பழமொழி விளக்கம்
(பழம் -
முதிர்ந்தது
- முதிர்ந்த
அனுபவத்தினால் வந்த அறிவுரைகள்)
1. பெண்புத்தி
பின்புத்தி. எல்லோரும்
நினைப்பது போல் தக்க சமயத்தில்
உபயோகப்படாமல் பிறகு நினைவுக்கு
வந்து பயனில்லாமல் போவது
அல்ல பெண்ணின் புத்தி.
சாதாரண தினசரி
அலுவல்களுக்கு வேண்டுமானால்
அப்படி இருக்கலாம்.
ஆனால் முக்கியமான
விஷயம் இருந்தால் அப்போது
பெண்களின் புத்தி எப்படி
வேலை செய்கிறது என்று பாருங்கள்.
அடுத்த மாசம்
போனஸ் வாங்கிண்டு வரும்போதே
ஏதாவது செலவு பண்ணிட்டு
வராதீங்க – நம்ம ஜானுவுக்கு
தோடு வாங்கனும். உங்க
புத்திசாலித்தனத்துக்கு
நான் இப்போலேந்தே சேத்தாத்தான்
உண்டு என்று பிற்காலத்திற்கும்
சேர்த்து யோசிக்கும் புத்தி
பெண்புத்தி. அவர்களை
குத்திக் காண்பிப்பதால்
'பின்'
புத்தி என்று
ஆண்கள் சொல்வதும் உண்டு.
2. ஆல்போல்
தழைத்து அருகுபோல் வேரோடி
- ஆலமரம்
மேலும் மேலும் விழுதுகளை
விட்டு அவைகளை வேராக்கி
அகலமாகப் பரவி பல்லாண்டு
வாழ்வதுபோல் உறவுகளையும்
நட்புகளையும் அணைத்துக்கொண்டு
ஒருங்கிணைந்த குடும்பமாய்
வாழவேண்டும். அருகம்புல்லைப்
பறித்தால் புல் மட்டும்தான்
கைக்கு வரும். வேர்
ஆழமாக ஊன்றியிருப்பதால்
வராது. பறித்த
இடத்தில் மீண்டும் வளரும்.
அதுபோல் வாழ்வில்
ஊன்றி சிறு இன்னல்கள் வந்தாலும்
துவண்டுவிடாமல் தாங்கி
ஆணிவேரான நோக்கத்தை மனதில்
நன்று ஊன்றி மீண்டும் முயற்சித்து
வளர வேண்டும்.
3. அழுதபிள்ளைதான்
பால்குடிக்கும் -
அமைதியாக
இருக்கும் குழந்தையைவிட
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்
குழந்தையைத்தான் தாய் நன்கு
கவனிப்பாள் என்பது சரியானாலும்,
இந்தப் பழமொழி
விஞ்ஞான உண்மையும் கூட.
கர்ப்பப்பையில்
இருக்கும்வரை குழந்தைக்கு
மூச்சு என்பது கிடையாது.
மூச்சுக்குழலிலும்
திரவமே இருக்கும். இந்த
திரவம் வெளியேறினால்தான்
குழந்தை மூச்சுவிடவே முடியும்.
ஆகவேதான்
தாயின் பாதுகாப்புக்
கவசத்திலிருந்து வெளியே
வரும் குழந்தை வெளிக்காற்று
பட்டவுடன் முக்கி முனகி அழுது
குழந்தை தனது சுவாசப்பாதையை
முதலில் சரிசெய்து கொள்கிறது.
4. ஊர் ரெண்டு
பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்
- மற்றவர்கள்
கலகத்தில் இருக்கும்போது
அதை ஊதிவிட்டு வேடிக்கை
பார்ப்பதில் இன்பம் கொள்வோரைப்
பற்றி இது என்று நாம் நினைத்தாலும்,
இப்பழமொழியின்
உண்மைப் பொருள் வேறு.
பண்டைய காலத்தில்
கருத்து வேறுபாட்டினால் ஊர்
இரண்டாகப் பிளந்து நிற்கும்போது
பெரியவர்கள் ஒன்றுகூடி
வேறுபாட்டைக் களையும் முயற்சியாக
அனைவரும் பங்கேற்கும் வகையிலான
பெரிய அளவிலான கூட்டங்களையோ
விழாக்களையோ ஏற்பாடு செய்வர்.
அதன் ஒரு
பகுதியாக பொழுதுபோக்குக்காக
நடனம், பாட்டு.
கூத்து
போன்றவற்றையும் ஏற்பாடு
செய்வர். இது
இந்தக் கலைஞர்களுக்கு
(கூத்தாடிகளுக்கு)
பெரிய அளவில்
வருமானம் பெற்றுத்தரத் தக்கதாக
அமையும். எனவே
எங்காவது சண்டை சச்சரவு
ஏற்பட்டால் அதன் சமாதான
முயற்சியின்போது தமக்கு
வருமானம் கிடைக்கும் என்று
மகிழ்வர் கூத்தாடிகள் என்பதே
இப்பழமொழியின் பொருள்.
5. களவும் கற்று
மற – ஆய கலைகள் அறுபத்து
நான்கு என்ற கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவற்றும்
களவும் ஒன்று, அதைக்கூட
கற்கவேண்டும் ஆனால் பழகக்கூடாது
என்பதே இதன் பொருள் என்று
நீங்கள் நினைத்தால் உங்களைக்
குற்றம் சொல்ல முடியாது.
காலம் அப்படி.
ஆயின்,
உண்மையான பொருள்
என்ன தெரியுமா? இங்கு
களவு என்பது கற்புக்கு எதிராக
செயல்படுவது. அதாவது
கற்பு நெறி, களவு
நெறி. பெற்றோர்
சம்மதத்துடம் திருமணம்
செய்துகொண்டு ஊரறிய வாழ்வது
கற்பு நெறி. பெற்றோர்
அறியாவண்ணம் தலைவனும் தலைவியும்
சந்திப்பது அனுபமதிக்கப்பட்டிருந்தது,
களவு என்ற
பெயரில். நம்
சமூகம் காதலை ஒரேயடியாக
எதிர்க்கவில்லை. ஆனால்,
அது களவாகவே
தொடரக்கூடாது, கூடிய
விரைவில் இருவரும் தத்தம்
பெற்றோரிடமோ, பெரியோரிடமோ
தெரிவித்து ஊரறிய உறவினை
உறுதிசெய்து களவொழுக்கத்தை
கைகழுவி மணமுடித்து வாழவேண்டும்
என்றே வற்புறுத்தியது.
களவு தவறல்ல,
அது இயற்கையாய்
நிகழ்வதே, ஆயின்
தொடர வேண்டாம் என்பதே உட்பொருள்.
6. சோழியன்
குடுமி சும்மா ஆடாது -
சோழியன் (சோதிடன்)
குடுமி சும்மா
ஆடாது, தக்க
ஆதாயத்தை எதிர்பார்த்தே
ஆடும் என்பது நாம் அறியும்
விளக்கம். எந்தக்
குடுமியும் சும்மா ஆடாது.
குடுமிக்கு
சொந்தக்காரனின் தலை ஆடும்போதுதான்
ஆடும். ஆனால்
நாம் நினைப்பது போல் ஆதாயம்
பெறுவதற்காக ஆமாம் என்று
தலையாட்டும்போது குடுமியும்
ஆடும் என்பது பொருள் அல்ல.
சோழியன் அல்லது
சோதிடர் பெரும்பாலும் மலையாள
மாந்த்ரீகர்காக இருந்த காலம்.
அவர்களுடைய
குடுமி மற்றவர்கள் போல்
பின்னந்தலையில் இல்லாமல்
முன்புறமாக நெற்றிக்கு மேல்
இருக்கும். (பொன்னியின்
செல்வன் கதையை சித்திரத்துடன்
பார்த்துப் படித்தவர்களுக்கு
நன்கு விளங்கும்.) இது
ஒருபுறம். தலையில்
ஏதாவது பாரத்தை சுமக்க
வேண்டுமானால் அது தலைமேலிலிருந்து
விழுந்துவிடாதபடி சரியாகப்
பொருந்துவதற்கு ஒரு துணியை
(அது
துண்டாகவோ, சேலையின்
முந்தானையாகவோகூட இருக்கலாம்)
தலையில் வைத்து
அதன்மேல் பாரத்தை வைத்து
சுமப்பதை நாம் இன்றும் காணலாம்.
இந்த சுருண்ட
துணிக்கு சும்மாடு என்று
பெயர். இந்த
சும்மாடு பார்ப்பதற்கு
சோழியனின் குடுமிபோன்று
தோற்றமளிக்கும். அதாவது
சோழியனின் குடுமி பார்ப்பதற்கு
சும்மாடு போல் இருக்கும்.
ஆனால் சும்மாடென்று
அதன் மேல் பாரத்தை வைத்து
தூக்க முடியாது. எனவே,
சோழியன் குடுமி
சும்மாடாகாது என்பதே பொருத்தமான
சொல் வழக்கு. இது
காலப்போக்கில் சும்மா ஆடாது
என்று மருவிவிட்டது.
