Tuesday, June 28, 2016

பெரிய கதை

மதிய நேரத்தில் பெரியவர்கள் (அதாவது எனது மனைவியும் மகளும்) உணவுக்குப் பின்னர் சற்றே ஓய்வெடுக்கும் சாக்கில் மின்னல் வேகத்தில் உறக்கத்தில் வீழ, பேத்தியை மாத்திரம் இப்போது தூங்கவிட்டால் பின்னர் நள்ளிரவுக்கு மேலும் விழித்துக்கொண்டிருப்பாள் மேய்ப்பது கடினம் என்பதனால் ஓரிரு கதைகளைச் சொல்லி முடியுமட்டும் தூங்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனதாகியது.
கதை சொல்லட்டுமா என்று கேட்டவுடனேயே ஆர்வத்துடன் தலையாட்டிக்கொண்டே என் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.
முதலில் சிங்கத்தின் குகையில் சிங்கம் தூங்கும்போது அதன்மேல் விளையாடி தொந்தரவு செய்த சுண்டெலியை கோபத்துடன் பிடித்து உள்ளங்கையிலேயே நசுக்க இருந்த சிங்கம், சுண்டெலி மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வேண்டிக்கொண்டதன்பேரில் மனமிரங்கி விடுவித்ததும், பின்னர் அதே சிங்கத்தை மிருகக்காட்சிசாலைக்கு வேண்டி வலையில் பிடித்து வண்டியில் ஏற்றும் சமயம் அந்த சுண்டெலி வலையைக்கடித்து சிங்கத்தைக் காப்பாற்றிய கதை.  ஆர்வத்துடன் கேட்டு முடித்த பின்னர், இந்தக் கதை உனக்குத் தெரியுமா? என்றேன்.  தெரியுமே என்றாள்.  யார் சொல்லியிருக்கிறார்கள் எனக் கேட்டதற்கு அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றாள்.
அடுத்தது பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றான காகத்தின் கதை.  தன்னுடைய கூட்டிற்குள் ஏறி தான் இடும் முட்டைகளையெல்லாம் சாப்பிட்ட பாம்பைக் கொல்ல தந்திரமாய் அரண்மனைக்குள் சென்று அரசியின் மாலையைக் கவர்ந்து தூக்கிக் கொண்டு காவலர்கள் பார்க்கும்படியாக பறந்து பாம்பின் புற்றுக்குள் அந்த மாலையைப் போட்டு அதனால் அவர்கள் புற்றைச் சிதைக்கும்போது வெளிவந்த பாம்பையும் கொன்றதன் மூலம் தன்னுடைய பழியைத் தீர்த்துக்கொண்ட கதை.  இந்தக் கதையையும் யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று கேட்டதற்கு ஆம், பாட்டி சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் சொன்னாள் என் பேத்தி.
பிறகு, தண்ணீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த கட்டெறும்பை மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறா ஒரு இலையைக் கிள்ளி எறும்பின் அருகில் போட்டு அதன் உயிரைக் காப்பாற்றியதும், பின்னர் மற்றொருநாளில் வேடன் ஒருவன் இந்தப் புறாவைக் குறிவைத்து அம்பு செலுத்தத் தயாராவதைக் கண்ட அந்தக் கட்டெறும்பு அவன் காலைக் கடித்து அதனால் அம்பு செலுத்தும் கணத்தில் அவனது கவனம் சிதறி அம்பு திசை மாறி அதே புறாவின் குஞ்சுகளைக் கொத்திக் கொண்டு போக்க் காத்திருந்த வல்லூறு மேல் பட்டு அதுவும் இறந்த கதை.  இந்தக் கதை உனக்குத் தெரியுமா எனக் கேட்டதற்கு இதுவும் தெரியும் என்றாள்.  எனக்கே சற்று வியப்பாக இருந்தது.  யார் சொன்னார்கள் எனக் கேட்டேன்.  பெரிய பாட்டி என்றாள் (என் அம்மா – அதாவது அவளது கொள்ளுப்பாட்டியை அவள் அப்படித்தான் அழைப்பாள்).
அப்போதுதான் கவனித்தேன், எனது மகளும் சிறிது நேரமாக விழித்துக் கொண்டு பாதி கண்ணயர்ந்த நிலையில் இந்தக் கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதை.  எனவே அவளிடம் கேட்டேன் பேத்தி சொல்வதெல்லாம் உண்மையா, இந்தக் கதைகளெல்லாம் ஏற்கெனவே அவளுக்குத் தெரியுமா என்று.  இல்லை அப்பா, நீங்கள் சொன்ன முதல் கதை -  அதுவும் நீங்களேதான் இதற்கு முன்னால் அவளுக்கு சொல்லியிருக்கிறீர்கள் – தவிர மற்ற இரண்டும் அவளுக்குத் தெரியாது என்றாள்.

