Tuesday, February 26, 2019

பாத்திக்கும்மா


ட்டீ....வேஃபா....   ட்டீ.....வேஃபா...



சீனி மாமாவிடமிருந்து வாட்ஸப் மெஸேஜ் வந்திருந்தது.   மும்பை, போபால், ஹெளரா மற்றும் வாரணாசியில் இருந்த தன் அனைத்து உறவினர்களுக்கும் எழுதியிருந்தார்.



என்னடா..மறுபடியும் மாமாவோட லொள்ளா? என்று மும்பையிலிருந்த கணேஷ் வாரணாசியிலிருந்த தன் சித்தப்பா மகன் அருணிடம் புலம்பினான். அதேபோல் அனைவரும் அனைவரிடமும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டனர்.



விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.  ஒரு ஆடியோ க்ளிப் அனுப்பியிருந்தார்.  அது என்னவென்று அவருக்குப் புரியவில்லையாம்.  உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்.  அல்லது அனைவரும் வரும் சம்மர் வெக்கேஷனுக்கு என் வீட்டுக்கு நாலு நாள் வந்து தங்கி நீங்களே நேரில் கேட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.



ஒருத்தர் விடாமல் அனைவரும் மாற்றி மாற்றி கேட்டாலும் அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை.  ஒரு வயதான ஆண் தன் கனத்த, கரகரத்த குரலில் உச்சஸ்தாயியில் ட்டீ….வேஃபா (ஆங்கிலத்தில்  கிட்டத்தட்ட ddeee….. Wayfaa…..) என்று மறுபடியும் மறுமடியும் கத்திக்கொண்டிருந்தான்.  கிட்டத்தட்ட  மாமாவின் குரல் மாதிரி இருந்தது.  ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.



மாமாவின் வீடு பழைய வீடு, மிக விசாலமான இடத்தில் சுற்றி தோட்டமும் மரங்களுமாக நடுவில் சகல வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த பெரிய வீடு.   சமையலுக்கு ஆள் வைத்திருந்தார்.   அனைவருக்கும் வேளாவேளைக்கு காபி டிபன் சாப்பாடு அவர்களின் இஷ்டம்போல் கிடைத்தது.  எனவே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  மாமாவிடமிருந்து அழைப்பு வந்தாலே குழந்தைகள் போகலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.



மாமா மிகவும் நல்ல மனிதர்.  எலலோரிடமும் நன்றாகப் பழகி உறவுகளை அழுத்தமாக தக்கவைத்துக் கொண்டிருந்தார்.  சற்றே நகைச்சுவை உணர்வு மிகுதி.  கூடவே சற்று குசும்பும் வேறு.  எனவே திடீர் திடீரென்று இந்த மாதிரி ஏதாவது செய்வார்.  சரியாக பதில் சொல்லிவிட்டால் அத்தோடு விட்டுவிடுவார்.  மெத்தனமாக இருந்துவிட்டாலோ. ஒருத்தராவது சொல்லும்வரை அனைவரது உயிரையும் வாட்ஸப்பிலேயே வாங்கிவிடுவார்.  அதற்காகவே அனைவரும் (அலருக்குத் தெரியமால்) ஒன்றுசேர்ந்து அலசி ஆராய்ந்து அவர் கட்டாயமாக அடுத்த வாரம் வந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பதற்கு முன்பே எப்படியாவது கண்டுபிடித்து அவரிடமிருந்து தப்பி விடுவார்கள்.



தப்ப முடியாமல் மாட்டிக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  ஏண்டா, உங்களையெல்லாம் சின்ன வயசிலே எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா எடத்துக்கும் கூட்டிண்டு போயிருக்கேன், உங்க அப்பா அம்மா திட்டினாக்கூட பரவாயில்லேன்னு எத்தனை தடவை சினிமா சர்க்கஸ்ன்னு உங்களுக்கோசரம் என் பணத்தையும் நேரத்தையும் செலவழிச்சிருக்கேன்,  இப்போ என்னாலதான் வெளியே போக முடியல...நீங்களாச்சும் ஒரு ரெண்டு நாள் வந்துட்டுப் போனா சந்தோஷமா இருக்கும்னுதானே கூப்பிடறேன்...எனக்கோசரம் இதுகூட பண்ண முடியலயா உங்களுக்கு? என்று மூக்கை அறுத்தாற்போல் கேட்பார், கோபித்துக்கொள்வார்.



ஒருமுறை அனைவரும் கூடியிருக்கும்போது அவர்களே மாமாவிடம் சொல்லிவிட்டனர்.  மாமா முந்தையமாதிரி வாழ்க்கை இப்போ இல்லை. உங்களுக்கே தெரியும்.  குழந்தைகள் வளர்ந்திண்டு வராங்க.  லீவ் கிடைக்கறதெல்லாம் இனிமே கஷ்டம்.  எங்களுக்கும் ஆபீஸ் வேலையெல்லாம் ரொம்ப டைட்டாயிண்டேயிருக்கு.. என்றெல்லாம் காரணத்தை அடுக்கினார்கள்.



அதற்குத்தான் மாமா செக் வைத்துவிட்டார்.  நானென்ன ஒவ்வொரு வருஷமுமா வரச்சொல்றேன்?  மூணு வருஷத்துக்காவது ஒரு தடவ வாங்கன்னுதான் சொல்றேன்.  அதுலேர்ந்தும் தப்பிக்கனும்னா ஏதாவது புதிர் போடறேன்.  பதில் சொன்னா அந்த வருஷம் வேண்டாம்...ஆனா அடுத்த வருஷம் கட்டாயமா வரணும்….எனக்கும் வயசாயிண்டே இருக்கேடா….உங்களவிட்டா எனக்கு யார் இருக்கா?  என் சொத்துகூட எனக்கப்புறம் நீங்கல்லாம் எப்பவேணா இங்கே வந்து தங்கி அனுபவிக்கலாங்கற மாதிரி தான் எழுதியிருக்கேன். உங்களுக்கு இங்கே வரும்போது ஒரு பைசா செலவுகூட வைக்காமதான நான் பாத்துக்கறேன்?  எனக்கோசரம் இதுகூட செய்யக்கூடாதா என்று கண்ணில் நீர் முட்ட கெஞ்சினார்.



அப்போது சம்மதித்ததுதான்.  அதற்கப்புறம் கட்டாயமாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கொருமுறை அனைவரும் சேர்ந்து வந்து மாமாவையும் சந்தோஷப்படுத்தினர்.



குழந்தைகளுக்குக் குதூகலமாக இருந்தாலும் மாமா அந்த இரண்டு (அல்லது மூன்று) நாட்கள் சும்மா இருக்கமாட்டார்.  பழைய கதைகளை சொல்வதுபோல் ஆரம்பித்து அத்தனை வீட்டு ரகசியங்களையும் அனைவரின் முன்னமேயே போட்டு உடைத்து, தற்போதைய விவரங்களையும் துருவித் துருவிக் கேட்பார். 



ஏண்டா ராமா, இத்துணூண்டு மார்க்குக்கு உன் பையனுக்கு இந்த காலேஜில எப்படிடா எடங்கெட்சது?  ஏதாவது ரெகமெண்டேஷன் பிடிச்சியா இல்ல யாருக்காவது நெறய தண்டம் அழுதியா? என்று அனைவரின் முன் கேட்கும்போது ராமனுக்கு அவரை அறையலாம் போல் இருக்கும்.  இத்துணுண்டு மார்க்குன்னு இவருக்கு எப்படி தெரியும்?  தான் யாரிடமும் சொன்னதில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கையிலயே அருணை நோக்கி அடுத்த அஸ்த்திரம் பாயும்.



ஏண்டா அருண், போன மாசம் ஒம்பொண்டாட்டி இங்க வந்திருந்தாளாமே?  பாக்யா வீட்டுக் கல்யாணத்திலே யாரோ பார்த்திருக்கா, எனக்குத் தகவல் வந்தது. இவ்வளவு தூரம் வந்தவ இங்க ஒரு நடை வந்துபோக சரிப்படலையா? அவ மட்டும்தான் வந்தாளா இல்ல நீயும் கூட வந்திருந்தியா? என்பார்.  அவள் வந்ததென்னவோ வாஸ்தவம்.  ஆனால் அது அவளது தூரத்து சொந்தத்தில் கல்யாணம்.  மாமாவுக்குப் பதில் சொல்வதற்குமுன் ரகசியமாய் வைத்திருந்த அவள் பயணத்தைப் பற்றிஅவருக்கு யார் தகவல் கொடுத்தார்கள் என்றுதான் அருண் மனதில் கேள்வி ஓடும்.