7. பந்திக்கு
முந்து படைக்குப் பிந்து
- அனைவருக்கும்
தெரியும் இதன் பொருள் நிச்சயமாக
இவ்வளவு வெளிப்படையானதல்ல
என்று. வலைத்தளங்களில்
கிடைக்கும் பல்வேறு விளக்கங்களில்
எனக்குப் பிடித்த விளக்கங்கள்
இவை: 1) போர்
என்று வந்தால் படைவரிசையில்
முதலில் தேர், பிறகு
யானை, பிறகு
குதிரை கடைசியில் காலாட்படை
என வரிசைப்படுத்தி அணிவகுப்பர்.
போர் முழக்கம்
கேட்டு வீட்டில் இருக்கும்
வீரர்கள் ஓடிவந்து கடைசியாக
இருக்கும் காலாட்படை வரிசையில்
சேர்ந்துகொள்வர். இந்த
வரிசைக்கு பந்தி என்று பெயர்.
ஆக வீரம் காட்ட
நேரம் வரும்போது பந்தி வரிசையில்
சேர்வதற்கு முந்த வேண்டும்.
ஆனால் இந்த
வரிசை(கள்)
மொத்த படைவரிசையில்
பிந்தியே இருக்கும் என்பதை
விளக்குவது பந்திக்கு முந்து
படைக்குப் பிந்து எனும்
பழமொழி. 2) வீரத்திற்கு
எத்தனை சிறப்போ அத்தனை சிறப்பு
விருந்தோம்பலுக்கும் உண்டு.
ஆகவே,
விருந்தினரை
உபசரிப்பதில் தயக்கமின்றி
உவகையுடன் முன்வந்து உபசரிக்க
வேண்டும். படைத்தலைவன்
என்பவன் அரசனே. தளபதியை
முன்நிறுத்தி மற்ற படைகளின்
வலிமையுடன் போர்செய்தாலும்
பின்புலத்தில் இருந்துகொண்டு
படையின் முன்னேற்றத்தைக்
கண்காணித்து வழிநடத்துவதே
முதல் கடமை. களத்தில்
இறங்குவது என்பது அரசனுக்கு
மற்ற வழிகள் தீர்ந்துபோய்
வெற்றிகொள்ள தனது நேரடி
இயக்கம் இல்லாமல் முடியாது
என்ற நிலை வரும்போது மட்டும்தான்
கடைசியாகப் போர்க்களத்தில்
இறங்க வேண்டும் என்பதே பந்திக்கு
முந்து படைக்குப் பிந்து.
3) மேற்கூறிய
கருத்துப்படியே,
உபசரிக்கும்போது
கை முன்புறமாகவும்,
போரிடும்போது
எதிரியை பலமாகத் தாக்க தக்க
வலிமை பெற ஆயுதம் (வில்,
கதை)
ஏந்தும் கையை
எவ்வளவுக்கெவ்வளவு பின்புறம்
இழுக்கிறானோ அந்த அளவுக்கு
வேகமாக ஆயுதத்தின் வீச்சு
இருக்கும் என்பதைக் குறிப்பதே
பந்திக்கு முந்து படைக்குப்
பிந்து.
8. பூஜை வேளையில்
கரடியா? - நேரடிப்
பொருள் வேண்டாத கவனச்சிதறல்
என்பது மிகவும் சரி.
ஆனால் எப்படிப்
பொருந்தும்? எங்காவது
பூஜை வேளையில் கரடியைக்
காண்கிறோமா? அப்படியே
கண்டாலும் அதனால் பூஜை
தடைப்படுகிறதா? விஷயத்திற்கு
வருவோம். கரடுதல்
என்றால் தேய்த்தல் என்ற
பொருள். ஒரு
தாள வாத்தியத்தில் ஒரு பக்கம்
விரல்களாலோ அல்லது கோலாலோ
தட்டியும் மறுபக்கம் சற்றே
வளைந்த கோல் கொண்டு அழுத்தி
அழுத்தி தேய்த்து உறுமும்
ஓசை எழுப்பும் (ஆம்,
உறுமியேதான்)
இசைக்கு கரடி
என்று பெயர். இதை
வாசிக்கும்போது இதன் வித்தியாசமான
ஓசையினால் மற்ற வேலைகளில்
மூழ்கியிருப்போரின் கவனத்தை
ஈர்க்கும் ஆற்றல் இதற்கு
உண்டாகையால், மன்னர்
முதலானோர் செல்லும்போது இந்த
வாத்தியத்தை ஒரு குழு முன்கூட்டியே
இசைத்துக்கொண்டே செல்லும்
வழக்கம் இருந்தது. தத்தம்
வேலையிலிருந்து கவனத்தை
மாற்றி, மன்னர்
வருவதை உணர்ந்து அதற்கேற்ப
நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில்
ஏற்பட்டது இந்தப் பழக்கம்.
விருது விழாக்கள்
போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு
இது சரி. கோவில்களில்
இறைவனே பிரதானம். அங்கு
மன்னரும் இரண்டாம் பட்சமே.
ஆனால் கோவிலில்
பூஜை நடந்துகொண்டிரக்கும்போது
பூஜையில் பங்கேற்க மன்னர்
வரும் சமயத்தில் அங்கு கரடி
ஒலித்தால் அது பூஜை நடத்துபவருக்கும்
குழுமியிருக்கும் மற்ற
பெரியோர்களுக்கும் இடைஞ்சலாகத்தானே
தோன்றும்? ஆகவே
பூஜை வேளையில் மன்னராக
இருந்தாலும் அவரது வருகையை
முன்னறிவிக்கும் விதமாக கரடி
ஒலிக்கலாகாது என்று
பொருள்படும்விதமாகத் தோன்றியதே
இந்த பூஜை வேளையில் கரடியா?
பழமொழி.
9. ஆயிரம் பொய்
சொல்லியாவது கல்யாணம் பண்ணலாம்
- திருமணம்
நடக்க வேண்டுமானால் ஒரு சில
கசப்பான உண்மைகளை மறைப்பதில்
தவறில்லை என்ற அர்த்த்த்தில்
கொள்கிறோம். உண்மையில்,
நம் வீட்டில்
திருமணம் போன்ற வைபவம் நடக்கும்
வேளையில், உறவுகள்
விட்டுப்போகாமல் இருக்கும்
பொருட்டு பேச்சு வார்த்தை
இல்லாமல் போன உறவுகளால்
இருந்தால்கூட அவர்கள் வீட்டுக்கு
ஆயிரம் முறை போய் சமரசம்
சமாதானம் செய்தாவது அவர்கள்
மனதை இளகவைத்து உறவுகளைப்
புதுப்பித்துக்கொண்டு அனைவரின்
முன்னிலையில் நம்வீட்டு
வைபவத்தை சிறப்பாக நடத்த
வேண்டும் என்பதே பொருள்.
10. ஆறிலும்
சாவு நூறிலும் சாவு -
மரணம் எப்போது
வேண்டுமானாலும் வரும்,
அதைக்கண்டு
பயம் கொள்ளக் கூடாது என்பது
மட்டும் இதன் பொருள் அல்ல.
மகாபாரதத்தில்
கர்ணன் தன் மகன் என்பதை அறியும்
குந்தி, அவனை
துரியோதனனை விட்டு பாண்டவர்களுடன்
வந்து சேரும்படி வேண்டுகிறாள்.
அப்போது செய்நன்றி
மறக்காத கர்ணன், தாயே,
தங்கள் ஆசைப்படி
பாண்டவர் ஐவருடன் சேர்ந்து
ஆறில் ஒருவனாக இருந்தாலும்
சரி, நூறு
பேராகிய கெளரவர்களோடு
இருந்தாலும் சரி, இந்தப்
போரில் என் உயிர் பிரியத்தான்
போகிறது. அதை
நான் என்னை தேரோட்டி மகன்
என்றும் பாராமல் தன் தேசத்தில்
பாதியைக் கொடுத்து என்னை
அரசனாக்கிய என் உற்ற நண்பன்
துரியோதனின் பாதத்தில்தான்
சமர்ப்பிப்பேன், என்னை
மன்னித்துவிடுங்கள் என்று
மறுக்கிறான். இதுவே
ஆறிலும் சாவு, நூறிலும்
சாவு என்பதற்கான சரியான
விளக்கம்.
11. சட்டியில்
இருந்தால் ஆப்பையில் வரும்
- தற்போது
குக்கரில் இருந்தால் கரண்டியில்
வரும் என்று வேண்டுமானால்
மாற்றிக்கொள்ளலாம்.
சட்டியிலே
ஒன்றும் இல்லையென்றால்
அகப்பையில் வராது என்பது
அல்ல இதன் பொருள். சட்டி
என்பது சஷ்டியைக் குறிக்கும்.
குழந்தைப்பேறு
இல்லாதவர்கள் முருகனை
வேண்டிக்கொண்டு சஷ்டிதோறும்
விரதம் இருந்தால் அகப் பையில்
அதாவது வயிற்றில் குழந்தை
வரும் என்ற நம்பிக்கை தரும்
பழமொழி.