அப்படியென்றால் அவள் ஏற்கெனவே பாட்டி, பெரிய பாட்டி சொல்லி எனக்குத் தெரியும் என்று சொல்கிறாளே என்றேன்.  அதெல்லாம் கதை என்றாள் என் மகள்.  இப்போது சொல்லுங்கள், யாருடைய கதை பெரிய கதை என்று!

Monday, June 27, 2016

இதுதான் கட்டையா?

ஜீவ்தி வருகையை வழக்கம்போல் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.  ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியிருந்த்தனால் இனிமேல் மாதம் ஒரு முறைதான் எங்கள் வீட்டிற்கு வர வசதிப்படும். அவளுக்கு அம்பத்தூர் வருவதென்றால் மிகவும் விருப்பம்.  என் மனைவியான அவளது பாட்டி மீது அத்தனை பிரியம்.  அத்தனை பேரும் வேண்டும் என்னும் அன்புமிக்க குழந்தை அவள் என்றாலும் பாட்டி மீது அலாதியான ஒட்டுதல்.  அந்த சனிக்கிழமை என் மனைவிக்கு விடுமுறை நாள் ஆதலான் நானும் பேத்தியின் வரவுக்காக அலுவலகம் போகாமல் ஒரு நாள் விடுமுறை எடுத்திருந்தேன்.
வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் மடிப்பாக்கத்தில் உள்ள அவளது வீட்டிற்கு வந்தவுடனேயே உடைமாற்றிக்கொண்டு தாயுடன் காரில் ஏறி நான் என்னுடைய அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் முன்னரே அவள் அம்பத்தூருக்கு வந்துவிட்டிருந்தாள்.  பிறகென்ன? கொஞ்சலும் ஆட்டமும் தான்.  இரண்டு நாட்கள் போவதே தெரியாமல் ஒரு நொடியில் பறந்துவிடும்.  இந்த முறையும் அதே மாதிரி தான்.
ப்ரி-கேஜியிலிருந்து எல்-கேஜிக்கு உயர்ந்திருக்கும் அவளுக்கு அவளுடைய பள்ளியில் நான்கு புத்தகங்களும் ஐந்து நோட்டுகளும் கொடுத்து திங்கட்கிழமை வரும்போது தவறாமல் அட்டை போட்டுக்கொண்டு வரும்படி பெற்றோருக்கு கட்டளையிட்டிருந்தனர் பள்ளி ஆசிரியைகள்.  எனவே, என் மகள் என்னிடம், “அப்பா, இவளையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போய் இத்தனை புத்தகங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அட்டையும், பெயர் எழுத ஸ்டிக்கர் லேபிளும் வாங்கி வந்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.  என் பேத்திக்கு புத்தகம் என்றால் என்னவென்று தெரியும்.  நிச்சயமாக நோட்டுப்புத்தகம், லேபிள், அட்டை இதெல்லாம் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனாலும் வெள்ளி இரவிலிருந்தே, “தாத்தா, கட்டை வாங்கப் போகலாமா?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள். கட்டை இல்லை, அட்டை என்று திருத்தினேன்.   அப்போதைக்கு சரியாக உச்சரித்தாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் கட்டை என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பிடித்துக்கொண்டுவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் “இப்போது கடை மூடியிருக்கும் கண்ணா, காலையில் போய் நிச்சயம் வாங்கித்தருகிறேன்” என்று உறுதியளித்திருந்தேன்.
அடுத்த நாள் காலை எழுந்த உடனேயே ஆரம்பித்து விட்டாள், “தாத்தா, கடைக்குப் போகலாமா?” என்று உற்சாகத்துடன் புறப்பட்ட குழந்தையை தட்டிக்கழிக்க மனமில்லாமல் “வா, போகலாம்” என்று அவளையும் அழைத்துக்கொண்டு என்னுடைய மோட்டார்சைக்கிளில் அமர்த்திக்கொண்டு அருகிலிருந்த சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றேன்.
ஜீவ்தியை வண்டியிலிருந்து இறக்கி, ஒரு கையில் அவளுடைய சிறிய கையைப் பிடித்துக் கொண்டு, கடைக்குள் நுழைந்தவுடனே கடையில் வேலை செய்யும் பெண் எடுத்துக்கொடுத்த ப்ளாஸ்டிக் கூடையை மறு கையில் வாங்கிக் கொண்டு, இருவருமாக உள்ளே சென்றோம்.
மனதிற்குள் வாங்க வேண்டிய பொருட்களை ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.  இல்லாவிடில் நான்தானே மீண்டும் இன்னொருமுறை வரவேண்டியிருக்கும்! குழந்தைக்கு அட்டை, லேபிள்கள், சாக்லெட், மனைவியின் ஆணைப்படி அன்றைய சமையலுக்கு கொஞ்சம் பச்சை வேர்க்கடலை, மற்றும் மதியம் விருந்தினரோ அல்லது மாப்பிள்ளையோ ஒருவேளை திடீரென்று வந்தால் எதற்கும் இருக்கட்டும் என்று சிறிது பழங்கள் மற்றும் கொரிக்க ஏதாவது ஸ்நாக் தின்பண்டங்கள் என்று மனதில் நினைவூட்டிக்கொண்டே உள்ளே நுழையும்போது முதலில் அங்கு என் கண்ணில் தென்பட்டது புதிதாக அப்போது வந்து இறங்கியிருந்த வேர்க்டலைதான்.  ஸ்டேஷனரி பொருட்கள்  எல்லாம் முதல் மாடியில் தான் இருக்கும்.  முதலில் இங்கு கிடைப்பவற்றை கூடையில் நிரப்பிக்கொண்டு பின்னர் மாடிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
அழகாக ஆரஞ்சு நிற நைலான் இழையிலானாலன சிறுசிறு கைக்கடக்கமான பைகளில் நிரப்பியிருந்த கடலை பைகளில் இருந்து ஒரு பையை எடுத்து எனது ப்ளாஸ்டிக் கூடையில் போட்டேன்.