பெண்களையும் அவர் விடுவதில்லை.  மைதிலி, என்னதான் சமையல்காரன் வெச்சிருந்தாலும் உன் மாமி மாதிரி ஒரு மாவடு போடத் தெரியலடி இவனுக்கு..கொஞ்சம் சொல்லிக்குடுத்துட்டுப் போயேன்… என்பார். இத்தனைக்கும் மாமியை இவர்களெல்லாம் பார்த்ததுகூட கிடையாது. அவளும் உச்சி குளிர்ந்து அவர் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பாள்.   சமையல்காரனுக்குத்தான் தெரியலேன்னா வீட்டுப்பெண் மைதிலிக்குக்கூட மாவடு போடத் தெரியலை என்று எல்லாரிடமும் மாமா சொல்லிக்கொண்டிருப்பதாகத் ஒரு மாதம் கழித்து வேறு யார் மூலமாகவாவது அவளுக்குத் தெரியவரும்.



பிரகாஷ் நாலு பிள்ளைங்களையும் திருப்பதி கூட்டிண்டு போய் மொட்டை போடணும்னு போன மாசம் வந்துபோனான்.  திருப்பதி போனானோ இல்லயோ தெரியல்ல...பின்னாடி தோட்டத்துக்குப்போனா அவனோட பசங்க அத்தனை மா, கொய்யா, நெல்லி மரத்துக்கும் மொட்டையடிச்சி விட்டுருந்தாங்க….என்று மகிழ்ச்சியுடன் நொந்துகொள்வார்.



கணேஷ் ஒருவாட்டி என்ன பண்ணான் தெரியுமோ...அத்தனை பேரும் வந்திருக்காங்கன்னு பட்சணம் வாங்கி தட்டுல நெரப்பிண்டு அவன்கிட்ட குடுத்து தட்டை காலி பண்ணுன்னு சொன்னா, அவன் அஞ்சே நிமிஷத்திலே அதிலிருந்த தட்டையையெல்லாம் தின்னுட்டு தட்டை காலி பண்ணிட்டேன்  அடுத்தது எதை காலி பண்ணனும் மாமா..ன்னு வந்து நிக்கறான் பாரு...நானே அசந்துட்டேன் என்று உரக்கச் சிரித்தார்.  கணேஷ் இன்னமும் அந்தக் கதை வரும்போதெல்லாம் அசடு வழிய வேண்டியிருக்கும்.



எனவே வாக்குக் கொடுத்த அவசியம் ஏற்பட்டாலொழிய மாமா வீடு என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்றே பெரியவர்கள் நினைத்தார்கள்.  தப்பிக்க என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார்கள்.  ஆனால் மாமா கெட்டிக்காரர்.  அவர் குழந்தைகள் மூலம் தான் நினைத்ததைச் சாதித்துக் கொள்வார். இப்போதுகூட அருணுடன் பேசும்போதே அவன் மகள் ஐஸ்ர்யாவிடம் தன் வீட்டில் பிறந்துள்ள ஐந்து பூனைக்குட்டிகளின் அழகை வர்ணித்துவிட்டார்.  அதிலிருந்தே அவள் குதித்துக்கொண்டிருக்கிறாள்.  ஹையா, நாம சம்மர்க்கு மாமா வீட்டுக்குப் போறோம்… என்று.



அவளிடமும் சொல்லிவைத்திருந்தார் மாமா.  இதோ பாரு ஐசுக்குட்டி...உங்கப்பா எப்படியாவது என் வீட்டுக்கு வர்றதை அவாய்ட் பண்ணனும்னு பாப்பான்.  அடுத்த வருஷம் நிச்சயமா போகாலாம்ணு பிராமிஸ் பண்ணுவான். அதுக்குத்தான் நான் ஒரு காரியம் பண்ணியிருக்கேன்.  வழக்கம்போல் குழப்பமாக அவனுக்கு ஒரு க்விஸ் அனுப்பியிருக்கேன்.  அதுக்குப் பதில் தெரியலேன்னா கண்டிப்பா எல்லாரையும் கூட்டிண்டு ரெண்டு நாள் இங்கே வந்துத்தான் ஆகனும்னு சொல்லியிருக்கேன்.  அவன்கிட்ட மாத்திரம் இல்ல….எல்லார்ட்டையும் சொல்லியிருக்கேன்.. அதனால எல்லாரும் வருவாங்க...கட்டாயம் நச்சுப் பண்ணிட்டேயிரு என்ன? என்று தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார்.



ராமன், அருண், மைதிலி, கணேஷ், சுகுமார் அனைவரும் மாமாவின் ஆடியோவை வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டிருந்தனர்.  தங்கள் உறவனர் மற்றும் நண்பர்களிடம்கூட ஷேர் செய்து பார்த்தனர்.  ஆனால் யாருக்கும் பதில் தெரியவில்லை.  சரி எப்படியும் இந்த வருஷம் இல்லாட்டி அடுத்து வருஷம் போய்த்தானே ஆகனும்?  அதுக்கு இப்பவே போய் வந்துவிடலாம் என்று முடிவெடுத்னர்.



மாமாவின் வீடு களைகட்டியது.  கீழே இரண்டு ரூம், மாடியில் மூன்று என ஐந்து ரூம்களையும் வெளியூர் உறவினர்கள் எடுத்துக்கொண்டனர்.  மாமா வழக்கம்போல் எந்நேரமும் ஹாலில் உள்ள அவரது தாத்தா கால ஓய்வு நாற்காலியில் இரண்டு கால்களையும் விரித்தபடி சாய்ந்து கொண்டிருந்தார். இரவானால் பூஜை அறைக்கு அருகில் உள்ள அவரது படுக்கையறைக்குப் போய்விடுவார்.



இருக்கும் இரண்டு நாட்களில் யார்யார் எங்கெங்கு போய்வருவது என்று அவரவர் திட்டம் போட்டுக்கொண்டிருக்க, மாமா மாத்திரம் எங்க வேணா போய் வாங்க ஆனால் கட்டாயம் சாயந்திரம் ஏழு மணிக்குள்ள வந்திடனும், நான் படுக்கற வரைக்கும் என்னோடதான் பேசிண்டிருக்கணும் என்று ரூல் போட்டு விடுவார்.  அனைவருக்கும் அது செளகரியமாகவும் இருந்தது. காலை முதல் வெளியில் சுற்றிவிட்டு வந்த அலைச்சல் எல்லாம் மறக்கும்படியாக அனைவரும் சேர்ந்து மாமாவுடன் கலகலவென்று பேசிக்கொண்டே சூடான சுவையான  ஹோம்-மேட் டின்னரும்முடித்துக்கொள்வதென்றால் கசக்குமா என்ன?



சாயந்திரமும் வந்தது.



அப்புறம், மாமா, சொல்லுங்க - இந்த ரெண்டு வருஷத்தில யார்யாரையெல்லாம் கட்டாயமா வரவெச்சீங்க - என்ன விஷயமெல்லாம் பேசிக்கிட்டீங்க? - இது கணேஷ்.



எனக்கு எத்தனபேர்டா இருக்கா?  - என் தங்கச்சிங்க கெளசி, துளசி  ரெண்டுபேர் - அதான் இப்போ வந்திருக்கிற உங்களோட ஃபேமிலி, என்னோட பெரியப்பா கோதண்டம் அப்புறம் என்னோட சித்தி விசாலம் இவங்களோட பசங்க ஃபேமிலி அவ்வளவுதான்.  நீங்களும்தான் பாவம் வளர்ந்தபெறகு எங்கெங்கெங்கயோ செட்டில் ஆயிட்டீங்க.  அவங்கவங்க குடும்பத்தை ஒண்ணா சேத்துவெச்சுப் பாக்கறதுல எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்.  அதனாலதான் மெனக்கெட்டு உங்களையெல்லாம் இங்க வரவெக்கறேன்.