12. வரவர மாமியார்
கழுதை போல் ஆனாளாம் -
அது என்ன வரவர,
எப்போதுமே,
மிகச்சில
உதாரணப் பெண்மணிகள் தவிர –
மாமியார், மருமகள்
இருவருக்குமே பரஸ்பர வெறுப்பால்
மற்றவர் கழுதையாகத்தான்
தெரிவர். ஆனால்
இந்தப் பழமொழி குறிப்பது
கழுதை அல்ல, கயிதை
அல்லது கைதை. மெட்ராஸ்
பாஷையான கய்தே அல்ல,
கயிதை.
கயிதை என்றால்
ஊமத்தம்பூ. கைதை
என்றால் ஊமத்தங்காய் (கையைத்
தைப்பதுபோல் முள் இருப்பதாலோ?).
மலர்ககையில்
அழகான ஊதாங்குழல் போன்ற
தோற்றத்துடன் தொடங்கும்
இம்மலர், வாடிச்
சுருங்கி காய்க்கும்போது
முள்ளாகக் காண்கிறது.
அதுபோல் மாமியார்
என்னும் உறவு மருமகைளை
வீட்டிற்கு வரும்போது அன்பாக
மலர்ந்த முகத்துடன் வரவேற்றாலும்
பழகப்பழக அன்பு சுருங்கி
குற்றம்காணும் இயல்பு தானாகவே
வந்து எது செய்தாலும் குற்றம்
என்னும்படியாக முள்ளாய்
குத்துகிற உறவாக மாறிவிடுகிறது
என்பதைக் குறிக்கும் இப்பழமொழி
கயிதை மருவி கழுதையாய்
உலவுகிறது.
13. கல்லைக்
கண்டால் நாயைக் காணோம் நாயைக்
கண்டால் கல்லைக் காணோம் -
அதற்காக நாயைக்
காணும்போது அதன்மீது எது
கிடைத்தாலும் விட்டெறிவதோ,
அல்லது கல்
இருக்கிறது என்பதற்காக அதை
சன்னல் முதலான பிறவற்றின்
மீது வீசுவதோ கூடாது.
தெய்வம் என்றால்
அது தெய்வம், வெறும்
சிலை என்றால் அது சிலைதான்
என்ற பாடலை நினைவுகொள்ளுங்கள்.
நன்கு ரசனையுடன்
தத்ரூபமாக கல்லில் செதுக்கப்பட்ட
நாய் சிலையை பார்ப்பவரின்
ரசனைக்கும் அறிவுக்கும்
ஏற்றாற்போல் அதைக் கல்லாகப்
பார்ப்பவர்க்கு நாய் தென்படாது,
நாயாகப்
பார்ப்பவர்க்கு கல் தென்படாது
என்பதே பொருள். நாம்
எதைக் காணவிரும்புகிறோமோ
அதையே பார்ப்போம்.
14. ஆயிரம்
பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
- பண்டைய
சீனாவில் ஒரு வழக்கம்.
ஒவ்வொரு
வைத்தியனும் தன் வைத்தியம்
பலனளிக்காமல் இறந்தவர்
எண்ணிக்கையை தன் வீட்டு
வாசலில் பார்வைக்குப்
படும்படியாக பெரிதாக
எழுதிவைத்திருக்க வேண்டும்.
ஒரு தனவான்
நோயுற்றிருக்கும்போது
மிகக்குறைந்த எண்ணிக்கை
எழுதி வைத்திருந்த வைத்தியனைக்
கண்டுபிடித்து அவனிடம்
சென்றார். ஐயா
தாங்கள் எவ்வளவு காலமாக
வைத்தியம் செய்கிறீர்கள்
என்று தெரிந்து கொள்ளலாமா
என்று கேட்டார். வைத்தியனும்
உடனே, அதற்கென்ன,
நான் முறையாக
பயிற்சி முடித்துநேற்று
முதல் வைத்தியம் செய்கிறேன்
என்றானாம். எத்தனை
பேரைக் கொன்றார் என்பது அல்ல
இதன் விளக்கும். தன்
அனுபவ அறிவால் எந்தப் பொருள்
எந்த வியாதிக்குப் பயன்படும்
என்று தெரிந்து கொண்டு
ஆயிரக்கணக்கான மூலிகைகளில்
வேர்களை தன்னிடத்தில் எப்போதும்
வைத்திருப்பான் ஒரு திறமையான
வைத்தியன். கற்றது
கைம்மண் அல்லவா? அப்போதும்
அவனுக்குத் தெரியாத மற்ற
மூலிகைகளும் மருந்துகளும்
இருக்கும் வாய்ப்பும் உண்டு.
ஆக, ஆயிரம்
வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்
என்ற பழமொழி. காலப்போக்கில்
ஆயிரம் பேரைக் கொன்றவன் என்று
மாறிவிட்டது.
15. கழுதைக்குத்
தெரியுமா கற்பூர வாசனை?
கழுதைக்குத்
தெரியுமா தெரியாதா என்று
நமக்குத் தெரியாது.
ஆனால் அவசரத்தில்
எழுதும்போது பிழைகள் வரும்
என்று நன்றாகத் தெரிகிறது.
கழு என்பது
ஒரு வகைப் புல். பாய்
முடையப் பயன்படும் புல்.
அது கற்பூரம்
போன்ற வாசனை மிக்கதாக இருக்கும்.
வெட்டிவேர்
மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்.
அந்தப்
புல்லைக்கொண்டு பாய் தைக்கும்போது
அந்த கற்பூர வாசனை காற்றில்
பரவுமாம். அதைத்தான்
கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர
வாசனை என்றார்கள். ஒரு
வேளை கழுதை அந்தக் கழுவை
மேய்ந்தால் அதன் சாணத்திலும்
தெரியலாம்.
16. ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டியாவான் -
பெண்கள் என்று
பொருள்கொண்டு, அவர்களை
வளர்த்து கல்வி கற்பித்து,
சீருடன் திருமணம்
செய்து வைக்கப் பெரும் செலவாகும்
என்ற பொருளில் வழங்குவது.
இக்காலத்தில்
ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
கல்வி செலவு
மிகுந்த ஒரு வியாபாரமாகிவிட்டது
மாத்திரமல்ல, திருமணம்
என்பதும் ஆடம்பரம் மிக்க
வைபவமாகிவிட்டதும் ஒரு காரணம்.
ஆனால் இப்பழமொழியின்
உண்மைப்பொருள் பெற்ற பிள்ளைகளைக்
குறித்து அல்ல. 1.ஆடம்பரமாய்
வாழும் தாய்; 2.பொறுப்பு
இல்லாமல் போகும் தகப்பன்;
3.ஒழுக்கம்
தவறும் மனைவி; 4.துரோகம்
செய்யும் உடன் பிறப்பு;
5.பிடிவாதம்
பிடிக்கும் பிள்ளை.
இத்தகைய உறவுகளைப்
பெற்ற ஒருவன், அவன்
அரசனாய் இருந்தாலும் வாழ்க்கையில்
வெறுப்புற்று பற்று இழப்பான்
என்பதே பொருள்.
17. பதினாறும்
பெற்று பெருவாழ்வு வாழ்க
– நிச்சயமாக பிள்ளைகளை மட்டும்
சொல்லவில்லை. கீழ்க்கண்ட
செல்வங்கள் தவம் செய்து
பெறக்கூடியவைகளாகக் கருதப்பட்டன
-
நோயின்மை,
நல்ல
கல்வி, தீதற்ற
செல்வம்,
நிறைந்த
தானியம்,ஒப்பற்ற
அழகு, அழியாப்
புகழ், சிறந்த
பெருமை, சீரான
இளமை, நுண்ணிய
அறிவு, குழந்தைச்
செல்வம், நல்ல
வலிமை, மனத்தில்
துணிவு, நீண்ட
ஆயுள்,
காரியத்தில்
வெற்றி, நல்வினை
(விதி)
மற்றும்
இன்ப நுகர்ச்சி.
நாமிருவர்
நமக்கிருவர் என்று இருந்த
காலம் போய் நாமிருவர் நமக்கெதற்கு
இருவர் என்று மாறிவிட்டாலும்
இந்தச் செல்வங்களையாவது
நமக்கெதற்கு என்று ஒதுக்காமல்
தேடி, கொள்வோமாக.
18.
மண்
குதிரையை நம்பி ஆற்றில்
இறங்காதே
-
யாரும்
இறங்கமாட்டார்கள்.
ஆனால்
இப்பழமொழி குறிப்பது குதிரை-யை
அல்ல, குதிர்
என்பதை. மண்
குதிர் என்பது மணல் மேடு.
ஆழமான
நீரோட்டம் இல்லாத ஆற்றைக்
கடக்க முற்படும்போது நடுநடுவில்
தெரியும் மணல் திட்டைப்
பார்த்து ஆங்காங்கே மணல்
தெரிகிறது,
ஆகவே
ஆழமில்லை கடந்துவிடலாம்
என்று நம்பிவிடவேண்டாம்.
புதைமணல்
கூட சாதாரண மணல்போல் தெரியும்,
ஆனால்
காலைவைத்தால் சட்டென்று
உள்ளே இழுத்துவிடும்.
எங்கு
ஆபத்தின்றி கடக்கலாம் என்பதை
தெரிந்தவர்கள் மூலம் அறிந்துகொண்டு
ஆற்றில் இறங்குவது நலம்.
வேறொரு
விளக்கமும் உண்டு.
ஆற்று
நீர் தெளிவாக ஓடும் இடத்தில்
நீர் வழியே கீழே மண் தெரியும்.
இந்தத்
திரை ஆழத்தில் இருக்கும்
மண்ணை அருகில் இருப்பதுபோல்
காட்டும்.
அதை
நம்பி காலை விட்டால் ஆபத்து
என்பதைக் குறிப்பதாகவும்
பொருள் கொள்ளலாம்.
19.
அரசனை
நம்பி புருசனை கைவிடலாமா?
- அரசர்களை
நம்பக்கூடாது என்பதல்ல இதன்
பொருள்.
சிலநாள்
பகட்டு சுகத்திற்காக நிம்மதியான
நிலையான வாழ்வை விடுவது மடமை
என்ற அறிவுறுத்தும் பழமொழி
இது. அரசாள்பவர்கள்
தங்கள் வாக்குறுதிகளை காற்றில்
பறக்கவிட்டதாலும் இது வழக்கில்
வந்திருக்கலாம்.
உண்மையில்
இதன் பொருள் என்னவென்றால்
குழந்தை பாக்கியம் இன்னும்
கிடைக்கப்பெறாதவர்கள்
நாள்தோறும் அரச மரத்தைச்
சுற்றிவந்தால் பலன் கிடைக்கும்
என்று சொல்வர்.
சுத்தமான
மருத்துவகுணம் நிறைந்த காற்று
மற்றும் உடற்பயிற்சி கலந்த
நன்மையால் கருவுற வாய்ப்பு
அதிகரிக்கும் என்று கொள்ளலாம்.
ஆனால்
இதை மட்டும் நம்பி,
கணவனை
இன்புற நடத்தி அவனுடன் சேர்ந்து
இல்லற வாழ்வில் இருக்காமல்
அரச மரத்தை மட்டும் சுற்றிவந்தால்
கருவுறலாம் என்று எண்ணுவது
மடமையன்றோ?
என்று
பொருள் கொள்ள வேண்டும்.
20. அற்பனுக்கு
வாழ்வு வந்தால் அர்தராத்திரியில்
குடைபிடிப்பான். குடை
எப்போது பிடிக்க வேண்டும்?
மழை
பெய்யும்போது அல்லது வெயிலில்
நிற்கும்போது.
யார்
பிடிக்க வேண்டும்?
அரசன்
அற்பன் என வேறுபாடு கிடையாது.
யாருக்குப்
பாதுகாப்பு வேண்டுமோ,
அவர்
(அல்லது
அவருக்காக)
பிடிக்கவேண்டும்.
எனவே,
இந்தப்
பழமொழி எங்கோ இடிக்கிறதே?
உண்மையில்
இது ஒரு விடுகதை.
நேற்றைய
மழையில் இன்று பூத்த காளான்கள்
பார்த்திருக்கிறீர்களா?
தாவரத்தின்
வேருக்கு அருகில் அழகாக குடை
போன்று காட்சியளிக்கும்.
நேற்று
இரவு அது இல்லை.
இன்று
காலை முழுதும் விரிந்திருக்கிறது.
அப்படியானால்
அது எப்போது வந்தது?
ஆம்,
நீங்கள்
நினைப்பது சரி.
நேற்று
அர்தராத்திரியில்!
இவ்வளவு
விரைவாக முளைக்கும் காளான்
அதே போல் விரைவில் வீழவும்
செய்யும்.
அதன்
ஆயுள் அவ்வளவுதான்.
அற்பம்.
எனவே,
இந்த
விடுகதைக்கு விடை காளான்.
ஒருசிலர்
சற்று வேறுவிதமான விளக்கமும்
சொல்வர்.
தன்னை
சேவைக்காகவே அர்ப்பணித்து
வாழ்பவன்,
பொருள்
வேண்டி வருவோர்க்கு நேரம்
காலம் பார்க்காமல்
அர்தராத்திரியானாலும் கொடை
கொடுப்பான் -
அர்ப்பணித்து
வாழ்பவன் அர்தராத்திரியிலும்
கொடைகொடுப்பான் என்பதுதான்
இந்தப் பழமொழியாக மறுவியிருக்கிறது
என்பர்.
எடுத்துக்கொள்வது
அவரவர் விருப்பம்.
21. தை
பிறந்தால் வழி பிறக்கும்.
வேண்டிய
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
தை மாத அறுவடைக்குப் பின்
பொருள் கிடைக்கும் என்று
பொருள் கொள்கிறோம்.
சரிதான்.
இன்னொரு
பொருள் கதிர் முற்றிய நெல்வயல்
ஊடே செல்லக்கூட வழியில்லாதபடி
வரப்பையும் மறைத்து நிறைந்து
தளும்பியிருக்கும்.
தைமாத
அறுவடைக்குப் பின்னர் தான்
வரப்பு எங்கிருக்கிறது என்றே
தெரியவரும்.
அதுவரை
வரப்பைச் சுற்றியே போகவேண்டிய
கட்டாயம் நீங்கி அறுவடைக்குப்
பின் வயல் ஊடே விரைந்து செல்ல
வழி கிடைக்கும் என்பதாகும்.
22. கப்பல்
கவிழ்ந்தாலும் கன்னத்தில்
கைவைக்காதே.
வாழ்வு
என்பது ஏற்றத்தாழ்வுகள்
நிறைந்ததே.
ஒரு
நஷ்டத்தால் சோர்ந்துவிடக்கூடாது,
மீண்டும்
முயற்சித்தால் வெற்றிக்கு
வழி உண்டு என்ற நம்பிக்கை
தரும் இப்பழமொழி,
வேறொரு
பொருளையும் உள்ளடக்கியது.
கப்பல்
கவிழ்வது சாதாரண நஷ்டமல்ல.
அத்தகைய
பெருநஷ்டம் அடைந்தோர்
பெரும்பாலும் பிழைப்பதற்கான
வழிகளை முற்றிலும் இழந்து
விடுவார்கள்.
அந்த
நிலையிலும்,
மீண்டும்
உழைத்து முன்னேறவே முயலவேண்டுமேயன்றி,
இழந்த
செல்வ வாழ்க்கையை விரைவில்
அடைய கன்னமிடுதல் போன்ற தவறான
வழிகளை சிந்திக்கக்கூடாது
என்பதும் ஏற்கக்கூடிய விளக்கமே.
இப்போது
கப்பலையே கன்னமிடுகிறார்கள்
என்பது வேறு செய்தி.
23. குரைக்கிற
நாய் கடிக்காது.
அப்படியா?
குரைத்துத்
துரத்தி கடிப்பதை நான்
கண்டிருக்கிறேன்.
பின்
ஏன் இந்தப் பழமொழி?
எழுத்துப்பிழை
போன்று கேள்விப்பிழை எனக்
கொள்ளலாம்.
குழைகிற
நாய் கடிக்காது என்று இருந்திருக்க
வேண்டும்.
நம்மை
நம்பி,
அண்டிப்
பிழைக்க வரும் நாய் அல்லது
நாம் அன்போடு வளர்க்கும்
நாய் நம்மிடம் குழைவதைப்
பார்த்திருப்பீர்கள்.
அப்படி
குழையும் நாய் நம்மை எந்தச்
சூழலிலும் கடிக்காது என்று
திடமாக நம்பலாம்.
24. ஆமை
புகுந்த இடம் விளங்காது.
மிகவும்
சரி.
குளத்தாமை,
கடலாமை
அல்ல,
குணத்தாமை.
பொறாமை,
முயலாமை,
அறியாமை,
கல்லாமை,
இயலாமை,
இல்லாமை
போன்ற ஆமைகள் புகுந்த உள்ளம்
நிச்சயமாக விளங்காது.
25. ஆற்றில்
போட்டாலும் அளந்து போடு.
இதற்கும்
இரண்டு விளக்கங்கள் உண்டு.
ஆற்றில்
கொட்டுவதற்கு என்று எடுத்துச்
சென்ற பிறகு,
அளந்து
கொஞ்சமாய் கொட்டிவிட்டு
மீதியை திரும்பக் கொண்டு
வருவது சரியாகாது.
முழுவதுமாக
கொட்டவேண்டியதுதான்.
ஆனால்,
அது
எவ்வளவு என்பது தெரிந்துகொள்வது
நல்லது.
எந்த
ஒரு செயலிலும் விரயம் எவ்வளவு
என்பது தெரிந்தால்தான் அதை
குறைக்கவோ தடுக்கவோ முடியும்.
ஏன்
விரயமாகிறது,
எவ்வளவு
விரயமாகிறது என்பது தெரியாமலே
செயலைத் தொடர்ந்துகொண்டிருந்தால்
வாழ்வில் முன்னேற முடியாது
என்பது முதல் பொருள்.
மற்றொரு
பொருள்,
நமக்காகவே
ஒரு பொருளை வாங்கியோ செய்தோ
உட்கொண்டாலும்,
நன்றாக
இருப்பதாலோ,
பிடித்திருப்பதாலோ
அளவுக்கு அதிகமாக உட்கொண்டால்
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்
என்பதால் எதையும் அளவுடன்
உட்கொள்ள வேண்டும் என்பதாகும்.
அகம்
என்பது உடல்.
அகத்தில்
இட்டாலும் என்பது ஆத்தில்
இட்டாலும் என மாறி பிறகு
ஆற்றில் போட்டாலும் என்று
மருவியிருக்கிறது என்பர்.
26. ஆனைக்கொரு
காலம் வந்தா பூனைக்கொரு காலம்
வரும்.
ஆம்
வரும்.
வலியோர்க்கு
ஒரு காலம் என்றால் எளியோர்க்கும்
ஒரு காலம் வரத்தானே வேண்டும்?
ஆனால்
இப்பழமொழி,
ஒரே
மனிதன் வலியவனாக உடல் பெருத்தும்,
எளியவனாக
உடல் சிறுத்தும் வாழ வழி
சொல்கிறது.
ஆ-நெய்
அதாவது பசவின் நெய் உட்கொண்டால்
கொழுப்பு சேர்ந்து உடல்
பருமனாகும்.
மாறாக
பூ-நெய்
அதாவது மலர்களிலிருந்து
தேனீக்கள் மூலம் பெறப்படும்
தேன் உட்கொண்டால் பருத்த
உடல் கொழுப்பு களைந்து
இளைக்கலாம் என்பது இப்பழமொழி
மூலம் தமக்கு யாம் அறிவிக்கும்
செய்தியாகும்.
27. அடி உதவறாமாதிரி
அண்ணன் தம்பி உதவமாட்டான்.
அண்ணனோ
தம்பியோ அடி என்று இறங்கிவிட்டால்
அப்புறம் சண்டைதான்.
யாரையும்
அடித்தெல்லாம் திருத்த
முடியாது.
இங்கு
அடி எனக் குறிப்பிடுவது ஒரே
அடியில் அமைந்த ஆத்திச்சூடி,
கொன்றைவேந்தன்,
இரண்டு
அடிகளாலான திருக்குறள்,
நான்கு
அடிகளாலான நாலடியார்,
மூதுரை
போன்ற மற்ற நீதிச் செய்யுட்கள்
ஆகியவற்றையாம்.
நல்வாழ்விற்குத்
தேவையான அத்தனை அறிவுரைகளும்
நமது பாக்களிலே பொதிந்து
கிடக்கின்றன.
அவற்றின்
மூலம் கிடைக்கப்பெறும் அறிவும்
பலனும் மற்றெங்கும் கிடைக்காது
என்பது பொருள்.
இன்னொரு
சுவையான விளக்கம்,
ராமன்
லக்ஷ்மணனுடன் காட்டுக்குச்
செல்லும்போது தன் பாதுகையை
பரதனிடம் கொடுத்துச் செல்கிறான்.
பரதன்
அதனை சிரமேற்கொண்டு ராமனும்
லக்ஷ்மணனும் இருந்திருந்தால்கூட
இவ்வளவு நேர்மையாக இருந்திருக்குமா
என்று வியக்கும்படி நல்லாட்சி
புரிகின்றான்.
அந்த
பாதுகை -
திருவடி
- அவனுக்கு
உதவினாற்போல அண்ணன் தம்பிகளான
ராமன்-லக்ஷ்மணனே
கூட உதவியிருக்க மாட்டார்கள்
என்றொரு விளக்கம்.
இதைவிட
சுவையான இன்னொரு விளக்கம்
- அடி
என்று ஆண்கள் யாரை அழைக்கிறோம்?
ஆம்,
ஆயுள்
முழுவதும் நம்முடன் நம்
இன்பதுன்பத்தில் பங்கு கொண்டு
தோள் கொடுக்கும் துணைவி நமக்கு
உதவுவது போல வேறு யாரும்
உதவமாட்டார்கள் என்பதும்
உண்மை.
28. அடிமேல
அடிவைத்தால் அம்மியும் நகரும்.
அது
எப்படி?
அடியும்
காலால் எடுத்து வைக்கும்
அடியில்லை,
தலையில்
அடிக்கும் அடி.
நகர்ந்ததும்
அம்மியில்லை.
த
என்னும் எழுத்து.
அது
நகர்ந்து அடுத்த எழுத்தான
ந வந்து உட்கார்ந்திருக்கிறது.
ஆமாம்,
அடிமேல்
அடிவைத்தால் அம்மியும் தகரும்
என்பதே முதலில் இருந்த சொல்.
தகரும்
என்றால் உடையும் என்று பொருள்.
பாறை
போன்ற கடினமான பொருட்களை
சம்மட்டியால் அடித்து உடைப்பதை
கண்டிருப்போம்.
விடாமுயற்சி
இருந்தால் எதையும் சாதிக்கலாம்
என உந்தும் பழமொழி இது.
29. பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும்.
கையில்
கூரான ஆயுதங்களுடன் போரிட்டுக்
கொண்டிருக்கும் இரைச்சலான
சூழலில் முதலில் பாம்பு அங்கே
வராது.
அப்படியே
வந்தாலும் ஈட்டியாலோ வாளாலோ
ஒரே வீச்சில் அதன் ஆயுள்
முடியும்.
அப்படியிருக்க
படை எப்படி நடுங்கும்?
எப்படியென்றால்,
எல்லாவற்றிற்கும்
வல்ல ஆயுதமாக அது வரும்போது
படைமொத்தமும் நடுங்கும்.
அந்த
ஆயுதத்திற்குப் பெயர்
நாகாஸ்திரம்.
பாம்பின்
வடிவத்தில் வாயிலிருந்து
தீயை கக்கிக்கொண்டு வரும்
இந்த அஸ்திரத்தை வெல்ல யாராலும்
முடியாது.
இந்தப்
பாம்பைக் கண்டால் படை நடுங்கத்தானே
செய்யும்?
30. கண்டதைப்
படித்தால் பண்டிதன் ஆகலாம்.
கண்டதையும்
படித்தால் பைத்தியமாக
வேண்டுமானால் ஆகலாம்.
எப்படி
பண்டிதனாக முடியும்?
தனக்கு
விருப்பமான ஏதாவது ஒரு விஷயத்தை
மனதில் கொண்டு அதையே சிந்தித்து
அதன் ஆதி அந்தத்தைக்
கண்டுவிடவேண்டும் என்ற
முனைப்பில் மும்முரமாக
அதைப்பற்றிய அத்தனை தகவல்களையும்
கண்டு அவற்றைப் படித்தால்
அந்த விஷயத்தில் பண்டிதனாகலாம்
என்பதே பொருள்.
31. புண்பட்ட
மனதை புகைவிட்டு ஆற்று.
மனசு
சரியில்லேன்னா மெதுவா
உலாத்திக்கிட்டே ஒரு தம்
அடிச்சா சரியாப்போயிடும்
என்று அர்த்தம் இல்லை.
மனதில்
ஏதாவது கவலை இருந்தால் வேறு
ஒரு மகிழ்வு தரக்கூடிய விஷயத்தை
நினைவில் புகுத்தி இந்த
கவலைதரும் விஷயத்தை மறக்கடிக்க
வேண்டும்,
எப்போதும்
துன்ப நினைவில் இருப்பது
நல்லதல்ல என்பதே இப்பழமொழி
நமக்கு உணர்த்தும் செய்தி.
32. நல்ல
மாட்டுக்கு ஒரு சூடு.
கெட்ட
மாட்டுக்கு நிறைய சூடா?
அப்படியில்லை.
ஒரு
மாட்டின் பலத்தையும் தன்மையையும்
அதன் காலடிச் சுவட்டிலிருந்தே
அறிந்து கொள்ளலாம்.
அழுத்தமான,
சீரான
சுவட்டைப் பதிக்கும் மாடு
நல்ல ஆரோக்கியத்துடன் பலமாகவும்,
சொன்ன
சொல் கேட்டு நடப்பதாகவும்
இருக்கும் தன்மை உடையதாயிருக்கும்.
சுவடு
என்பது சூடு என மறுவிவிட்டது.
33. கூத்தாடி
கிழக்கே பாப்பான் கூலிக்காரன்
மேக்கே பாப்பான்.
பிழைப்பு
என்பது வாழ்வின் மூலாதாரம்
அல்லவா?
அதுவும்
ஏழைகளுக்கு சாகும் வரையில்
போராட்டம்தான்.
கூத்தாடும்
கலைஞர்களுக்கு ஊர் ஊராகச்
சென்று கூத்துகட்டி பிழைப்பதுதான்
வாழ்க்கை.
பொழுது
விடிந்தால் மூட்டை கட்டிக்கொண்டு
அடுத்து எந்த ஊர் செல்ல வேண்டும்
என்ற நினைப்பில் இருப்பார்கள்.
எனவே,
பொழுது
விடிவதை அறிய கிழக்கை
பார்ப்பார்கள்.
கூலி
வேலை செய்பவன் வேலை முடிந்த
பின் பெறப்போகும் கூலியை
எண்ணியே தன் வாழ்நாளை ஓட்டுவதால்
அவன் எப்பொழுது பொழுது சாயும்
என்று மேற்கையே பார்த்துக்கொண்டிருப்பான்.
34. ஊரார்
வீட்டு நெய்யே என் பெண்டாட்டி
கையே. நெய்
வீட்டில் தயாரித்து விற்ற
காலம் அது.
பலகாரம்
ருசியாய் இருக்கிறது.
தரமான
நெய் வாங்கினா யார் செஞ்சாலும்
நல்லாத்தான் இருக்கும்
என்கிறாள் தாய்.
யார்
வீட்டு நெய்யா இருந்தா என்ன?
இது
மாதிரி செய்ய என் பெண்டாட்டியால்தான்
முடியும் என்று பெருமைப்படுகிறான்
பிழைக்கத் தெரிந்த கணவன்.
இன்னொரு
விளக்கம்.
விருந்துண்ணச்
சென்ற இடத்தில் மனைவியை நெய்
பரிமாற அழைக்கின்றனர்
விருந்துக்கு அழைத்தவர்கள்.
தன்
கணவனின் இலைக்கு முன்னர்
வந்த அவள்,
விருந்துக்கழைத்தவர்
வீட்டு நெய்தானே என்ற எண்ணத்தில்
தாரளாமாக ஊற்றினாளாம்.
தம்
பொருளை செலவழிப்பதில் சிக்கனமாக
இருப்பவர்கள் மற்றவர்கள்
பொருள் என்றதும் தாராளமாக
மாறிவிடும் இயல்பைக் குறிக்கும்
பழமொழி.
தற்காலத்தில்,
ஓசியில்
கிடைத்தால் பினாயிலையும்
குடிப்பான் என்கிறாற்போல்.
35. கொன்றால்
பாவம் தின்றால் போகும்.
ஒரு
உயிரைக் கொல்வதனால் உண்டாகும்
பாவம் அதைத் தின்றால்
கழிந்துவிடும்.
ஆகவே
ஊன் உண்போர் அவ்வுயிரைத்
தானே கொல்லும் பட்சத்தில்
அதைத் தின்பது பாவமாகாது
என்று சொன்னாலும் இது
ஒப்புக்கொள்ளும்படியாக
இருக்கிறதா?
ஆனால்,
உயிர்
பிழைக்க வேறு வழியில்லாமல்
பாலைவனத்திலோ,
தாவரங்கள்
இல்லாத தீவிலோ சிக்கிக்கொள்ளும்
பட்சத்தில் காப்பாற்ற வேறொருவர்
வரும் வரையில் கிடைக்கும்
உயிரினங்களைக் கொன்று உண்டு
உயிர்வாழ்வது தவறில்லை,
அந்தச்
செயல் பாவமாகாது என்று நீதி
சாத்திரங்கள் சொல்கின்றன
என்பர்.
ஒரு
செட்டி வணிகன் தெரியாமல்
தான் வளர்த்த பூனையைக்
கொன்றுவிடுகிறான்.
சாத்திரம்
கற்ற பிராமணனிடம் பிராயச்சித்தம்
கேட்டானாம்.
பொன்னாலான
பூனையை செய்து கங்கையில்
விடு என்றானாம்.
யோசித்த
செட்டியோ,
ஐயா
நான் வெல்லத்தால் பூனையைச்
செய்து கங்கையில் நனைத்து
அந்த வெல்லத்தையும் நானே
உண்டு என் பாவத்தைப்
போக்கிக்கொள்கிறேன்,
ஆளை
விடுங்கள் என்றானாம்.
36. ஐயா
கதிரென்றால் அம்மா குதிர்.
ஒருவருக்கொருவர்
அவ்வளவு பொருத்தமானவர்.
ஐயா
எப்படியிருந்தாலும் அம்மா
தாங்கிக் கொள்வாள்.
ஐயாவின்
குணங்களும் சரி,
ரகசியங்களும்
சரி,
அம்மாவிடம்
அடக்கம்.
எப்படி
வேண்டுமானாலும் வைத்துக்
கொள்ளலாம்.
உண்மைப்
பொருள் சற்று வெளிப்படையானதே.
நிதமும்
வயலுக்குப் போய் வேலையாட்களை
சரிவர கண்காணித்து அறுவடையை
வீட்டில் கொண்டு சேர்க்கும்
வரை உழைக்கும் ஐயா கதிர் போல்
மெலிந்தே இருப்பார்.
அவர்
சம்பாதிக்கும் செல்வத்தை
ஆடாமல் அசையாமல் ஓரிடத்திலிருந்து
அனுபவிக்கும் அம்மா குதிர்
போல் பருத்தே இருப்பார்.
37. தனக்கு
மிஞ்சித்தான் தருமம்.
இருப்பதையெல்லாம்
கொடுத்து தனக்குக்கூட இல்லாமல்
இழந்துவிடக் கூடாது;
தனக்குத்
தேவையானவற்றை வைத்துக்கொண்டு
எஞ்சியிருப்பின் அவற்றை
தானத்திற்கும் தருமத்திற்கும்
செலவு செய்யலாம் என்பதல்ல
இதன் பொருள்.
ஆடிய
ஆட்டமும்,
தேடிய
செல்வமும்,
திரண்ட
சுற்றமும் எவ்வளவு இருந்தாலும்
இவ்வுலகு விட்டு அவ்வுலகு
செல்லும்போது நம்முடன்
வரக்கூடியது நாம் செய்த
நற்செயல்களின் பலனே.
கடைசியில்
தனக்கு மிஞ்சுவது தான தர்மமே
என்பதைச் சுட்டும் பழமொழி
இது சற்றே மருவிவிட்டது.
38. ஆலையில்லா
ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
சர்க்கரையோ,
வெல்லமோ,
கருப்பட்டியோ,
காய்ச்ச
ஆளோ ஆலையோ இல்லத ஊரில் (அல்லது
காட்டில்),
இயற்கையிலேயே
இனிப்பைக் கூட்டும் சுவையுள்ள
இலுப்பைப் பூக்களை பயன்படுத்துவார்கள்
என்பது பொருள்.
கரடி
தேனை விரும்பும் என்று
கேள்விப்பட்டிருக்கிறோம்.
இலுப்பைப்
பூக்களையும் விரும்பி உண்ணுமாம்.
ஆகவே
இலுப்பையின் இனிப்பு
நிரூபிக்கப்படுகிறது.
ஆனாலும்
இப்பழமொழியின் உண்மைப்பொருள்,
சற்று
சுவைத்துத் தான் சொல்ல வேண்டும்.
இலுப்பை
எப்போது இனிக்கிறது?
சர்க்கரை
இல்லாதபோது.
அது
போன்றே,
திறமையோ
அருகதையோ அற்றவர்கள் எப்போது
போற்றப்படுகிறார்கள் என்றால்
அருகதை உள்ளவர்கள் இல்லாமல்
போகும்போது.
லால்
பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு
வந்த பிரதமர்களோ அல்லது
காமராஜருக்குப் பின் வந்த
முதல்வர்களோ,
எங்கோ
இடையில் ஒருசில கருப்பட்டித்
துண்டுகள் தவிர அனைவரும்
இலுப்பைதான்!
39. ஆட்டுக்கு
வால் அளந்து வைத்திருக்கிறது.
வால்
அளந்து வைக்கப்பட்டிருக்கிறதோ
இல்லையோ,
இந்தப்
பழமொழிக்குப் பொருள் மிகவும்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு
நாள் முழுவதும் வலைத்தளத்தில்
தேடி கடைசியில் கண்டுபிடித்தேன்.
ஒன்று
பொருள்.
மற்றது
யூகம்.
எதை
எடுத்துக்கொள்வது என்பதை
உங்கள் விருப்பத்திற்கு
விட்டுவிடுகிறேன்.
ஆட்டுக்குத்
தேவையான இலை தழைகள் கிடைக்காதபோது
தங்களுக்குத் தேவையான கொழுப்புச்
சத்தை அவைகள் வாலில் சேர்த்து
வைத்துக்கொள்ளும் திறன்
படைத்தவை.
அதற்கேற்றாற்போல்,
உணவு
எப்பொழுதும் கிடைக்கும்
இடங்களில் வால் சிறியதாகவும்
பருவ நிலை காரணமாக உணவு சீராகக்
கிடைக்காத இடங்களில் வால்
சற்று நீளமாகவும் அமையப்பெற்றிருக்கும்.
ஆக,
அவை
வசிக்கும் இடத்திற்கேற்ப
அவற்றின் வால் நீளம் இருக்கும்
என்பது ஒரு பொருள்.
இன்னொரு
பொருள் விளங்க இந்தப் பழமொழியை
சற்று வேறாகப் பிரித்துப்
படிக்க வேண்டும்.
ஆட்டு
குவால் அளந்து வைத்திருக்கிறது.
குவால்
என்றால் கூட்டம்,
குவியல்
என்று பொருள்.
எந்தெந்த
உயிரினம் எவ்வளவு படைக்க
வேண்டும் என்பதை இறைவன் அல்லது
இயற்கை அறிந்தே அந்த எண்ணிக்கையில்
இவை படைக்கப்பட்டிருக்கின்றன
என்று பொருள் கொள்ளலாம்.
40. உப்பிட்டவரை
உள்ளளவும் நினை.
உணவின்
ருசியை சிறப்பிப்பது சரியான
அளவில் கலந்த உப்பு.
சற்று
மிகையானாலும் சரி,
சிறிது
குறைந்தாலும் சரி,
உணவின்
ருசி ஏற்க இயலாதாகவோ அல்லது
முழுமை பெறாததாகவோ மாறிவிடும்.
அதிகமாக
சேர்த்தபின் குறைக்க இயலாது
என்பதால் ஒரு கல் குறைவாகவே
சேர்த்து சமைத்து,
மீதம்
வேண்டிய அளவுக்கு அவரவர்
ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளவே
இலையில் ஒரு மூலையில் எப்போதும்
உப்பு பரிமாறும் வழக்கம்
ஏற்பட்டது.
ஆனால்,
உப்பே
பிரதானமல்ல.
உப்புடன்
சேர்த்து உண்டி கொடுத்தோரை
நன்றி மறவாமல் என்றும்
நினைத்திருக்க வேண்டும் என்ற
கருத்தில் உப்பிட்டவரை
உள்ளவும் நினை என்கிறோம்.
ஆயின்,
இதற்கு
வேறொரு விளக்கமும் உண்டு.
உப்பு
என்பதற்கு இனிமை,
அன்பு
என்ற பொருளும் உண்டு (உவப்பு
என்பதன் திரிபாக இருக்கலாம்).
நிம்மதியற்று
சஞ்சலத்துடன் இருக்கும்
நேரத்தில் மனதிற்கு இனிமையாக
நான்கு வார்த்தைகள் பேசி
நம்மைத் தேற்றுபவரையும் நாம்
என்றும் நன்றியுடன் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும்
என்று பொருள் கொள்ளலாம்.
41. வெந்து
கெட்டது முருங்கை வேகாமல்
கெட்டது அகத்தி.
முருங்கையை
சிறிது வேகவைத்தால் போதும்.
அகத்திக்கீரை
கடினமானது.
அதிகம்
வேகவைக்க வேண்டும்.
இது
சமையல் குறிப்புதானே என்கிறீர்கள்.
புரிகிறது.
இப்பழமொழியின்
விளக்கம்,
ஒவ்வொரு
செயலுக்கும் ஒரு தன்மை,
ஒரு
பக்குவம் உண்டு.
அதை
சரியாகப் புரிந்துகொண்டு
அதன்படி செய்யவேண்டும் என்பதை
உணர்த்தும் பழமொழி இது.
42. எள்
எண்ணெய்க்குக் காயுது.
எலிப்புழுக்கை
எதுக்கு காயுது? எள்ளை
காயிலிருந்து பிரித்தபின்
எண்ணெய் பிழிய செக்குக்கு
கொண்டு செல்லும் முன் தரையில்
நன்றாக வெயிலில் உலர்த்துவார்கள்.
ஈரம்
இருந்தால் எண்ணெய் சீக்கிரமே
கெட்டுவிடும்.
அப்படி
காயவைக்கும் எள்ளுக்கு நடுவில்
எலிப்புழுக்கைகளும் சேர்ந்து
காயும்.
ஒரு
நோக்கத்துக்காக பலர் ஒன்றுகூடி
வேலை செய்யும் இடத்தில்
மத்தியில் தேவை இல்லாதவர்கள்
ஏன் இருக்க வேண்டும் என்பதை
சுட்டிக்காட்ட இந்தப் பழமொழி
பயன்படுகிறது.
சற்று
ஆழமாகப் பார்த்தால்,
எலிப்புழுக்கை
இருந்தால் எலி தினமும் வந்து
எள்ளைத் தின்றிருப்பது
புலனாகும்.
எலி
நடமாட்டம் சுகாதாரக் கேடு
மட்டும் அல்ல,
எள்ளையும்
தின்பதால் முதலுக்கே மோசம்
செய்யும் செயலுமாகும்.
எனவே
ஒரு வேலைக்கு சம்மந்தம்
இல்லாதவர்கள் அல்லது சம்மந்தம்
இல்லாத பொருட்கள் இருந்தால்
அவற்றை மாத்திரம் அப்புறப்படுத்தாமல்,
அவை
அங்கு ஏன் வந்தன என்ற காரணத்தையும்
கண்டுபிடித்து அதையும் அகற்ற
வேண்டும் என்ற உண்மையை
உணர்த்தும் பழமொழி இது.
43. அசைந்து
சாப்பிடும் யானை,
அசையாமல்
சாப்பிடும் வீடு.
யானை,
வீடு
இரண்டுமே எப்பொழுதும் செலவு
வைத்துக்கொண்டே இருக்கும்
என்பது இது உணர்த்தும் பொருள்.
அனால்
இவைகளை சுமையாகவா பார்க்கிறோம்?
யானை
என்றால் தீனி மட்டும் தானா?
வீடு
என்றால் பராமரிப்பு மட்டும்
தானா?
இவை
இரண்டுமே செல்வத்தின்
அடையாளங்கள்.
யானை
கட்டி மேய்ப்பவன் செல்வந்தனாகத்தான்
இருப்பான்.
அவனுக்கு
யானையால் விளையும் பயன்களும்
அதிகம்.
வீடு
என்பதும் உறவினர்கள் நண்பர்கள்
விருந்தினர் வந்து செல்வதாக
இருந்தால்தான் சிறக்கும்,
உறவுகள்
மேம்படும்.
அத்தகையை
உறவினை விரும்பி பேணிக்காப்பவன்
மக்களிடையே நல்ல மதிப்பு
பெற்றவனாகத்தான் இருப்பான்.
இவ்விரு
செல்வங்களும் செழித்து இருக்க
வேண்டுமானால்,
இவைகளை
நல்ல முறையில் பேணிப் பாதுகாக்க
வேண்டும்.
இவைகளின்
நலத்திற்கு கேடு வரும்போது
அதை சரி செய்வதற்கான செலவுகளை
செய்ய தவறக்கூடாது.
அழகான
பேனா வைத்துக்கொண்டு மை
நிரப்பாமல் இருந்தால் எப்படி?
பேனா
நன்றாக எழுதினால்தானே எழுதும்
எழுத்திலும் உற்சாகம் இருக்கும்?
44. அரசன்
அன்று கொல்வான்.
தெய்வம்
நின்று கொல்லும்.
செய்த
குற்றத்திற்கு ஏற்ப தண்டனை
அளித்து அதை விரைவில்
நிறைவேற்றுவது அரசனின் கடமை.
இல்லாவிடில்
கயவர்களிடையே அச்சம் மறைந்து
துணிவு துளிர்விடும்.
ஆனால்
தெய்வமோ உடனே தண்டிக்காமல்
காத்திருந்து பின்னர் தக்கதொரு
சமயத்தில் நிச்சயம் தண்டிக்கும்
என்று பொருள் கொள்வர்.
செய்த
குற்றத்தை தன் சாமர்த்யத்தினால்
மறைத்து தப்பித்தவனை யார்
தண்டிப்பர்?
அப்படிப்பட்டவனுக்கு
அவனது மனசாட்சியே தெய்வம்.
அந்த
நேரத்தில் தப்பித்தாலும்
அந்த குற்ற உணர்ச்சி மனதின்
ஒரு மூலையில் மறைந்து
ஒளிந்திருக்கும்.
அவ்வப்போது
நினைவிற்கு வந்து துன்புறுத்தும்.
பிறகொரு
சமயத்தில் செய்யாத குற்றத்திற்காக
பிடிபட்டாலோ,
அல்லது
காரணமில்லாமல் துன்பம்
நேரும்போதோ மனதை அலைக்கழித்து
சித்திரவதை செய்யும்.
இப்படி
நிதானமாக நின்று தண்டிக்கும்
மனசாட்சியே தெய்வம் நின்று
கொல்லும் என்று கொள்ளத்தக்கது.
45. தானம்
கொடுத்த மாட்டை பல்லைப்
பிடுங்கிப் பார்க்காதே.
மாடு
வாங்கச் செல்பவர்கள் மாட்டின்
நலத்தை அறிய அதன் கீழ்த்தாடையை
இழுத்து கீழ்வரிசைப் பற்களைப்
பார்த்தே அதன் ஆரோக்கியத்தை
அறிந்துகொள்வர்.
ஆனால்
பணம் கொடுத்து வாங்காமல்
தானமாக மாட்டைப் பெறும்போது
கொடுப்பவரின் மனம் கோணாமல்
கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
கொடுப்பவரின்
எண்ணம் தான் முக்கியம்.
பெயருக்காகவோ
தற்பெருமைக்காகவோ இல்லாமல்
பிறரின் தேவையை உணர்ந்து
ஒருவர் மனமுவந்து தானம் செய்த
பொருளில் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது
என்பது பொருள்.
46. நாற்பது
வயதில் நாய் குணம்.
குறிப்பாக
ஆண்களுக்கு நாற்பதுகளில்
எதைச் சொன்னாலும் எரிச்சல்
பட்டு வள்வள்ளென்று கத்துவது
வழக்கம் என்ற பொருளில்
சொல்லப்படுவது இப்பழமொழி.
நாயைப்
பற்றி முழுவதும் அறியாதவர்கள்
கூற்றாகவே இருக்க வேண்டும்.
நாயை
கவனித்தீர்களானால் உடலை
சுருட்டிக்கொண்டு தூங்குவதுபோலத்
தோன்றினாலும் சுற்றி நடக்கும்
எந்த அசைவையும் உணர்ந்தபடிஉள்ளுள்குள்
விழிப்புடனே இருக்கும்.
மனிதனும்
அந்த விழிப்புணர்வை எப்போது
அடைகிறான் என்று பார்த்தால்,
வளர்ந்து
ஆளாகி பொறுப்புகளைச் சுமக்கும்
அனுபவம் வந்தபிறகுதான் தன்னைச்
சார்ந்திருப்பவர்களின்
நலனுக்காக எப்போதும் விழிப்புடன்
இருக்கவேண்டிய நிலையை
உணர்கிறான்.
இது
கிட்டத்தட்ட நாற்பதுகளில்தான்
அமையப்பெறும் என்பதே இப்பழமொழியின்
உண்மைப்பொருள்.
47. பொம்பளை
சிரிச்சா போச்சு,
புகையிலை
விரிச்சா போச்சு.
புகையிலை
தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
எலி
வரும் இடத்தில் சிறிது புகையிலை
வைத்தால் போதும்,
அதன்
வாடை பிடிக்காமல் எலி வராமல்
விலகிவிடும் என்பர்.
ஆனால்
புகையிலை வாடையின் வீரியம்
குறையாமல் இருக்கவேண்டுமானால்
அது சுருட்டியே இருக்கவேண்டும்.
விரித்துவைத்தால்
வாடை காற்றில் கரைந்து இலை
பயனில்லாமல் போய்விடும்.
சிகரெட்,
பீடிகளில்
கூட அது காகிகதத்திலோ,
இலையிலோ
சுருட்டியிருப்பதைக் காண்கிறோம்.
இவற்றைவிட
சுருட்டு இன்னும் சக்திவாய்ந்ததாகக்
(அதிக
நாற்றமும்கூட)
கருதப்படுவதற்குக்
காரணம் அது சுருட்டியே
இருப்பதால்தான்.
புகையிலை
புராணம் போதும்.
பொம்பளைக்கு
வருவோம்.
பெண்கள்
பொதுவாகவே,
அடக்கமாகவும்,
மென்மையாகவும்,
எதையும்
நாசுக்காக செய்பவர்களாகவும்
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீரப்
பெண்மணிகளும் மதியூகம் மிக்க
பெண்களும்கூட (பாகுபலி
ரம்யா கிருஷ்ணன் போல குரல்
அதிகம் எழுப்பாமல் கறுவலாம்).
சபையில்
உரக்க சிரிக்கும் பெண் ஏனோ
மரியாதை இழக்கிறாள்.
காரணத்தை
ஆராய்ந்தால்,
நல்ல
குலப் பெண் ஒருத்தி உரக்க
சிரித்ததுதான் மாபெரும்
போருக்குக் காரணமானது தெரிகிறது.
ஆம்,
பாண்டவர்களின்
மாளிகையைப் பார்வையிட வந்த
துரியோதனன்,
தண்ணீர்
என்று நினைத்து பளிங்குத்
தரையைத் தவிர்த்ததையும்.
பளிங்கு
என்று நினைத்து தண்ணீரில்
விழுந்ததையும் உப்பரிகையில்
இருந்து கண்ட திரெளபதி என்ன
துரியோதனா,
உனக்கும்
உன் தந்தைபோல கண் குருடாகிவிட்டதா?
என்று
ஏளனம் செய்து பலமாக சிரித்தாளாம்.
அப்போது
விழுந்தது அவன் மனதில் அவளைப்
பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம்.
பின்னர்
நடந்தது அனைவருக்கும் தெரியும்.
அதுவே
பொம்பளை சிரிச்சா போச்சு
என்ற சொலவடை வர முதல் காரணம்.
48. கழுதை
கெட்டால் குட்டிச்சுவர்.
கழுதைகள்
பெரும்பாலும் சுவர் அருகில்
நிற்கும்.
அழுக்கு
மூட்டைகளையே சுமப்பதால்
அவற்றின் தோலில் அரிப்பு
ஏற்பட்டால் உரசுவதற்காக
சுவர் அருகில் நிற்பதைக்
குறிக்கும் வகையில் இப்பழமொழி
ஏற்பட்டிருக்கலாம் என்றாலும்
மாற்றுக் கருத்துக்களும்
உள்ளன.
கழுதை
எங்கே என்று கேட்டால்,
வேறெங்கே,
குட்டிச்
சுவர் அருகில் இருக்கும்
பார் என்பார்கள்.
கேட்டால்
என்ற சொல் கெட்டால் என ஆகிவிட்டது
என்பர் சிலர்.
ஊர்ப்பெருசுகளோ,
கழுதைகள்
வேலை இல்லாத சமயத்தில் எப்படி
வெட்டியாய் சுவர் அருகில்
நிற்கின்றனவோ,
அதுபோல
மூளையும் வேலையும் இல்லாத
மூடர்களும் ஒன்றும் செய்யாமல்
எங்காவது கூடி வெட்டிப்பேச்சு
பேசிக்கொண்டு நேரத்தைக்
கடத்துவர் என்பதை குறிக்கவே
இந்த சொலவடை வந்தது என்பர்.
சற்று
ரூம் போட்டு யோசித்தவர்கள்
சொல்படி,
கழுதை
மந்த புத்தி உள்ள ஒரு பிராணி.
நன்றாக
தீனி வைத்து அதட்டி அடித்து
பழக்கினால்தான் அது சொல்வதை
கேட்கும்.
உரிய
வகையில் பராமரிக்காமல்
விட்டுவிட்டால் புத்திகெட்டு
கட்டளையை ஏற்காமல் சுவர்
மாதிரி நின்ற இடத்திலேயே ஒரு
வேலையும் செய்யாமல் இருக்கும்
என்பதையே கழுதை (புத்தி)
கெட்டால்
குட்டிச் சுவர் என்று ஆயிற்று
என்பர்.
கற்பூர
புத்தியுள்ளவர்கள் சரியான
பொருளை அறிந்துகொள்வர்.
49. கழுதை
தேய்ந்து கட்டெறும்பு ஆனது
போல். என்னதான்
உடல் இளைத்தாலும் கழுதைக்கம்
கட்டெறும்புக்கும் அளவீடு
பொருந்துமா?
வேலை
செய்யாமல் நிற்கும் கழுதையை.
வண்ணான்
வேலை வாங்க,
அது
தேய்ந்து தேய்ந்து (உழைத்து
உழைத்து)
கட்டெறும்பு
போல சுறுசுறுப்பாக மாறிவிட்டது
என்று கொள்ளலாமா?
இது
குறிப்பால் வேறு உண்மையை
உணர்த்தும் அருமையான பழமொழி.
பொருளை
உழைத்து சம்பாதித்து தக்கபடி
பெருக்காமல்,
பாதுகாக்காமல்
விட்டால்,
கழுதை
சுமக்கும் பொதி அளவிற்கு
அதிகமான சொத்துக்கள் இருந்தாலும்
அது நாளடைவில் கட்டெறும்பு
சுமக்கும் சிறிய கல்லளவு
கரைந்து விடும் என்று பொருள்.
50. ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்கும்.
ஆடிக்காற்று
பலமானது தான்.
ஆனால்
அம்மி பறக்குமா?
சற்று
மிகையான கூற்று போல் தோன்றுகிறதே?
வைகாசி
வெய்யிலின் தாக்கத்தால்
அதற்கடுத்த மாதங்களில் அம்மை
நோய் பரவலாகக் காணப்படும்.
ஆடி
மாதக் காற்றால் வெப்பம் தணியத்
தொடங்கி அம்மை நோய் மறையத்
தொடங்கும்.
ஆடிக்காற்றில்
அம்மையும் பறக்கும் என்பது
உண்மையான விளக்கம்.
1.1.2021