அதைப்பார்த்தவுடனேயே ஜீவ்தி சந்தேகமும் ஆச்சரியமும் கலந்து என்னைக் கேட்ட கேள்விதான் “தாத்தா, இதுதான் கட்டையா?” !!

Monday, June 20, 2016

system-i, sasyaka

இது நடந்து இரண்டு வருடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன்.

சிஸ்டமை, சஸ்யக்கா - ஜீவ்தியின் மழலையில் நாங்கள் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் திருதிருவென்று முழித்த இரு வார்த்தைகள்.


எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் உடனே கட்டில் மேல் ஏறி திம் திம் என்று விடாமல் அரை மணி நேரமாவது எதையாவது பாடிக்கொண்டே குதித்துக் கொண்டிருப்பது அவள் வழக்கம்.  அன்றும் அதுபோல்தான்.  நான் அலுவலகத்திலிருந்து வருவதற்கு சற்று முன்னமே வந்திருந்ததனால் நான் வீட்டிற்குள் நுழையும்போதே அவள் கட்டில் மேல் ஆடிக்கொண்டுதான் இருந்தாள்.  நான் வந்தவுடனேயே, தாத்தா சிஸ்டமை போடு, சிஸ்டமை போடு என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தாள்.  கம்ப்யூட்டரைத்தான் சிஸ்டம் என்று சொல்கிறாள் என நினைத்து அதை ஆன் செய்தேன். திரை தயாரானவுடன் மீண்டும் சிஸ்டமை போடு, சிஸ்டமை போடு என்றாள்.  சிஸ்டம் தான் ஆன் செய்திருக்கிறேனே உனக்கு என்ன வேண்டும் சொல் என்றேன்.  மீண்டும் சிஸ்டமை போடு என்றாள்.  


