ வேற ஏதாவது கேட்டா கூட குடுப்பேன்.  நீ எனக்கு என்ன குடுப்பே?

நானா?  நானும் நீ என்ன கேட்டாலும் தருவேன்….என் உயிரையேகூட குடுப்பேன் அச்சுதா…

உயிர்..ன்னா என்ன தாத்தா?  அது எப்படி இருக்கும்?

எப்படி விளக்குவது என்று யோசித்தார்.   உயிரா?  அது ஒரு சக்திடா கண்ணா..  கண்ணுக்குத் தெரியாம உள்ள இருக்கும்…. அது இருந்தாத்தான் நாம எல்லாம் எழுந்துண்டு நடந்துண்டு பேசிண்டு இருப்போம்…..அது இல்லன்னா இதோ இந்த பொம்மை மாதிரி வெறுமன அசையாம கெடப்போம்…. என்றார்.

ஆனா இந்த பொம்மை சாவி குடுத்தா ஓடுமே தாத்தா?

கரெக்ட்டுடா கண்ணா.   அந்த சாவி மாதிரிதான் உயிர்.

ஆனா நமக்கு யாரும் சாவி குடுக்கறதில்லியே தாத்தா?

குழம்பினார்.   நம்மோட சாவியெல்லாம் ஏற்கெனவே உள்ளே இருக்குடா கொழந்தே….நாம பொறக்கறச்சயே உம்மாச்சி நம்மள சாவி குடுத்துதான் அனுப்பறார்…

அப்ப சாவி தீந்துட்டா உம்மாச்சி நம்மள திரும்பி எடுத்துண்டுடுவாரா தாத்தா?

மீண்டும் கண்ணை இருட்டிற்று.  தலை சுற்றினாற்போலவும் இருந்தது.  அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டார்.  இன்றைக்குப்பார்த்து ஏன் இப்படி ஆகிறது?  யசோதா இன்னும் வரவில்லையே என்று ஆதங்கத்துடன் வாசற்படியைப் பார்த்தார்.

சொல்லு தாத்தா?  உம்மாச்சி திரும்பி எடுத்துண்டுடுவாரா?  உம்மாச்சியாலதான் சாவி குடுக்க முடியமா?   என்னோட சாவி தீர்ந்துபோனா நீ என்ன செய்வே?

அவருக்குத் தலை நிஜமாகவே சுற்றியது.  குழந்தை ஏன் இன்றைக்கென்று இப்படியெல்லாம் கேட்கிறான்?

அப்படியெல்லாம் பேசாதடா கொழந்தே,  நீயெல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்….

அப்ப பாட்டியை உம்மாச்சிதானே கொண்டுபோனார்?  ஏன் இன்னும் சாவி கொடுத்து கொண்டுவந்து விடலே?   உம்மாச்சி நல்லவரா கெட்டவரா?

கடவுளே…..என்ன ஆகிக்கொண்டிருக்கிறது இங்கே?  இத்தனை நாள் கழித்து ஏன் அபிராமியை ஞாபகமூட்டுகிறான் அச்சுதன்?  என்று அயர்ந்தார்.  அவருக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

செத்த சும்மாயிருடா கொழந்தே….நான் ஒன்னக் குழப்பிட்டேன்னு நெனைக்கறேன்.  உயிர்ன்னா...அது சாவி மாதிரிதானே ஒழிய சாவி இல்ல..

போ தாத்தா … நீ என்ன ஏமாத்தற…. எனக்கு திராட்சை போறும்….இப்போ உயிரைக் குடு பாப்போம்….அது என்னன்னு நான் பாக்கணும்…

அதிர்ந்தார்…..பகவானே..அச்சுதா...பரந்தாமா….கொழந்தைதான் கேக்கறானா இல்ல நீதான் கேக்கறியா  புரியலியே… என்று புலம்பினார்.  கண்களில் நீர் முட்டியது.  அவர் பார்வையில் அச்சுதன் முகமும் பரந்தாமன் படமும் மாற்றி மாற்றி அலைபோல் அசைந்தன.

என்ன தாத்தா...அழறியா...ஒனக்குத் தெரியலேன்னா பரவால்ல...உம்மாச்சிகிட்ட கேட்டுச் சொல்லு… என்றான் அச்சுதன்.

கேட் திறக்கும் சப்தம் கேட்டது..  அப்பப்பா  என்ன வெய்யில்… என்ன கூட்டம் என்று அங்கலாய்த்தபடியே உள்ளே நழைந்தாள் யசோதா…வெராண்டாவை ஒரு நோட்டம் விட்டவள், எங்கே அப்பாவைக் காணோம் என்று யோசித்தபடியே உள்ளே வந்தாள்.

பூஜை அறை வாசலில் அப்பா உட்கார்ந்திருந்த கோலம் அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.  சுற்றுமுற்றும் பார்த்தபடியே அச்சுதா, அச்சுதா என்று மகனை அழைத்தாள்.

அச்சுதன் படுக்கை அறையிலிருந்து ஓடி வந்தான்…. அம்மா…. என்று கட்டிக்கொண்டான்.   ஏண்டா தாத்தா அங்கே ஒக்காந்திருக்காரு?  நீ எப்போ எழுந்தே?  என்ன பண்ணிண்டிருக்கே? என்று சரமாரியாய் கேள்விகளைத் தொடுத்தபடியே அவனை தூக்கிக்கொண்டு அப்பாவிடம் ஓடினாள்.

அப்பா, அப்பா, என்று அவரை எழுப்ப முயன்றாள்.  ஆனால் அவர் அப்படியே சரிந்து விழுந்தார்.  அம்மா….தாத்தாவை டிஸ்டர்ப் பண்ணாதே ….நான்தான் அவரை உம்மாச்சிகிட்ட உயிர்ன்னா என்னன்னு கேட்டுண்டு வரச் சொல்லியிருக்கேன்….என்று விளக்கத் தொடங்கினான் அச்சுதன்.  அதைக் கேட்ட யசோதா...அப்பா….. என்று மீண்டும் அலறியடியே தந்தையின் முகத்தை அசைத்தபடியே அழத்தொடங்கினாள்.