போன தடவ நீங்க வந்து போனபிறகு கோதண்டம் பசங்க யாரும் வரல்ல.  என்னமோ சொத்துத் தகராறுல பிடிவாதமா இருந்துண்டு ஒருத்தனை ஒருத்தன் பாக்காம சண்டை போட்டுண்டு இருக்கானுங்க.  அதுக்கு விசாலம் கொழந்தைங்க உங்களைமாதிரியே தங்கம்.  அத்தனைபேரும் ஒண்ணா வந்து இருந்து ஊர்க்கதையெல்லாம் ஷேர் பண்ணிண்டு என்னையும் விசாரிச்சுட்டுப் போனா.  விசாலம் பேரன் பேத்தியெல்லாம் இப்போ அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு உலகத்தில எல்லா இடத்துக்கும் போய்வந்துண்டு இருக்கா.  அந்தக் கதையெல்லாம் நேர்ல கேக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?



வெளிநாடு போனாதான் ஒசத்தின்னு நான் சொல்லல.  வெளி நாட்டுக்குப் போனாலும் நம்ம சம்பிரதாயத்தை ஒண்ணுவிடாம ஃபாலோ பண்ணி அங்க இருக்கிறவாகிட்ட நல்ல பேர் வாங்கறா பாரு, அதைச் சொல்லணும்.  அதுக்கோசரம் இங்கேயே இருக்கிறவ தாழ்த்தின்னும் நான் சொல்லல.  இப்ப உங்க பசங்களையே எடுத்துககோங்க - அப்ப வந்து நம்ம ராமன் பையன் ரமேஷுக்கு எப்படி என்ஜிநியரிங் காலேஜ் கெடச்சதுன்னு கேட்டேன், வாஸ்தவம்.  ஆனா இப்போ பாரு - அவன் டாப் கிளாஸ்ல பாஸ் பண்ணி அமெரிக்காகாரன் கம்பெனியிலே வேல குடுத்தும்கூட இவன் வேணான்னு சொல்லி நம்ம நாட்டுக்கோசரம்தான் உழைப்பேன்னு சொல்றான்.  எனக்குப் புல்லரிச்சுப்போச்சு போ.  ..என்றதும் ராமன் முகத்தில் புன்னகை அரும்பியது.



இவ்வாறாக பல விஷயங்கள் அலசப்பட்டபின் தான் அருணுக்கு மாமா அனுப்பிய ஆடியோ ஞாபகம் வந்தது.  மாமா, கேக்க மறந்தே போயிட்டேம்பாருங்கு.  அந்த ஆடியோ ஒண்ணு அனுப்பியிருந்தீங்களே, அது என்ன மாமா...நாங்கல்லாம் மண்டைய ஒடச்சும்கூட எங்களுக்குத் தெரியல..என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கதவைத் தட்டிக்கொண்டு பிச்சுமணி உள்ளே நுழைந்தார்.



வாங்கோ பிச்சுமாமா எப்படியிருக்கீங்க என்று அனைவரும் கேட்டதும் புன்னகையுடன் பதிலளித்தார் பிச்சுமாமா.  உங்க சீனிமாமா இருக்கும்போது எனக்கென்ன குறை?  இத்தனைக்கும் நான் சொந்தம்கூட இல்ல.  அவனோட ஆறு வருஷம் ஹைஸ்கூல்ல படிச்ச கிளாஸ்மேட் மாத்திரம்தான்.  ஆனா அவன்தான் உறவு நட்பு விட்டுப்போகக்கூடாதுன்னு என்னை விடாம பிடிச்சிண்டிருக்கான்.  நீங்கல்லாம் வர்றதைக்கூட அவன்தான் சொன்னான். அதான் பாக்க வந்தேன்.. என்றார்.



அதுசரி பிச்சுமாமா, இதோ பாருங்க மாமா எங்களையெல்லாம் ஒரே ஒரு கேள்வி கேட்டு பைத்தியமாக்கிண்டிருக்கார்.  உங்களுக்காவது பதில் தெரியறதா பாருங்க… என்று சொல்லியபடியே மைதிலி அவளது மொபைல் போனை எடுத்து அந்த ஆடியோவை ஒலிக்க வைத்தாள்.



.. ட்டீ…...வேஃபா…..         ட்டீ…….வேஃபா…….



இரண்டு முறை கேட்ட பிச்சுமாமா, இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு,ஆனா சரியா தெரியலியே…. என்று யோசிக்க ஆரம்பித்தார்.  நல்லா ஞாபகம் பண்ணுடா பிச்சு, உனக்கும் எனக்கும் இது ரொம்பப் பிடிச்ச விஷயம்… இதை வெச்சு நாம் சின்ன வயசில எல்லாரையும் சிரிக்க வெச்சிண்டிருந்தோம்… என்று உசுப்பிவிட்டார் மாமா.



சிறிது நேரம் நெற்றியைக் கசக்கியபடியே உட்கார்ந்திருந்த பிச்சுமாமா பிறகு தலையை பக்கவாட்டில் ஆட்டியபடியே தெரியலடா சீனி...நீயே சொல்லிடு என்றார்.



சரி, இதுவாவது ஞாபகம் வருதா பாரு என்று தொண்டையைச் செருகியபடியே பொய்யி…..பொய்யி…..என்றார்.    ஏய் இது அந்த அரிசிப்பொரிக்காரன் தானே, பொரிமூட்டையை தலையில் வெச்சுண்டு வெறுமே பொய்யி பொய்யின்னு கத்திண்டிருப்பான்.  நமக்குப் புரியாம வெளில போய் பார்த்தபின்தான் தெரியும் அரிசிப்பொரி..ன்னு கத்தறதுக்குப் பதிலாகஅவன் அரிசியை முழுங்கிட்டு பொரியை மாத்திரம் பொய்யி….பொய்யின்னு வித்துண்டிருப்பான்.. என்றார்.



கரெக்ட்...பரவாயில்லை கண்டுபிடிச்சிட்டியே...அதே மாதிரிதான் இதுவும்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணு என்று மீண்டும்  ட்டீ…..வேஃபா என்று நீ...ட்டி கூவினார்.   அப்பவும் தெரியலடா என்று பிச்சுமாமா கூறியவுடன், சரி நாம சின்ன வயசில ஸோன்பப்படி சாப்பிடது ஞாபகம் இருக்கா? என்றார்.  சட்டென்று பிரகாசமானார் பிச்சுமாமா….டேய்….அதுதானா இது...என்று சொல்லி கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்தார்.  அவர் சிரிப்பதைப் பார்த்து குழந்தைகள் எல்லாம் சிரிக்கத் தொடங்கினர்.  அவர்கள் சிரிப்பைப் பார்த்து அனைவரும் சிரிக்க, மாமா இடைமறித்து, சிரிச்சதெல்லாம் போதும் சொல்லுடா என்றார்.



சிரிப்தை ஒருவாறு அடக்கிக்கொண்ட பிச்சுமாமா...ஒண்ணுமில்லம்மா… அந்தக் காலத்திலே ஹார்லிக்ஸ் போன்வீட்டா, வாசனை எண்ணெய், டானிக் மருந்தெல்லாம் கண்ணாடி பாட்டில்ல தான் விப்பாங்க.  எல்லார் வீட்டிலேயும் எப்படியும் ஆறுமாசத்துக்கு கொறஞ்சது இருபது பாட்டிலாவது சேந்துடும்.  அத்தோடு பழைய நியூஸ் பேப்பரையும் வாங்கறதுக்கு மூணுசக்கர வண்டியிலே ஒருத்தன் சுத்துவான்.  .கிளாஸ் பாட்டிலை புட்டின்னு சொல்லுவாங்க..நீங்ககூட சோடாபுட்டி கண்ணாடின்னு கேள்விப்பட்டிருப்பீங்க….அவன்தான் புட்டியையும் பேப்பரையும் வாங்கறதுக்கு ஸ்டைலா  ட்டீ….வேஃபா…. ன்னு உரக்க கத்திண்டே போவான்.   ரொம்ப கொஞ்சமா பாட்டிலோ பேப்பரோ போட்டா அதுக்கு காசு தராம பெரிய பாட்டில்ல ஸோன்பப்படி வெச்சிருப்பான்...அதுலேந்து கொஞ்சமா எடுத்துத் தருவான்...அதுக்கோசரமே நானும் உங்க மாமாவும் கெடைக்குற பாட்டிலெல்லாம் கொஞ்சகொஞ்சமா அவன் கிட்ட வித்து ஸோன்பப்படி சாப்பிடுவோம்…  அப்பல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்..ஞாயித்துக்கெழமை ரெண்டு மணியானாலே நாங்களே ட்டீ… வேஃபான்னுதான் பாடிட்டிருப்போம்… .என்று பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார்.



பாத்திக்கும்மா….என்று திடீரென்று முரளியின் குழந்தை ஷ்யாம் உரக்கக் கத்தினான்..   எல்லோரும் திடுக்கிட்டு என்னாச்சு என்னாச்சு என்று பதறினர்.  ஒண்ணுமில்லே தாத்தா...டின்னருக்கு சப்பாத்தி குருமா பண்ணினா எனக்குப் பிடிக்கும்னு சொன்னேன்..என்று அவர்களை கிண்டலடித்தான் குழந்தை ஷ்யாம்.

Monday, February 18, 2019

வலி

கவலையோடு காத்திருந்தார் சத்யமூர்த்தி.  குமாரின் வேதனையைத் தீர்க்கும் வழி இன்றாவது கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நாற்காலியில் குமாரின் அருகில் அமர்ந்திருந்தார்.  ‘என்னப்பா நினைக்கறீங்க நீங்க, இன்னிக்காவது ஏதாவது விடை கிடைக்குமா?” என்று அவரின் கவலையை மேலும் அதிகரிக்கும் விதமாக வினவினான் குமார்.  



குமார் சத்தியமூர்த்தியின் மகன் அல்ல.  அவரது முதலாளி..அதாவது முதலாளியின் மகன்.  அவர் சிறுவனாக இருந்தபோதே மில் ஓனர் கண்ணன் வீட்டில் ஒரு எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக வீட்டில் தனது பொறுப்பான வேலையாலும், சுறுசுறுப்பாலும் நல்ல பெயர் சம்பாதித்து எல்லா வேலையாட்களையும் மேய்க்கும் மூத்த வேலையாளாக உயர்ந்தவர்.  அவருக்கு இருபது வயதாக இருக்கும்போது பிறந்தவன் குமார்.  தந்தையைவிட அதிக நேரம் அவருடன் பழகியதாலோ அல்லது குழந்தைப் பருவத்திலிருந்தே தூக்கி வளர்த்த பாசத்தினாலோ என்னவோ குமார் எப்போதும் சத்யமூர்த்தியை அப்பா என்றே அழைப்பான்.   அவர் அவனை நேரத்திற்கேத்தாற்போல் தம்பி அல்லது சின்னமுதலாளி என்றே அழைப்பார்.  இப்போதெல்லாம் பெரும்பாலும் தம்பிதான்.



குமார் சாதாரணமானவன் அல்ல.  செல்வந்தர் வீட்டில் பிறந்த செருக்கு நிறையவே உண்டு.  சிறுவயது முதலே யாருக்கும், ஏன் அவனது தந்தைக்கும்கூட அடங்காதவனாகவே வளர்ந்தான்.  அவனுடைய போக்கு சற்றும் பிடிக்காத அவனது தந்தை சிறிது சிறிதாக அவனை கண்டிப்பதை விட்டுவிட்டார்.  அதனால் மேலும் கெட்டுப்போனான் குமார்.  அனைவரையும் பாடாய்ப் படுத்தினான்.  வீட்டிலும் சரி, மில்லிலும் சரி,வேலையாட்கள் அவனைப் பார்த்தாலே நடுங்கி ஓடினர்.  அவனிடம் சத்யமூர்த்தி வாங்கிய வசவும் அடியும் உதையும் ஏராளம்.  ஆனாலும், தன் குழந்தைபோலவே பாசத்துடன் வளர்த்ததால் சத்யமூர்த்தி அவனது குறைகளை பொருட்படுத்தாமல் அவனது மனப்போக்கு அறிந்து அவனுக்கு அணைப்பாகவும் ஆதரவாகமவும் பக்குவமாக தகுந்த சமயத்தில் புத்திமதி சொல்லிஅவன் போக்கில் விட்டுப்பிடித்து நடந்தபடியானல் அவர்மேல் மட்டும் அவன் நிறைய மரியாதை வைத்திருந்தான்.  அவர் சொல்லை ஓரளவு கேட்பான்.  



இப்போது குமாருக்கே ஐம்பது வயதாகிவிட்டது.  சில வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தையார் நோய்வாய்பட்டு காலமானார்.  தாயார் அவருக்கும் முன்னமே மறைந்துவிட்டார்.  மனைவியும், மகனும் மகளும் பண்டிகை மற்றும் வீட்டு விசேஷங்களில் மட்டும் கூடியிருந்தனரே தவிர,

குமாரின் கோபமான போக்கால் இன்றளவும் எப்போது எதனால் யார் முன்னால் எப்படி ஏசுவானோ என்ற பயத்துடன்  சற்று தள்ளியே ஒட்டாமல் இருந்தனர்.  



குமாருக்கு கடந்த நான்கைந்து வருடங்களாக வயிற்றில் ஒருவித வலி இருந்துகொண்டே இருந்தது.  ஊரில் உள்ள அத்தனை வைத்தியர்களையும் பார்த்தாகிவிட்டது, அவர்கள் சொன்ன அத்தனைவித வைத்தியங்களையும் எடுத்துக் கொண்டாகிவிட்டது.  ஆனாலும் அவன் வயிற்றுவலி மட்டும் சற்றும் அடங்காமல் எந்நேரமும் அவனுக்கு சங்கடம் கொடுத்துக்கொண்டே இருந்தது.



மூளைக்கு எட்டிய வழிகளையெல்லாம் ஆராய்ந்தும் பலன் இல்லாதபடியால் அதற்கு அப்பால் என்ன செய்யமுடியும் என்று முதல் முறையாக சற்று தணிந்து உறவினர்களில் மூத்தவர்களையும் தன் மனைவியையும் கலந்தாலோசித்தான் குமார்.  அவர்கள் தந்த யோசனைகளுள் ஒன்று ஒரு நல்ல ஜோசியர் அல்லது மலையாள தந்திரி யாரிடமாவது அவனுடைய ஜாதகத்தை காண்பித்து அவர்கள் ஏதாவது தீர்வு தருவார்களா என்று பார்ப்பது.  



அனுபவ அறிவால் இதுவும் நல்லதென்று தோன்றவே, சத்யமூர்த்தியும் குமாருக்கு இந்த யோசனையைப்பற்றி பரிந்து பேசி, தான் கேள்விப்பட்டிருந்த ஒரு நம்பூதிரியைப் பார்க்க ஒருவாறு சம்மதிக்க வைத்தார்.  அவரைப் பார்க்க மூன்று மாதங்களுக்கு முன்னமே விண்ணப்பித்திருந்தனர்.  இப்போதுதான் அவர் நேரம் கொடுத்திருந்தார்.  சேலத்திலிருந்து திருச்சூருக்கு காரிலேயே வந்துவிட்டனர் சத்யமூர்த்தியும் குமாரும்.  பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தாலும் நாராயண நம்பூதிரியின் வீட்டிற்கு ஒன்பது மணிக்கே வந்துவிட்டனர்.  முன்னமே இன்னும் இரண்டு பேர் காத்திருந்தபடியால் இவர்களை நாற்காலியில் உட்காரவைத்துவிட்டுச் சென்றிருந்தனர் பணியாட்கள்.



பத்து என்பது பதினொன்றரை வரைக்கும் நீண்டது. ஒரு வழியாக உள்ளே அழைத்தனர்.  உள்ளே ஒரு பெரிய அறை நடுவில் கம்பீரமாக பலகைமேல் வீற்றிருந்தார் நம்பூதிரி.  எதிரில் இரண்டு பக்கம் குத்துவிளக்குகள்.  இடையில் கோலமிட்டு அதன் நடுவில் ஒரு பெரிய கலசத்தில் சந்தனம் குங்குமம் பூசப்பட்டிருந்த தேங்காயும், ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு மற்றும் சில பூஜைப் பொருட்களும் இருந்தன.  நம்பூதிரிக்கு எதிர்ப்பக்கமாக இன்னொரு மனைப்பலகை இருந்தது.  புன்னகைத்தபடியே அவர்களை வரவேற்ற நம்பூதிரி, “யாருக்கு?” என்று கேட்க, சத்யமூர்த்தி குமாரை முன் நிறுத்தினார்.  “ஒக்காருங்கோ” என்று குமாருக்கு ஆணையிட்டவிட்டு, சத்யமூர்த்தியை அறையின் ஓரத்தில் இருந்த பாயில் அமரச்சொல்லி சைகை காட்டினார் நம்பூதிரி.  



குத்துவிளக்கின் திரியை சற்று மேலே வரும்படி ஒரு தீக்குச்சியால் தூண்டிவிட்டு சுடரை பிரகாசப்படுத்தினார்.  கைகளை கோர்த்துக்கொண்டு “அம்மே பகவதி….” என்று கண்களை மூடியபடியே பிரார்த்தித்துக்கொண்டு ஐந்து நிடங்கள் மந்திர உச்சாடனம் செய்தார்.  பின்னர் குமாரை தீர்க்கமாக நோக்கியபடியே “என்ன வினை?” என்று கேட்க, தன் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, தன் தீராத வயிற்று வலியைப் பற்றி விவரமாகக் கூறினான் குமார்.  



ஜாதகத்தை ஆராய்ந்த நம்பூதிரி மேலும் அவனது சரித்திரத்தையே அறிந்துகொள்ளும்விதமாக பல கேள்விகள் கேட்டபின் ஒரு எலுமிச்சம்பழத்தையும் சில கொட்டைப்பாக்குகளையும் குமாரின் கையில் கொடுத்து இரண்டு கைகளாலும் அவற்றை இறுக்கமாக மூடியபடியே தேவியைப் பிரார்த்தனை செய்யும்படி பணித்தார்.  பின்னர் அவற்றை வாங்கி ஒரு தாம்பாளத்தில் கையைச்  சுழற்றியபடியே வீசி, எலுமிச்சம்பழம் மற்றும் பாக்குக் கொட்டைகள் விழுந்திருந்த இடங்களைக் குறித்துக்கொண்டு தன் கைகளிலேயே விரல்களை நீட்டி மடக்கி நிறைய கணக்குகள் போட்டுக்கொண்டார்.   மீண்டும் மந்திர உச்சாடனம் செய்தார்.  சற்ற நேரத்திற்குப் பின் கண்களைத் திறந்து, “ஒன்னும் சரியில்லா.  தாராள குழப்பங்ஙளுண்டு. வளர தோஷமுமுண்டு.  பக்ஷே  மார்க்கம் ஒண்ணு இருக்கு.  நிங்ஙளால் முடியுமா எனிக்கறியில்லா” என்றார்.  



வழி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட குமார், என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள், நிச்சயமாக செய்கிறேன் என்றான்.  மீண்டும் சில நிமிடங்கள் தியானம் செய்த நம்பூதிரி, எழுந்து சென்று ஒரு நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து, அதில் ஏதோ எழுதினார்.  அதை மடித்து ஒரு கவரில் போட்டு குமாரிடம் கொடுத்து, “இவிடேயில்லா....ஊருக்குப்போய் பூஜையில் அதவா கோவில் போய் படிச்சு என்ன எழுதியிருக்கோ அதைச் செய்” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று அவர்களைப் போகலாம் என்பதுபோல் சைகை செய்தார்.    செய்வதறியாது குமார் நிற்க, சத்யமூர்த்தி சுதாரித்துக்கொண்டு “ஸ்வாமி நிங்கள் கட்டணம்…..” என்று கேட்க, அவர் நிங்ஙளிஷ்டம் என்று உண்டியலைக் காண்பித்தார்.



ஏதோ வழி காண்பித்திருக்கிறரார் என்ற திருப்தியில் நினைத்ததைவிட சற்று அதிகமாகவே பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு நம்பூதிரியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு வெளியே வந்தான் குமார்.  ஆர்வத்தை அடக்க முடியாதவனாக சட்டைப் பையிலிருந்து அந்தக் கவரை எடுத்து படிக்க முயன்றான்.  உடனே அவனைத் தடுத்தார் சத்யமூர்த்தி.  வேண்டாம் தம்பி.  நல்ல தீர்வு கிடைக்கணும்னா அவர் சொல்றதை அப்படியே கேக்கணும்.  அவசரப்பட்டு தொறந்தோம்னா அதுல எழுதியிருக்கறதுகூட மாறலாம்.  ஒரு நாள்ல என்ன ஆயிடப்போகுது.  கொஞ்சம் பொறு நாளை காலைல நம்ம வீட்டிலேயே பாத்துக்கலாம் என்று சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றார்.  அன்று மாலையை சேலத்திற்குத் திரும்பினர்.



நடந்ததையெல்லாம் வீட்டில் மனைவியிடம் ஒன்றுவிடாமல் விவரித்தான் குமார்.  ஒண்ணும் கவலைப்படாதீங்க..காலைல சீக்கரம் எழுந்து குளிச்சு பூஜை பண்ணி பெரியவர் கையாலேயே பிரிச்சுப் பாத்துடலாங்க என்று அவனைத் தேற்றியபடியே படுக்க அழைத்துச் சென்றாள் அவன் மனைவி.



பொழுதும் விடிந்தது.  மிகுந்த ஆர்வத்துடன்  சீக்கிரம் எழுந்து அனைவரையும் விரட்டி குளித்து முடித்து பக்தியுடன் பூஜை அறைக்குள் நுழைந்தான் குமார்.  அவனது மனைவி அவனுக்கு மிக முன்னமே எழுந்து பூஜை அறையை தகுந்தபடி தயார் செய்திருந்தாள்.  அனைத்து கடவுள் படங்களையும் வணங்கி கண்ணைமூடி பிரார்த்திக்கொண்டு சத்யமூர்த்தியிடம் அந்தக் கவரைக் கொடுத்து பிரித்துப் படிக்கும்படி கேட்டுக்கொண்டான் குமார்.  சத்யமூர்த்தியும் மிகுந்த அக்கறையுடனும் பக்தியுடனும் கடவுளைப் பிரார்த்திக்கொண்டு கவரைக் கையில் வாங்கி தட்டில் வைத்து கடவுள் படங்களுக்குக் காட்டிவிட்டு பின்னர் மணியடித்து கற்பூர தீபம் காட்டிவிட்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு மெதுவாக கவரைப் பிரித்து உள்ளே இருந்த காகிதத்தை வெளியில் எடுத்து குமாரிடம் கொடுத்தார்.



திகிலுடன் காகிதத்தை வாங்கிப் படித்தான் குமார்.  ஒரே வரிதான்.  ஆனால் அதை நம்பாதவனாக, என்னப்பா இப்படி எழுதியிருக்கு என்று சத்யமூர்த்தியிடம் அதைக் காணபித்தான்.  அதைப் படித்த சத்யமூர்த்திக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.  நெற்றி முழுவதும் வேர்க்க, பகவதி சரியாத்தான் சொல்லியிருக்கா தம்பி...ஒன்னாலதான் முடியாமான்னு தெரியல…. என்றவாறு துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு பூஜை அறையைவிட்டு வெளியே வந்தார்.



மெளனமாக முக்காலியின்மீது அமர்ந்தவர் மனதில் பழைய நாட்கள் மீண்டும் விசுவரூபம் எடுத்தன.  குறிப்பாக அந்த நாள்..



கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் ஒரே நாளில் நடந்த நிகழ்வுகள்.  தந்தையிடமிருந்து சிறிதுசிறிதாக பொறுப்புகளை தன்வசம் எடுத்துக்கொண்டு புதிய முதலாளியாய் வலம் வந்தான் குமார்.  வேகம், தைரியம், அலட்சியம், அனைத்தும் அவனிடம் சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தன.