எனக்குப் புரியவில்லை.  உனக்குப் புரிகிறதா என்று அவளுடைய அம்மாவான என் மகள் ப்ரீதியைக் கேட்டேன்.  அவளுக்கும் தெரியவில்லை.  எங்கே கொஞ்சம் பாடிக்காட்டு என்று சொன்னவுடன் அவள் சிறிது பாடிக் காட்டினாள்.  அதைக் கேட்டபின் தான் என் மகளுக்கே தெரிந்தது அது என்ன பாட்டு என்று.  விஜய் டிவியில் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஆஜித் பாடிய "She stole my heart" என்ற பாட்டின் முதல் மூன்று வார்த்தைகளான ஷி ஸ்டோல் மை என்பதைத்தான் அவள் ஸிஸ்டமை அல்லது சிஸ்டமை என்று சொல்லிக்கொண்டிருந்தாள் என்பது எங்களுக்கு அப்புறம்தான் விளங்கியது.


இதேபோல் நாங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்ட இன்னொரு வார்த்தை சஸ்யக்கா.  இப்போது நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம், சஸ்யக்கா என்றால் என்னவென்று?  தெரியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள்.  எனக்கு ஞாபகம் வந்தவுடன் இதே பக்கத்தில் update செய்கிறேன்!




Monday, June 13, 2016

கண்ணன் என் சேவகன் - 2016


(பாரதியார் இன்று இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்ற கற்பனையில் உதித்த கவிதை)

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்
வேலைமிக வைத்திடினோ வீட்டினிலே தங்கிடுவார்
ஏனடா நேற்றைக்கிங்கு வரவில்லையென்றால்
தேனாம்பேட்டையில் டிராபிக் ஜாம் என்பார்

வீட்டில் உடம்பு சரியில்லை ஒருநாள் லீவு வேண்டுமென்பார்
மாட்டினி டிக்கட்டை பாக்கெட்டில் மறைத்திருப்பார்
ஓயாமல் பொய்சொல்வார் ஒன்று சொன்னால் வேறு செய்வார்
நாயாகக் குரைத்தாலும் நம்வேலை செய்தொழியார்

நம்வீட்டுச் செய்தியெல்லாம் நாற்புறமும் பரப்புவார்
நாம் வீட்டில் இல்லையென்றால் தாமும் மறைந்திடுவார்
சேவகரால் பட்ட சிரமம் சொல்லி மாளாதாயினும்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் வேலையேதும் தாவென்றான்
கார் பைக் ஒட்டிடுவேன் கரண்ட்டுபில் கட்டிடுவேன்
ஏர்போர்ட்டுக்குப் போய் ஏற்றிவிட்டுத் திரும்பிடுவேன்

சொன்னபடி கேட்பேன் சொல்லாததையும் செய்வேன்
என்ன வேலையென்றாலும் இங்கிருந்தே செய்திடுவேன்
ரேஷன் சாமான் வாங்கிடுவேன் ரேடியோ ரிப்பேர் செய்திடுவேன்
வேஷம் போடமாட்டேன் வெட்டியாய்த் திரியமாட்டேன்

இரவுபகல் பார்க்காமல் இங்கேயே நானிருப்பேன்
சிரமம் சிறிதும் பார்க்காமல் சீராக உழைத்திடுவேன்
கோடுகாட்டினால் போதும் ரோடே போட்டிடுவேன்
பாடுபட்டுச் சேர்த்தவற்றை பாங்காய் காத்திடுவேன்

படிப்பறிவில்லாவிடினும் பலசாலியாய் இருப்பதனால்
அடிதடிக்கஞ்சமாட்டேன் வம்பு சண்டை இழுக்கமாட்டேன்
பொய்பேசமாட்டேன் புறங்கூறமாட்டேன்
நையாண்டி செய்தாலும் நான் கலங்கமாட்டேன்

