அம்மிக் குழவி
அம்மிக்குழவியும் அஞ்சரப்பெட்டியும்
ஆடிக்காத்து இல்லாமலேயே
அகப்படாம போயாச்சு - நம்வீட்டு
அம்மணிதான் குழவிபோல் ஆயாச்சு
குனிஞ்சு பத்தவச்ச கரியடுப்பு
புகையோடே போயாச்சு புகையாத
காஸ்அடுப்பு வந்ததுல - குனியாமல்
இல்லாள் இடுப்புதான் டபுளாச்சு
ஆட்டுக்கல்லும் ஆலமரநிழலும்
அப்படின்னா என்னன்னு கேட்கலாச்சு
ஆற்றுக்குளிப்பும் ஆட்டம்பாட்டமும் - இனிமே
வெறும் நெனப்புலதான் என்றாச்சு
தாம்பூலத்தட்டும் தலைவாழையிலையும்
பண்பாடுபோய் பகட்டுக்கென்றாச்சு
அருவாமனையும் தயிர்கடையும் மத்தும் - ஊரின்
அருங்காட்சியகத்துக்கே என்றாயாச்சு
பாக்குவெட்டியுமை் பனைவிசிறியும்
பரணில் பார்த்ததுபோல் நினைவாச்சு
பனைமட்டையில் நுங்குடன் பதனீர் - பிளாஸ்டிக்
பாட்டில் வந்ததுல பார்க்கவே முடியாததாச்சு
சாக்குக் கட்டிலும் சக்கரைப் பந்தலும்
சாம்பிராணிப் புகையும் சர்பத் பானமும்
அறுபது வயதை எட்டியவர்களுக்கே - கொஞ்சம்
அறிமுகம் ஆன சொற்களுமாச்சு
உரலும் உலக்கையும் ஊரின் வாசமும்
காண்பது அரிதான காலத்தில் வாழ்கிறோம்
திரைகடலோடியும் திரவியம் தேடுவதில் - நம்
மண்வாசனை தொலைத்த மனதோடு வாழ்கிறோம்
இத்தனை இன்பங்களும் இன்னும் இருக்கலாம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஏதோ மூலைகளில்
இயற்கையைத் துறந்து வசதியை மணந்ததில்
இனிமேல் அந்த வாழ்க்கை கனவுலகில்தான்.
என்றேனும் ஏகாந்தத்தில் ஞாபகம் வாட்டும்போது
எண்ணங்கள் நொடியில் நினைவு கொணர்ந்து
ஆயிரம் இன்னல்களுக்கு இடையிலேயும் - சற்று
ஆறுதல் தருமே கானல்நீராய்!
===
July 29, 2024, in response to this poem shared on Whatsapp:
அம்மிக் குழவி எங்கே
அஞ்சரப் பெட்டி எங்கே
அரைச்ச கறி எங்கே
அரிக்கன் சட்டி எங்கே
அரிக்கன் இலாம்பு எங்கே
அடுப்புக் கரி எங்கே
அரைஞாண் கயிறு எங்கே
அயலவர் உறவு எங்கே
ஆட்டுக் கல்லு எங்கே
ஆடு மாடு எங்கே
ஆலய மணியோசை எங்கே
ஆலமர நிழல் எங்கே
ஆம்பல்ப் பூக்கள் எங்கே
ஆற்றுக் குளிப்பு எங்கே
ஆவரசம் பூ எங்கே
ஆடும் துலா எங்கே
தாம்பூலத் தட்டு எங்கே
தலைவாரிப் பொட்டு எங்கே
தலைவாழை இலை எங்கே
தயிர்கடையும் மத்து எங்கே
தட்டுத் தாம்பாளம் எங்கே
தட்டு முட்டுப் பெட்டி எங்கே
தவறணைக் கள்ளு எங்கே
தலைப் பாகையும் எங்கே
பாக்கு வெட்டி எங்கே
பனங் கட்டி எங்கே
பாணிப்பானாட்டு எங்கே
பதநீர் இதமாய் எங்கே
பட்டை வாளி எங்கே
பனையோலைப் பாய் எங்கே
பனை விசிறி எங்கே
பனங்காய்பப் பணியாரம் எங்கே
சாக்குக் கட்டில் எங்கே
சாய்மனைக் கதிரை எங்கே
சந்தி மதகு எங்கே
சத்தகக் காம்பு எங்கே
சக்கரைப் பந்தல் எங்கே
சாம்பிராணிப் புகை எங்கே
சர வெடிகள் எங்கே
சர்பத் பானம் எங்கே
உரல் சத்தம் எங்கே
உலக்கைப் பிடி எங்கே
உழும் ஏர் எங்கே
உப்புக் கருவாடு எங்கே
உயிரோடு கோழி எங்கே
உடன்பிடித்த மீன் எங்கே
ஊசிக் கணவாய் எங்கே
ஊர் வாசம் இங்கு எங்கே
ஏதிலியாய் வந்து இங்கே
ஏங்கிடும் வாழ்க்கை இங்கே
என்ன வாழ்க்கையென்று இங்கே
ஏங்கிடுவோர் பலர் இங்கே
என்னவோ உயிர் இங்கே
எண்ணமெல்லாம் அங்கே
எப்போது போவோம் அங்கே
என்றுதானே இருக்கிறோம் இங்கே
===
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home