அன்று காலை மில்லிற்கு புறப்படத் தயாராக இருந்தபோது கார் டிரைவர் அருணாச்சலம் காலை வணக்கம் சொல்லிவிட்டு தலையைச் சொறிந்துகொண்டே நின்றான்.  புதிய பிஸினஸ் ஒன்றை கைப்பற்றும் நினைப்பில் குமார் சற்று படபடப்பாகவும் இறுக்கமாகவும் இருந்ததை சத்யமூர்த்தி கண்டுகொண்டு சற்று விலகியே இருந்தார்.  ஆனால் அருணாச்சலம் பாவம் கவனிக்கவில்லை.  சைகையால் என்ன என்று கேட்டான் குமார்.  அருணாச்சலம் தயங்கியபடியே “ஐயா, சம்பளம் பத்தமாட்டேங்குது ஐயா..கொஞ்சம் போட்டுக் குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்று சொன்னான்.  குமாருக்கு சட்டென்று கோபம் வந்தது.  மத்த மில் டிரைவரெல்லாம் எவ்வளவு வாங்கறாங்கன்னு தெரியுமில்லே? என்று கேட்டான்.   சத்யமூர்த்தி பின்னாலிருந்து அவனை சும்மா இருக்குமாறு சைகை செய்தார்.  ஆனால் அருணாச்சலம் அதை கவனிக்கவில்லை.  



நான் இல்லேன்னு சொல்லலீங்கையா… 



பின்னே என்ன?



சம்பளத்துக்கேத்த வேலையும் இங்க இருக்குங்க எஜமான்..



என்ன நான் உன்னை கசக்கிப் பிழியறேன்னு சொல்றியா? நாள் பூரா ஏசி கார்ல சொகுசா ஒக்காரவெச்சாகூட இப்படி பேசறியே?



ஐயா கார் ஏசிதான்..ஆனா பொறுப்பு பாருங்க..உங்கள ஆபீஸ்ல விட்டு வந்தவொடனே அம்மாவுக்கு காய்கறி வாங்க ஓடணும்..பின்னாலேயே பசங்கள லேட்டாகாம ஸ்கூலுக்கு போய் சேக்கணும்..ஒடனே உங்களுக்கு திருப்பி சாப்பாட்டுக்கோசரம் ஒரு தடவ மில்லுக்கு வரணும்.  திரும்பற வழியிலேயே பசங்களை திருப்பி ஸ்கூல்லேருந்து கூட்டிக்கிட்டு வரணும்.  அதுக்கபறமாவது கொஞ்சம் ஒக்காரலாம்ணு பாத்தா அம்மா தோட்டவேலை, அது இதுன்னு ஏதாவது குடுத்துக்கிட்டே இருப்பாங்க..  நான் கொறயா சொல்லலீங்கய்யா.. எல்லாத்தையும் பொறுப்பா செஞ்சிக்கிட்டுதான் இருக்கேன்.. ஆனா வெலவாசி முன்னமாதிரி இல்லய்யா..  பணம் பாத்து பாத்து செலவு பண்ணாக்கூட பத்தலய்யா.. அதனால்தான்…  



ஒனக்குப் பத்தலேங்கறதால நான் குடுத்துண்டே இருக்க முடியுமா? நீதான் வாங்குற சம்பளத்துல சரியா செலவு பண்ணனும்.. அத விட்டுட்டு சும்மா எம்பிராணனை வாங்காதே..சரி, சரி, வண்டி எடு..இன்னிக்கு எட்டரைக்குள்ளே பார்ட்டி வந்துடுவாங்க..



பாருங்கையா...இந்த மாதிரி அவசரம்னா நான் எவ்வளவு கூடுதல் பொறுப்பா இருக்கணும்?  நான் கொஞ்சம் அசந்தேன்னா அப்புறம் உங்க கதி என்னாகும்ணு யோசனை பண்ணுங்கையா..



ஓஹோ...நீ தான் எங்களையெல்லாம் காப்பாத்திட்டிருக்கியா?



விஷயம் வேறுவிதமாகத் திரும்புவதை கவனித்த சத்யமூர்த்தி உடனே குறுக்கிட்டுஅருணாச்சலத்தை எச்சரித்தார்.  அடேய் ஆபீஸுக்குக் கெளம்பும்போதா இதெல்லாம் பேசுவாங்க...இத அப்புறம் பாத்துக்கலாம்...மொதல்ல ஐயாவ ஆபீஸ்ல விட்டுட்டு வா...போ… என்று அதட்டினார்.



அதற்குள் குமார் உக்கிரமாகியிருந்தான்.  இனிமே இவன் வேணாம்ப்பா…. இன்னிக்கு நானே ஓட்டிக்கிட்டுப் போயிடறேன.  எப்போ இப்படி பேசறானோ அப்ப என்னவேணா பண்ணினாலும் பண்ணுவான்...பசங்களகூட வேற டிரைவர் போட்டு அனுப்புங்க… இவன சாயந்தரம் வந்து வெச்சுக்கறேன்… என்று பொறிந்துவிட்டு அருணாச்சலத்தை கையால் ஒதுக்கிவிட்டு வேகமாக அவனே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.



மதியம் அவனை சாந்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சத்யமூர்த்தி தானே சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்றார்.  அவர் குமாரின் கேபினில் கேரியரை வைக்கச் செல்லும் நேரத்தில் அங்கே ஈரோடு சூப்பர்வைசர் மாணிக்கத்துடன் வாக்குவாதத்தில் இருந்தான் குமார்.  மாணிக்கத்தின் கீழ் வேலைபார்க்கும் பத்து பேரும் நூறு ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் நாளையிலிருந்து வருவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.  எப்படி சமாளிக்ப் போகிறாய் என்று மாணிக்கத்தைக் கேட்டான் குமார்.  அத்தனை பேரும் வேலையில நல்ல கெட்டிக்காரங்க ஐயா..இப்போ குடுத்தாதான் நமக்கும் நல்லது..அடுத்த ரிவிஷன்ல ரொம்ப கேக்கமாட்டாங்க..என்றவனை விஷமமாகப் பார்த்தான் குமார்.  



ஓஹோ...அவங்கள ஒனக்குச் சாதகமா திருப்பிக்கிறியோ?  எனக்கு ஒண்ணுமில்லே… அத்தனை பேருக்கும் ஆளுக்கு நூறென்ன  இருநூறாகவே குடு...ஆனா அதை நான் உன் சம்பளத்திலேந்து பிடிச்சுக்குவேன்.. ஆளாளுக்கு ஆடறீங்களா..நான் ஒருத்தன்தான் கிடைச்சேனா உங்களுக்கெல்லாம்..என்று கோபமாக கத்தினான்.  மாணிக்கமும் விடவில்லை.  நான் சொல்றதை சொல்லிட்டேன் ஐயா...அப்புறம் புரொடக்ஷன் வரலைன்னு என்னை விரட்டாதீங்க..என்று சொல்லவே மேலும் கோபமுற்ற குமார் அவனைப் பார்த்து வேலக்காரங்கள சமாளிக்க முடியலேன்னா எதுக்கு சூப்பரைவைசரா இருக்கீங்க...கெளம்புங்க என்று உரத்த குரலில் கத்தினான்.  சரி ஐயா..என்னால முடியல...நீங்க வேற ஆள பாத்துக்குங்க என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான் மாணிக்கம்.  இதை எதிர்பார்க்காத குமார் சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தான்.



சாப்பாட்டு கேரியரை மேஜையில் வைக்கப்போன சத்யமூர்த்தியிடம்… அப்பா இன்னிக்குக் காலையிலேயிருந்தே எதுவும் சரியாகவே இல்ல...எனக்குத் தலை வலிக்குது...நான் வீட்டுக்கே வந்து அங்கேயே சாப்பிடறேன்...இதை எடுத்திண்டு வந்திடுங்க என்று கூறி புறப்பட்டான்.  குமாரைப் பின்தொடர்ந்து வீடு வந்து சேர்ந்தார் சத்யமூர்த்தி.



காரின் கதவை படார் என்று கோபமாக மூடியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் குமார்.  அங்கே அவன் வீட்டுத் திண்ணையில் பின்புறம் கட்டிட வேலை செய்யும் சித்தாள்கள் இருவர் தங்களது சாப்பாட்டுப் பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  யார் நீங்க இங்க என்ன பண்ணறீங்க என்று கேட்ட குமாரிடன் ஐயா உங்க வீட்டு கொளத்துவேலதான் பண்றோமுங்கய்யா...தெனம் மதியம் வெயிலுக்கு இங்கதான் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்திண்டு திரும்பவும் வேலைக்குப் போய்விடுவோம் ஐயா.. என்றனர்.  



எங்கிருந்து வந்ததோ அந்த ஆக்ரோஷம் குமாருக்கு..  ஏண்டா...கூலி வேல செய்யற உங்களுக்கு சாப்பிட மில் ஓனர் வீட்டுத் திண்ணை கேக்குதோ..  எழுந்திருங்கடா…  எழுந்து போய் ரோட்டுல வெச்சுத் தின்னுங்க என்று சட்டென்று அவர்களுடைய சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து வீசியெறிந்தான்.  சத்யமூர்த்தி உட்பட அனைவரும் வெவெலத்துப்போய்விட்டனர்.  கோபமாக கண்களெல்லாம் சிவந்து பெருமூச்செறிந்துகொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டான் குமார்.  



என்னாங்க இது… என்னதான் ஓனரா இருந்தாலும் மனுஷனா இவரு?  அவரு வீட்டுக்கு வேல செய்றவங்க சாப்பாட்டை தூக்கி வீசராறே?  இவரா எங்களுக்கு சம்பளம் குடுக்குறாரு?  மேஸ்திரி குடுக்குறாரு… இந்த வீடு இல்லன்னா வேற வீடு...நாங்க எங்கயும் ஒழச்சுப் பொழச்சிப்போங்க… இவருகிட்ட கையைக்கட்டித்தான் சாப்பிடனும்ணு இல்ல…. திங்கிற சோத்த அலட்சியம் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்க…. மண்ணுல விழுந்த அந்த சாப்பாட்டை இனிமே யார் சாப்பிடுவாங்க… .நாய்க்குத் தான் போடனும்…. இன்னிக்கு நம்ம வயித்துல அடிச்சுட்டாரு… இது மாதிரி இன்னும் எத்தனை பேர் வயித்தெரிச்சலை வாங்கியிருக்காரோ… எவ்வளவு பணம் இருந்தா என்னங்க.... இத்தனை திமிரு கோபமெல்லாம் நல்லதுக்கில்லீங்க… என்று மிகவும் வருத்தத்துடன் சத்யமூர்த்தியிடம் முறையிட்டனர்.  அவர் தன் கையிலிருந்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொடுத்து பக்கத்தில் உள்ள ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டார்.  ஆனால் அதை அவர்கள்  நாங்கள்ல்லாம் சாப்பாடே இல்லாமல் ரெண்டு மூணு நாள்கூட இருப்போங்க...என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்.



அந்த சம்பவம் அவர் மனதில் அழியா வடுவாக பதிந்துவிட்டது. குமார் தூங்கினானோ என்னவோ, சத்யமூர்த்தியால் அன்றிரவு தூங்க முடியவில்லை.  அன்று மட்டுமல்ல.  அடுத்த சில இரவுகள் முழுவதும் நிம்மதியில்லாமல் அவதிப்பட்டார்.  தான் எடுத்து வளர்த்த பிள்ளை இப்படி ஊரே ஏசும்படி நடந்துகொள்கிறானே என்று கவலைப்பட்டார்.  கண்ணீர் சிந்தினார்.  கடவுளிடம் வேண்டினார்.



மறுநாள் காலையில் கட்டாயமாக அவனை சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சென்றார்.  போகும் வழியில் கடந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவனுடன் அலசினார்.  முதலில் சிறிது கோபமாகத்தான் இருந்தான் குமார்.  பின்னென்ன அப்பா..எங்கயோ மூலைல ஒக்காந்திருந்தவங்கள கூட்டிட்டு வந்து வேலை கொடுத்து நல்ல சம்பளமும் குடுத்தாக்கூட இன்னமும் எங்கிட்ட எப்படி கறக்கலாம், என் சொத்த எப்படி அனுபவிக்கலாம்ன்னுதான் இருக்காங்களே தவிர நமக்கு இவ்வளவு பண்ணறானேங்குற நன்றி கொஞ்சமாவது இருக்கா பாரு இவனுங்களுக்கொல்லாம் என்று அனைவரையும் சாடினான்.  



அப்படியில்ல தம்பீ...காலம் ரொம்ப மாறிக்கிட்டு கெடக்கு.  அவங்க கேக்கறது தப்போ ரைட்டோ, அதை நாம பேசித்தான் சரி பண்ணிக்கிணுமே தவிர இத்தனை நாள் நம்மகிட்ட வேலை பாத்தவங்கள எடுத்தோம் கவுத்தோம்னு பகைச்சிக்கக்கூடாது தம்பி..அவங்களும் பாவம், வேற வழியில்லாம தான நம்ம கிட்ட கேக்கறாங்க?  நீயே யோசிச்சுப்பாரு...நீ என்ன சும்மாவா அத்தனை காசு தர்றே?  அதுக்கேத்த சரக்கு அவங்ககிட்ட இருக்கறதுனால தான அவங்கள வேலைக்கு வெச்சுக்கிட்டிருக்கே?  அருணாச்சலத்தையே எடுத்துக்கோ..  அவனளவு பொறுமையா அத்தனை வேலையும் சுணங்காம பண்ணற டிரைவர் யாரு இருக்கா இப்போ?  மத்த மில் டிரைவரெல்லாம் இவனோடு பொறுப்புல பத்துல ஒரு பங்கு பண்ணமாட்டாங்க.  மாணிக்கம்கூட அப்படித்தான்.  அந்த பத்துபேர் பண்ணற வேலையை இன்னிக்கு வேற ஆள் வெச்சு பண்ணனும்னா கொறஞ்சது இருபது போராவது வேணும்..அதுவும் தப்புந்தவறுமா பண்ணுவானுங்க.  நீதான் இன்னும் கொஞ்சம் பொறுமைய கத்துக்கிடனும் தம்பி..இப்பவாவது நான் இருக்கேன்...இன்னும் எத்தனை நாள் இருப்பேனோ தெரியாது...எனக்கப்புறம் ஒனக்குப் பக்கத்தில நின்னு தைரியமா புத்தி சொல்றத்துக்கு யாரும் இருக்கமாட்டாங்க தம்பி.. நீயே மாறிட்டாதான் நல்லது... என்று குமார் தன் தவற்றை உணரும்படியாக அறிவுரை கூறினார்.



அவருடையநல்ல மனதுக்கேற்ப காலம்  மாறியது, குமாரையும் சிறிது மாற்றியது.  குமாரின் பிஸினஸ் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தது.  குமாரும் தன்னுடைய மில் மட்டும் என்றில்லாமல் ரோட்டரி, லயன்ஸ், பெடரேஷன் என்று பல அங்கங்களில் உறுப்பினரானான்.  முக்கிய புள்ளி என்பதால் அவனைச் சுற்றி எப்போதும் அவனைப் புகழ்ந்தபடியே ஒரு வட்டம் இருக்கத் தொடங்கியது.  அந்த வட்டத்தினர் பழக்கத்தில் ஏற்பட்ட மயக்கத்தில் அவனும் மூழ்கி, வீட்டில் இருக்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினான்.  



ஓரு பக்கம் வீட்டிலும் ஆபீஸிலும் நிம்மதி தவழத்தொடங்கியது என்றாலும் மறு பக்கம் குமாரின் உடல்நிலை தளரத் தொடங்கியது.  சிறிதுசிறிதாக எடை கூடியது.  தூக்கம் குறைந்தது.  வெளியூர் பயணம் சென்று வந்தால் வயிற்று வலி வரத்துவங்கியது.  படிப்படியாக பயணத்தைக் குறைத்தும்கூட இப்போதெல்லாம் வயிற்று வலி நிரந்தரமாக இருந்தது.  கொஞ்சமாக இருந்த வலி நாளாக நாளாக அதிகமாகவே அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும்படி ஆகியது.  அப்படியும் குறையாததால் தான் தற்பொழுது திருச்சூர் நம்பூதிரியிடம் ஜாதகம் காட்டி பரிகாரப் பிரார்த்தனை.



சந்தன ஊதுபத்தியின் அடர்ந்த வாசம் நாசியைத் தாக்க, திடுக்கிட்டு விழித்தார் சத்யமூர்த்தி.  கையிலிருந்த காகிதத்தை மீண்டும் ஒருமுறை பிரித்துப் படித்தார்.  “சூலை சரியாக ஒரு  மண்டலம் நடுமதியம் நடுத்தெருவில் வெயிலில் நின்னு ஊணு கழிக்கணும்”.  அந்தச் சித்தாள்கள் அவருடைய மனக்கண்ணில் நிழலாடினர்.  பெருமூச்சுடன் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தார் சத்யமூர்த்தி.








Wednesday, February 13, 2019

Chennai Rail Museum




Two days of work in the city got me travelling through New Avadi Road. On the way back home, I noticed something new that I have not seen so far. Interesting pieces of artistic sculpture made out of metal parts erected in the area earmarked for garden along the left side of the road, in front of the Integral Coach Factory (ICF) Furnishing Division, right from the junction of Gandhi Nagar up to the entrance of the Chennai Rail Museum. Curious, I surfed the net and found out that these are the creations of popular artists, drawn together at the time of ICF’s Golden Jubilee celebrations, to make something(s) creative out of the tons and tons of steel (real, no pun here) scrap the factory had accumulated. I also came to know that the Rail Museum had been given a facelift, and decided to while my available time away there.

  Chennai Rail Museum 

 I reached the museum around 11.15, assuming I would spend an hour or a little more. The museum is open from Tuesday to Sunday, from 10 am till 5.30 p.m. It is closed on Mondays and National Holidays. Entry ticket is Rs.50 for an adult, and I think it is Rs.20 for children - I do not remember it correctly. Mobile phone cameras are allowed free; digicams are charged Rs.100 per camera. There is also an art gallery, for which a separate ticket needs to be purchased (Rs.20), and no photography is allowed there. I thought the museum would be almost empty, today being a weekday. On the contrary, I found several groups of children from various schools in Chennai thronging at the gates. Looking at the gate, I could spot at least eight to ten school buses neatly parked out by the garden side. I had to slowly amble along, finding my way through brief openings allowed by the caretakers of the children. The Chennai Rail Museum has a good collection to enthrall all sections of people - half tickets, full tickets and concession holders (I mean children, adults and senior citizens). The children would be attracted by the toy train, working miniature models and the play area, the youngsters by the pace ICF is keeping with technology, and the elders by the exhibits of bygone era, taking them back to their younger days.

Chennai Rail Museum Chennai Rail Museum Chennai Rail Museum 

 The addition of creative art made by renowned artists from scrap material is a very interesting concept. For those with an artistic bent of mind, it gives enough time to leisurely go through the twenty-odd pieces neatly spaced out in and around the furnishing division, with no restriction on time or space. 

  Chennai Rail Museum Chennai Rail Museum 

 Gauging my interest in photography, the person in charge of the art gallery gave me permission to click,with a request not to make commercial use of it. Therefore, I have taken only a very few shots there, and have posted them along with other photos at my Flickr site - www.flickr.com/photos/raghu_ambattur/albums. Feel free to browse. I will be happy to have your feedback and comments there. Railways and ICF need to be appreciated for sparing a portion of their workspace, time and thoughts to actively engage the public of all age group with a novel idea such as the Rail Museum.



Wednesday, February 6, 2019

ரகுராம் அதிர்ந்து போயிருந்தான்.  மாலை ஆபீஸ் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது அவன் கண்ட காட்சி அப்படி...

“அம்மா.. ஸ்கூல்ல எரேசர் தொலஞ்சு போச்சும்மா..” என்று கண்ணீர் மல்க மருகிக் கொண்டிருந்தாள் ஏழு வயது சிறுமி ரம்யா.


“என்னது?  தொலஞ்சு போச்சா?  காலைலதானடி நீ கேட்டேன்னு புது எரேசர் பாக்கெட்லேந்து எடுத்துக் கொடுத்தேன்… அதையா ஒரு நாள்கூட போகல்ல இதுக்குள்ளே தொலச்சுட்டு வந்து நிக்கிற…” என்று அங்கலாய்த்தாள் தாய் சுமதி.


“ஆமாம்மா..அது தான்.   இப்போ எரேசர் இல்லாம நான் எப்படிம்மா ஹோம்வொர்க்கெல்லாம் பண்ணுவேன்?  எதை வச்சு தப்பெல்லாம் சரி செய்வேன்?  சொல்லும்மா! “என்று விம்மி விம்மி கேவியபடியே வினவினாள் ரம்யா.


“அதுக்கோசரம்?  தினம்தினம் புது எரேசர் கொடுக்குமுடியுமா?  நீ மொதல்ல எப்படி அது தொலஞ்சுதுன்னு யோசி”


“லஞ்ச் பீரியட்லேகூட பாக்ஸ்லதாம்மா இருந்தது.  மத்தியானம் முதல் பீரியட்டுக்கு அப்புறம்தான் அது காணம்மா”


“அப்படின்னா ஒம்பக்கத்துல ஒக்காந்திருக்கிறவ தான் அதை எடுத்திருக்குனும்.  யார்டி அது ஒனக்குப் பக்கத்துல ஒக்கார்றவ?”


“மஹா தாம்மா எம்பக்கத்துல ஒக்கார்றா..ஆனா அவ எடுத்திருக்க மாட்டாம்மா”


“யாரு மஹா?  அந்த கரிஷ்மா ஆன்ட்டி பொண்ணா?”


“கரெக்ட்மா!  எப்படி கண்டுபிடிச்சே?”


“எப்படியா?  அவதான் அன்னிக்கு யோகா க்ளாஸ்ல என்னோட தலகாணிய தெரியாம பண்ணறாமாதிரி எடுத்துண்டு போயிட்டா.  அதுவுமில்லாம அது அவளோடதுன்னு வேற சொல்லிண்டிருந்தா… நல்லவேளை நான் அதுல ஓரத்தில என்னோட இனிஷியல் எம்ப்ராய்டரி பண்ணினத வெச்சு ப்ரூவ் பண்ணி திருப்பி எடுத்துண்டு வந்தேன்.  அவதான் அவ பொண்ணுக்கும் ஒன்ன டிஸ்டர்ப் பண்ணனும்னே சொல்லிக் குடுத்திருப்பா!”


“அம்மா எப்படிம்மா உனக்கு இப்படியெல்லாம் யோசிக்க வருது?  நீ சொல்றது சரியா இருந்தாலும் இருக்கும்.  இரு இரு.. நாளைக்கு க்ளாஸ்ல அவளோட பேக் எடுத்து புரட்டிப்போட்டு இன்னும் யாரோட சாமான் என்னல்லாம் எடுத்திருக்கான்னு பாத்துடறேன்!”


ரகுராம் கொதித்துப்போனான்.  “வில் யூ போத் ஸடாப் திஸ் நான்சென்ஸ்?” என்று உரக்கக் கத்தியபடியே உள்ளே நுழைந்தான்.  “ஒண்ணுமில்லாத எரேசருக்கு இவ்வளவு கலாட்டாவா?  அதுவுமில்லாம அம்மா இப்படி பொண்ணு அப்படின்னு வம்பெல்லாமா பேசறீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.


அவன் நுழைந்ததை அப்போதுதான் கண்ட ரம்யாவும் சுமதியும் சுதாரித்துக்கொண்டு புன்னகைத்தனர்.  ஒன்றும் புரியாமல் விழித்த ரகுராமிடம் ரம்யா ஓடி வந்து கட்டிக்கொண்டு சிரித்தாள்.  “பயந்துட்டியா அப்பா?  எங்களுக்கு போரடிச்சா இப்படித்தான் நானும் அம்மாவும் அப்பப்போ சீரியல் விளையாட்டு விளையாடுவோம்” என்றாள்.


“சீரியல் விளையாட்டா இல்ல சீரியஸ் விளையாட்டா?” என்று கேட்டான் ரகுராம்.


“சீரியல் விளையாட்டுதாங்க… டிவி சீரியல்” என்று சிரித்துக்கொண்டே அவன் கன்னத்தைக் கிள்ளி விளக்கிவிட்டு காபி கொண்டுவர உள்ளே சென்றாள் சுமதி.