நேரத்தோடு வீடுசெல்ல நித்தம் விழையமாட்டேன்
நன்றியோடு உழைப்பேன் நால்வரிடம் விசாரித்து
பணியில் அடியேனை அமர்த்தினால் போதுமென்று
கனிவான சொற்களால் கருணை மனு கொடுத்தவுடன்

சொந்த ஊர் என்ன பெயர் தந்தை விவரமெல்லாம்
தந்துவிடு பரிசீலனை செய்வதற்கே என்றேன்; அவனோ
அன்னைதந்தை யாருமில்லை ஆயினும் அன்புடனே
கண்ணனென்றே அழைப்பர் அனைவரும் என்னையென்றான்

 உழைப்பால் உரமேறிய உடல் மற்றும்
உள்ளத்தூய்மையை வெளிக்காட்டும் கண் இவற்றால்
தக்கவன் கிடைத்த மகிழ்ச்சியுடன் இவனையாவது
தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன்

வேலைக்குச் சேர்க்கின்றேன் இக்கணமே என்றாலும்
கூலி என்ன கேட்கின்றாய் கூறு என்றேன்
ஐயனே! கட்டுக்கட்டாய் பணந்தனைச் சேர்த்து
பையிலா கொண்டுபோகப் போகிறோம்

பண்பு மிக்கவரென்று பலர்சொல்லிக் கேட்டே தங்கள்
அன்பும் ஆதரவும் நாடித்தான் நான்வந்தேன்
காசு பெரிதில்லை காதல் பெரிதெனக்கு என்று
நாசூக்காய் நயமுரைத்தான்  நான் உணர வேண்டுமென்றே

பழையகாலப் பயித்தியம் இவனெனக் கண்டன்புடனே
அழைத்தவனை ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்றுமுதல்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
வாக்குவம் போடுகின்றான் வாஷிங் மெஷின் இயக்குகின்றான்; வீடு
காக்கும் வேலையையும் களைப்படையாமல் செய்கின்றான்

சம்சாரத்தின் கட்டளையை சடுதியில் முடிக்கின்றான்
மின்சாரக் கட்டணத்தையும் மிகவிரைவில் கட்டுகின்றான்
உள்வீட்டு வேலையெல்லாம் உடனடியாய் கவனித்தபின்
வெளிவேலை அத்தனையையும் விவரமாகவும் புரிகின்றான்

பார்க்கவேண்டிய இடங்களுக்கு ஸாரதியாகவும்;
பால் பலசரக்கு போன்றவற்றை கணக்காளனாகவும்
வீட்டுக் கடமையெல்லாம் மிகவிரும்பி ஏற்கின்றான்
விருந்தாளிகள் வந்தாலோ அன்பாக உபசரிக்கின்றான்

பள்ளிச் சிறார்களை வண்டியில் ஏற்றிவிடுகின்றான்
பாங்காக மாலையில் கூட்டியும் வருகின்றான்
வயிற்றுப் பசியென்றால் ஓட்டலில் பண்டமும்
வயிற்றுப் போக்கென்றால் டாக்டரிடம் டோக்கனும்

சற்றும் சுணங்காமல் சுறுசுறுப்பாய் வாங்கியே
சுற்றம் யாருக்கும் சிரமமில்லாமல் காக்கின்றான்
பெற்றோரும் பிள்ளைகளும் குதூகலமாய் குழைந்திட
உற்ற துணையாய் உடனிருந்து உவக்கின்றான்

வீட்டில் பிள்ளைகளுக்கு   விளையாடும் தோழனாய்;
விவேகமாய் முடிவெடுக்கும் மதியூக மந்திரியாய்;
நல்வழிகாட்டும் நம்பக ஆசானாய்
பற்பணியாற்றும் பணிவான சேவகனாய்

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் எடுத்தாள்வீர் எனையென்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணமெல்லாம் அவனாகி இன்னலே மறந்துபோய்
செல்வம் செழிப்பு அறிவாற்றல் ஆரோக்கியம்
எல்லா வளமும் ஓங்கி உயருதுகாண்!

கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே.